மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

ஹரன் கே.யுவராஜன்

##~##

திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு மாயா டீச்சருடன் தீபா, சுரேகா, பரத், பிரசாந்த் வீடு திரும்பினார்கள்.

''கல்யாண விருந்து பிரமாதம் டீச்சர். இனிமே எந்தக் கல்யாணத்துக்குப் போனாலும் எங்களையும் கூட்டிட்டிப் போய்டுங்க'' என்றான் பரத்.

''சாப்பிடறதிலேயே இருடா'' என்ற தீபா, டீச்சர் பக்கம் திரும்பி ''டீச்சர், கல்யாணப் பொண்ணு போட்டுட்டு இருந்த நகைகளில் ஒண்ணு வெள்ளையா இருந்துச்சே, அது முத்துமாலைதானே?'' என்று கேட்டாள்.

''ஆமாம் தீபா! ரொம்ப விலை உயர்ந்த முத்துக்கள்'' என்றார் டீச்சர்.

''இந்த முத்துக்கள் எப்படி உருவாகுது டீச்சர்?'' என்றாள் சுரேகா.

''அதைக் கடலுக்குள்ளேயே போய்ப் பார்க்கலாம் வர்றீங்களா?'' என்றார் டீச்சர்.

''அடடா... இது தெரிஞ்சு இருந்தா, கல்யாணத்துக்கு கிளம்பினப்பவே ஸ்ம்மிங் டிரஸ்ஸையும் கொண்டுவந்து இருப்பேனே'' என்றான் பிரசாந்த்.

''மந்திரக் கம்பளம் இருக்கக் கவலை எதுக்கு? அது நம்மை நனையாமப் பார்த்துக்கும்டா'' என்றான் பரத்.

சற்று நேரத்தில் அவர்கள் மந்திரக் கம்பளத்தில் பறந்துகொண்டு இருந்தார்கள். ''இப்போ எங்கே போறோம் டீச்சர்?'' என்று கேட்டாள் தீபா.

''முத்துக் குளித்தல் என்றதும் ஞாபகத்துக்கு வருகிற தூத்துக்குடிக்குப் போறோம். பல நூற்றாண்டுகளாக உலகம் முழுக்கவே கடலோரப் பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி சிப்பிகளைச் சேகரித்து வருவார்கள். இதை முத்துக் குளித்தல் என்பார்கள். கிடைப்பதற்கு அரிய பொருள் என்பதால் முத்துக் குளித்தல் சிறப்பான தொழிலாக இருந்தது. குறிப்பாக இந்தியா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, பசிஃபிக் கடற்கரைகள் போன்ற பகுதியில் கிடைக்கும் முத்துக்கள் மிகவும் தரமானவை. இவற்றை வாங்குவதற்கு கிரேக்கர்கள், ரோமாபுரி அரசர்கள் மற்றும் பல நாட்டவர்கள் போட்டியிடுவார்கள்'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இந்த மாதிரி சிப்பிக்குள் முத்து இருப்பதை முதலில் கண்டுபிடிச்சது யார் டீச்சர்?'' என்று கேட்டான் பரத்.

''அதற்கான சரியான ஆதாரம் இல்லை பரத். யதேச்சையாக சிப்பிக்குள் இருந்து எடுத்து இருக்க வேண்டும். அதன் பிரகாசமும், அழகும் மனிதர்களை கவர்ந்து இருக்கும். அதனால் விலை மதிப்புமிக்க பொருளாக மாறி இருக்கிறது. ராமாயணம், மகாபாரதம் தொடங்கி, சங்ககால இலக்கியப் பாடல்களில்கூட முத்து ஆபரணம் பற்றிய இருக்கின்றன. ஆனால், அதை எப்படி எடுத்தார்கள் என்கிற குறிப்பை யாருமே குறிப்பிடவில்லை.''

''தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் முத்து வணிகத்தில் புகழ்பெற்று இருந்தார்கள்னு புக்ல படிச்சு இருக்கேன்'' என்றாள் சுரேகா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''தமிழ்நாட்டில் முத்து எடுக்கிறார்கள் என்கிற விஷயத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்தரின் அரசவைக்கு வந்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனிஸ் மூலம்தான் அறிகிறோம். அவர்தான் இலங்கை மற்றும் தமிழகம் பக்கம் யாத்திரை வந்தபோது முத்துக் குளித்தலைப் பார்த்து ஒரு குறிப்பேட்டில் 'பாண்டிய மன்னர்கள் தங்களிடம் உள்ள கைதிகளைக் கடலில் முத்துக் குளிக்கப் பயன்படுத்துகிறார்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகே முத்துக் குளித்தல் பற்றிய குறிப்புகள் விரிவாக பதிவு செய்யப்பட்டன.'' என்றார் டீச்சர்.  

இப்போது மந்திரக் கம்பளம் கடல் பகுதிக்கு வந்து இருந்தது. அடுத்த சில நொடிகளில் மீன்கொத்திப் பறவையைப்போல் 'விஷ்க்’ எனக் கடலுக்குள் பாய்ந்தது. ''வாவ்'' என்று எல்லோரும் உற்சாகமாகக் கூச்சலிட்டார்கள்.  

மாயா டீச்சர் தொடர்ந்தார் ''மெல்லுடலி(னீஷீறீறீusமீணீ) எனப்படுகிற உயிரினங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வகைகள் இருக்கு. இவற்றில் முசெல், முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங்களிடம் இருந்து உருவாகும் பொருள்தான் முத்து. இந்த முத்துச்சிப்பியிலும் பல வகைகள் உண்டு. இவை கடலுக்குள் சுற்றிகொண்டு இருக்கும்போது மண் துகள் போன்ற தேவையற்ற ஏதாவது சிறு துகள் உடலுக்குள் ஊடுருவிவிடும். கழிவாக அந்தத் துகளை வெளியேற்ற முடியாத நிலை சிப்பிக்கு ஏற்படும். நமது கண்களில்பட்ட தூசி எப்படி உறுத்திக்கொண்டே இருக்குமோ அப்படி அந்தத் துகள், முத்துச்சிப்பியின் உடம்பை உறுத்தும். அப்போது சிப்பியானது ஒரு திரவத்தைச் சுரந்து, அந்தத் துகளைச் சுற்றி சுவர்போல் உருவாக்கும். இப்படியே பலமுறை செய்யச் செய்ய அது கெட்டியான பொருளாக மாறுகிறது. அதுதான் முத்து'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளத்தின் உதவியால் அவர்கள் துகள்களாக மாறி, அந்தப் பக்கமாக வந்த ஒரு சிப்பியின் வயிற்றுக்குள் சென்றார்கள். அங்கே நடக்கின்ற மாற்றங்களைக் கவனித்தார்கள்.

''எல்லாச் சிப்பியிலுமே முத்துக்கள் இருக்குமா டீச்சர்?'' என்று கேட்டாள் தீபா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இல்லை தீபா. முத்துக் குளிப்பவர்கள் கடலில் மூழ்கி நூற்றுக்கணக்கில் சிப்பிகளை எடுத்தாலும் சிலவற்றில் இருந்தே முத்துக்கள் கிடைக்கும். அதனால், செயற்கை முறையில் முத்து தயாரிக்க முயற்சித்தார்கள். 1896-ல் கொக்கிச்சி மிக்கி மோட்டோ என்ற ஜப்பானியர் செயற்கையாக முத்து தயாரிக்கும் ஒரு முறையைக் கண்டுபிடித்தார். இதன்படி முசெல் வகை உயிரினத்தின் ஓட்டில் இருந்து எடுத்து பளபளப்பு செய்யப்பட்ட ஒரு துகளை, இன்னொரு சிப்பியின் திசுவினால் சுற்றி சிப்பியின் உடலுக்குள் செலுத்துவார்கள். பிறகு இதுபோன்று செய்த சிப்பிகளை ஒரு கூண்டில்போட்டு தண்ணீரில் இறக்கிவிடுவார்கள். இப்படி இறக்கிவிடப்பட சிப்பியில் இருந்து ஒரு முத்து உருவாக மூன்று முதல் ஆறு ஆண்டுகள் ஆகும்'' என்றார் டீச்சர்.

