மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன், ஓவியம் : முத்து, ஸ்யாம்

##~##

''ஹேய்ய்ய்... சூப்பர்! அசத்திட்டே பரத்'' என்று சொல்லி பரத்தின் கைகளைப் பிடித்துக் குலுக்கினான் பிரதீப்.

மாலை நேரம். மாயா டீச்சரின் வீட்டு மொட்டை மாடியில் சுரேகா, தீபா, பரத், பிரதீப் கூட்டணி அதகளம் செய்துகொண்டு இருந்தது. எல்லோரின் வாயிலும் பபிள்கம். யார் பெரிய முட்டையை ஏற்படுத்துவது என்று போட்டியே நடந்துகொண்டு இருந்தது.

கீழே இருந்து மாயா டீச்சர் அழைத்ததும், ''யார் ஃபர்ஸ்ட் போய் டீச்சரைத் தொடுறாங்கன்னு பார்ப் போமா?'' என்று போட்டி போட்டுக்கொண்டு தடதடவெனப் படிகளில் இறங்கி ஓடினார்கள்.

இந்தப் போட்டியில் ஜெயித்தது சுரேகா. பாய்ந்து சென்று மாயா டீச்சரின் கையைத் தொட்டுவிட்டு குஷியுடன் குதித்தாள். ''பபிள்கம் ஊதுறதில் நீ பெரிய ஆளா இருக்கலாம். ரன்னிங்ல என்னை அடிச்சுக்க முடியாதாக்கும்'' என்று பிகு காட்டினாள்.

''எல்லோரும் போய் பபிள் கம்மைத் துப்பிட்டு வாங்க. புது டிஷ் செய்து இருக்கேன். சாப்பிடு வோம்'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''அடடா... வாய்ல போட்டுக் கொஞ்சம் நேரம்தானே ஆகுது. அதுக்குள்ளே துப்பணுமா?'' என்று தயங்கினான் பிரதீப்.

''சரி, அப்படின்னா ஒண்ணு செய்வோம். பபிள்கம்மை மென்னுக்கிட்டு இருக்கிற நேரத்தில் சூயிங்கம் மற்றும் பபிள்கம் பற்றின சுவையான பல விஷயங்களைத் தெரிஞ்சுக்குவோமா?'' என்று கேட்டார் டீச்சர்.

''டபுள் ஓ.கே.'' என்றார்கள் பபிள்கம் பார்ட்டிகள். மந்திரக் கம்பளம் பறந்து வந்தது. எல்லோரும் ஏறிக்கொண்டதும் 'சர்’ என்று பறந்தது. ''எங்கே டீச்சர் போறோம்?'' என்று கேட்டான் பிரதீப்.

''சூயிங்கம் மற்றும் பபிள்கம் வரலாற்றைத் தெரிஞ்சுக்க, அவை ஆரம்பித்த இடங்களுக்குப் போறோம்'' என்றார் டீச்சர்.

''அப்படின்னா சூயிங்கம் வேற, பபிள்கம் வேறயா டீச்சர்?'' என்று கேட்டாள் தீபா.

''ஆமாம்! சூயிங்கம் என்பது சும்மா மெல்வதற்கு மட்டுமே. பபிள்கம் என்பது விதவிதமான வண்ணங்கள் மற்றும் சுவைகளில் கிடைக்கும். நீங்க,  முட்டை வித்தையை இதில்தான் காட்டமுடியும்.  சூயிங்கத்தின் பிறப்புடன் ஒப்பிடுகையில் பபிள்கம்மை அதனுடைய கொள்ளுப் பேரன் என்று சொல்லணும். ஏன்னா, சூயிங்கம் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துடுச்சு. பபிள்கம் பிறந்தது 1,900-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகுதான்'' என்றார் டீச்சர்.

சில நிமிடங்களில் அவர்கள் ஒரு காட்டுப் பகுதியில் இருந்தார்கள். ''இது என்ன இடம் டீச்சர்?'' என்று கேட்டான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இப்போ நாம் மத்திய அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் இருக்கோம். அது மட்டும் இல்லே, 1,000 ஆண்டுகள் பின்னோக்கி வந்து இருக்கோம். இங்கே இருந்துதான்  சூயிங்கம்மின் வரலாறு ஆரம்பிக்குது. அங்கே கவனிங்க'' என்றார் டீச்சர்.

அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் சில செவ்விந்தியர்கள் ஒரு மரத்தில் இருந்து வழியும் பிசினை எடுத்து உருண்டை ஆக்கி, வாயில் போட்டுக்கொண்டார்கள். ''அது சப்போட்டா மரத்துப் பால். நாம் இப்போ சாப்பிடும் அத்தனை நவீன சூயிங்கம் மற்றும் பபிள்கம் வகையறாக்களுக்கு முன்னோடி இதுதான். இந்த செவ்விந்தியர்கள் காட்டு வழியே ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு ரொம்ப தூரம் போவாங்க. அப்போது பசி எடுக்காமல் இருக்கவும் வாய் உலர்ந்துபோகாமல் இருக்கவும் கோந்துபோல் இருக்கும் சப்போட்டாப் பாலை உருண்டைகளாக்கி அசைபோட்டுக்கிட்டே நடப்பாங்க'' என்றார்.

''அதை நாமும் சாப்பிட்டுப் பார்க்கலாமா டீச்சர்?'' என்று கேட்டான் பிரதீப்.  தலையாட்டி அனுமதி கொடுத்தார் டீச்சர்.

செவ்விந்தியர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றதும் மந்திரக் கம்பளம் சப்போட்டா மரத்தின் அருகே சென்று நின்றது. நான்கு பேரும் அந்தப் பிசினை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தார் கள். முகம் கோணியது. ''என்ன டீச்சர் டேஸ்ட்டே இல்லை'' என்றாள் சுரேகா.

''விதவிதமான சுவைகளில் பபிள்கம்மை சாப்பிட்டுப் பழக்க மான உங்களுக்கு இது எப்படி டேஸ்ட்டா இருக்கும்? இதே போல் வட அமெரிக்காவில் வசித்த பூர்வகுடிகள் 'ஸ்புரூஸ்’ என்ற ஒரு வகை ஊசி இலை மரத்தின் பிசினை மென்றார்கள். இது சப்போட்டாப் பாலைவிடக் கொஞ்சம் கூடுதல் சுவையுடன் இருந்தது. அந்தப் பகுதிக்கு வந்த நாகரிக வெள்ளையர்களுக்கு அதைக் கொடுத்தார்கள். இப்படித் தான் சூயிங்கம் மற்றவர்களிடம் பரவியது'' என்றார் மாயா டீச்சர்.

அடுத்து மந்திரக் கம்பளம் பல நூற்றாண்டுகளைக் கடந்து சூயிங்கம் தயாரிக்கும் ஒரு ஃபேக்டரிக்குள் நுழைந்தது. நம்ம ஊர் இனிப்புக் கடைகளில் ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா என்பதுபோல், அந்த ஃபேக்டரி சூயிங்கப் பெட்டிகளில் 'ஒரிஜினல் ஸ்புரூஸ் மெழுகு சூயிங்கம்’ என்ற வாசகம் இருந்தது.

''இப்போ நாம் இருக்கிறது 1848-ல். அமெரிக்காவின் மைனி மாகாணத்தைச் சேர்ந்த ஜான் காட்டிஸ் என்பவர் முதல் முதலில் வியாபார ரீதியாக சூயிங்கத்தைத் தயாரித்து விற்பனை செய்தார். ஸ்புரூஸ் மரத்துப் பாலுடன் பாரஃபின் மெழுகைக் கலந்து இந்த சூயிங்கம்மைச் செய்தார். இவரைப் பார்த்து இன்னும் சிலர் போட்டியில் இறங்கினார்கள். 'எங்கள் சூயிங்கம்மைச் சாப்பிட்டால் வீரர்கள் ஆவீர்கள்... சூரர்கள் ஆவீர்கள்’ என்று விளம்பரம் செய்தார்கள். ஜீரணக் கோளாறு, குடல் நோய்ப் பிரச்னைகள் நீங்கும் என்றும் உடான்ஸ்விட்டார்கள்'' என்றார் டீச்சர்.

''ம்.... அந்தக் காலத்திலும் இப்படித்தானா?'' என்று அலுத்துக்கொண்டாள் சுரேகா.

