கே.யுவராஜன், ஹரன்
##~## |
மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். வண்ண மின் விளக்குகளால் அந்தப் பூங்கா மின்னிக்கொண்டு இருந்தது. மாயா டீச்சருடன் தீபா, சுரேகா, பரத், பிரசாந்த் ஆகியோர் ஓர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அவர்களின் கைகளில் வேர்க்கடலைப் பொட்டலங்கள்.
சற்றுத் தொலைவில்... மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து, 'க்ராக்... க்ராக்’ எனும் ஒலி எழ ஆரம்பித்தது. ''டீச்சர், தவளைக் கலைஞர்கள் கச்சேரியை ஆரம்பிச்சுட்டாங்க. கச்சேரி உச்சத்தைத் தொடுறதுக்குள்ளே கிளம்பிருவோம் வாங்க'' என்றபடி எழுந்தான் பரத்.
''கொஞ்சம் இருங்கப்பா, என் ஸ்கூல் புராஜெக்ட்டுக்குத் தவளை சம்பந்தமா சில தகவல்கள் தேவைப்படுது. டீச்சர்கிட்டே கேட்போம்'' என்றாள் தீபா.
''அப்படின்னா கிளம்புறப்ப ரெண்டு, மூணு தவளைகள் தேவைப்படும்னு சொல்லு. நான் வேணும்னா ஹெல்ப் பண்றேன்'' என்றான் பிரசாந்த்.
''தவளையைப் பிடிக்கிறது, ஓணானை விரட்டுறது... இதுக்கு எல்லாம் ரெடியா இருப்பியே...'' என்று அவன் தலையில் குட்டினாள் சுரேகா.
''உனக்கு என்ன விவரம் வேணும் தீபா?'' என்று கேட்டார் டீச்சர்.


''தவளையால் நமக்கு ஏதாவது பயன் உண்டா டீச்சர்?'' என்று கேட்டாள் தீபா.
''நல்லாக் கேட்டே போ! தவளையின் கச்சேரிக்குப் பயந்து கிளம்பலாம்னு சொன்னீங்களே... இந்தத் தவளைகள் இல்லேன்னா, கொஞ்ச நேரத்தில் பூச்சிகள் வந்து நம்மைக் கிளப்பிடும். தவளையின் முக்கிய உணவு வெட்டுக்கிளியும் புழுப் பூச்சிகளும். வயல்வெளிகளில் இருக்கும் தவளைகள், பூச்சிகளைச் சாப்பிட்டு பயிர்களைக் காக்கும் வேலையைச் செய்யுது'' என்றார் டீச்சர்.
''அது மட்டுமா? ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான சயின்ஸ் ஸ்டூடன்ட்ஸ் செய்யும் ஆராய்ச்சியில், எத்தனை தவளைகள் உயிர்த் தியாகம் செய்யுதுங்க. தீபாவின் புராஜெக்ட்டையும் சேர்த்துதான் சொல்றேன்'' என்றான் பிரசாந்த்.
''தவளைகள் தோன்றி எத்தனை வருஷங்கள் இருக்கும்?'' என்று கேட்டாள் சுரேகா.
''கிட்டதட்ட 26 கோடியே 50 லட்சம் வருஷங்கள் ஆகுது. இருவாழ்வி (ணீனீஜீலீவீறீவீஷீஸீs) வரிசையில் தவளைகள் அன்யூரா என்ற வகையைச் சார்ந்தவை. அன்யூரா என்றால், வால் இல்லாத என்று அர்த்தம். பல உயிரினங்களைப் போல தவளையும் ஆரம்பத்தில் பெரிய உருவத்துடன் இருந்தன. வாங்க, அது எப்படி இருந்ததுனு பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.
''இதை... இதை... இதைத்தான் எதிர்பார்த்தோம்'' என்றபடி அவர்கள் மந்திரக் கம்பளத்தில் ஏறிக்கொண்டார்கள். அது பறக்க ஆரம்பித்தது.

