மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன்ஹரன்

##~##

ஞாயிற்றுக் கிழமை மதிய நேரம். மாயா டீச்சரின் வீட்டில் தீபா, சுரேகா, பிரசாந்த், பரத் நான்கு பேரும் டி.வி.டி-யில் கிங்காங் படம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அது, கறுப்பு வெள்ளையில் வெளியான முதல் கிங்காங் படம்.

''அடேங்கப்பா... அப்பவே எவ்வளவு பிரமாண்டமா எடுத்து இருக்காங்க'' என்றாள் தீபா.

''இந்தப் படம் 1933-ல் வெளிவந்துச்சு. கால்ட்வெல் கூப்பர், எர்னெஸ்ட் பியூமான்ட் என்ற இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கிய படம். அப்பவே 6,72,000 டாலர் செலவில் எடுத்தாங்க. வசூலிலும் சாதனை படைத்தது'' என்றார் மாயா டீச்சர்.

''கொரில்லா நிஜமாகவே ரொம்ப மோசமானதா டீச்சர்?'' என்று கேட்டாள் சுரேகா.

''அப்படி இல்லை சுரேகா. ஒரு சுண்டெலியை அடிக்கப்போனாலே உயிர் பயத்தில் அது திருப்பித் தாக்கும். 150 கிலோ எடைகொண்ட கொரில்லாவை இம்சிக்கும்போது சும்மா இருக்குமா?'' என்றார் டீச்சர்.

''இப்பவும் கொரில்லா இருக்கா டீச்சர்? அதை நேரில் பார்க்கலாமா?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''ஓ... கொரில்லாவோடு இன்னும் சில மனிதக் குரங்குகளையும் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

'நான் ரெடி!’ என்பதைப் போல் மந்திரக் கம்பளம் பறந்து வந்தது. ''மீதிப் படத்தை வந்து பார்த்துக்கறோம், குட் பை கிங்காங்'' என்றபடி, தொலைக்காட்சியை அணைத்தான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''மனிதக் குரங்குகளைப் பெரு மனிதக் குரங்குகள், கிப்பான்கள் என இரண்டு வகைகளாப் பிரிப்பார்கள். இதில் பெரு மனிதக் குரங்கு வகையில் வருவதுதான் கொரில்லா. இதிலும் காட்டு கொரில்லா, மலை கொரில்லா என இரண்டு வகைகள் இருக்கு. கொரில்லாக்கள் கைகளைத் தரையில் ஊன்றிய நிலையிலேயே 5.5 அடி உயரம் இருக்கும். நிமிர்ந்து நின்றால் ஆறடி உயரம் இருக்கும். ஆனால், நம்மை மாதிரி சாதாரணமாக நிற்க முடியாது. மரக்கிளை, பாறை என எதையாவது சப்போர்ட்டுக்குப் பிடிச்சுக்கிட்டுதான் நிற்க முடியும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் ஓர் அடர்ந்த கானகத்தின் நடுவில் இறங்கியது. அடுத்த நொடியே சுரேகா கத்தினாள். ''ஹேய்ய்... அங்கே பாருங்க கொரில்லாக்கள்!''

அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் அடர்த்தியான செடிகளுக்கு நடுவில் மூன்று கொரில்லாக்கள் சென்றுகொண்டு இருந்தன. ''உனக்கு கழுகுக் கண்கள் சுரேகா. இது காட்டு கொரில்லா. இப்போ நாம வந்து இருக்கிறது மத்திய ஆப்பிரிக்காவின் கானகப் பகுதிக்கு. இங்கே மட்டும்தான் இந்த இனம் இருக்கு. மலைக் கொரில்லாக்கள் காங்கோ காடுகளை ஒட்டிய கிழக்கு மலைத் தொடர்களில் இருக்கும். இரண்டுக்கும் பெரிய வேற்றுமை கிடையாது. இவ்வளவு பெரிய உருவமாக இருந்தாலும் பழங்கள், காய்கள், மரங்களின் தடித்த வேர்கள் இவற்றைத்தான் சாப்பிடும். எப்போதாவது சிறு பூச்சிகளைச் சாப்பிடும். எப்பவும் குடும்பத்துடனே ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகும். முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் கூச்ச சுபாவம் அதிகம். தானாக யாரையும் தாக்காது. வேறு வழியே இல்லை, எதிரியுடன் மோதித்தான் ஆகணும் என்கிற நிலைமை ஏற்படும்போதுதான் மூர்க்கத்துடன் கத்திக்கிட்டே சண்டைக்கு வரும். சிங்கம் போன்ற வலிமையான மிருகங்களையே அடிச்சுத் துவம்சம் பண்ணிடும்.'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு கொரில்லாக்களைப் பின்தொடர்ந்தது. ஒரு கொரில்லா மரத்தில் ஏறி, சிறுசிறு கிளைகளை உடைத்து, இரண்டு பெரிய கிளைகள் சேரும் இடத்தில் மேடையைபோல் அமைக்க ஆரம்பித்தது.

