மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

கே.யுவராஜன் ஹரன்

##~##

மாயா டீச்சரின் வீட்டு வரவேற்பறை குட்டி ஸ்ரீஹரிகோட்டாவாக மாறி இருந்தது. தீபா, சுரேகா, பிரசாந்த் மற்றும் பரத் விஞ்ஞானிகளாக மாறி, தெர்மகோல், உடைந்த பைப், குளிர்பான பாட்டில் என கைக்குக் கிடைத்தைக்கொண்டு தனித்தனியாக ராக்கெட் செய்யும் முயற்சியில் இருந்தார்கள்.

''என்ன ஆச்சா?'' என்று கேட்டவாறு வந்தார் மாயா டீச்சர். அவர்தான் ஒரு மணி நேரத்துக்கு முன்பு இந்த திடீர்ப் போட்டியை வைத்தார்.

''டீச்சர் இன்னும் அரை மணி நேரம் அவகாசம் வேணும்'' என்றாள் சுரேகா.

''ம்ஹூம்... செஞ்சது வரைக்கும் போதும். இதை வெச்சே யார் ராக்கெட் பெஸ்ட்னு தீர்ப்பு சொல்றேன்'' என்றார் டீச்சர். பிரசாந்த் செய்த ராக்கெட்டுக்குப் பரிசு கிடைத்தது.

''ஏன் டீச்சர் உலகில் முதன்முதலில் செய்த ராக்கெட் இப்படித்தான் இருந்துச்சோ?'' என்று கேட்டாள் தீபா.

''அந்த முதல் ராக்கெட்டில் இருந்து இன்றைய லேட்டஸ்ட் ராக்கெட் வரை ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வரலாம்'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளம் ராக்கெட்டைவிட அதிவேகத்தில் அவர்களைப் பல காலம் பின்னோக்கி அழைத்துச் சென்றது. சற்று நேரத்தில் அவர்கள் இருந்த இடம் பண்டைய கிரேக்கம். ஒரு வெட்டவெளியில் மக்கள் கூடி இருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் இருந்த ஒருவர் கையில் ஒரு மரப் பறவை இருந்தது.

''கிரேக்கர்கள்தான் ராக்கெட் என்ற விஷயத்துக்கு அடித்தளம் அமைத்தவர்கள். இப்போ நாம் வந்து இருக்கிறது கி.மு.375-ம் ஆண்டுக்கு. அதோ இருக்கிறாரே அவர் பெயர் ஆர்க்கிடஸ். அவர் கையில் இருக்கிறது தி பிஜியன் என்று பெயர் வைக்கப்பட்ட நீராவியின் உந்து விசையால் இயங்கும் ஒரு கருவி'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

ஆர்க்கிடஸ் அதை இயக்கினார். அந்த மரப் பறவை வானில் 200 மீட்டர் தூரம் பறந்து தரையில் விழுந்தது. மக்கள் ஆரவாரம் செய்தார்கள். ''இதை விமானம் மற்றும் ராக்கெட் இரண்டுக்கும் முன் மாதிரி எனலாம். முறையான ராக்கெட்டைக் கண்டுபிடித்த பெருமை பட்டாசுகளைக் கண்டுபிடித்த சீனர்களுக்குத்தான். நீராவிக்குப் பதிலாக கந்தகம், கார்பன் போன்ற வெடிமருந்துகளை மூங்கில் குழாய்களில் அடைத்து அம்பின் முனையுடன் இணைத்து வில் மூலம் செலுத்தினார்கள். அதில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றத்தில் ஆக்ஸிஜனேற்றம் என்ற விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். ஆக்ஸிஜனேற்றம் என்றால் தெரியுமா?'' என்று கேட்டார் டீச்சர்.

''ஓ தெரியுமே! ஒரு வேதிப் பொருளில் இருந்து ஆக்சிஜனை நீக்கினாலோ அல்லது ஹைட்ரஜனைச் சேர்த்தாலோ அதை ஆக்ஸிஜனேற்றம் என்பார்கள். அப்போது வெளிப்படும் வாயுக்களின் அழுத்தம் அதிகமாக இருக்கும்'' என்றாள் சுரேகா.

''அதேதான்! வெடிமருந்தின் ஒரு பகுதியையும் இதே மாதிரி ஆக்ஸிஜனேற்றம் செய்து குறுகிய துளை வழியாக அனுப்பினால், அதிகப்படியான அழுத்தம் காரணமாக நீண்ட தூரம் செல்லும் என்பதைக் கண்டுபிடித்தார்கள். இப்படி கி.பி. 1044-ம் ஆண்டிலேயே ராக்கெட்டை சீனர்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் 1232-ல் மங்கோலியர்களுக்கு எதிரான போரின்போதுதான் அது வெளி உலகத்துக்குத் தெரியவந்தது'' என்றார் டீச்சர்.

