ஸ்பெஷல்
Published:Updated:

ஒலிம்பிக் நம்பிக்கைகள் !

சரா

##~##

லண்டன் ஒலிம்பிக்கில் 13 போட்டிப் பிரிவுகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கப் புறப்பட்டு இருக்கும் வீரர்,  வீராங்கனைகளின் எண்ணிக்கை 81.

இந்திய விளையாட்டு வரலாற்றில் இத்தனை பேர் ஒலிம்பிக் களத்தில் இறங்குவது இதுவே முதல் முறை. கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 12 போட்டிப் பிரிவுகளில் 57 பேர் கலந்துகொண்டதே இதுவரை அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

சென்ற முறை ஒரு தங்கம், இரண்டு வெண்கலங்களை வசப்படுத்திய இந்தியா, இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையிலான பதக்கங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பதக்கம் நிச்சயம்’ என்று உறுதி அளிக்கும் இந்திய நம்பிக்கைகள்...

ஒலிம்பிக் நம்பிக்கைகள் !

அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ரஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்): தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கத்தைப் பெற்றுதந்த திருமகன், அபினவ். தொடர்ந்து தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்ட இவரது இலக்கு, லண்டனிலும் தப்பாது என நம்பலாம். காமன்வெல்த் போட்டிகளில் அசத்திய ககன் நரங், உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரரான ரஞ்சன் சிங் சோதி இருவரும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளவர்கள். மொத்தம் 11 பேரில்  மனவ்ஜித் சோதி, ஹீனா, அன்னு ராஜ் என நம்பிக்கையை வலுப்படுத்தும் பலர் உள்ளனர்.

சாய்னா நேவால் (பேட்மிட்டன்): மகளிர் பேட்மிட்டன் பிரிவில் முதல் 'ஒலிம்பிக் பதக்கம்' பெறப்போகும் வீராங்கனை என்றே விமர்சகர்கள் சொல்கிறார்கள். உலகத் தர வரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இவர், சமீபத்தில் நடந்த மூன்று தொடர்களிலும் தர வரிசையில் தன்னைவிட முன்னிலையில் இருந்த சீன வீராங்கனைகளை வீழ்த்தி, நம்பிக்கையை உயர்த்தி இருக்கிறார்.

ஒலிம்பிக் நம்பிக்கைகள் !

தீபிகா குமாரி (வில்வித்தை): திறமையால் வறுமையை வென்ற இளவரசி எனப் போற்றப்படுபவர். உலகக் கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று, உலகின் நம்பன் 1 வில்வித்தை வீராங்கனை ஆனார். புகழாரங்களைக் கண்டுகொள்ளாமல் ஒலிம்பிக் பதக்கத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்டு தீவிரப் பயிற்சி மேற்கொண்டவருக்குப் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்.

மேரி கோம், விஜேந்தர் சிங், ஷிவ தாபா (குத்துச் சண்டை): ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், முதல் முறையாக ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு இருக்கும் பெண்கள் குத்துச் சண்டையில் களம் இறங்குகிறார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக சிரத்தையுடன் பயிற்சிகள் செய்து வருகிறார்.

ஒலிம்பிக் நம்பிக்கைகள் !

பீஜிங்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர், சில பின்னடைவுகளுக்குப் பிறகு மீண்டும் லண்டனுக்குத் தகுதி பெற்றவர். இன்னொரு பதக்கத்துக்காகக் கடுமையாக உழைத்துவரும் இவர் மீது நம்பிக்கை இரட்டிப்பு ஆகி உள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளம் இந்தியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான 18 வயது ஷிவ தாபா, வேகமும் விவேகமும் கலந்த தன் ஆட்டத்திறனால் வியக்கவைத்தவர்.

கிருஷ்ண பூனியா (வட்டு எறிதல்): 'தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு என் மூலம் நிச்சயம் பதக்கம் கிடைக்கும்’ என்ற தன் சபதத்தை கிருஷ்ண பூனியா நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. 2010 டெல்லி காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என நம்பலாம்.

ஒலிம்பிக் நம்பிக்கைகள் !

சுஷில் குமார் (மல்யுத்தம்): சத்தம் இன்றி சாதனை செய்யும் நாயகன். தனது மல்யுத்தப் பாணியில் மாற்றங்கள் செய்து களம் காணும் சுஷில் மீண்டும் ஆச்சரிய வெற்றியைத் தேடித் தருவார் என எதிர்பார்க்கலாம்.