மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சர் கூகுள் இணைய தளத்தில் 'மைத்ரி’ ஆராய்ச்சி நிலையத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுட்டிகள் படை, ''ஓ... இந்த வாட்டி எங்க போகப் போறோம்னு புரிஞ்சுடுச்சு'' என்று கத்தினர்!

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''வாங்க, நாம போன முறை மணற் பாலை வனத்தைப் பத்தி பார்த்தோம். இந்த முறை பனிப் பாலைவனத்தைப் பத்தி பார்ப்போம்'' என்றார் டீச்சர்.

''பனிப் பாலைவனம்னா ரொம்பக் குளிருமே டீச்சர்?'' என்றான் பிரசன்னா.

''அதுக்குத்தான் மந்திரக் கம்பளம் இருக்கே?'' என்றாள் மது.

##~##

'ஓ.கே., நாம் இந்த முறை உலகத்தின் எல்லை என்று அழைக்கப்படும் துருவப் பிரதேசங்களுக்குத்தான் போகப் போகிறோம். தெற்கு மற்றும் வடக்குத் துருவங்களான அண்டார்டிக்கா, ஆர்டிக்... இந்த ரெண்டும்தான் அந்த துருவப் பிரதேசங்கள்'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, ''இதில் ஆர்டிக் பனியால் சூழப்பட்ட நிலப் பகுதியாவும், அண்டார்டிக்கா பனியால் சூழப்பட்ட நீர்ப் பகுதியாவும் இருக்கு'' என்று ஒரு இன்ட்ரோ கொடுத்தார்.

''டீச்சர், அந்த ரெண்டு பிரதேசமும் பனியால் மூடப்பட்டு இருக்குமே? நாம் எப்படி போய், அங்க யாரைப் பார்க்கிறது?'' என்று கேட்டான் கணேஷ்.

''ம்... அங்கே யார் இருப்பா? பெங்குவின், பனிக் கரடி, இதைத் தவிர என்ன இருக்கும்?'' என்றாள் சரண்யா.

''அங்கே பென்குவின்கள், துருவக் கரடிகள், ரெயின்டீர் மான்கள் இவற்றோட முக்கியமா எஸ்கிமோக்களும் இருக்காங்க. நாம் துருவப் பகுதிகளில் என்னென்ன இருக்கு... அவற்றின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றிதான் தெரிஞ்சிக்கப் போறோம்'' என்றார் டீச்சர்.

''சரி, எல்லோரும் ரெடியா?'' என்றபடியே... மந்திரக் கம்பளத்தை விரிக்கச்செய்தார் மாயா டீச்சர். எல்லோரும் அதன் மீது ஏறிக் கொள்ள, மந்திரக் கம்பளம் அவர்களை அண்டார்ட்டிக்காவில் ஒரு எஸ்கிமோக் களின் இக்ளூ வீட்டருகே கொண்டுபோய்ச் சேர்த்தது.

அவர்கள் எல்லோரையும் மந்திரக் கம்பளத்தின் உதவியால் எஸ்கிமோக்களின் உடைக்கு மாற்றினார் மாயா டீச்சர்!

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இது இக்ளூ வீடு. எஸ்கிமோக்கள் இங்கே வாழ்ந்து வருகிறார்கள்'' என்று தனது புத்தி சாலித்தனத்தை நிரூபித்தான் பிரசன்னா.

''அட... அட! என்ன அறிவுடா சாமி'' என்று அவனுக்கு அழகு காட்டினாள் சரண்யா.

''பிரசன்னா சொன்னதுல பாதிதான் சரி!'' என்ற டீச்சர் தொடர்ந்து, ''இக்ளூ-ன்னா பனி வீடு என்று அர்த்தம். இந்த வீட்டில் எல்லா எஸ்கிமோக்களும் வசிப்பதில்லை. கனடியன் எஸ்கிமோக்கள்தான் பெரும்பாலும் வசிக்கிறார்கள். பொதுவாக இக்ளூவை,  பயணத்தின்போது தங்கும் கெஸ்ட் ஹவுஸ்ஸாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் தவிர, இன்னொரு பெரிய ஆச்சர்ய  மான விஷயம், நான்கில் மூன்று பங்கு எஸ்கிமோக்கள் இக்ளூ வீட்டைப் பார்த்ததுகூட கிடையாதாம்'' என முடித்தார்.

இதைக் கேட்டு, ''இதைப் பார்டா'' என்று வடிவேலு லெவலுக்கு வியந்தான் கணேஷ்.

''டீச்சர், அவங்க நல்லவங்களா?''’ என்றாள் சரசு.

''உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மக்களுள் எஸ்கிமோக்களும் அடங்குவர். மற்றவர் களுடன் பழகும் போதும் முக மலர்ச்சியுடன் பழகுவார்கள். இவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதால் அதிக வாழ்நாட்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்'' என்ற டீச்சர், இவர்கள் ஆசியாவில் இருந்து நிலப் பாதை வழியே இங்கு வந்து, அப்படியே ஆர்டிக் பிரதேசம் முழுவதும் பரவினார்கள்'' என்று முடித்தார்.

