மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் முத்து

##~##

மாலை நேரம். பூங்காவில் இருந்தார்கள் மாயா டீச்சரும் சுட்டிகளும். எதையோ பறிகொடுத்தவளைப் போல் இருந்த தீபாவிடம், ''என்ன ஆச்சு தீபா?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.

''ஸ்கூல் திறந்துட்ட சோகமோ?'' என்று கேட்டான் பரத்.

அவனது கிண்டலைப் பொருட்படுத் தாமல் தீபா சொன்னாள், ''மதுரை பக்கத்தில் இருக்கிற என் பாட்டி ஊருக்கு ஒவ்வொரு வருஷமும் போவேன். அங்கேயும் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். அதுல ஒரு ஃப்ரெண்டோட குட்டித் தம்பி சரியான வாலு. அவனோடு விளையாடிட்டு இருந்தா நேரம் போறதே தெரியாது. அவனுக்கு டெங்கு காய்ச்சலாம். பாட்டி போன்ல சொன்னதில் இருந்து மனசே சரியில்லை'' என்றாள்.

இதைக் கேட்டதும் தீபாவின் சோகம் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொண்டது. ''மருத்துவம் எவ்வளவோ முன்னேறினாலும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல்னு படை எடுத்து வர்ற நோய்களைத் தடுக்க முடியலையே. கடவுள் ஏன் இந்த மாதிரி நோய்களைக் கொடுத்துத் துன்புறுத்துறாரோ...'' என்றான் பிரதீப்.

''கடவுளைக் குறை சொல்லாதே பிரதீப்! அவர் படைத்த ஒவ்வோர் உயிரினத்தின் உடலுக்குள்ளும் எத்தனையோ பாதுகாப்பு விஷயங்களைக் கொடுத்து இருக்கார் தெரியுமா? அதிலும் மனிதனின் உடம்பில் இருக்கும் எதிர்ப்பு சக்திகளைப் பற்றித் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவே. இந்த எதிர்ப்பு சக்திகள், உலகில் சிறந்த ராணுவத்தில் இருக்கும் போர் வீரர்களைக் காட்டிலும் பக்காவா செயல்பட்டு நோய்களுடன் போரிடுகிறது'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''அப்படி அந்தப் போர் வீரர்கள்  என்னதான் செய்றாங்க?'' என்றாள் சுரேகா.

''சொல்றதைவிட நேர்லயே போய்ப் பார்த்துடுவோம் வாங்க'' என்ற டீச்சர், பூங்காவின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்து, மந்திரக் கம்பளத்தை விரித்தார்.

''எங்கே போகப் போகிறோம்?'' என்று கேட்டான் பரத்.

''ஒரு மனிதனின் உடம்புக்குள்'' என்றார் டீச்சர். கம்பளம் பறந்தது. டீச்சர் தொடர்ந்தார். ''மனிதனுக்கு ஏற்படும் நோய்களைத் தொற்று நோய்கள் (Communicable disease),தொற்றாத நோய்கள் (Non communicable disease) என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஹார்ட் அட்டாக், சிறுநீரகப் பாதிப்பு போன்றவை தொற்றாத நோய்கள். ஜலதோஷத்தில் தொடங்கி அம்மை, காசநோய், காலரா, டெங்கு எல்லாமே தொற்று நோய்கள்தான். வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. சில நூற்றாண்டுகளுக்கு  முன்பு வரை தொற்று நோய்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தபோது... பேய், பிசாசு, சாத்தான் போன்ற தீய சக்திகளின் வேலை என்றே நினைத்தார்கள். 16-ஆம் நூற்றாண்டில், ஆன்டனி வான் லீயூவென் ஊக் என்ற விஞ்ஞானி, நுண்பெருக்கிக் கருவியை முதன் முதலில் கண்டுபிடித்தார். அதன் மூலம் பார்த்தபோது, ஒரு ஊசி முனையில் ஆயிரக்கணக்கான நுண்கிருமிகள் இருக்க முடியும் என்று தெரிந்தது. அவருக்குப் பிறகு வந்த விஞ்ஞானிகள், தொற்று நோய்களுக்குக் காரணம் இந்தக் கிருமிகளே என்பதைக் கண்டுபிடித்தார்கள்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அடுத்து, அவர்கள் ஒரு மனிதனின் தோல் மீது இருந்தார்கள். ''எப்படி ராணுவத்தில் பல அடுக்குப் பாதுகாப்பு வீரர்கள் இருக்கிறார்களோ... அப்படி நம் உடம்பிலும் எதிர்ப்பு சக்தி என்ற  வீரர்கள் உண்டு. காற்றில் இருக்கும் தூசியுடன் கலந்து வரும் நுண்கிருமிகள் அதிகம் படியும் இடம் தோல். இந்தக் கிருமிகளைத் தடுப்பதில் வியர்வையின் பங்கு மகத்தானது. நம் வியர்வையில் லாக்டிக் என்ற ஓர் அமிலம் சுரக்கிறது. இது அற்புதமான கிருமிநாசினி. தூசியுடன் சேர்ந்து சருமத்தின் மீது படியும் கிருமிகளை ஆரம்பத்தி லேயே அழித்துவிடுகிறது'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், மெகா மைக்ரோஸ்கோப்பாக மாறி, நடப்பதை அவர்களுக்குத் திரையிட்டது. சாதாரணக் கண்களுக்குத் தெரியாத நுண்கிருமிகள் இப்போது அவர்களுக்குத் தெரிந்தன. ''அம்மாடியோவ்! எத்தனை டிசைன்களில் இருக்கு. நகைக் கடைக்காரங்க இதைப் பார்த்துதான் நகையை டிசைன் டிசைனாப் பண்றாங்களோ!'' என்று அதிசயித்தாள் தீபா.

