மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஷன் ,ஹரன்

##~##

'உஸ்... புஸ்... உஸ்... புஸ்’ என மூச்சு இரைத்தவாறு மாயா டீச்சரின் வீட்டுக்குள் நுழைந்தார்கள் பரத்தும் சுரேகாவும்.

''என்ன ஆச்சு? ஏதாவது ஓட்டப் பந்தயத்துல கலந்துக்கிட்டு பாதியிலே வந்துட்டீங்களா?'' என்று கேட்டார் டீச்சர்.

அப்போது, தீபாவும் பிரசாந்தும் அதே 'உஸ்... புஸ்’ சத்தத்துடன் வந்து சேர்ந்தனர். நான்கு பேரும் தண்ணீர் பாட்டிலை எடுத்து மாற்றி மாற்றிக் குடித்தார்கள். ஐந்து நிமிடத்துக்குப் பிறகே பேச்சு வந்தது.

''எல்லாம் இந்த சுரேகா பண்ணின குழப்பம் டீச்சர். உங்களைப் பார்க்கிறதுக்காக வந்துட்டு இருந்தோம். திடீர்னு இவ, 'ஏய்... டீச்சர் அங்கே போய்ட்டு இருக்காங்க’னு எதிர்ப் பக்க ரோட்டைக் காமிச்சா. பார்த்துட்டு இருக்கும்போதே... அந்த ஆன்ட்டி ஒரு சந்துல திரும்பிட்டாங்க. 'டீச்சர்தான் நம்மளை வீட்டுக்கு வரச் சொன்னாங்களே’னு சொன்னாக் கேட்கலை. பின்னாடியே ஓடிப்போய்ப் பார்த்தா, அவங்க வேற யாரோ. அதான் அங்கே இருந்து இவளைத் துரத்திட்டு வந்தோம்'' என்றாள் தீபா.

''என்னை மட்டும் சொல்லாதே... அவங்களும்தான் இதே சுடிதார், இதே ஹேர்ஸ்டைல், இதே ஹேண்ட்பேக்னு ஓடினாங்க'' என்றாள் சுரேகா.

''ஆக இன்னைக்கு உடம்புக்கு நல்ல எக்சர்ஸைஸ் கிடைச்சது. இருங்க, எல்லோருக்கும் ஜூஸ் எடுத்து வர்றேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அவர் திரும்பி வந்தபோதும் அதே விஷயம் ஓடிக்கொண்டு இருந்தது. ''அவங்க நடக்கிற விதம், திரும்பிப் பார்த்த ஸ்டைல் எல்லாம் உங்களை மாதிரியே இருந்துச்சு டீச்சர்'' என்றாள் சுரேகா.

''இது எல்லாம் பெரிய ஆச்சர்யமே இல்லை சுரேகா. இயற்கையின் படைப்பில் இதைவிடப் பெரிய ஆச்சர்யங்கள் நிறைய இருக்கு. இன்னிக்கு அதையே நாம மந்திரக் கம்பளத்தில் ரவுண்டு அடிச்சுப் பார்ப்போமா?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.

''ஓ!'' என்று ஒரே குரலில் தலையை ஆட்டினார்கள்.

மந்திரக் கம்பளம் பறக்க ஆரம்பித்தது. ''உலகம் முழுக்கவே 'நான் அவன் இல்லை’ மாதிரியான உயிரினங்கள் நிறைய இருக்கு. எல்லாவற்றையும் பார்க்க நம்ம ஆயுள் போதாது. அதனால், குட்டிக் கண்டமான ஆஸ்திரேலியாவில் இருக்கிற சில அதிசயங்களைப் பார்த்துட்டு வருவோம்'' என்றார் டீச்சர்.

''வரும்போது, ஒரு கங்காருக் குட்டியைக் கொண்டுவருவோம் டீச்சர்'' என்றான் பரத்.

சற்று நேரத்தில் அவர்கள் ஆஸ்திரேலியாவின் காட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். ''அதோ... அங்கே பாருங்க, பழுப்புக் கலர்ல ஓடிட்டு இருக்கே, அது என்னன்னு தெரியுதா?'' என்று கேட்டார்.

