மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மாயா டீச்சர் நைல் நதிக்கரை தொடர்பான புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது 'இந்த முறை டீச்சர் எங்கே அழைத்துப் போவார்’ என்ற ஆர்வத்திலும் புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளும் ஆவலுடனும் சுட்டிகள் வந்து சேர்ந்தனர்.

டீச்சர் நைல் நதியைப் பற்றி படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பிரசன்னா, ''டீச்சர் இப்ப உலகம் முழு வதும் பேசப்படற விஷயம் எகிப்தில் நடக்கும் மக்கள் புரட்சி.  இதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றான்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்
 ##~##

''எகிப்தில் சர்வாதிகார ஆட்சி செய்து வரும் ஹோஸ்னி முபாரக் என்பவருக்கு எதிரான மக்களின் புரட்சிதான் அது. பொதுவாக மக்கள் தம்மை ஆட்சி செய்வோர் சரியான முறையில் ஆளவில்லை என்றால் ஒன்று திரண்டு போராடுவார்கள். இப்படி நடக்கும் போராட்டங் களை, அப்போது மக்கள் நலனுக்காக யார் போராடிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களின் வழிகாட்டுதலின்படி போராடுவார்கள்.  ஆனால், சமீபத்தில் எகிப்தின் கெய்ரோ நகரில் ஏற்பட்ட போராட்டமானது... மக்களே தலைமை தாங்கி நடத்திய போராட்டம். மக்களின் போர்க் குணத்தைக் கண்ட ஹோஸ்னி முபாரக் அவர்களின் கோரிக்கைகளுக்கு தற்போது அடிபணிந்து  உள்ளார்.'' என்று கெய்ரோ புரட்சியைப் பற்றி சின்ன   இன்ட்ரோ கொடுத்து நிறுத்தினார் மாயா டீச்சர்.

''டீச்சர், இன்னும் கொஞ்சம் விளக்கமாச்  சொல்லுங்க'' என்றான் கணேஷ்.

''அதான் தினமும் நியூஸ் பேப்பர் வருதே அதைப் படிச்சு தெரிஞ்சிக்கோங்க. நாம் இப்ப உலகின் நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படும் நைல் நதிப் பிரதேசத்தைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம். உலகின் மேம்பட்ட நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்தான்'' என்றார் மாயா டீச்சர்.

உடனே, ''அப்படின்னா நாம் எகிப்துக்குப் போகப் போறோமா டீச்சர்?'' என்றாள் மது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஆமாம். கிளம்புங்க!'' என்றபடியே மந்திரக் கம்பளத்தை விரிக்கச் செய்து, அதில் சுட்டிகளை ஏற்றினார்.

மந்திரக் கம்பளம் சுட்டிகளுடன் பறந்து எகிப்தின் கெய்ரோ நகரின் அருகில் இருக்கும் கிஸா பிரமிடு பக்கத்தில் மிதந்தது.

''டீச்சர், நான் நிறைய சினிமாவில் இதைப் பார்த்திருக்கேன்'' என்றாள் சரசு.

''சரிதான். இப்போது இருப்பதிலேயே இந்தப் பிரமிடுதான் பெரியது. அதுவும் தவிர உலக அதிசயங்களில் ஒன்றும் கூட. இதில் நிறைய கல்லறைகளும் அடங்கி உள்ளன'' என்றார் மாயா டீச்சர்.

''இறந்துபோன மன்னர்களை இங்கே புதைப்பார்களாமே?'' என்றாள் மது.

''ஆமாம்! எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள் இறந்தவுடன் அவர்களை இங்குதான் புதைப் பார்கள். அவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றையும் சேர்த்துப் புதைத்துவிடுவார்கள்! சிங்கத்தின் உடலும் மன்னரின் தலையும் கூடிய ஸ்பிங்க்ஸ் சிலை இந்தப் பிரமிடுகளைக் காவல் காப்பதற்காக பிரமிடுகளின் முகப்பில் அமைப்பார்கள். எகிப்தியர்களின் கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் மகா பிரமாண்டமான பிரமிடுகள் பரந்த பாலைவனத்தில் அமைக்கப் பட்டு இருக்கின்றன'' என்றார்  டீச்சர்.

''டீச்சர், இவ்ளோ பெரிய பிரமிடுகளைக் கட்ட ரொம்ப நாள் ஆகியிருக்குமே?'' என்றாள் சரண்யா.

