ஸ்பெஷல்
Published:Updated:

கிராமத்து விளையாட்டு - கண்ணாமூச்சி !

இரா.முத்துநாகு வீ.சக்தி அருணகிரி

##~##

சரணாகதி அடைந்தாலும் அவரைக் காப்பாற்றி வீரானாக்கி அழகு பார்ப்பது நமது பண்பாட்டின் பெருமை. இந்த பெருமையை வெளிப்படுத்தும் கிராமத்து விளையாட்டுகளில் ஒன்றுதான் கண்ணாமூச்சி. இந்த விளையாட்டைப் பெண்கள் மட்டுமே விளையாடுகிறார்கள்.

எல்லா விளையாட்டுகளையும் போலவே அணி பிரிப்பது முதலில் நடக்கிறது. 'அச்சக்கா மச்சக்கா சொச்சக்கா’ எனவும் சில ஊர்களில் 'சாட் பூட் த்ரீ’ சொல்லிக் கைகளை விசிறி உள்ளங்கையை மொத்தமாகக் குவித்துப் புறங்கை தெரியவைத்தவர்கள் காய் அணியாகவும் உள்ளங்கை தெரியவைத்தவர்கள் பழம் அணியாகவும் பிரிகிறார்கள்.

காய் அணியில் இருப்பவர்கள் மறுபடியும் மறுபடியும் மச்சக்கா சொச்சக்கா சொல்லிக் காய் பழம் பிரிப்பார்கள். கடைசியாகக் காய் விழுபவர் யாரோ அவருடைய  கண்களை அணியில் மூத்தவராக இருப்பவர் ரிப்பன் அல்லது துணியால் கட்டி நான்கு ஐந்து முறை அவரைச் சுற்றிவிடுவார்கள்.

இவரை 'பட்டு வருபவர்’ என்பார்கள். மற்றவர்கள் கண்களைக் கட்டப்பட்டவரைச் சுற்றி நின்றுகொண்டு 'என்னைத் தொடு, இல்லேன்னா உன்னைத் தொடு’ எனக் கிண்டல் அடித்துக் கண்களைக் கட்டியவரின் பின்புறமாக நின்றுகொள்கிறார்கள். குரல் எந்தப் பக்கம் வந்ததோ, அந்தப் பக்கம் ஆள் இருப்பதாக நினைத்து கண் கட்டப்பட்டவர் அவரைத் தொடும் முயற்சியில் பார்வை இழந்தவரைபோல் கைகளை நீட்டிக் காற்றில் தடவுவார்.

கிராமத்து விளையாட்டு - கண்ணாமூச்சி !

அதைப் பார்த்து அனைவரும் 'என்னைத் தொடு, இல்லேன்னா உன்னைத் தொடு’ என்று சிரிக்க, சிரிப்பு வந்த பக்கம் அவர்களைத் தொடச் சட்டெனத் திரும்பி முயற்சித்து தடுமாறி விழுந்தும்விடுவார். இதில் கண்களைக் கட்டியவர் யாரைத் தொடுகிறாரோ அவர் 'பட்டு வருவார்.’ இந்த விளையாட்டில் கண்கள் கட்டப்பட்டவர் ஆட்களைத் தொடுவது சிரமம். என்னால் யாரையும் தொட முடியவில்லை என்று முடிவுசெய்தால், 'சரணாகதி’ அடைவார்.

அப்போது தலையில் இரண்டு கைகளையும் வைத்துத் தரையில் குத்தவைத்து உட்காருவார். அவர் உட்கார்ந்த அடுத்த நிமிடமே அனைவரும் உட்கார்ந்து இருப்பவர் தலையைத் தொட வேண்டும். இதில் யார் கடைசியாகத் தலையைத் தொடுகிறார்களோ, அவரே பட்டவர். இதனால் இந்த விளையாட்டில் கண்ணைக் கட்டியவர் தொட்டுவிடாமல் இருக்க வெகு தூரம் போகவும் முடியாது அதே நேரத்தில் பக்கத்தில் இருந்தாலும் கண்ணைக் கட்டியவர் தொட்டுவிடுவார். எனவே கவனமாக இருக்க வேண்டும். இது ஒரு வகைக் கண்ணாமூச்சி.

சில ஊர்களில் பாட்டுடன் விளையாடுகிறார்கள். சாட் பூட் த்ரீசொல்லி அணி பிரிக்கப்பட்டுக் கடைசியாக இருப்பவர் பட்டு வருவார். கூட்டத்தில்  சட்டாம்பிள்ளையாக இருப்பவர் பட்டு வருபவரின் கண்களைத் தனது இரண்டு கைகளால் மூடுவார். கண்களை மூடிய பின்பு அருகில் உள்ள மறைவான இடங்களில் மற்றவர்கள் ஒளிந்து கொள்வார்கள்.

கிராமத்து விளையாட்டு - கண்ணாமூச்சி !

ஓட்டத்தில் கெட்டிக்காரராக இருப்பவர்கள், கண்கள் மூடியவர் கை எட்டும் தூரத்தில் நின்றுகொள்வார்கள். சட்டாம் பிள்ளை கண்களைத் திறந்து விடுவதற்கு முன்பு, 'கண்ணாமூச்சி ரேரே.... கண்டுபிடி ரேரே....., எத்தனை முட்டை இட்ட’ எனப் பாட எத்தனை பிள்ளைகள் விளையாட வந்தார்களோ... அத்தனை பிள்ளைகள் எண்ணிக்கையை வைத்து 'பத்து முட்டை இட்டேன்’ எனக் கண்களை மூடப்பட்டவர் சொல்லுவார்.

அதற்கு பதில் பாட்டாக 'அதில் கூமுட்டையை உடைச்சுத் தின்னுட்டு மஞ்சக்கரு முட்டையை எடுத்து வா’ எனச் சட்டாம்பிள்ளை பாட்டை முடித்துக் கண்களைத் திறந்துவிடுவார். அருகில் நிற்பவர்களைத் தொட முயற்சிக்கும் முன் சட்டாம்பிள்ளையை மறைந்து இருப்பவர்கள் தொட வேண்டும். அவர்கள் தொட்டால் பழம். சட்டாம் பிள்ளையைத் தொடுவதற்கு முன்பு பட்டுவருபவர் தொட்டுவிட்டால் யாரைத் தொடுகிறாரோ அவர் பட்டு வர வேண்டும்.

யாரையும் தொடவில்லை என்றால், முதலில் பட்டு வந்தவரே மீண்டும் மீண்டும் பட்டு வர வேண்டும். இந்த விளையாட்டில் பட்டு வருபவர் கண்களை மூடும் சட்டாம்பிள்ளை பட்டு வருபவரிடம் பாட்டினை ராகமாகப் பாடுவது இன்னும் கிராமத்து விளையாட்டோடு ஒன்றிக்கிடக்கிறது.