மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

கே.யுவராஜன் ஹரன்

##~##

''டீச்சர், இந்தாங்க தேன் எடுத்துக்கங்க'' என்று தேன் பாட்டிலை நீட்டினான் பரத்.

''என்ன விசேஷம் பரத்?'' என்று கேட்டார் டீச்சர்.

''நேத்து இவன் ஸ்கூலில் தேன்கூடு வளர்க்கும் பண்ணைக்குக் கூட்டிட்டுப் போனாங்களாம். அங்கே வாங்கி  இருக்காங்க'' என்றான் பிரசாந்த்.

''ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு டீச்சர். அழகான மரப் பெட்டிகளில் தேனீக்களை வளர்க்கிறாங்க. தேனீக்கள் வெளியே போய்ப் பூக்களில் இருந்து தேனை எடுத்துகிட்டு வந்து அந்தப் பெட்டிகளில் சேகரிக்குமாம். குறிப்பிட்ட காலம் வரை சேகரிக்கப்பட்ட தேனை, அந்தத் தேனீக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் எடுக்கிறாங்க. இதுக்கு அரசாங்கமே உதவித் தொகையும் கொடுக்குது'' என்றான் பரத்.

''இப்படிச் சேகரிக்கும் தேன் சுத்தமாகவும் இருக்கும். வெளியே மரங்களில் இருக்கும் தேன் கூடுகளைத் தீயில் சுட்டு, அடையைப் பிழிந்து எடுக்கும்போது அதில் தேனீக்களின் கழிவுகள், ரத்தமும் கலந்துவிடும். அது அவ்வளவு சுத்தமானது கிடையாது'' என்றார் டீச்சர்.

''டீச்சர் இந்தத் தேன்கூடு உருவாகும் விதத்தைப் பார்க்க ஆசையா இருக்கு'' என்றாள் தீபா.

''ஓ... முதலில் இயற்கையான ஒரு தேன் கூட்டைப் பார்க்கலாம்'' என்ற டீச்சர் மந்திரக் கம்பளத்தை எடுத்து வந்தார். அவர்களைச் சுமந்துகொண்டு அது பறந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''உலகம் முழுக்கவே செயற்கை முறையில் தேன்கூட்டை உருவாக்கி தேன் சேகரிக்கிறது பெரிய தொழிலாகவே நடக்குது. சுத்தமான தேனில் சுவையோடு மருத்துவக் குணமும் உண்டு. குளுக்கோஸ், என்ஸைம்ஸ் எனப் பல விஷயங்கள் தேனில் இருக்கு'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களை ஒரு பெரிய திறந்தவெளிப் பூங்காவில் இறக்கியது. அங்கே இருந்த மரங்களில் தேன் கூடுகள் தொங்கிக்கொண்டு இருந்தன. தேனீக்களின் ரீங்காரம் இசையாக ஒலித்தது. பரத்தும் பிரசாந்தும் ஒரு மரத்தை நெருங்கினார்கள்.

''டேய்... டேய்... ரொம்பப் பக்கத்தில் போகாதீங்கடா, கொட்டிடப் போகுது'' என்று பதறினாள் தீபா.

''பயப்படாதே தீபா... நாம் கூட்டின் அருகில் போய் கையை அசைத்தாலோ, சத்தம் போட்டாலோ, கூட்டுக்கு ஆபத்து என்று நினைத்து நம்மைத் தாக்கும். மற்றபடி நாம் அசையாமல் இருந்தால் அவையும் எதுவும் செய்யாது. இப்போ நீங்கள் பார்க்கிறது மலைத் தேனீக்களின் கூடு'' என்றார் டீச்சர்.