''ஆமாம்! மொத்தம் 20 ஆண்டுகள் ஆனதாம் இவற்றைக் கட்டி முடிக்க. அதுவும் தவிர, நாலாயிரத்துக்கும் அதிகமான கல் தச்சர்களைக் கொண்டு பிரமிடுகளைக் கட்டி இருக்கிறார்கள். ஒரு பிரமிடை உருவாக்க ரெண்டு மில்லியன் பாறைகள் தேவைப்பட்டு இருக்கின்றன. பிரமிடுகளின் உயரம் 140 மீட்டர்கள். சாய்வான மரச் சாரங்களை அமைத்து, அத்தனை உயரத்துக்கு கனமானப் பாறைகளை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிஸா பிரமிடு இன்றும் நிலைத்து நிற்பது வியப்பூட்டும் விஷயம்தான். கட்டடக் கலையில் எகிப்தியர்கள் சிறந்து விளங்கினார்கள். அந்தப் பாலைவனத்தில் அத்தனை வேலையாட்களுக்கும் உணவு, தண்ணீர், போன்ற ஏற்பாடுகளை யோசித்துப் பாருங்கள்'' என்று சுட்டிகளைப் பிரமிக்கச் செய்தார் டீச்சர்.

''டீச்சர், அப்படீன்னா பிரமிடுகளில் மம்மி களை வைக்க மாட்டாங்களா?'' என்று தன் தொல்லியல் அறிவை வெளிப்படுத்தினான் பிரசன்னா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''சொல்கிறேன்'' என்றபடியே மாயா டீச்சர் மந்திரக் கம்பளத்தில் இருந்து எல்லோரையும் இறக்கிவிட்டு, அங்கு ஓர் ஓரத்தில் இருந்த 'மம்மி’ அருகில் அழைத்துப் போனார்.

''எகிப்தியர்கள், மன்னர்களோ அல்லது சமூகத்தில் பிரபலமானவர்களோ இறந்துவிட்டால், அவர்கள் வேறு உலகுக்குச் செல்வதாகவும், அப்போது அவர்களுக்குப் பழைய உடல் தேவைப்படும் என்றும் நம்பினார்கள். அதனால், இறந்து போனவரின் உடலை 'மம்மி’களாக்கி பராமரித்தார்கள்'' என்றார் டீச்சர்.

''ஸ்கூல் 'சயின்ஸ் லேப்’பில் பறவைகளைப் பாடம் செய்து வைத்திருக்கிறார்களே? அதுபோலத்  தானே டீச்சர்?'' என்றான் கணேஷ்.

''யப்பா... இவரு சயின்ஸ் லேபுக்கெல்லாம் போவாராம். தெரிஞ்சுக்கோங்க'' என்று அழகு காட்டினாள் மது.

''கணேஷ் சொல்றது கிட்டத்தட்ட சரி. இப்படி மம்மிகளை உருவாக்குவது மிகவும் தேர்ந்த வேலையாட்களால் மட்டுமே முடியும். இறந்த உடலில் இருந்து முதலில் மூளை மற்றும் உடலில் உள்ளே இருக்கும் பாகங்களை வெளியில் எடுத்துவிடுவார்கள். பிறகு, உப்பில் உடலைப் புதைத்துவிடுவார்கள். 40 நாட்கள் கழித்து உடலை எடுத்து லினென் துணிகளை உள்ளே திணித்து வைத்துத் தைத்து உருவம் கொடுப்பார்கள். அடுத்து, எண் ணெயில் மூழ்க வைத்து, அவற்றின் மேல் லினென் துணி நாடாக்களால் சுற்றுவார்கள். இப்படி மம்மிகளை உருவாக்க 70 நாட்கள் ஆகும். மம்மிகள் உருவானவுடன் அவற்றைக் கல்லினால் ஆன பெட்டியில் வைத்து விடுவார்கள்'' என்று சொல்லி நிறுத்தினார் மாயா டீச்சர்.

''கேட்பதற்கே ரொம்ப சுவாரசியமாக இருக்கு டீச்சர்'' என்ற சரண்யா, ''டீச்சர் அவர்களின் வாழ்க்கை முறைகளைச் சொல்லுங்க'' என்றாள்.

''எகிப்தியர்களின் வாழ்க்கை முறை ரொம்பவே நாகரிகமானது. எகிப்தை ஆண்ட மன்னர்கள் பாரோக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பெரிய அரண்மனைகளில் வசித்து வந்தனர். இங்கு பாரோதான் மிகவும் மதிப்புக்கு உரியவர். பொது மக்கள் பாரோக்களைக் கடவுளாக பாவித்தனர். மன்னர்கள் தங்கள் விரல்களுக்கு அழகிய வேலைப்பாடுடன் கூடிய அணிகலன்களை அணிந்து கொண்டனர். ராணிகள் தங்கள் தலைமுடிக்கு விலங்குகளின் கொழுப்பினால் செய்த எண்ணெயையும், குளிக்கும்போது வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தினார்கள்.

அவர்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மத குருமார்கள், மருத்துவர்கள் ஆகியோர்  மேல்தட்டு வர்க்கத்தினராகவும், வியாபாரிகள், கலைஞர்கள் ஆகியோர் நடுத்தர மக்களாகவும், ஏனையோர் அடித்தட்டு வாழ்க்கை வாழ்பவர் என்று பிரிவுகளாக மக்கள் வாழ்ந்தனர்'' என்று முடித்தார் டீச்சர்.