''ஆனால் இப்படி விளம்பரம் செய்ததில் எல்லோருமே ஏமாந்துடலை. மத்திய அமெரிக்காவில் இருந்த தாமஸ் ஆடம்ஸ் என்பவர் சப்போட்டாப் பாலில் தயாரித்த சூயிங்கம்மை மக்கள் சீண்டவே இல்லை. கடைகளில் கொடுத்து, 'வர்றவங்களுக்கு இலவசமாக் கொடுங்க’ என்று கெஞ்சினார். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் பரப்பினார். பிறகு பழங்களின் சுவைகளுடன் ஆறு வகையான வாசனைகளில் சூயிங்கம்மைத் தயாரித்தார். தனது தயாரிப்புக்கு டூட்டி-ஃப்ரூட்டி என்று பெயரிட்டார். இது நல்ல வரவேற்பைப் பெற்றது'' என்றார் மாயா டீச்சர்.

''அப்படின்னா, பபிள்கம் எப்பத்தான் வந்துச்சு?'' என்று கேட்டாள் தீபா.

''1906-ஆம் வருடம் ஃபிராங்க் ஃபில்லர் என்பவர் வாயில்போட்டு மென்றதும் அதிகமாக இழையும் வகையில் சூயிங்கத்தைத் தயாரித்தார். அப்படி இழைந்த பிறகு, அதை ஊதியபோது பெரிய குமிழிகளாக, பலூன் போல் விரிந்தது. அதற்கு, 'பிலிப்பர் புளுப்பர் கம்’ (ஙிறீவீதீதீமீக்ஷீ தீறீuதீதீமீக்ஷீ ரீuனீ) என்று பெயர் வைத்தார். அதுவே, நாளடைவில் பபிள்கம் என்று மாறியது'' என்றார்.

இப்போது அவர்கள் ஒரு நவீன பபிள்கம் தயாரிப்பு ஃபேக்டரியில் வந்து இறங்கினார்கள். இன்றைய பபிள்கம்மில் சுவைக்காக என்ன மாதிரியான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்று விவரித்தார் டீச்சர். ஒரு பெரிய மெஷினுக்குள் போடப்பட்ட பபிள்கம் கலவை வண்ண வண்ணப் பட்டைகளாகப் பல்வேறு நறுமணங்களுடன் வெளியே வந்தது. ''இந்த பபிள்கம், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. போதாக்குறைக்கு பபிள்கம் நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களைப் பிடித்து, அவர்கள் பபிள்கம்மை விரும்பிச் சாப்பிடுவதைப் போல் விளம்பரங்கள் எடுத்து வெளியிட்டார்கள்'' என்றார் டீச்சர்.

''ஆனால், இந்த பபிள்கம் நிறையக் கெடுதல்களை ஏற்படுத்தும் இல்லையா டீச்சர்?'' என்று கேட்டாள் சுரேகா.

''தொடர்ந்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அதிகப்படியான இனிப்பு மற்றும் நிறக் கலவைகள் கெடுதலை ஏற்படுத்தும். எப்போதோ ஒன்று, இரண்டு சாப்பிட்டால் தப்பு இல்லை'' என்றார் டீச்சர்.

''அப்படின்னா ஏற்கெனவே ஒண்ணு சாப்பிட்டாச்சு. இப்போ இரண்டா வதாக ஆளுக்கு ஒண்ணை எடுத்துக் கிறோம் டீச்சர்'' என்றான் பிரதீப்.

''சொன்னது தப்பாப்போச்சே! சரி எடுத்துக்கங்க'' என்றதும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டார்கள். அடுத்த நொடி, மந்திரக் கம்பளம் அவர்களை மாயா டீச்சரின் வீட்டில் கொண்டுவந்து இறக்கியது.

''செஞ்சுவெச்ச புது டிஷ் ஆறிப்போச்சு. மறுபடியும் சூடு பண்ணிட்டு வர்றேன். இப்பவாவது பபிள்கம்மைத் துப்பிட்டு வாங்க'' என்று சொல்லிவிட்டு, மாயா டீச்சர் சமையல் அறைக்குள் நுழைந்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் நான்கு பேரும் குஷியுடன் மீண்டும் பபிள்கம் முட்டைப் போட்டியை ஆரம்பித்தார்கள்.