  ''தேனீக்களிலும் வகைகள் உண்டா டீச்சர்?'' என்று கேட்டான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஆமாம் நம் நாட்டில் நான்கு வகை இருக்கு. அதில் ஒன்று கொசுத் தேனீ. கொசு அளவுக்கு கருப்பாக, சின்னதாக இருக்கும். சுவர் இடுக்குகளில் சின்னதாகக் கூடு கட்டும். இந்தக் கூடு பார்ப்பதற்கு மிளகுக் கொத்து மாதிரி இருக்கும். இந்தக் கூட்டில் இருந்து அதிகபட்சம் இரண்டு தேக்கரண்டி தேன்தான் கிடைக்கும். இன்னொரு வகை கொம்புத் தேனீ. இந்த மாதிரி திறந்தவெளியில் ஒற்றை அடையாகக் கொஞ்சம் சிறிய அளவில் கட்டும். அதில் சில அவுன்ஸ் தேன் இருக்கும். இந்த மலைத் தேனீ கூடும் ஒற்றை அடையாகத்தான் இருக்கும். ஆனால், பெரியதாக கட்டும். மூணு லிட்டர் வரை தேன் கிடைக்கும்'' என்றார் டீச்சர்.

''அப்போ நான்காவது?''

''அதுதான் பரத் பார்த்துட்டு வந்த அடுக்குத் தேனீ. அதனுடைய கூடு பல அடைகளாக அதாவது, அடுக்குகளாக இருக்கும். அவற்றுக்கு வெளிச்சம் பிடிக்காது. கிணற்றின் உள் பகுதி, சுவர் இடுக்கு, மரப்பொந்து போன்ற இருட்டுப் பகுதியில் கூடு கட்டும். மற்ற மூன்று தேனீக்களுமே அடிக்கடி தங்கள் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், அடுக்குத் தேனீ ஒரே இடத்தில் கூடுகளைக் கட்டும். அதனால், அடுக்குத் தேனீகளை பண்ணைகளில் வளர்க்கிறாங்க. இப்போ இந்தத் தேனீக் கூட்டுக்குள்ளே என்ன நடக்குதுனு பார்க்கலாமா?'' என்றார் டீச்சர்.

''ஓ... பார்க்கலாமே'' என்று சுட்டிகள் சொன்னதும் மந்திரக் கம்பளம், ஒரு முறை அவர்களை மூடித் திறந்தது.

அடுத்த நொடி அவர்கள் தலை மனித உருவமாகவும் உடல் தேனீயாகவும் மாறி இருந்தது. ''வாவ்'' என்று குஷியுடன் இறக்கைகளைப் படபடத்தார்கள். ரீங்காரம் செய்தவாறு தேன் கூட்டுக்குள் நுழைந்தார்கள்.

அங்கே ஆயிரக்கணக்கான தேனீக்கள் சுறுசுறுப்புடன் வேலையில் மூழ்கி இருந்தன. தேன் மணம் கிறங்கவைத்தது. ''ஒரு தேன் கூட்டில் ஒரு ராணித் தேனீ, ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று விதமாக இருப்பதை படிச்சு இருப்பீங்க. இங்கே இருக்கிறதில் எது ராணித் தேனீனு தெரியுதா?'' என்று கேட்டார் டீச்சர்.

அவர்கள் கண்களை உருட்டிச் சுற்றிலும் பார்வையைச் செலுத்தினார்கள். ''அதோ எல்லாவற்றையும்விடப் பெருசா ஈ சைசுக்கு இருக்கே'' என்று கோரஸாகச் சொன்னார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''கரெக்ட்! இந்த ராணித் தேனீ மூன்று ஆண்டுகள் வரை உயிர் வாழும். ஒரு நாளைக்கு 1,000 முட்டைகள் வரை இடும். கூட்டில் ஆண் தேனீக்கள் ஒரு சில இருக்கும். அவற்றுக்கும் பெரிய வேலை கிடையாது. சாப்பிடுவதும் வெளியே ஜாலியாக ரவுண்ட் அடிச்சுட்டு வர்றதுமாக இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் ராணித் தேனீயுடன் இருக்கும். அத்துடன் அவற்றோட பணி முடிஞ்சது. வேலைக்காரத் தேனீக்கள்தான் தேன் கூட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்குது. இவையும் பெரும்பாலும் பெண் தேனீக்கள்தான். இவற்றின் ஆயுள் காலம் 45 முதல் 90 நாட்கள். இவைதான் பூக்களில் இருந்து தேனைச் சேகரித்து, வயிற்றுக்கு அருகே இருக்கும் மெழுகு உற்பத்தி செய்யும் உறுப்பில் நிரப்பிக்கொள்ளும். கூட்டுக்கு வந்ததும் வயிற்றின் அடிப் பக்கத்தில் இருக்கும் துளை மூலம் மெழுகாக மாற்றி வெளியேற்றும். இந்த மெழுகு காற்றில் கலந்து கடினமாக மாறும். அதை வாயால் கடித்து மென்மையாக்கி, கூட்டில் அறைகளை அமைத்துத் தேனாகச் சேகரிக்கும். வயதானதும் அவற்றால் தேன் சேகரிக்க போக முடியாது. அப்போது வாசலில் நின்று காவல் காக்கும். யாராவது வந்து கூட்டைக் கலைக்க நினைத்தால் எதிர்த்துப் போராடும்... அதாவது கொட்டும்'' என்றார் டீச்சர்.