''என்ன டீச்சர் வீடு கட்டுதா?'' என்று கேட்டான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஆமாம்! கிளைகள், இலைகளால் மெத்தை மாதிரி அமைச்சு, அதில் சொகுசாகப் படுத்துக்கும். இப்படி ஒரு முறை உருவாக்கிய படுக்கையில் அடுத்த நாள் படுக்காது. மறுபடியும் புதுசா ஒரு படுக்கையை உருவாக்கும். சரி, மனிதக் குரங்கின் இன்னொரு வகையைப் பார்க்கிறதுக்குப் போவோம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு காங்கோ காட்டின் ஒரு பகுதிக்குச் சென்றது. அங்கே ஓர் உயரமான மரத்தில் 'க்ரீச்... க்ரீச்’ எனச் சத்தம் கேட்டது. எல்லோரும் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். ''டீச்சர் இது சிம்பன்ஸிதானே?'' என்று உற்சாகத்துடன் கூவினான் பிரசாந்த்.

''ஆமாம்! சிம்பன்ஸி என்று பொதுப் பெயரில் சொன்னாலும் இது போனபோ என்ற ஒரு வகை. இதே காங்கோ காட்டில் பொலோபோ என்ற இடத்தில் 1954-ல் எட்வர்ட் ட்ராஸ், ஹெய்ண்ட்ஸ் ஹெக் என்பவர்கள் இதைக் கண்டுபிடிச்சாங்க. சாதாரண சிம்பன்ஸிகள் நான்கு அடி உயரத்தில் இருக்கும். இந்த போனபோ அதைவிடக் கொஞ்சம் குள்ளம். கொரில்லாக்களின் டி.என்.ஏ-க்கள், மனிதர்களின் டி.என்.ஏ-க்களுடன் 95 சதவிகிதம் பொருந்துகிறது. அதைவிட 99 சதவிகித டி.என்.ஏ-க்கள் பொருந்துகிற விலங்குதான் சிம்பன்ஸி. ஆனால், கொரில்லாவுக்கும் இதுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கொரில்லா மாதிரி முரட்டுக் குணம் இதற்குக் கிடையாது. மனிதர்களிடம் சுலபமாகப் பழகும். மேஜை முன் உட்கார்ந்து ஸ்பூனால் சாப்பிடறது, டிரெஸ் போட்டுக்கிறது, கைக்குட்டையால் முகம் துடைச்சுக்கிறது, இப்படி மனிதர்கள் செய்கிற பல விஷயங்களை சிம்பன்ஸியும் செய்யும். மனிதர்களிடம் அன்புடன் இருக்கிற அதே நேரம் பிடிவாதக் குணமும் செயல்களும் சிம்பன்ஸிக்கு இருக்கு. கேட்டதைக் கொடுக்கலைன்னா ஒரு ஓரமாக உட்கார்ந்து முகத்தை மூடிக்கிட்டு அழும். இல்லைன்னா, தலையைச் சுவரில் இடிச்சுக்கிட்டுக் கத்தும். அதே சமயம் ஏதாவது தப்பு பண்ணிட்டா மன்னிப்பு கேட்கிற தோரணையில் முகத்தைப் பொத்திக்கும்'' என்றார் டீச்சர்.

''ஏன் இப்படிக் கத்துதுங்க?'' என்று காதுகளைப் பொத்திக்கொண்டாள் தீபா.

''சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் இப்படித்தான் வெளிப்படுத்தும். பழத் தோட்டங்களில் நுழைஞ்சுட்டா இதுங்க செய்கிற அட்டகாசம் தாங்க முடியாது'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளம், மீண்டும் அவர்களைச் சுமந்துகொண்டு மேலே எழும்பியது. ''இப்போ எங்கே போறோம்?'' என்று கேட்டாள் சுரேகா.