புல்வெளிகளுக்கு இடையே ஓடிக்கொண்டு இருந்த அது நின்று திரும்பிப் பார்த்தது. ''இதுகூடவா எங்களுக்குத் தெரியாது. ஆஸ்திரேலிய பெருச்சாளி'' என்று சொன்னான் பிரசாந்த்.

''தப்பு... அது எலி இல்லை, கங்காரு வகைகளில் ஒண்ணு. அதோட பேரு, மஸ்கி ரேட் கங்காரோ (விusளீஹ் ஸிணீt  ரிணீஸீரீணீக்ஷீஷீஷீ). 23 சென்டி மீட்டர் உயரமே வளர்ந்து, பார்க்கிறதுக்கு பெரிய எலி மாதிரி இருக்கும். எலி மாதிரியே மண்ணில் வளையைத் தோண்டி, அதில் வசிக்கும். சில எலி கங்காருகள் சொந்தமாக வளையைத் தோண்டாமல், முயல்களின் வளையில் 'பிரதர், நானும் இந்த இடத்தை ஷேர் பண்ணிக்கிறேனேன்’னு தங்கிரும். முயல்களும் பெருந்தன்மையோடு விட்டுரும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''வாடகையை ஒழுங்காத் தந்துருமா?'' என்று சொல்லிச் சிரித்தாள் தீபா.

அந்த எலி கங்காரு தத்தித் தத்திக் குதித்தவாறே ஒரு வளைக்குள் சென்று பதுங்கியது. நான்கு பேரும் வளைக்குள் ஆவலுடன் எட்டிப் பார்த்ததும், 'உர்... புர்’ எனக் கோபத்துடன் சீறியது.

''அடேங்கப்பா... கொஞ்சம் அசந்தாப் புடிச்சுப் பிறாண்டிரும்போல'' என்று பயத்துடன் விலகினாள் தீபா.

''உண்மைதான் தீபா. எலி கங்காரு மற்ற சிறு பிராணிகளோடு எப்பவும் வம்பு பண்ணி சண்டைபோட்டுக்கிட்டே இருக்கும். புல், தழை, காய்கறிகள்தான் இதோட உணவு. இதோட முக்கியமான எதிரிகள் நாயும் நரியும். சரி வாங்க, கங்காரு மாதிரியே இருக்கிற இன்னொரு முக்கியமான விலங்கைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

சில நிமிடங்களிலேயே அவர்கள் வேறு ஓர் இடத்தில் இருந்தார்கள். அங்கே புல்வெளிகளில் தாவிக் குதித்து ஓடிக்கொண்டு இருந்த விலங்குகளைப் பார்த்ததும் சுரேகாவும் துள்ளினாள். ''ஹேய்... இது வாலபி. இதை எனக்கு நல்லாத் தெரியுமே'' என்றாள்.

''அது சரி, வாலபிக்கு உன்னைத் தெரியுமா?'' என்று கேட்டான் பரத்.

''இது ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருக்கு. கங்காரு மாதிரி தாவிச் செல்லாமல், பெரும்பாலும் நான்கு கால்களால் நகர்ந்தே போகும். அவசியம் ஏற்படுகிற இடத்தில் மட்டுமே தாவும். ஒரே தாவலில் 25 அடி தூரத்தைக் கடக்கும். நாம் பார்க்கிறது புல்வெளி வாலபிகள். இது தவிர மணல்வெளி வாலபிகள், மரங்களில் வசிக்கும் வாலபிகள், பாறைப் பகுதி வாலபிகள் என இதிலும் சில வகைகள் இருக்கு. பாறை வாலபிகள், மூன்று அடி உயரத்தில் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கும். பாறைக்குப் பாறை தாவிக் குதிச்சு ஓடும். அதுக்கு ஏற்ற மாதிரி அதன் பாதங்கள் சொரசொரப்புடன் பாறைகளைப் பற்றிக்கொள்ளும் வகையில் இருக்கும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''டீச்சர்... டீச்சர் அதையும் பார்ப்போமே'' என்றார்கள் நான்கு பேரும்.