அந்தப் போர் நடந்த 'காய் பெங் பு’ என்ற இடத்தில் பாதுகாப்பான பகுதியில் மந்திரக் கம்பளம் இறங்கியது. நீளமான குச்சி ஒன்றின் முனையில் எரிபொருள் நிரப்பப்பட்ட மூங்கில் குழல் இருந்தது. அதை வீரர்கள் பற்றவைத்ததும் எரிபொருள் எரிந்து ஆக்ஸிஜனேற்றம் அடைந்தது. அதன் காரணமாகப் புகை பின்னோக்கி வர, மூங்கில் குழல் முன்னோக்கி சீறிச் சென்று எதிரிகளைத் தாக்கியது.

''ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்ற நியூட்டனின் தத்துவம் இந்த ராக்கெட் செயல்பாட்டிலும் இருக்குதானே டீச்சர்?'' என்று கேட்டான் பரத்.

''பலே பரத், சரியாச் சொன்னே! இந்தப் போரில் மங்கோலியர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தோற்று ஓடிய மங்கோலியர்கள் சும்மா இருக்கவில்லை. சீன ராக்கெட் தயாரிப்பாளர்களில் சிலரையே ஏராளமான பொற்காசுகளைக் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்தார்கள். அதே மாதிரி ராக்கெட்டுக்களை உருவாக்கினார்கள். இப்படித்தான் கொரியா, இந்தியா எனப் பல நாடுகளுக்கும் ராக்கெட் ஃபார்முலா பரவியது'' என்றார் மாயா டீச்சர்.

''இந்தியாவிலும் அப்பவே ராக்கெட் இருந்துச்சா டீச்சர்?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் பிரசாந்த்.

''ஆமாம் பிரசாந்த்! உலகம் முழுக்க போரில் வெற்றிகளைக் குவித்துகொண்டு இருந்த ஆங்கிலேயர்களே ராக்கெட் பற்றி தெரிந்துகொண்டது இந்தியாவில்தான்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மந்திரக் கம்பளம் இந்தியாவில் குண்டூருக்கு அவர்களைச் சுமந்து வந்தது. அங்கே போர்க்களத்தில் ஆங்கிலேயப் படையை நோக்கி ராக்கெட்டுகள் நெருப்புப் பந்துகளாக சீறி வந்து தாக்கின. ''இது 1780-ல் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஹைதர் அலி நடத்திய போர். இதற்கு முன்பு வரை மூங்கில் அல்லது வேறு மரத்தில் செய்த ராக்கெட்டுகளைத்தான் பல நாடுகளும் உபயோகித்தன. ஆனால், உலகிலேயே முதல் முறையாக உலோகத்தால் செய்த ராக்கெட் ஏவுகணையைப் பயன்படுத்தியது ஹைதர் அலிதான். இவரைப்போலவே ராக்கெட் தாக்குதலில் ஆங்கிலேயர்களை அதிரவைத்தவர் திப்பு சுல்தான். அவரது அரண்மனையில் இருந்த நிபுணர்கள் இந்த ராக்கெட் தயாரிப்புப் பற்றிய பல்வேறு நுணுக்கமான விஷயங்களையும் புத்தகமாக எழுதிவைத்து இருந்தார்கள். 1799-ல் நடந்த போரில் திப்புசுல்தானின் படை தோற்றுப்போனது. அவரது ஸ்ரீரங்கப் பட்டணத்தின் அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், அந்தப் புத்தகங்களையும் பயன்படுத்தாத ராக்கெட்டுகளையும் தங்கள் நாட்டுக்கு எடுத்துட்டுப் போனாங்க'' என்றார் டீச்சர்.

''சும்மாவே அவங்க மிரட்டுவாங்க. ராக்கெட் கையில் கிடைச்சது பம்பர் பரிசாக இருக்குமே'' என்றாள் தீபா.

''ஆமாம் தீபா... அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர், சர் வில்லியம் காங்ரிவ். அவரிடம் திப்பு சுல்தானின் இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை ஒப்படைச்சாங்க. காங்ரிவ் அதில் இருந்த சில குறைகளை நீக்கி, இன்னும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை உருவாக்கினார். அதுவரை மீட்டர் கணக்கில் பாய்ந்து சென்று தாக்கிய ராக்கெட்டுகள் முதல் முறையாக ஒன்பது கிலோ மீட்டர் தூரம் சென்றன. இவருடைய ராக்கெட்டைத்தான் 1815-ல் வாட்டர்லூ போரில் பயன்படுத்தி, மாவீரன் நெப்போலியனைத் தோற்கடித்தார்கள். இப்படி நாளுக்கு நாள் போரில் ராக்கெட்டுகளின் சக்தி கூடிட்டே போச்சு. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனிப் படைகள் க்ஷி2 என்ற ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி பெரும் சேதத்தை விளைவித்தன. இதை உருவாக்கியவர் வெர்னர் வான் பிரௌன். இந்த ராக்கெட் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வான் நோக்கி பாய்ந்து சென்று 5,600 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை அடைந்து தாக்கியது. இதில் பயன்படுத்திய குண்டுகள் 750 கிலோ எடையில் இருந்தன'' என்றார் மாயா டீச்சர்.

''நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கே'' என்றாள் சுரேகா.

''இப்படிப் போரில் அழிவுக்குக் காரணமாக இருந்த அதே நேரத்தில், ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக என்ன செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் யோசித் தார்கள். திட எரிபொருளுக்குப் பதிலாக, திரவ எரிபொருளைப் பயன்படுத்தினால் அதிக சக்தி கிடைக்கும். அதன் மூலம் ராக்கெட்டை விண்வெளிக்கே அனுப்பலாம் என்று விண்வெளியின் தந்தை எனப்படும் ரஷ்ய விஞ்ஞானி கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கி ஒரு புத்தகம் எழுதினார். அது பல விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. ரஷ்யா, அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் பல விஞ்ஞானிகளின் முயற்சியால் ராக்கெட்டைப் பயன்படுத்தி செயற்கைக் கோளை அனுப்பும் சாதனை நிகழ்ந்தது. 1975-ல் ஆர்யபட்டா என்ற செயற்கைக்கோளை அனுப்பி இந்தியாவும் பட்டியலில் இடம் பிடித்தது'' என்றார்.

மந்திரக் கம்பளம் இப்போது இறங்கிய இடம் ஒரு ராக்கெட் ஏவுதளம். அங்கே புதிதாக விண்ணுக்குச் செல்லப்போகும் ஒரு செயற்கைக்கோளைச் சுமந்த ராக்கெட்டின் கவுன்ட்-டவுன் தொடங்கி இருந்தது. மந்திரக் கம்பளம் யார் கண்களுக்கும் தெரியாமல் அவர்களை ராக்கெட்டின் உள்ளே அழைத்துச் சென்றது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''இப்போது விண்வெளிக்கு அனுப்பப்படும் பெரும்பாலான ராக்கெட்டுக்கள் திரவ எரிபொருளில் இயங்குகின்றன. ஒரு சில ராக்கெட்டுக்களில் திட எரிபொருள், திரவ எரிபொருள் இரண்டுமே பயன்படுத்தப்படும். நாம் அனுப்பிய எஸ்எல்வி-3 ராக்கெட் திட எரிபொருளில் இயங்கியது. றிஷிலிக்ஷி, நிஷிலிக்ஷி போன்றவை திட, திரவ இரண்டு எரிபொருட்களையும் கொண்ட ராக்கெட்டுகள்'' என்றார் டீச்சர்.

''எந்த எரிபொருளாக இருந்தாலும் அது செயல்பட ஆக்சிஜன் முக்கியமாச்சே டீச்சர். விண்ணில் செலுத்தும் ராக்கெட்டுகளுக்கு ஆக்சிஜன் எப்படி கிடைக்குது?'' என்று கேட்டாள் தீபா.

''கார், பஸ் போன்ற வாகனங்களில் வெறும் எரிபொருள் மட்டுமே இருக்கும். அது எரியும்போது காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு வினை புரியும். ஆனால், விண்ணில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் ஆக்சிஜன் இருக்காது. எனவே ராக்கெட்டுகளில் எரிபொருளுடன் ஆக்சிஜனையும் சேர்ப்பார்கள். காற்றில் உள்ள ஆக்சிஜனை மைனஸ் 183 டிகிரி சென்டிகிரேடுக்கு குளிர்விக்கும்போது, அது மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகி திரவ ஆக்சிஜன் கிடைக்கும். அதை ஆக்சிஜன் தொட்டிகளில் அடைத்து எரிபொருளுடன் பயன்படுத்துவார்கள். இப்படி ராக்கெட்டுகளைச் செலுத்தும்போது எஞ்சின்களில் ஏற்படும் வெப்பம் 3,000 முதல் 4,000 டிகிரி சென்டிகிரேடு இருக்கும். இதனால் வெளிப்படும் வாயுக்கள் விரிவடைந்து ராக்கெட்டுகளின் அடிப்புறத்துக்கு பீய்ச்சி அடிக்கப்படும். அப்போது ஏற்படும் உந்துவிசைத் திறனால் விண்வெளி நோக்கிச் செல்லும். உந்துவிசைத் திறனை அதிகரிக்க அதிகரிக்க, ராக்கெட் செல்லும் உயரமும் அதிகமாகும்.'' என்றார் டீச்சர்.

மேலும் பல பகுதிகளைச் சுட்டிக் காட்டி விளக்கம் அளித்தார் மாயா டீச்சர். அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் முடிந்தது. மந்திரக் கம்பளம் அவர்களை வெளியே அழைத்து வரவும், ராக்கெட் சீறிக்கொண்டு மேலே செல்லவும் சரியாக இருந்தது. அங்கே இருந்த விஞ்ஞானிகள் ஆர்ப்பரிக்க, சுட்டிகளும் உற்சாகத்துடன் கை அசைத்தார்கள்.