''டீச்சர் அதோ பாருங்க கிறிஸ்மஸ் தாத்தவோட வண்டி'' என்று குஷியாகக் கத்தினாள் மது.

''ஆமாம்! வாங்க அதில போய்ப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

''டீச்சர் இங்கே வேற விலங்குகளே கிடையாதா?'' என்று கேட்டாள் சரண்யா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்'' என்ற டீச்சர், ரெயின்டீர்கள் பூட்டப்பட்டிருந்த ஸ்லெட்ஜ் வண்டியில் எல்லோரையும் ஏற்றினார்.

''ரெயின்டீர்களுக்கு 'காரிபு’ என்ற பெயரும் உண்டு. இவை உலகிலேயே மிக நீண்ட தூரத்துக்கு நிலப் பகுதி வழியாக இடப் பெயர்ச்சி செய்யுமாம். இவற்றைப் பொறுத்தவரையில் அந்தப் பிரதேச மக்களுக்கு பலவிதங்களில் உபயோகமாக இருக்கின்றன. போக்கு வரத்துக்கும், பால், மாமிசத்துக்கும், தோல் ஆடைகள் செய்யவும், நீண்ட கொம்புகள் கூடாரங்கள் அமைக்கவும் எனப் பல விதங்களில் பயன்படுகின்றன'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர், அது எப்படி கிறிஸ்துமஸ் தாத்தாவோட வண்டியா வந்தது?'' என்றாள் சரசு.

''பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் கிறிஸ்துமஸ் தாத்தாவான 'சாண்டா க்ளாஸ்’ இந்த வண்டியில் பறந்து பறந்து எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொடுத்ததா ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அது இன்று வரையிலும் தொடருது'' என்றார் டீச்சர்.

''டீச்சர், அதோ கரடி'' என்றான் கணேஷ்.

''கரடின்னு சொல்லாதே! பனிக் கரடி இல்லைன்னா துருவக் கரடின்னு சொல்லணும்'' என்றான் பிரசன்னா.

''சரிதான்! இவற்றைத் துருவக் கரடிகள் என்பார்கள்.  இப்பிரதேசத்தில் இருக்கும் பாலூட்டிவகையில் பெரிய விலங்கினம் இவை! குளிர்காலத்தில் கர்ப்பமாக இருக்கும் இவை, வசந்தக் காலத்துக்காகக் காத்திருக்கும். வசந்தக் காலத்தில்தான் குட்டியைப் பிரசவிக்கும். அப்போதுதான் குட்டிகளுக்கு நிறைய உணவு கிடைக்கும். அதுவரை குகைக்குள் இருக்கும் பனிக் கரடிகள் வசந்தக் காலத்தில் பனிப் பாறைகளை உடைத்துக் கொண்டு, குகையைவிட்டு வெளியே வரும்'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர், நாம் கிளம்பும்போது பனிப் பாலைவனம் அப்படீன்னு சொன்னீங்களே?'' என்று ஞாபகப் படுத்தினாள் மது.

''பரவாயில்லையே'' என்று பாராட்டினான் பிரசன்னா.

''ஆமாம்! சஹாரா பாலைவனத்தில் நமக்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் அதை நாம் குடிச்சு, தொண்டையை நனைச்சுக்கலாம். ஆனால், அண்டார்டிக்கா பகுதியில் தண்ணீர் கிடைத்தால், அதைக் கண்டிப்பாக குடிக்க முடியாது. ஏன்னா, அதோட குளிர்ச்சி மைனஸ் 70 டிகிரி செல்ஷியஸ்ல இருக்கும். நினைச்சுப் பாருங்க. இவ்ளோ ஜில்லுன்னு தண்ணி இருந்தா குடிக்க முடியுமா? யோசிச்சுப் பாருங்க. அதனாலதான் சொன்னேன் பனிப் பாலைவனம்னு!  என்றார் டீச்சர்.

''இங்கே செடி, கொடில்லாம் வளராதா?'' இது சரசு.

''இங்கே தாவரங்கள் வளர் வதற்கு கடுமையாகப் போராட வேண்டி இருக்கும். முழுவதும் பனியால் மூடப் பட்டு இருப்பதால், தாவரங்கள் வளர்வது மிகவும் கடினம். எங்கேயாவது பாறைகளில் பிளவு இருந்து, அவற்றின் இடைவெளிகளில்தான் செடிகள் வளரமுடியும். இவற்றின் இலைகள், மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.'' என்றார் டீச்சர்.

''டீச்சர் இங்கே மலைகள் உண்டா?'' இது சரண்யா.

''இங்கு எரிமலையே உண்டுன்னா பார்த்துக்கோங்க!'' என்று ஆச்சர்யம் தந்தார் டீச்சர்.

''அப்படியா டீச்சர்?'' என்றான் மது.

''ஆமாம்! அதன் பெயர் எரோப்ஸ். உலகின் தென்கோடி யில் வெடிக்கும் நிலையில் உள்ள எரிமலை இது. 3794 மீட்டர் உயரம் உடைய இந்த எரிமலையை ஜேம்ஸ் க்ளர்க் ரோஸ் என்பவர்தான் 1894-ல் கண்டுபிடித்து எரோப்ஸ் எனப் பெயர் வைத்தார். எரோப்ஸ் என்பது அழிவையும் இருட்டையும் குறிக்கும் கிரேக்கக் கடவுளாகும்''

''பனிக்குள் எரிமலை'' என்றான் கவிதையாக கணேஷ்.

