ஸ்கூல் ஸ்டார்

பெயர்: நிவாஸ்
வகுப்பு: 10-ஆம் வகுப்பு
பள்ளி: செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி.
சாதனை: சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம்.
பி.எல்.அருணாலஷ்மி
க.ரமேஷ்
##~## |
'விளையாட்டா இருந்தாலும் சரி... படிப்பா இருந்தாலும் சரி... தொடர்ந்து முயற்சி செய்யணும். நிறைய உழைக்கணும். அப்போதான் சாதிக்க முடியும்'' என்று வெற்றி ரகசியம் சொல்கிறார் யோகாவில் அசத்திவரும் நிவாஸ்.
திருப்பூரில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், சமீபத்தில் அந்தமானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் தங்கப் பதக்கம்

வென்றவர். அடுத்து, தாய்லாந்தில் நடக்கவுள்ளப் போட்டிக்குத் தயாராகிவருகிறார்.
''எனக்கு ஸ்போர்ட்ஸ்தான் ரொம்ப விருப்பம். ரன்னிங் ரேஸ், ரிலே, ஹேண்ட் பால்... இப்படிப் பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து இருக்கிறேன். பள்ளியில் யோகா வகுப்பின்போது நான் உடலை வளைத்துக் கஷ்டமான ஆசனங்களை ஈசியா செய்றதைப் பார்த்துட்டு, யோகா மாஸ்டர் எனக்கு டிரெய்னிங் கொடுக்க ஆரம்பிச்சார்.
முதன் முதலாகப் போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வாங்கினப்போ, இன்னும் இதுல சாதிக்கணும்னு தோணுச்சு. என்னோட முதல் வெற்றிதான் பல வெற்றிகளுக்குக் காரணமா அமைஞ்சது'' என்று பேசும் நிவாஸ், இதுவரை சுமார் 60 சான்றிதழ்கள், 20-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் 30 கோப்பைகளை வசப்படுத்தி இருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் மோகன் கூறும்போது, ''நிவாஸ் ரொம்பப் பொறுப்பான பையன். எந்த வேலை கொடுத்தாலும் ஆர்வத்துடன் செய்வான். அவன்கிட்ட டீம் ஸ்பிரிட் இருக்கு. எதையும் கரெக்டா வர்ற வரைக்கும் முயற்சி

செய்வான்.தினமும் ஸ்போர்ட்ஸ், யோகா, படிப்புனு நேரம் ஒதுக்கிச் செய்றான். நிவாஸ் இன்னும் நிறைய சாதிக்கணும்'' என்றார்.
''நிவாஸின் திறமையை அறிந்து அவனுக்கு மூன்றாம் வகுப்பில் இருந்தே பயிற்சி கொடுத்துட்டு வர்றேன். எல்லாக் கஷ்டமான ஆசனங்களையும் எளிதாக் கத்துக்கிட்டு ஈஸியா செய்வான்'' என்று வியப்புடன் விவரிக்கிறார், நிவாஸின் யோகா கோச் ஆர்.ஆர்.ரவி.
தனது மகன் நிவாஸின் திறமைகள்பற்றிப் பெருமிதத்துடன் பேசும் பெற்றோர்... ''போட்டியில் நிவாஸ் இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வந்தால் வருத்தப்படவே மாட்டான். கடும் முயற்சி செய்து, அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவான். அவனை நல்லா ஊக்கப்படுத் துவோம். அவனால் எங்களுக்குப் பெருமை'' என்கிறார்கள் பெருமிதமாக.
''நிவாஸ் எங்க பள்ளிக்குக் கிடைச்ச பொக்கிஷம். அவன் ஸ்போர்ட்ஸ், யோகா, படிப்பு என எல்லாத்துலயும் பெஸ்ட்'' என்கிறார் தலைமை ஆசிரியர் இமாகுலேட் புஷ்பராணி மகிழ்ச்சியாக.
''நிவாஸ் ரொம்ப கூல் டைப். அவன் யாரிடமும் சண்டை போட்டதே கிடையாது. யாராச்சும் சண்டை போட்டா சேர்த்துவைப்பான். அவன்கூட இருந்தால் அந்த இடமே ஜாலியா இருக்கும்'' என சொல்கிறார்கள் சக மாணவர்கள்.

''தினமும் தவறாமல் பயிற்சி செய்வேன். என் அம்மா, அப்பா எனக்கு ரொம்பவும் ஆதரவா இருக்காங்க. என் ஃப்ரெண்ட்ஸ் சபரிநாத், ஹரி, என் ஸ்கூல் டீச்சர்ஸ் மற்றும் தலைமை ஆசிரியர் என எல்லாரும் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துவாங்க. என் வெற்றிகளுக்கு அவங்களுக்கும் பங்கும் உண்டு'' என்று கூறும் நிவாஸின் குரலில் நன்றியும் பணிவும் தெரிகிறது.
உங்கள் பள்ளியிலும் இவரைப் போன்ற திறமைசாலிகள் இருந்தால், எங்களுக்கு எழுதுங்கள். அவரை அறிமுகப்படுத்த சுட்டி விகடன் தயாராக இருக்கிறது. அவரது பெயர், வகுப்பு, பள்ளி முதல்வர் மற்றும் முழு முகவரியுடன்... செல் நம்பரையும் குறிப்பிடவும்.