கே.யுவராஜன், ஹரன்
##~## |
''டீச்சர்! டீச்சர்! எங்கே இருக்கீங்க?''
அந்த அடர்ந்த காட்டுக்குள் தீபா, பரத், பிரசாந்த், சுரேகா போட்ட கூச்சல் பிரமாண்டமான மரங்களுக்குள் அடங்கிப்போனது.
''எங்கேடா டீச்சரைக் காணோம்?'' என்ற தீபா குரலில் பயம் பயங்கரமாக வளர்ந்து இருந்தது.
''எல்லாம் உன்னால்தான். நீதானே நிலக்கரியைப் பற்றி என்னமோ கேட்டே. டீச்சரும் மந்திரக் கம்பளத்தில் ஏத்திட்டுக் கிளம்பினாங்க. வழக்கமா வர்றதுதானேனு நானும் நம்பி ஏறிட்டேன். எங்கோ காட்டுக்குள்ளே இறக்கிட்டுப் போய்ட்டாங்களே...'' என்றான் பரத்.
அப்போது ''ஹாய் பசங்களா!'' என்ற குரலைக் கேட்டு தலையை உயர்த்திப் பார்த்தார்கள். ஒரு மரத்தின் அடர்ந்த கிளையின் மீது சொகுசாக ஒருக்களித்துப் படுத்து இருந்தார் மாயா டீச்சர். பக்கத்தில் மந்திரக் கம்பளம் இருந்தது.
நான்கு பேரும் பயம் நீங்கி, மரத்தின் மீது ஏறி டீச்சரை நெருங்கினார்கள். இன்னும் நான்கு பேர் வந்தாலும் தாங்கும் அளவுக்கு கிளையும் இலைகளும் மெத்தைபோல் இருந்தது. ''என்ன டீச்சர் பத்து நிமிஷத்துக்கு மாயமாகிப் பயமுறுத்திட்டீங்க'' என்றாள் தீபா.

''சும்மாதான்! வழக்கமா நாம போக வேண்டிய இடத்துக்கு பத்திரமாகப்போய் பத்திரமாகத் திரும்பிடுவோம். இப்படியே படிச்சுப் படிச்சு எல்லோருக்கும் போர் அடிக்குமே. அதனால்தான் இந்த முறை ஒரு த்ரில் ஓப்பனிங் இருக்கட்டுமேனு இப்படி செஞ்சேன்'' என்று சிரித்தார் டீச்சர்.
''நல்லா செஞ்சீங்க. இது என்ன இடம்? நிலக்கரி சுரங்கத்துக்குக் கூட்டிட்டு வருவீங்கன்னு நினைச்சா, ஏதோ காட்டுக்குக் கூட்டிட்டு வந்து இருக்கீங்க'' என்றான் பரத்.
''நிலக்கரிச் சுரங்கத்தை அப்புறம் பார்ப்போம். தாவரங்கள் மக்கி நிலக்கரி உருவாகுதுனு உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கும். அதை இப்போ லைவாகப் பார்க்கப்போறோம். நாம வந்து இருக்கிறது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த ஒரு காட்டுப் பகுதிக்கு'' என்றார் டீச்சர்.
''என்னது 25 கோடி ஆண்டுகளா? டைனோசர் தோன்றியே 23 கோடி ஆண்டுகள்தானே இருக்கும்'' என்று வாயைப் பிளந்தான் பிரசாந்த்.
''யெஸ்! மனிதன் உட்பட எந்தப் பெரிய உயிரினமும் தோன்றாத காலத்தில் இருக்கிறோம்'' என்றார் டீச்சர்.
''அந்தத் தைரியத்தில்தான் எங்களைத் தனியாக விட்டுட்டுப் போனீங்களா?'' என்றாள் சுரேகா.
''என்னை நம்பி வந்த உங்களை ஆபத்தில் விடுவேனா? நிலக்கரிக்கான முதல் அஸ்திவாரம் இங்கேதான் ஆரம்பிக்குது. எல்லோரும் மந்திரக் கம்பளத்தில் ஏறிக்குங்க. அந்தக் காட்சியைப் பார்க்கலாம்'' என்றார் மாயா டீச்சர்.
எல்லோரும் மந்திரக் கம்பளத்தில் ஏறியதும் அது பறந்து அந்தரத்தில் நின்றது. இப்போது காட்டில் இருந்த பிரமாண்டமான மரங்கள் ஒடிந்து அங்கே இருந்த நீர்ப்பரப்பில் விழுந்து மிதக்க ஆரம்பித்தன.
''இந்த மரங்கள் பல ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து வந்த ஆற்றலை வாங்கித் தனக்குள் பெரும் சக்தியை தக்கவைத்து இருக்கு. இப்படித் தண்ணீரில் விழுந்தவை அங்கே இருக்கும் நுண்ணிய உயிர்களால் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டுச் சில பகுதிகள் வாயுக்களாக மாறுது. இந்த வாயுக்கள் காற்றில் கலந்துவிட, மிச்சப் பகுதிகள் மீது மண் படிந்து மூடிக்கொள்கிறது. இப்போ நாம் ஒரு சில நொடிகளில் பார்த்தது உண்மையில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்த நிகழ்வு. இனி மண்ணுக்குக் கீழே என்ன நடக்குதுனு பார்ப்போம்'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளம் மண்ணுக்குள் ஊடுருவிச் சென்றது. அங்கே கருமையான பாறை அடுக்குகள் காணப்பட்டன. ''இதுதான் நிலக்கரியா டீச்சர்?'' என்று கேட்டான் பரத்.
