மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் படங்கள் : ஹரன்

##~##

நேற்று இரவில் தொடங்கிய தூறல் இன்று மதியம் ஆகியும் நிற்கவில்லை. ஆனாலும் குடைகளுடன் தீபா, சுரேகா, பிரசாந்த், பரத் நால்வரும் மாயா டீச்சர் வீட்டில் ஆஜர். ''எல்லோரும் சமர்த்தா உட்காருங்க. சுடச்சுட காளான் சூப் செஞ்சு எடுத்துட்டு வர்றேன்'' என்றார் டீச்சர்.

''நாங்களும் வர்றோம் டீச்சர்'' என்றபடி சமையல் அறைக்கு வந்து, டீச்சருடன் சூப் தயாரித்தார்கள். ஹாலில் தோட்டத்தைப் பார்த்தவாறு இருந்த ஜன்னல் பக்கம் அமர்ந்து, மழையை ரசித்தவாறு பருக ஆரம்பித்தார்கள்.

''டீச்சர் அங்கே பாருங்க'' என்று சுரேகா சுட்டிக்காட்டிய இடத்தில், தோட்டத்துப் புற்களுக்கு இடையே சில நாய்க்குடைக் காளான்கள் முளைத்து இருந்தன.

''டீச்சர் இதைத்தான் எங்களுக்கு சூப் பண்ணிக் கொடுத்து இருக்கீங்களா?'' என்று கேட்டான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''கொழுப்புதான் பையா! இன்னிக்கு எப்படியும் வருவீங்க, மழைக்கும் குளிருக்கும் இதமா இருக்கட்டுமேனு கடைக்குப் போய் வாங்கிவந்து சூப் செய்துகொடுத்தா... கிண்டலா?'' என்று அவன் தலையில் செல்லமாகக் குட்டினார் டீச்சர்.

''டீச்சர், நான் சீரியஸாகவே கேட்கிறேன். இந்தக் காளானை சாப்பிட முடியாதா?'' என்று கேட்டாள் தீபா.

''காளானில் சுமார் 80,000 வகைகள் இருக்கு தீபா. மரத் துணுக்குகள், ஈரமான தரைப் பகுதிகள், கெட்டுப்போன உணவுகள் முதலியவற்றில் மிகச் சிறிய அளவிலும் வளரும். இவற்றில் சில சாதாரணக் கண்களுக்குத் தெரியாது. நுண்ணோக்கியில்தான் பார்க்க முடியும். நாய்க்குடை மாதிரியானவை பெரிய வகைக் காளான்கள். இதில் சிலவற்றைதான் சாப்பிடலாம். சில காளான்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விஷம்கொண்டவை'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''காளான்களில் ஒளிச்சேர்க்கை செய்வதற்கான பச்சையம் கிடையாதுன்னு படிச்சு இருக்கேன். அப்படின்னா இவற்றைத் தாவரங்களில் ஒட்டுண்ணி என்று சொல்லலாமா டீச்சர்?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''அப்படி ஒரேயடியாக ஒட்டுண்ணி என்று சொன்னால் காளான்கள் கோவிச்சுக்கும். ஏன்னா, வேறு ஓர் உயிரின் உடம்பில் ஒட்டிக்கொண்டு அதற்கு எந்த நன்மையும் செய்யாமல், அவற்றின் சத்துகளை உறிஞ்சி அந்த உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துபவைதான் ஒட்டுண்ணிகள். காளான்கள் தமக்குத் தேவையான உணவைப் பிற தாவரங்களிடம் இருந்து பெற்றாலும், சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களுக்கும் பல நன்மைகளையும் செய்கின்றன'' என்றார் டீச்சர்.

''அது என்ன நன்மை டீச்சர்?'' என்று கேட்டாள் சுரேகா.

''மற்ற காய்கறிகளைவிடக் காளானில் உயிர்ச் சத்து 'டி’ அதிகமாக இருக்கு. பெனிசிலியம் என்ற பூஞ்சைக் காளானில் இருந்து பென்சிலின் மருந்து தயாரிக்கப்படுகிறது. ரொட்டிகளை மிருதுவாக்க பாக்டீரியா எப்படி உதவி செய்கிறதோ, அதுபோல் காளான்களும் பயன்படுகின்றன. வாங்க, சில அரிய வகைக் காளான்களைப் பார்த்துக்கிட்டே மற்ற விஷயங்களைப் பேசலாம்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