''25 கோடி ஆண்டுகளுக்கு முந்தையக் காலத்தை பெர்மினியன் யுகம் என்பார்கள். அந்த பெர்மினியன் யுகத்தின் ஆரம்பத்தில் ஈரக் களிமண் போலவும் நீரில் நனைந்த பஞ்சுபோலவும் நிலப்பரப்பு இருக்கும். நீருக்குள் வாழ்ந்த உயிரினங்களில் சில இந்தப் பகுதிக்கு வந்து தங்க ஆரம்பித்தன. அப்படி வந்த உயிர்களிடம் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கு ஏற்ப உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றில் தவளையும் ஒன்று'' என்றார் டீச்சர்.
இப்போது, மந்திரக் கம்பளம் தரை இறங்கிய இடம்தான் பெர்மினியன் யுகம் என்பது சுட்டிகளுக்குப் புரிந்தது. அவர்கள் தரையில் கால்வைத்து நடந்தபோது, சொதசொதப்பான மெத்தை மீது நடப்பது போலவே இருந்தது. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு கவனமாக நடந்தார்கள்.
''புதைமணல் மாதிரி உள்ளே இழுத்துக்குமோ'' என்று பீதியைக் கிளப்பினாள் சுரேகா.
''எல்லோரும் அங்கே பாருங்க'' என்று மாயா டீச்சர் சுட்டிக்காட்டினார். அங்கே பன்றி போன்ற உருவம் அப்படியும் இப்படியுமாக நகர்ந்துகொண்டு இருந்தது.
''என்ன டீச்சர் அது?'' என்று திகைப்புடன் கேட்டார்கள்.
''உங்க மனசில் என்ன நினைக்கிறீங்களோ அதேதான். இன்றைய தவளைகளின் முன்னோர்கள். 'பிராங்கியோசாரஸ்’ என்று சொல்வார்கள். இவை இப்படிப் பெரும்பாலும் நிலத்தின் மேலேதான் இருக்கும். நீருக்குள் வாழும் புழுக்கள், பூச்சிகள் இவற்றின் உணவு. இரையைத் தேட நீருக்கு அடியில் செல்லும். நிலப் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டிப்பட ஆரம்பித்ததும் இவற்றின் உருவத்திலும் சில மாற்றங்கள் நிகழும். அதையும் பார்க்கலாம் வாங்க'' என்றார் டீச்சர்.
மீண்டும் மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு சில கோடி வருஷங்கள் பின்னோக்கிப் போனது. இப்போது, அவர்கள் இறங்கிய நிலப்பரப்பு பாறைப் பொடிகள் உடைய மண் பகுதியாக இருந்தது. அங்கேயும் பெரிய உருவில் தாவித் தாவி சென்ற தவளைகளைக் கண்டார்கள். முதலில் பார்த்த தவளையின் உடல் போல் பிசுபிசுப்புடன் இல்லை. சற்றே வறண்டு காணப்பட்டது.
''ஆத்தீ... இவ்வளவு பெருசா இருந்த தவளைங்க இன்னைக்கு நம்மோட உள்ளங்கை அளவுக்கு மாறிருச்சே... பாவம்'' என்றாள் தீபா.

''ஆனா, காலத்துக்கு ஏற்ற மாற்றம்தான் இன்றைக்கும் தவளை இனம் உலகில் வாழுறதுக்குக் காரணம். இப்பவும் 4,800 வகைத் தவளைகள் உலகம் முழுக்க இருக்கின்றன. இப்படியே இருந்து இருந்தால், டைனோசர் மாதிரி என்றைக்கோ அழிந்து இருக்கும்'' என்றார் டீச்சர்.
''அப்படின்னா இப்போது இருக்கும் தவளைகளில் பெரிய தவளை எது?'' என்று கேட்டான் பரத்.
''மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் கோலியாத் தவளை (நிஷீறீவீணீtலீ) 33 சென்டி மீட்டர் இருக்கும். அதன் கண்களுக்குப் பின்னால் நச்சுச் சுரப்பிகள் உண்டு'' என்ற மாயா டீச்சர், ''ஆண் தவளைதான் பெண் தவளையைக் கவர்வதற்காக கத்தும் என்பதும், நீரில் முட்டை இடுவது, தலைப்பிரட்டை போன்ற தவளை பற்றிய அடிப்படைத் தகவல்களை நீங்க பாடப் புத்தகத்திலேயே படிச்சு இருப்பீங்க. இப்போ நாம் சில அபூர்வத் தவளைகளை மட்டும் ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வீட்டுக்குப் போவோம்'' என்றார்.
