ஸ்பெஷல்
Published:Updated:

உலகக் கோப்பை இந்தியாவுக்கே !

அசத்தல் அபராஜித்சரா படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

##~##

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கூட்டாக சாம்பியன் ஆனதற்குக் காரணமானவர் அபராஜித்!

பேட்டிங்கிலும் சுழற் பந்துவீச்சிலும் அபாரத் திறமையை வெளிப்படுத்தி வரும் அபாரஜித், ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் ஒரே தமிழக வீரர்.

அபாரஜித் உடன் ஒட்டிப் பிறந்த அண்ணன் இந்திரஜித், தமிழக அண்டர் 19 அணியின் கேப்டன். அண்ணன் நிதானமாக அடியெடுத்து வைத்துக்கொண்டு இருக்க, வீராட் கோலி வழியில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான முயற்சியில் வேகம் காட்டிவருகிறார் தம்பி. உலகக் கோப்பைக்காகப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அபராஜித்துடன் பேசினோம்.

''முதலில் உங்கள் 'ரப்பர்பால்’ காலத்தைச் சொல்லுங்கள்...''

''நானும் இந்திரஜித்தும் நான்கு வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினோம். அப்போது சென்னை அம்பத்தூரில் குடியிருந்தோம். எல்லாரையும் போலவே தெருக்களிலும், லோக்கல் மைதானங்களிலும் விளையாடினோம். ஸ்கூல் லெவலில் விளையாடும்போதுதான் புரொஃபஷனல் கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது.''

உலகக் கோப்பை இந்தியாவுக்கே !

''கிரிக்கெட்டில் திறமையை மேம்படுத்த உறுதுணையாக உள்ளவர்கள்..?''

''அப்பா, அம்மா ரெண்டு பேருமே டாக்டர்கள். எங்களுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து முறைப்படி கிரிக்கெட் பயிற்சி பெறவைத்தார்கள். எங்களை டெவலப் பண்ணுவதற்கு வேண்டியதைச் செய்வார்கள். சிட்டியில் வசித்தால்தான் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் வீட்டை சென்னைக்குள் மாற்றினார்கள். செயின்ட் பீட்ஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தேன். அங்கே நல்ல ஊக்கம் கிடைத்தது. அதேபோல் என் வளர்ச்சிக்குக் காரணமானவர்களில் முக்கியமானவர், பயற்சியாளர் எஸ்.பாலாஜி. ஆரம்பத்தில் இருந்து பயிற்சி அளித்து வருபவர். பழனி என்பவரின் கைடன்ஸும் அடுத்தடுத்த இடங்களுக்குக் கொண்டுசென்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் பக்கபலமாக இருக்கிறது''

''ஆடுகளத்திலும் வீட்டிலும் இந்திரஜித் - அபராஜித் எப்படி இருப்பார்கள்?''

''அண்ணன் இந்திரஜித்தும் ஆல்ரவுண்டர். எங்கள் ரெண்டு பேரின் கிரிக்கெட் கிராஃப் ஒரே மாதிரியானதுதான். வீட்டிலும் கிரவுண்டிலும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான் இருப்போம். தேவைப் பட்டால் மட்டும் வீட்டில் கிரிக்கெட் பற்றி டிஸ்கஸ் பண்ணுவோம். கிரிக்கெட்டால் எங்கள் படிப்புக்கு எந்தப் பாதிப்பும் வந்தது இல்லை. இந்திரஜித் ப்ளஸ் டூ முடித்துவிட்டு, குருநானக் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். எனக்கு பரீட்சை சமயத்தில் கிரிக்கெட் இருந்ததால், ப்ளஸ் 2-வில் இன்னும் மூன்று தேர்வுகள் எழுத வேண்டி இருக்கிறது.''

உலகக் கோப்பை இந்தியாவுக்கே !

''திருப்புமுனையை ஏற்படுத்திய போட்டிகள் எவை?''

''கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை அண்டர் 13 அணியில் இருந்தே ஈர்க்கத் தொடங்கினேன். கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாகப்பட்டினத்தில் நடந்த நான்கு நாடுகள் போட்டித் தொடர்தான் எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் உடனான 7 போட்டிகளில் 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். அதில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.  அதனால், அண்டர் 19 அணியில் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர் ஆனேன்.''

''நீங்கள் பின்பற்ற விரும்பும் கிரிக்கெட் வீரர்கள்...''

''ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர்... இவ்விரு கிரிக்கெட் சகாப்தங்களைத்தான் மிகவும் பிடிக்கும். அர்ப்பணிப்பு, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது போன்றவையே அவர்களிடம் மிகவும் கவர்ந்தவை. பவுலிங்கை எடுத்துக்கொண்டால் நியூஸிலாந்தின் விட்டோரிதான் ஃபேவரைட்.''

''பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதியில் நீங்கள் 90 ரன்கள் விளாசியும் ஆட்டம் 'டை’யில் முடிந்தது. அந்த அனுபவத்தை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?''

''மறக்க முடியாத 'த்ரில்’ போட்டி அது. 283 ரன் என்பது கடினமான இலக்கு என்றாலும், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்தோம். நானும் கேப்டன் உன்முக்தும் முதலாவது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடினோம். ஒன்பது விக்கெட்டுகள் கையில் இருக்க, 13 ஓவர்களில் 90 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அது எளிதில் எடுக்கக்கூடிய ரன்தான். நான் ஆட்டம் இழந்ததும், புது பார்ட்னர்ஷிப் நிலைத்து நின்று விளையாட நேரம் தேவைப்பட்டது. நிதானமாக விளையாடிக்கொண்டு இருந்த உன்முக்த், கடைசியில் அவசரப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தது பின்னடைவை ஏற்படுத்தியது. அந்தப் போட்டியில் ஜெயித்து இருந்தால், ரொம்ப மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். எனினும் ஆட்டத்தை 'டை’யில் முடித்துக்கொண்டு, கூட்டாக ஆசிய சாம்பியன் ஆனது திருப்தியைத் தந்தது. உலகக் கோப்பைக்குச் செல்லும் வேளையில் இதுபோன்ற போட்டியால் நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது.''

''அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்தியாவின் வாய்ப்பு எப்படி இருக்கிறது?''

''ஆசியக் கோப்பை முடிந்த பின்புதான் உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே அதில் என் பெயரும் இடம்பெற்றது மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கியது. நாட்டுக்காக விளையாடுவது பெருமிதம் தருகிறது. நம் அணி மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கிறது. தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அணியாகச் சேர்ந்து பயிற்சிபெறுவது டீம் ஸ்பிரிட்டுக்குத் துணைபுரிகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கக்கூடிய படையுடன் புறப்படுகிறோம். நமக்கே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து உலகக் கோப்பையுடன் திரும்புவது நிச்சயம்.''

''ஜூனியர் உலகக் கோப்பைக்குப் பின் உங்களது கேரியர்..?''

''அண்டர் 19 உலகக் கோப்பை மூலம் பலருக்கும் 'பிரேக்' கிடைத்து இருக்கிறது. விராட் கோலி முதலானோர் இதற்குச் சான்று. அவர்களைப்போல என் திறமையை அழுத்தமாகப் பதிவு செய்வதற்கான களமாகவே இதைப் பார்க்கிறேன். தேசிய சீனியர் அணியில் இடம்பெறுவது என்ற என் இலக்கை அடைவதற்கான மிகப் பெரிய வாய்ப்பாகவே இதைப் பயன்படுத்திக்கொள்வேன். உலகக் கோப்பையைத் தொடர்ந்து நடைபெறும் ரஞ்சித் தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.''

அபாரம் அபராஜித்!