''சுமத்ரா தீவுக்கு! கொரில்லாவும் சிம்பன்ஸியும் ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், மனிதக் குரங்குகளில் இன்னொரு வகையான உராங்குட்டான் சுமத்ரா, போர்னியோ, மலாய் தீவுகள் எனப் பல பகுதிகளில் இருக்கின்றன.  வயதான மனிதர்களைப் போல முகமும், தொளதொள தோளுடனும் நான்கரை அடி உயரத்தில் செம்பட்டை நிறத்தில் இருக்கும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் இப்போது இறங்கிய இடம் சுமத்ரா தீவு. இவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே... சில உராங்குட்டான் குரங்குகள், ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்கும்... அங்கே இருந்து இன்னொரு மரத்துக்கும் விறுவிறு எனத் தாவி, கண்களைவிட்டு மறைந்துபோயின.

''ஹேய் யப்பா... என்னமா தாவிப் போகுதுங்க'' என்றான் பிரசாந்த்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இவற்றின் கால்கள் குட்டையாக இருக்கும். அதே சமயம் கொரில்லா, சிம்பன்ஸியைவிட இவற்றின் கைகள் ரொம்பவே நீளமானது. நிலத்தில் நடக்கும்போது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கோர்த்துக்கிட்டு நடந்தால்தான் நகரவே முடியும். இவற்றின் உடம்பில் இருக்கும் முடி ரொம்ப நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். எவ்வளவு மழையில் நனைந்தாலும் ஒரு துளித் தண்ணீர்கூட உடம்பில் ஒட்டாது. வழுக்கிட்டுப் போயிரும். சுமார் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மரக்கிளைகளில் தாவிச் செல்லும். இதைப் பார்த்து ரொம்ப சுறுசுறுப்பான விலங்குன்னு நினைச்சுடாதீங்க. தாவுறதில் மட்டும்தான் இப்படி... மற்றபடி சரியான சோம்பேறி. பாதி நேரம் தூங்கியே கழிக்கும். அதிலும் ஆண் உராங்குட்டான் இருக்கே... தூங்கும்போது தனது குட்டிகள் சின்னதா சலசலப்பு செய்தாலும் கோபமாயிரும். 'போங்க உங்க அம்மாகிட்டே’னு வேற மரத்துக்குத் துரத்திட்டு நிம்மதியாத் தூங்கும்.'' என்றார் டீச்சர்.

சற்று நேரத்தில் இன்னொரு உராங்குட்டான் கும்பல் வந்தது. அவற்றின் சர்க்கஸ் தாவலை ரசித்துப் பார்த்துவிட்டுக் கிளம்பினார்கள். ''இந்த மூன்று வகையைத் தவிர, கிப்பான் என்பதும் வாலில்லாத குரங்குகள்தான். உராங்குட்டான் மாதிரியே இவற்றின் கைகளும் ரொம்ப நீளமாக இருக்கும். இந்த கிப்பான்களில் நிறைய வகைகள் இருக்கு. அஸ்ஸாம், கிழக்கு வங்காளம் என உலகின் பல பகுதிகளில் இருக்கு. ஆனாலும் மேலே சொன்ன எல்லாமே அழியும் நிலையில்தான் இருக்கு. இவற்றைத் தவிர குட்டையான வால்களுடன் இருப்பவை பபூன்கள் என்றும், நீண்ட வால்களுடன் இருப்பவை மங்கீஸ் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

சற்று நேரத்தில் அவர்கள் மாயா டீச்சரின் வீட்டை அடைந்தார்கள். ''அப்பாடி... ஒரே நேரத்தில் நம்முடைய முன்னோர்களில் பலரையும் பார்த்துட்டு வந்துட்டோம். இனிமே அம்மாவோ, அப்பாவோ 'ஏன்டா கலாட்டா பண்றே?’னு கேட்டா, 'மனிதக் குரங்குகளின் டி.என்.ஏ-க்களில் 90 சதவிகிதத்துக்கும் மேலே என்கிட்டே இருக்கே நான் என்னம்மா செய்யறதுனு சொல்லிடலாம்'' என்றான் பரத்!