''டீச்சர், இங்க பாருங்க'' என்று பூனையுடன் இருக்கும் சிலையைக் காட்டினான் பிரசன்னா.  

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''எகிப்தியர்கள்தான் முதன் முதலில் வீட்டு விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். பூனைகளை வீட்டு விலங்காக வளர்ப்பதை கௌரவம் மிக்கதாகக் கருதினார்கள். பூனைகளை வதைப்பது குற்றச் செயலாகும். பூனைகள் அவர்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து காணப்பட்டன. அதேபோல பபூன் வகைக் குரங்குகளைத் தோட்டங்களில் விளைந்த காய், பழங்களைப் பறிப்பதற்கு பழக்கி இருந்தார்கள்'' என்றார் மாயா டீச்சர்.

அவர்களின் வீடுகள் நைல் நதிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட மண், மற்றும் புற்களைக் கொண்டு உருவாக்கிய கூரையைக் கொண்டதாக இருந்தது. மேலும், வீடுகளின் சுவர்களுக்கு வண்ணங்களைப் பூசினார்கள். மண் அடுப்பும் சமையலுக்கு மண் பானைகளும் பயன்படுத்தப் பட்டன. உணவை மேஜைகளில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.  உணவு வகைகளைக் கைகளால் சாப்பிட, கைகளை கழுவுவதற்கு வேலை ஆட்கள் சட்டியில் தண்ணீரைப் பிடித்தபடி நிற்பார்கள். கோதுமை ரொட்டிகளை உணவில் அதிகம் பயன்படுத்தினார்கள். அதுபோல உணவில் கண்டிப்பாக மது வகைகளும் ஒரு அங்கமாக இருந்தன'' என்று முடித்தார் டீச்சர்.

''டீச்சர், அவர்களின் உடைகளைப் பத்திச் சொல்லுங்க'' என்றாள் சரண்யா.

''நம்ம மாதிரிதான் அவங்களும் உடை தயாரிச்சுக் கிட்டாங்களா டீச்சர்?'' என்றாள் மது.

''ஹூம்... நாமதான் அவங்களைக் காப்பி அடிச்சிருப்போம்'' இல்ல டீச்சர் என்றாள் சரசு.

''எகிப்தியர்கள் லினெனில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்தார்கள், 'ஃப்ளாக்ஸ்’ என்ற தாவரத்தில் இருந்து ஸ்பன் துணியை உருவாக் கினார்கள். இதுவும் தவிர காலணிகளையும் உருவாக்கினார்கள். ஆனால், காலணிகளை அணிவதை ஆடம்பரமான ஒன்ராகக் கருதினார்கள். பெண்கள் நீண்ட ஆடைகளையும், ஆண்கள் உடலைப் பிடிக்கும் இறுக்கமான ஆடை களையும் அணிந்தனர். இவர்கள் பெரும்பாலும் தலைக்கு 'விக்’ அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதேபோல பண்ட மாற்று முறையில் பொருட்களையும் வாணிபம் செய்து வந்தார்கள்'' என்று நிறுத்தினார் டீச்சர்.

''டீச்சர் அங்க பாருங்க... இதுதானே சூரியக் கடவுள்'' என்றான் கணேஷ்.

உட்கார்ந்த நிலையில் இருந்த அந்தச் சிலை அருகே போனார்கள் அனைவரும்.

''இதுதான் எகிப்தியர்களின் சூரியக் கடவுள் 'ரா’ என்று பெயர். எகிப்தியர்கள் மிகவும் கடவுள் பக்தி மிக்கவர்கள். இவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான கடவுள்களை வணங்கி வந்தனர். சூரியக் கடவுளான ரா, தினமும் இரவு முழுவதும் உலகின் மறுபக்கத்தில் பயணித்துக் காலையில் தோன்றுவதாக நம்பினார்கள். சந்திரனை அவர்கள் எழுத்தறிவுக்கான கடவுளாக வணங்கினர்'' என்ற மாயா டீச்சர், ''எகிப்தியர்களின் வாழ்க்கை முறையைத்தான் இப்போதும் உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன'' என்று முடித்தார்.

''உண்மையிலேயே எகிப்தியர்கள் பலே ஆளுங்கதான்'' என்றான் பிரசன்னா.

''சரி, சுட்டீஸ் இந்தப் பயணம் உங்களுக்கு இன்னும் பல தகவல்களை தேடத் தூண்டி இருக்கும். வீட்டுக்குப் போகலாம்'' என்ற டீச்சர், அனைவருடனும் மந்திரக் கம்பளத்தில் ஏறி, வீடு நோக்கித் திரும்பினார்.