''இந்த வேலைக்காரத் தேனீக்களை உருவாக்குவதும் ராணித் தேனீதானே?'' என்று கேட்டாள் சுரேகா.

''இல்லை சுரேகா, முட்டை போடறது மட்டும்தான் அதன் வேலை. மற்றபடி செவிலித் தாயாக மாறி, யார் அடுத்த ராணித் தேனீ என்றும் யார் எல்லாம் வேலைக்காரத் தேனீக்கள் என்றும் முடிவுசெய்வது வேலைக்காரத் தேனீக்கள்தான். அங்கே பாருங்க'' என்றார் டீச்சர்.

கூட்டின் ஒரு பக்கத்தில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் புழுப் பருவத்தில் இருந்தன. அவற்றுக்குச் சில வேலைக்காரத் தேனீக்கள் உணவைக் கொடுத்துகொண்டு இருந்தன. அதே நேரம், இன்னொரு பக்கத்தில் ஒரு புழுவுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு நடந்துகொண்டு இருந்தது.

''விஷயம் புரியுதா? அதுதான் இன்னொரு ராணித் தேனீயாக வரப்போகுது. ஆயிரக்கணக்கான முட்டைகளில் இருந்து வருகிற புழுக்களில் இருந்து ஒரு பெண் தேனீயை வேலைக்காரத் தேனீக்கள் தேர்வு செய்யும். அந்தப் புழுவுக்குத்  தங்கள் வாயில் இருந்து சுரக்கும் ஸ்பெஷல் கூழை உணவாகக் கொடுக்கும். அது ரொம்ப ஊட்டச்சத்தான உணவு. மற்ற புழுக்களுக்குத் தேன் மற்றும் மகரந்தம் கலந்த ரொட்டி போன்ற உணவு கொடுக்கப்படும்'' என்றார் டீச்சர்.

''ம்... மனிதர்களில்தான் பெரிய ஆட்களுக்கு ஒரு கவனிப்பு, சாதாரண ஆட்களுக்கு ஒரு கவனிப்புன்னா இங்கேயுமா?'' என்று பெருமூச்சுவிட்டாள் தீபா.

''மேலோட்டமாகப் பார்த்தால் இது பாரபட்சமாகத் தெரியாலாம் தீபா, ஆனால் இப்படிச் செய்வதுதான் நல்லது. எல்லாவற்றையும் சமமாக கவனித்தால் என்ன நடக்கும்? எல்லாமே ராணித் தேனீ அளவுக்கு வளர்ந்துடும். அவை எல்லாமே ஆயிரக்கணக்கில் முட்டைகள் இட்டால், அவற்றுக்கான உணவும் நமக்கான தேனும் கிடைக்காதே? இப்ப இங்கே என்ன நடக்குதுனு கவனிங்க'' என்றார் டீச்சர்.

இன்னொரு பக்கத்தில் இருந்து ஒரு பெரிய தேனீ வெளிப்பட்டது. கூட்டில் இருந்து வெளியேறியது. அதனுடன் நூற்றுக்கணக்கான தேனீக்களும் வெளியேறின.