''இப்பவே நிலக்கரின்னு சொல்ல முடியாது. சில ஆயிரம் ஆண்டுகளில் அதற்கான பாதி வேலைகள்தான் நடந்து இருக்கு. பூமிக்குள் இருக்கும் வெப்பத்தின் காரணமாக அந்த மரங்கள் எரிக்கப்பட்டு கருமையான பாறைப் படிவங்களாக மாறி இருக்கு. இதே நேரம் பூமியின் மேல் பரப்பில் நீரும் சதுப்பு நிலமும் சேர்ந்து அங்கே மரங்கள் தோன்றி இருக்கும். இதனால் அழுத்தம் அதிகமாகி இங்கே வெப்பம் அதிகமாகுது'' என்றார் டீச்சர்.
''ஆமாம் டீச்சர் முன்பைவிட இப்போ இந்தக் கருமையான பாறை அடுக்குகளில் மாற்றம் தெரியுது'' என்றாள் சுரேகா.
''இதுவரை நாம் பார்த்த சம்பவங்கள் நடந்து முடியக் கிட்டத்தட்ட நான்கு கோடி ஆண்டுகள் ஆனது. இதுதான் பூமிக்குள் பிறந்த முதல் நிலக்கரி அடுக்குகள். இந்த மாதிரி 10 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் மேலே இருக்கிற தாவரங்கள் மடிந்து மண்ணுக்குள் புதைய ஆரம்பிச்சது. இப்படியாக மூன்று முறை நடந்து இருக்கிறதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க'' என்றார் டீச்சர்.
''அதனால்தான் வெட்டி எடுக்க எடுக்க நிலக்கரி கிடைச்சிட்டே இருக்கா?'' என்றாள் தீபா.
இப்போது அவர்கள் நிகழ் காலத்தில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்தார்கள். ''நிலக்கரியைப் பயன்படுத்தி எரிபொருளைத் தயாரிக்கலாம் என்று மனிதன் கண்டுபிடிச்ச பிறகு, அதற்கான மதிப்பு பல மடங்காக ஆனது. 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து, ஐரோப்பா, ஆசியா எனப் பல இடங்களில் நிலக்கரியைத் தோண்டி எடுக்க ஆரம்பிச்சாங்க. இந்தக் காலகட்டத்தில்தான் நீராவிக் கப்பல், ரயில் உருவாச்சு. 1880-ம் ஆண்டு நிலக்கரியில் இருந்து மின்சாரமும் தயாரிக்கலாம் என்று கண்டுபிடிச்சதும் மேலும் தேவை அதிகமாச்சு. எல்லா நாடுகளிலும் சிறுவர்களை நிலக்கரிச் சுரங்கத்தில் வேலையில் சேர்த்தாங்க. அவங்க ஒரு நாளில் பல மணி நேரம் நிலக்கரியைத் தோண்டி எடுப்பாங்க. ஆரம்பத்தில் நவீனக் கருவிகள்கூடக் கிடையாது. மண்வெட்டியால் தான் தோண்டுவாங்க'' என்றார் டீச்சர்.
அங்கே ஏராளமான சிறுவர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள். ''ச்சோ பாவம்... இவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க'' என்று வருத்தப்பட்டார்கள் சுட்டிகள்.
''உண்மைதான்! பலரின் வாழ்க்கை சுரங்கத்திலேயே முடிஞ்சு இருக்கு. நீங்க பார்க்கிறது ஐரோப்பாவில் உள்ள சவுத் வேல்ஸ் பகுதியில் இருக்கும் டவர் நிலக்கரி சுரங்கம். 1805-ல் தொடங்கிய இந்தச் சுரங்கத்தை 2008-ம் ஆண்டுதான் மூடினாங்க. 200 ஆண்டுகளுக்கும் மேலாக நிலக்கரியை எடுத்தாங்க''
''நம் நாட்டில் நிலக்கரிச் சுரங்கம் எப்போ ஆரம்பிச்சது?'' என்று கேட்டான் பிரசாந்த்.
''1774-ல் மேற்கு வங்காளத்தில் இருக்கும் ராணிகஞ்ச் என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதுதான் இப்போது உலகிலேயே மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கம். இப்போது இந்திய நிலக்கரி நிறுவனம் என்ற பெயரில் செயல்படுகிறது. இதன் தலைமையில் இந்தியா முழுவதும் நான்கு லட்சம் ஊழியர் கள் வேலை செய்யறாங்க'' என்றார் டீச்சர்.
''அடேங்கப்பா... 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி இயற்கை ஆரம்பிச்சுவெச்ச பிரமிப்பு இன்னும் தொடருதே'' என்று தீபா சொன்னபோது, அவர்களை மந்திரம் கம்பளம் மாயா டீச்சர் வீட்டில் இறக்கி இருந்தது.
''இந்த பிரமிப்பையும் கேட்டுட்டு வீட்டுக்குக் கிளம்புங்க. இதுவரை பல்வேறு நாடுகள் பூமியில் இருந்து வெட்டி எடுத்த நிலக்கரி எவ்வளவு இருக்கும்னு கணக்கு எடுத்தாங்க. இதில் அமெரிக்கா 2,37,295 மில்லியன் டன் நிலக்கரியை எடுத்து முதல் இடத்தில் இருக்கு. ரஷ்யா 1,57,010 சீனா 1,14,500 இந்தியா 76,500 மில்லியன் டன் நிலக்கரியை எடுத்து இருக்கு. மற்ற நாடுகளையும் சேர்த்தால் 8,60,938 மில்லியன் டன் நிலக்கரி எடுப்பப்பட்டு இருக்கு'' என்றார் மாயா டீச்சர்.
''போதும் டீச்சர்! ஒரே நாளில் இவ்வளவு ஆச்சர்யங்களை எங்களால் தாங்கிக்க முடியாது. இன்னொரு நாள் பார்க்கலாம்'' என்றபடி அவர்கள் கிளம்பினார்கள்.