''அதுவும் சரி, இப்பவே தீபாவின் புராஜெக்ட்டுக்கு நிறையத் தகவல்கள் கிடைச்சுருச்சே'' என்றான் பிரசாந்த்.
அவர்கள் மந்திரக் கம்பளத்தில் ஏறியதும் அது வேகம் எடுத்தது. ''தவளையில் மரத் தவளை என்று ஒரு பிரிவு இருக்கு. மரத்தின் மேலே சுலபமாக ஏறிவிடும். அவற்றில் 2 செ.மீட்டர் முதல் 11 செ.மீ. வரையில் பல வகைகள் இருக்கின்றன. வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, மத்திய ஐரோப்பா போன்ற இடங்களில் பரவலாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மரத் தவளை, ஒரு நத்தையை சர்வ சாதாரணமாக விழுங்கிவிடும். அர்ஜென்டினாவில் கொம்புத் தவளை என்ற வகை இருக்கு. அவற்றின் கண்களின் மேல் இமை, வளர்ந்து புடைத்துக்கொண்டு, பார்க்கக் கொம்பு மாதிரி இருக்கும். அவற்றுக்குக் கூர்மையான பற்களும் உண்டு. அசந்தால், பிற தவளைகளையே கொன்று தின்றுவிடும். இந்தியா, சுபத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் காணப்படும் ஓர் இனம், பறக்கும் தவளை. கால் விரல்களுக்கு இடையே இருக்கும் சவ்வுப் பகுதியை நன்றாக விரித்து, ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு வேகமாகத் தாவும். அதுதான் பறப்பதுபோல் இருக்கும்.''

மாயா டீச்சர் சொல்லச் சொல்ல, அந்த இடங்களுக்கு எல்லாம் பறந்து சென்று, தவளைகளைக் காட்டியது மந்திரக் கம்பளம். டீச்சர் தொடர்ந்தார்... ''தென் அமெரிக்கக் காடுகளில் கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் சில தவளைகள் இருக்கின்றன. அவை கடுமையான விஷம்கொண்டவை. பழங்குடி இனத்தினர் அவற்றின் உடலில் சுரக்கும் விஷத்தை எடுத்து, அம்புகளில் பயன்படுத்துவாங்க. அதனால், அவற்றை 'விஷ அம்புத் தவளை’னு சொல்வாங்க. தென் அமெரிக்காவில் கூடுகட்டி வசிக்கும் தவளையும் இருக்கு. சேற்றில் இலைகளால் கூட்டை அமைக்கும். அவற்றில் முட்டைகளை இட்டு அந்த முட்டைகளைச் சுற்றி நுரைக் குமிழ்களை உண்டாக்கும். அந்தக் குமிழ்கள் கெட்டிப்பட்டு, முட்டைகளுக்குச் சிறப்பு ஓடுகளைப் போல் மாறிவிடும். குஞ்சு பொரிந்து வரும்போது, அந்தக் குமிழ்களை உடைத்துக்கொண்டு வெளியில் வரும். தவளைகளில் இன்னும்கூட பல அதிசயமான வகைகள் இருக்கின்றன. எவ்வளவு பார்த்தாலும் தீராது'' என்றார்.
''போதும் டீச்சர். இப்பவே தவளை மாதிரி தாவற ஃபீலிங் வந்துருச்சு. நாம கிளம்புவோம்'' என்றாள் சுரேகா.
மந்திரக் கம்பளம் மீண்டும் பூங்காவை அடைந்தபோது, அங்கே யாரும் இல்லை. வாட்ச்மேன் வெளிக் கதவைப் பூட்டும் மும்முரத்தில் இருந்தார். ''அங்கிள் இருங்க... இருங்க'' என்று குரல் கொடுத்தான் பரத்.
'அட... இவ்வளவு நேரம் இவங்க எங்கே இருந்தாங்க?’ என்பதுபோல் புரியாமல் பார்த்தார் வாட்ச்மேன். அதைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் வெளியேறி நடந்தார்கள்.
பூங்காவின் உள்ளே தவளைக் கச்சேரி தொடர்ந்தது.