சிறுசிறு பாறைகள் நிறைந்த இடத்தில் மந்திரக் கம்பளம் இறங்கியது. அங்கே ஒரு வாலபி பாறையின் மேல் உட்கார்ந்து நிதானமாக மதிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. ''அடடா... எவ்வளவு வாட்டமா உட்கார்ந்து சாப்பிடுது'' என்று வியந்தார்கள்.

''அடுத்து, உங்களுக்கு எல்லாம் ரொம்பப் பிடிச்ச, நல்லாத் தெரிஞ்ச ஒரு விலங்கைப் பார்க்கலாம்'' என்றார் மாயா டீச்சர். சில நிமிடங்களிலேயே அவர்கள் ஆஸ்திரேலியாவின் வேறு பகுதியில் இருந்தார்கள்.

''வாவ் கோலா!'' என்றார்கள்.

''இதைப் பத்தி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீங்க. தண்ணீரே குடிக்காது. தான் சாப்பிடும் யூக்கலிப்டஸ் இலையில் இருக்கும் ஈரப்பதமே இதுக்குப் போதுமானது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே மிகக் குறைந்த அளவில் இருக்கும் அரிய வகை விலங்கு. குரங்குக் கரடி, மரக் கரடி எனப் பல பெயர்கள். ஆனால், ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா?'' என்று கேட்டார்.

நான்கு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். மாயா டீச்சரே தொடர்ந்தார்... ''கரடி மாதிரி முகத் தோற்றம் இருக்கிறதாலும் மரத்தில் ஏறுவதாலும் கோலாக் கரடினு சொல்றாங்க. ஆனால், இதுவும் கங்காரு வகையில் ஒண்ணுதான்'' என்றார் டீச்சர்.

''ஓகோ! அப்படின்னா கோலா கங்காருனு சொல்லலாமா?'' என்றாள் தீபா.

''சொல்லிக்கோயேன். இதே ஆஸ்திரேலியாவில் இன்னொரு 'நான் அவன் இல்லை’ விலங்கைப் பார்த்துட்டுக் கிளம்புவோம்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அவர்கள் இறங்கிய இடத்தில் உலவிய விலங்கைப் பார்த்ததும் பயத்துடன் சில அடிகள் பின்னால் சென்றார்கள்.

''என்ன டீச்சர் இது? நாய் மாதிரி முகம்... நரி மாதிரி தெரியுது... ஆனால், புலி மாதிரி உடம்புல கோடுகள் இருக்கு'' என்று பிரசாந்த் வாயில் இருந்து வார்த்தைகள் தத்தித் தத்தி வந்தன.

''எனக்குத் தெரியும். நான் இதைப் பற்றி படிச்சு இருக்கேன். டாஸ்மானியா ஓநாய்'' என்றான் பரத்.

''ரொம்ப கரெக்ட்! அது பட்டப் பெயர்தான். ஆஸ்திரேலியாவின் புலி, டாஸ்மானியா டெவில் போன்ற பட்டப் பெயர்களும் உண்டு. ஓநாய் வகையைச் சேர்ந்த இதோட உண்மையான பெயர், தைலாசின் (Thylacine). படு பயங்கரமான விலங்கு. காட்டில் கிடைக்கிற கங்காரு, வாலாபிகளை அடிச்சுச் சாப்பிடறது போதாதுனு ஊருக்குள்ளே பண்ணைகளில் புகுந்து ஆடு, கோழிகளையும் ஒரு வாய் பார்க்கும். அதுவே இந்த ஓநாய்களுக்கு ஆபத்தாகவும் முடிஞ்சு இருக்கு. பண்ணை ஆட்கள் பல ஆண்டுகளாக இவற்றை வேட்டையாடிக் கொன்றதால், இந்த இனமே குறைஞ்சுபோச்சு'' என்றார் டீச்சர்.

இவர்களைப் பார்த்துவிட்ட ஓநாய் பாய்ந்து வந்தது. சட்டெனத் தாவி, மந்திரக் கம்பளத்தில் ஏறிக்கொண்டார்கள். அது மேலே பறக்க, கீழே குனிந்த பிரசாந்த் ''வெவ்வெவ்வே'' என்று அழகுக் காட்டினான்.