சில நிமிடங்களில் மந்திரக் கம்பளம் வீட்டில் இருந்து பறந்தது. ''காளான்களில் நல்லவை, கெட்டவை என இரண்டு வகைகள் உண்டு. சில சமயம் ஒரே காளான் நல்லவனாகவும் கெட்டவனாகவும் டூயல் ரோலும் செய்யும். உதிர்ந்த இலைகள், உடைந்த மரத் துண்டுகள் ஆகியவற்றை மக்கவைத்து மண்ணுக்கு வளம் சேர்க்கும். பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சில பூச்சிகளை அழிக்கும். அதே சமயம், சில மரங்களின் தண்டுப் பகுதிகளில் உருவாகும் காளான்கள், அந்த மரத்தின் சத்துகளைக் குறைத்துவிடும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களின் உருவத்தை மிகவும் சிறியதாக்கி, காட்டுப் பகுதி ஒன்றில் இறக்கியது. இப்போது அவர்களுக்கு சாதாரண புல், ஒரு கரும்பின் உயரத்துக்குத் தெரிந்தது. ''அடடா... மந்திரக் கம்பளம் ஏன் இப்படிச் செய்துடுச்சு?'' என்று அலறினான் பரத்.

''பதறாதே! பல வகையான காளான்களை நாம் தெளிவாகப் பார்த்து ரசிக்கத்தான் இப்படிச் செய்து இருக்கு. ஒரு காளான் எப்படி உருவாகுதுனு இப்போ பார்க்கலாம் வாங்க'' என்றபடி நடந்தார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

ஓர் இடத்தில் மாயா டீச்சர் தரையில் சுட்டிக் காட்டினார். ''இங்கே பாருங்க இதுதான் காளானின் விதை. இதற்கு 'சிதல்விதை’ (Spore) என்று பெயர். மற்ற தாவரங்களைப்போல் காளான்களுக்கு இலை, பூ எல்லாம் கிடையாது. எனவே, விதைத்தூவல் மூலமாக பிற இடங்களுக்குப் பரவும். காளான்களின் செதில்களில் இருந்து பரவும் இந்த சிதல்விதை விழுந்த இடத்தில் சின்னஞ்சிறிய குழல் போன்ற ஒரு நூலிழை உருவாகும்'' என்றார் டீச்சர்.

அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, மிக மிக நுண்ணிய நூலிழை ஒன்று உருவானது. ''இது ஹைஃபா. அதாவது காளான் இழை என்பார்கள். இந்த ஓர் இழை வளர வளர, மேலும் பல நுண் இழைகளாகப் பிரிந்து, குழல் வடிவத்தில் மைசீலியம் என்ற உடல் பகுதி உருவாகும். இந்த உடல் பகுதிதான் பிற தாவரங்களில் இருந்து உணவை உறிஞ்சுகிறது'' என்றார் மாயா டீச்சர்.

முழுமையான ஒரு காளான் உருவாகும் வரை அவர்கள் பொறுமையுடன் நின்று கவனித்தார்கள். பிறகு பல வகையான காளான்களைச் சுற்றிப் பார்த்தார்கள். ''அடேங்கப்பா... நான் இதுவரை வெள்ளையிலும் சாம்பல் நிறத்திலும் மட்டும்தான் காளானைப் பார்த்து இருக்கேன். இத்தனை வண்ணங்களில் இருக்கா?'' என்று வியந்தாள் தீபா.

''பளிச் வண்ணத்தில் இருந்தால் அது ரொம்பவும் விஷம் உள்ளதாக இருக்கும். அப்படித்தானே டீச்சர்?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''அப்படி இல்லை பிரசாந்த். சிவப்பு அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கிற சில காளான்கள் நச்சுத் தன்மையுடன் இருப்பது உண்மைதான். அதே சமயம் நிறத்தை மட்டுமே வெச்சு, விஷம், விஷம் அற்றது என்று சொல்லிவிட முடியாது. அமானிட்டா என்ற வகைக் காளான் மிகவும் விஷம்கொண்டது. ஆனால், இவற்றில் சில வெள்ளை மற்றும் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். இதேபோல் நச்சுக் காளானை விலங்குகள் சாப்பிடாது என்று ஒரு கருத்து இருக்கு. அதுவும் தப்பு. விலங்குகளுக்கு எதுவும் செய்யாத சில காளான்கள் மனிதர்களுக்கு நஞ்சாக மாறிவிடும். அதனால், நச்சுக் காளான்களை அடையாளம் காண்பதில் ரொம்பவே கவனம் தேவை. காளான்களை விளைவிக்கும் அனுபவம் வாய்ந்தவர்களே சில சமயம் ஏமாந்துவிடுவார்கள். அந்த அளவுக்குத் தோற்றம், சுவையில் ஒரே மாதிரியான காளான்கள் உண்டு'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களை மேலும் பல வகைக் காளான்களை சுற்றிக் காட்டிவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்தது. ''ஊர் எல்லாம் சுத்திட்டு வந்ததில் பயங்கர டயர்டா இருக்கு. டீச்சர், சூடா நாலு காளான் சூப் குறிச்சுக்கங்க'' என்று ஆர்டர் கொடுத்தான் பரத்.

முறைத்த மாயா டீச்சர் அவனை விரட்ட, கையில் சிக்காமல் ஓட்டம் பிடித்தான்.