அந்தக் கிருமிகள், சருமத்தில் படிந்த வேகத்தில் லாக்டிக் அமிலத்தின் சக்தியால் சுருண்டு இறக்க ஆரம்பித்தன. அப்போது மந்திரக் கம்பளம் சருமத்தில் இருந்து 'விசுக்’ என வெளியேறி, ஏதோ ஒரு குகைக்குள் நுழைந்தது. கொழகொழப்பான ஒரு வெள்ளைத் திரவத்தின் மீது படகு போல் நகர்ந்தது. ''இது என்ன இடம் டீச்சர்?'' என்று கேட்டாள் பரத்.

''மூக்கின் உள்ளே இருக்கோம்'' என்றதும், ''அப்படின்னா சளி மீது போய்ட்டு இருக்கோமா... அய்யய்ய!'' என்று ஒரே நேரத்தில் குரல் கொடுத்தார்கள் பிரதீப்பும் சுரேகாவும்.

''சளின்னு சொன்னதுமே அருவருப்பு ஏற்படுது. ஆனால், இதுவும் நுண்கிருமிகளைத் தடுக்கும் பணியைச் செய்யுது. தூசுகள் நம் உடலின் திறந்த பகுதிகள் மூலமாக உடம்பிற்குள் செல்லும். எவை எல்லாம் நம் உடம்பின் திறந்த பகுதிகளாக இருக்கு?'' என்று கேட்டார் டீச்சர்.

''மூக்கு, காது, கண்'' என்றாள் தீபா.

''கரெக்ட்! நுண்கிருமிகள் மூக்கின் உள்ளே போகும்போது சளியும், காதுகளில் குறும்பையும் தடுக்கின்றன. கிருமிகளைக் கொன்று, கழிவாக வெளியேற்றுகின்றன. அப்புறம் வாயை விட்டுட்டியே தீபா. பேசும்போதும் சாப்பிடும் போதும் திறக்கிறோமே... அப்போது உள்ளே நுழையும் கிருமிகளை உமிழ்நீர்  கவனிச்சுக்கும். இதுவும் ஒரு கிருமிநாசினிதான்'' என்றார் டீச்சர்.

''அப்புறம் கிருமிகள் எப்படி உள்ளே போகுது?'' என்று கேட்டான் பிரதீப்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''மனிதன் செய்கிற தவறுகளால்தான். ஒரு சிறந்த வீரனால் ஒரே நேரத்தில் பத்து பேரை சமாளிக்க முடியும். அதுவே, ஆயிரம் பேர்கள் வந்துட்டால்? சாதாரணக் காற்றில் வருகிற நுண்கிருமிகளை நாசியால் தடுக்க முடியும். வாகனம் மற்றும் தொழிற்சாலைப் புகையில் கலந்துவந்து கெரில்லாத் தாக்குதல் நடத்தும் கிருமிகளைச் சமாளிக்க முடியுமா? தவிர, சுகாதாரம் இல்லாமல் தயாரான உணவை வாய்க்குள் வேகவேகமாகத் திணித்து, அசுத்தமான தண்ணியையும் குடிச்சுக் கிருமிகளை ராஜ மரியாதையோடு உடலுக்கு உள்ளே அனுப்புறோம்'' என்றார் டீச்சர்.

