ஸ்பெஷல்
Published:Updated:

எப்படி வந்தேன் தெரியுமா ? - சாக்ஸ்

இரா.நடராசன்

##~##

என்ன ஒரு கலாட்டா... காலையில் ஸ்கூல் கிளம்பும்போது ஷ§ கிடைச்சுடும், ஆனால், நான் கிடைக்க மாட்டேன். வீடே பரபரப்பாயிடும். என்னைத் தேடு தேடுனு தேடினால்... கட்டிலுக்கு கீழோ, மாடிப் படிக்கு அடியிலோ இருப்பேன்.

என்ன அப்படி பாக்கறீங்க? நான்தாங்க சாக்ஸ் பேசறேன். நான் எப்படித்  தயாராகி வர்றேன்னு தெரிஞ்சுக்க ஆசையா?

ஆரம்பத்தில் நான் ஆட்டு ரோமமாகவோ, இயற்கையில் கொட்டிக்கிடக்கும் அக்ரிலிக் வேதிப்பொருளாகவோ இருப்பேன். உல் எனும் ஆட்டு ரோமம், நைலான் அல்லது பாலியஸ்டர், பருத்தி என விதவிதமான பொருட்களால் என்னை உருவாக்குகிறார்கள். கோடையில் அணியப் பருத்தி, குளிரில் அணிய ஆட்டு ரோமம், அழகுக்கு அணிய நைலான் எனப் பலவிதங்களில் உண்டு.

கூடவே கொஞ்சம் பட்டு, லினன், சில சமயம் மூங்கில் கழியை உறித்து, அந்த இழைகளிலும் என்னை உருவாக்கு வார்கள்.

என்னை முழுதும் உருவாக்கிட ஒரு குட்டி நெசவு இயந்திரம் 1589-ல்  கண்டுபிடிக்கப்பட்டது. எனது பாகங்கள் ஐந்து. இதோ பாருங்க...

1. பிடிப்பு (அதாவது எலாஸ்டிக்)
2. முன்கால் (முட்டி முதல் குதிகால்      வரை)
3. குதிகால்
4. மேல் பாகம்
5. அடிப் பாகம்.

பல தொழிற்சாலைகளில் இவை தனித்தனியே தயாராகி, பிறகு ஒன்றாகக் கோர்க்கிறார்கள். குதிகால், கப் வடிவத்தில் பிரத்யேக இயந்திரம்கொண்டு தயாரிக்கப்படுகிறது. காலடிப் பகுதியில் மேல் பாகத்தைவிட அடிப் பாகம் வேர்வையை உறிஞ்சும்படி தடிமனான நூலால் இருக்கும்.

எப்படி வந்தேன் தெரியுமா ? - சாக்ஸ்

முட்டி வரை நீண்ட சாக்ஸ், சீருடை சாக்ஸ், ஷூ அளவே கொண்ட சாக்ஸ், விரல்களால் தைத்த டோ (Toe) சாக்ஸ், டாபி என்று தொடை வரை நீளும் ஜப்பானிய சாக்ஸ், பியோசியான் என்று ரிப்பன் வைத்துக்கட்டி அழகுபடுத்திய கொரிய நாட்டு சாக்ஸ், முரட்டு சாக்ஸ் எனப்படும் ராணுவ சாக்ஸ், போலீஸ் சாக்ஸ் எனும் மடிப்பு சாக்ஸ், இப்படி நான் பலவகைகளில் தயாராகிறேன்.

சாக்ஸ் தயாரிக்கும் தொழிலுக்கு ஆங்கிலத்தில் ஹோசைரி (Hosiery) என்று பெயர். கி.மு.300-களில் ரோமாபுரி காமிக் நடிகர்கள் பயன்படுத்திய லூஸான கால் செருப்பு சோக்கஸ் (Soccus) என்று அழைக்கப்பட்டன. அதில் இருந்துதான் சாக்ஸ் என்ற பெயர் வந்தது.

எப்படி வந்தேன் தெரியுமா ? - சாக்ஸ்

கி.பி. 1000 முதல் 1700 வரை சாக்ஸ் ஆகிய என்னை அணிவது பெரிய சமூக கௌரவமாக இருந்தது. செல்வச் செழிப்பின் சமூக அடையாளமாய் இருந்தேன். பிறகு, ராஜாங்க சிப்பந்திகள் மட்டுமே என்னை அணிவார்கள். அதன் பிறகுதான் சாமானியருக்குமான பொருளாக நான் மாறினேன்.

எல்லோரும் அணிந்தால் மட்டும் போதாது. தினமும் என்னைத் துவைத்து துர்நாற்றம் இல்லாமல் வைத்துகொள்ளுங்கள். காற்றாட உலர்த்துங்கள். காலையில் அவசர அவசரமாகத் தேடாமல், கவனமாக ஒரே இடத்தில் வையுங்கள்.

எப்படி வந்தேன் தெரியுமா ? - சாக்ஸ்

என்னை எந்த அளவுக்கு கவனிக்கிறீர்களோ, அந்த அளவுக்குக் நானும் உழைப்பேன். உங்கள் கால்களுக்கும் கம்பீரத்தைக் கொடுப்பேன்.