சிப்பியில் இருந்து வெளியே வந்த அவர்களை மந்திரக் கம்பளம் தூக்கிச் சென்று இறக்கிய இடம் ஒரு தொழிற்சாலை. அங்கே சிப்பியில் இருந்து கவனமாக முத்துக்கள் எடுக்கும் வேலை நடந்துகொண்டு இருந்தது.

''செயற்கை முறையில் உருவாக்கப்பட்டாலும் இதுவும் ஒரு சிப்பியின் உடலில் இருந்தே வருகிறது. அந்தச் சிப்பியின் வகையைப் பொருத்து பெரிதும் சிறியதுமாக ஒழுங்கற்றே இருக்கும். அதை வெளியே எடுத்த பிறகு, தூய்மைப்படுத்தி தரம் பிரித்த பிறகே விற்பனைக்கு அனுப்புவார்கள். தமிழ்நாடு, கேரளம் எனப் பல இடங்களின் கடற்கரைப் பகுதிகளில் செயற்கை முத்துக்கான சிப்பி வளர்ப்பு நடந்துகொண்டு இருக்கிறது'' என்றார் டீச்சர்.

தரம் பிரிக்கிறதுன்னா எப்படி?'' என்று கேட்டாள் சுரேகா.

''முத்துக்களில் நான்கு வகைகள் இருக்கு. அக்கோயா முத்து, தென்கடல் முத்து, தாகித்தியன் முத்து மற்றும் நன்னீர் முத்து என்பார்கள். முத்தை உருவாக்கும் முத்துச்சிப்பியின் வகை, அது உருவாகும் கடல் பகுதியின் தன்மை, எந்த நீரில் உருவாகிறது ஆகியவற்றின் அடிப்படையில் வகைகள் பிரிக்கப்படுகிறது. மேலும் முத்தின் அளவு, நிறம், ஒளிரும் தன்மை ஆகியவற்றைக்கொண்டும் தரம் பிரிப்பார்கள். உலகம் முழுக்கப் பல முறைகளில் தரம் பிரிக்கிறாங்க. அதில் முக்கியமானது கிகிகிகி மற்றும் தாகித்தியன் முறை. இதில் கிகிகிகி முறையில் மூன்று கி இருந்தால் முதல் தரமானது. இந்த கி எண்ணிக்கை குறையக் குறையத் தரமும் குறையும். தாகித்தியன் முறையில் கி,ஙி,சி,ஞி என்று தரம் பிரிப்பார்கள்'' என்றார் டீச்சர்.

முத்துக்களைத் தரம் பிரிக்கும் தொழிற்சாலையில் சற்று நேரம் இருந்துவிட்டு மந்திரக் கம்பளத்தில் ஏறினார்கள். ''பிஸ்கெட், சாக்லேட் போன்ற ஃபேக்டரிகளுக்குப் போனால் ஆளுக்கு கொஞ்சம் பிஸ்கெட், சாக்லேட் கொடுக்கிற மாதிரி இங்கேயும் ஆளுக்கு ஒரு முத்து கொடுத்தா நல்லா இருக்கும். ம்ம்ம்'' என்று பெருமூச்சுவிட்டாள் தீபா.

''ஆத்தீ... நீ விடுற பெருமூச்சில் மந்திரக் கம்பளமே எரிஞ்சுடும்போல் இருக்கே'' என்றுப் போலியாகப் பதறி விலகி அமர்ந்தான் பரத்.