''அதுங்க எல்லாம் எங்கே போகுது?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''தனிக்குடித்தனம்! முதலில் வெளியேறின பெரிய தேனீ இன்னும் சில நாட்களில் முழுமையான வளர்ச்சி அடைந்து ராணித் தேனீயாக மாறிடும். ஆனால், ஒரு கூட்டில் ஒரு ராணிக்கு மட்டும்தானே அனுமதி? அதனால், ஒரு கூட்டத்துடன் அது வெளியேறுது. வேறு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே வேலைக்காரர்கள் புதுசாகக் கட்டுகிற கூட்டில் குடியேறும். இப்படி ஒவ்வோர் கூட்டிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேனீக்களின் எண்ணிக்கை அதிகம் ஆனதும் ஒரு கும்பல் தனிக்குடித்தனம் போய்டும்'' என்றார் டீச்சர்.

அவர்கள் கூட்டைவிட்டு வெளியே வந்ததும் மந்திரக் கம்பளம் அவர்களை மீண்டும் பழைய உருவத்துக்கு மாற்றியது. ஒரு தேன்கூடு வளர்ப்புப் பண்ணைக்கு அழைத்து சென்றது. அங்கே மரப் பெட்டிகளில் தேனீக்கள் வளர்க்கப்படுவதைப் பார்த்தார்கள்.

''அடுக்குத் தேனீக்கள்பற்றிச் சொன்னேன் இல்லியா? மலைத் தேனீக்கள்போலவே இந்த அடுக்குத் தேனீக்களின் கூட்டிலும் ஆட்கள் அதிகம் ஆனதும் தனிக்குடித்தனத்துக்கு கிளம்பும். இடம் தேடி வெளியே வருகிற தேனீக்கள் மரக் கிளைகளில் மொத்தமாகத் தங்கும். அப்போது தலையணை உறை போன்ற பையை எடுத்துவந்து இந்தத் தேனீக்களைப் பிடிப்பார்கள். அப்படிப் பிடித்தவற்றை மரப் பெட்டிகளில் அடைப்பார்கள். இப்படித்தான் தேன்கூடு பண்ணை ஆரம்பிக்குது. அப்படி அடைக்கப்படும் கூட்டில் ராணித் தேனீ இருக்கிறது ரொம்ப முக்கியம். அப்போதான் மற்ற தேனீக்கள் அந்தக் கூட்டில் இருக்கும். இல்லை என்றால் மொத்தமாக வெளியேறிடும்.

மரப் பெட்டிகளில் அடைக்கப்படும் தேனீக்களுக்கு ஆரம்பத்தில் உணவு வேண்டுமே? ஒரு பாட்டிலில் சர்க்கரைப் பாகு, தேன் ஆகியவற்றை ஊற்றி, பாட்டிலின் வாயைத் துணியால் கட்டி உள்ளே வைத்துவிடுவார்கள். தேனீக்களும் இது கூடு கட்ட நல்ல இடம்னு வேலையை ஆரம்பிச்சுடும். அதுக்கு அப்புறம் கூட்டைப் பராமரிக்கிறது, மழைத் தண்ணீரோ, அதிக வெப்பமோ உள்ளே போகாமல் பார்த்துக்கிறது, எறும்புகள் போன்றவை உள்ளே போகாமல் பாதுகாக்கிறதுனு தொழில் ரீதியான வேலைகள் நிறைய இருக்கு. சரி கிளம்பலாமா?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.

''இருங்க டீச்சர்... தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்னு என் பாட்டி சொல்வாங்க. நாமோ தேனீக்களாகவே மாறிக் கூட்டுக்குள்ளே போய் வந்தோம்.  ஆளுக்கு கொஞ்சம் தேன் சாப்பிடுவோமே'' என்றான் பரத்.

''ஏற்கெனவே சாப்பிட்டது போதும். கிளம்புங்க'' என்ற மாயா டீச்சர், அவர்களைக் கம்பளத்தில் ஏற்றிக் கொண்டு பறந்தார்.