''கவிதைக்கு ஏற்ற  தலைப்புடா'' என்று பாராட்டினான் பிரசன்னா.

''இங்கே நம்ம இந்திய ஆராய்ச்சி மையம் அமைச்சாங்களே?'' என்று கோடு போட்டான் கணேஷ்.

''ஆமாம்! இந்திய விஞ்ஞானிகள் முதல்ல 1981-ல் 'அண்டார்டிக்கா ரிசர்ச் புரோகிராம்’ அப்படின்னு வந்தாங்க. அவங்க, இங்க 1983-84-ல் 'தக்ஷின் கங்கோத்ரி’ என்ற  ஆராய்ச்சி மையத்தை அமைத் தார்கள். இங்கு நம் பூமி, விண் வெளி, உலோகவியல் இப்படி பல விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார்கள். 1989-91-களில் பனியினால் ஆராய்ச்சி நிலையம் செயல் இழந்ததாக அறிவித்தார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில், மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை 1989-களில் அண்டார்டிக்காவில் பாறைகள் நிறைந்த 'ஸ்கீர்மச்சர் ஒயாஸிஸ்’ பகுதியில் அமைத்தனர். அதேபோல, ஆர்டிக் பகுதியில் ஹிமத்ரி எனும் ஆராய்ச்சி மையத்தை ஜூலை 2, 2008-ல் அமைத்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்'' என்று முடித்தார் டீச்சர்.

''டீச்சர், ஒரு முக்கியமான வி.ஐ.பி.யை மிஸ் பண்ணிட்டோமே''  என்று பதறினாள் மது.

''ஒண்ணும் மிஸ் பண்ணலை. கடைசியா மீட் பண்ணலாம்னு பார்த்தேன்'' என்றார் மாயா டீச்சர்.

சுட்டிகளும் அந்த வி.ஐ.பி.-யைச் சந்திக்க ஆவலாக இருந்தார்கள். ரெயின்டீர் ஸ்லெட்ஜ் அவர்களை அந்த வி.ஐ.பி.-க்கள் கூட்டத்துக்கு நடுவில் விட்டுச் சென்றது. பனிப் பாறைகள் மீது குளிர் காய்ந்தபடி ராணுவ அணிவகுப்பாக நின்று கொண்டிருந்த பெங்குவின் கள்தான் அந்த வி.ஐ.பி.-க்கள். சுட்டிகளைப் பார்த்ததும் குழந்தையைப் போல தத்தித் தத்தி  ஓடிவந்து சுட்டிகளுடன் கலந்து விட்டன. கறுப்பும் வெளுப்புமாக அவற்றின் தோலின் மினுமினுப்பும் ஃபிரெஷ்ஷான தோற்றமும் சுட்டிகளை கவர்ந்தது. மிகவும் சாதுவான விலங்கான பெங்குவின்களைப் பார்த்ததில் சுட்டிகள் மிகவும் குஷியாகிவிட்டனர். அவற்றின் தோள் மீது கை போட்டு நட்புடன் விளையாட ஆரம்பித்தார்கள்.

''இதுங்களுக்கு எப்படி இந்தப் பேர் வந்தது டீச்சர்? என்றாள் சரசு.

''லத்தீன் வார்த்தையான 'பின்குவிஸ்’ என்பதில் இருந்துதான் இந்தப் பெயர் வந்தது. பின்குவிஸ் என்றால் குண்டான... முட்டாள்தனமான விலங்கு என்று பெயர். இவற்றை எளிதில் வேட்டையாடிப் பிடித்துவிடலாம் என்பதால் இந்தப் பெயர் வந்தது'' என்றார் டீச்சர்.

''பெங்குவின்களில் இருந்து எடுக்கப்படும் ஒரு வித எண்ணெய் மருத்துவத்துக்காகவும், எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் சோப்புக்காகவும், அவற்றின் தோலில் செய்யப்படும் பைகள், ஆடைகள், பெல்ட் போன்றவற்றுக்காகவும் இவை ஆயிரக்கணக்கில் வேட்டையாடப்படுகின்றன. பேராசைகொண்ட மனிதர்கள், தங்கள் தேவைக்காக இந்த சாதுவான விலங்கைக் கொல்ல அனுமதிக்கக் கூடாது என்பதற்காக பன்னிரெண்டு நாடுகளின் கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகிறது. நாமும் அவர்களுடன் கை கோர்ப்போம்'' என்று முடித்தார் டீச்சர்.

சுட்டிகள் தங்களிடம் இயல்பாகப் பழகும் பெங்குவின் களைக் காக்க உறுதி எடுத்தார்கள்.

''இன்னும் நாம் பார்க்காத அற்புதங்கள் பலவும் இந்தப் பனி உலகில் உண்டு. இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்'' என்று சுட்டிகளை மந்திரக் கம்பளத்தில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினார்.