இப்போது அவர்கள் வாய் வழியாக உடம்பிற்குள் சென்றார்கள். டீச்சர் தொடர்ந்தார், ''இப்படி நாம் தப்பு செய்வோம்னு தெரிஞ்சுதான் உள்ளேயும் போர் வீரர்கள் இருக்காங்க. அதில் முக்கியமான இடம் ரத்தம். நம் ரத்தத்தில் பல வகையான ரசாயனப் பொருட்கள் இருக்கு. அவற்றை ஆயுதமாகக்கொண்டு வெள்ளை அணுக்கள் கிருமிகளுடன் நடத்தும் சண்டையைப் பாருங்க'' என்றார் டீச்சர்.

வலைப் பின்னல்கள் போன்று இருந்த வெள்ளை அணுக்கள், கிருமிகளுடன் பெரும் யுத்தமே செய்துகொண்டு இருந்தன. ''வெளியே இருக்கும் உயிரினங்கள் முட்டை இட்டும் குஞ்சு பொரித்தும் தம் இனத்தைப் பெருக்கும். ஆனால் இந்த நுண்கிருமிகள், தன்னையேப் பிளந்து இரண்டாக மாற்றும். காலையில் எட்டு மணிக்கு நாம் ஒரு சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள கிருமிகளில் ஒன்றே ஒன்று பல எதிர்ப்பு சக்திகளைக் கடந்து உடம்பிற்குள் நுழைந்தாலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் 64 நுண்கிருமிகளாக மாறி இருக்கும். இந்தக் கணக்கின்படி பார்த்தால் இரவு எட்டு மணிக்கு அதன் எண்ணிக்கைக் கோடிகளைத் தொட்டுவிடும்'' என்றார் டீச்சர்.

''இந்த யுத்தத்தில் நுண்கிருமிகள் மட்டும்தான் அழியுமா டீச்சர்?'' என்று கேட்டான் பரத்.

''அது எப்படி பரத்? எந்தப் போரிலும் இழப்புகள் இரண்டுப் பக்கமும்தான் இருக்கும். இப்போ, இந்த வெள்ளை அணுக்களைக் கவனிங்க. உடம்புக்கு வெளியே அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் நுழையுது. அதைத் தடுப்பதற்கும் ரத்தம் வெளியேறாமல் இருக்கவும் வலை மாதிரி அந்த இடத்தில் பதியுது. கிருமியுடன் போராடித் தானும் மடிந்து, கிருமியுடன் சேர்ந்து உடம்புக்கு வெளியே போகுது. இதைத்தான் நாம் சீழ் என்று சொல்றோம்'' என்றார் டீச்சர்.

''நியாயமா தியாகினு சொல்லணும்'' என்றாள் சுரேகா.

''ஒரு நாட்டில் போர் நடந்து அதில்  ஜெயிக்கிறவர்கள் என்ன செய்வாங்க?'' என்று கேட்டார் டீச்சர்.

''அந்த நாட்டிற்குள் நுழைஞ்சு பொருட்களைச் சூறையாடுவாங்க. கலைப் பொருட்களை நாசமாக்குவாங்க'' என்றாள் தீபா.

''கரெக்ட்! அதையேதான் பல எதிர்ப்புகளையும் தாண்டி உள்ளே போய்த் தங்குகிற நோய்க்கிருமிகளும் செய்யுது. நம் உடம்பில்  இருக்கும் சத்துக்களைச் சாப்பிட்டுக் கழிவை வெளியேற்றும். உயிருடன் இருக்கும்போது மட்டும் இல்லாமல் சில கிருமிகள் மடிந்த பிறகும் கழிவுகளை வெளியேற்றிக்கொண்டே இருக்கும். இது எல்லாம் சேர்ந்துதான் மனிதனுக்கு நோய்களை உண்டாக்குது. பெரியவர் களைவிட சிறுவயதில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், சுத்தம் விஷயத்தில் பல மடங்கு கவனமாக இருக்கணும்'' என்றார் டீச்சர்.

மேலும், சில எதிர்ப்பு வீரர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் பூங்காவில்  வந்து இறங்கினார்கள். சரியாக அந்த நேரம், தீபாவின் செல்போன் ஒலித்தது. எடுத்துப் பேசியவள் முகத்தில் சந்தோஷம். ''டீச்சர் பாட்டிதான் பேசினாங்க. அந்தக் குட்டிப் பையனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்ததில் கண் முழிச்சுட்டானாம். வளவளனு பேசவும் ஆரம்பிச்சுட்டானாம்'' என்றாள்.

''அப்போ, இதை ட்ரீட் வெச்சுக் கொண்டாடிடுவோம். ஒரு சுத்தமான ஓட்டலுக்குப் போய் சுத்தமான உணவை டீச்சர் செலவுல சாப்பிடுவோம்'' என்று கோரஸாகச் சொன்னார்கள் சுரேகாவும் பரத்தும்.

''எனக்கு இது தேவைதான்'' என்று சொல்லிச் சிரித்தார் டீச்சர்..