மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - சீனிவாச ராமானுஜன்

ஆயிஜா இரா.நடராசன்பாரதிராஷா

##~##

அந்தப் பள்ளிக்கூடத்தின் பெயரை இன்று உலகமே அறிந்துள்ளது. கல்யாணம் தொடக்கப் பள்ளி. அது இருக்கும் ஊர் கும்பகோணம். அங்கேதான் ராமானுஜன் என்கிற அந்தப் பையன் படித்தான். அவனுடைய அப்பா, உள்ளூர் துணிக் கடை ஒன்றில் கணக்கராக இருந்தார்.  ராமானுஜத்தின் அம்மா உள்ளூர் பெருமாள் கோயிலில் பஜனைப் பாடல்கள் பாடுவார். அடிக்கடி அம்மாவோடு அவனும் கோயிலுக்குப் போவான்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்போது ராமானுஜன் என்ன செய்தான் தெரியுமா? நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் அனைத்துச் செய்யுள்களையும் மனப்பாடமாகச் சொல்லி ஊரையே அசத்தினான். பிற்காலத்தில், கணக்கில் 4,000 புதிய தேற்றங்களைத் தந்த அந்த மாமேதை, பள்ளிக்கூடத்துக்கு புத்தகம், நோட்டு எடுத்துப் போகாமல் அதிகம் எடுத்துப்போக விரும்பியது எதைத் தெரியுமா? ஸ்லேட்டு. செவ்வக ஸ்லேட்டில் தானாகவே கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான டைம் பாஸ்.

அம்மா ஓய்வு நேரத்தில் பஜனைப் பாடல்கள் பாடியதோடு, வீட்டிலேயே சின்னதாக உணவு விடுதி ஒன்றை நடத்த ஆரம்பித்தார். கும்பகோணம் அரசுக் கல்லூரி பக்கத்திலேயே இருந்ததால், அங்கே படித்த பெரிய அண்ணாக்கள் பலர் இவர்கள் வீட்டில் சாப்பிட வருவார்கள். பள்ளிக்கூடம் போக மீதி நேரத்தில் இந்த அண்ணாக்களுடன் ஃப்ரெண்ட்ஷிப். நம்ம சுட்டி ஸ்டார் ராமானுஜன் தனது கணித அறிவை நிரூபிக்க, இன்னொரு வழி பிறந்தது. அவர்களது கணித வீட்டுப்பாடங்களை ஆறாம் வகுப்பே படித்த ராமானுஜன் போட்டுக்கொடுத்துவிடுவான். அதற்கு மாற்றாக காசு வாங்க மாட்டான். என்ன வாங்குவான் தெரியுமா? கணிதப் புத்தகம். அப்படி அவனுக்கு கிடைத்ததுதான் எஸ்.எல்.லோனி என்பவர் எழுதிய 'உயர்நிலை முக்கோணவியல்’ (Advanced trignimatry) எனும் நூல். அந்தச் சுட்டி வயதில் அவன் முழுமையாய்ப் புரிந்துகொண்டதுடன் அதுபற்றி கல்லூரி அண்ணன்களோடு சரி சமமாய் விவாதித்தும் அசத்தினான்.

சுட்டி நாயகன் - சீனிவாச ராமானுஜன்

நம்ம சுட்டி நாயகன், கணக்கு பரீட்சையைக் கொடுக்கப்பட்ட நேரத்துக்குப் பாதி நேரத்திலேயே முடித்து, எப்போதுமே 100/100 வாங்கிவிடுவான். ஏதோ ஏட்டுச் சுரைக்காய்னு நினைக்காதீங்க. அப்போ அவன் படிச்ச கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில், 46 ஆசிரியர்களுக்கும் டைம் டேபிள் போடுவது, வருகைப் பதிவேடு (அதாங்க அட்டெண்டன்ஸ்) கணக்கிட்டுப் பேணுவது, அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆல் இன் ஆல் சம்பளக் கணக்கு என எல்லாவற்றையும் போட்டுக் கொடுத்து ரொம்ப ஹெல்ப்பா இருந்தானாம்.

முடிவுறா எண்களின் வரிசை மீது அவனுக்கு அலாதி விருப்பம். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பல சுயமான கணிதத் தேற்றங்களை அவன் உருவாக்கி, அப்போது இருந்து தனக்கென்று பாடப் புத்தகத்துக்கு வெளியே தனி நோட்டுப் புத்தகம் பேணத் தொடங்கினான். பள்ளிக்கூடத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான உதவித்தொகைச் சான்றிதழை ஒரே வருடத்தில் மூன்று வாங்கிச் சாதித்த முதல் மாணவன், ராமானுஜன்.

சுட்டி நாயகன் - சீனிவாச ராமானுஜன்

வகுப்பில் கணித ஆசிரியர்களுக்கு அவன்தான் பெட். அவர்களது உதவியோடு அவனுக்கு ஜி.எஸ்.கார் என்பவர் எழுதிய கணிதத் தேற்றங்களின் தொகுதி (Symopsis of Elementery Results in Pure and applied Mathematics) எனும் புத்தகம் கிடைத்தது. அது அவனுக்கு மிகவும் பிடித்த புத்தகம். உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பெர்னாலி எண்கள் மீதான புதிய மதிப்பீடுகள் எனும் வரிசையை வெளியிட நம் சுட்டி நாயகனால் முடிந்ததோடு, அடுத்த வருடம் கணிதப் பாடத்தில் பின்தங்கிய தனது சக மாணவ நண்பர்களுக்கு வீட்டில் தனியாக வகுப்பெடுத்து உதவிடவும்   கணித மேதைமை வளர்ந்து இருந்தது. தான் மட்டும் கணித மேதைமை பெற்றால் போதாது எனச் சக நண்பர்களுக்கும் வகுப்பெடுத்தது... எவ்வளவு பெரிய விஷயம்.

உலகம் போற்றிய கணித-மேதையாகப் பிற்காலத்தில் வடிவெடுத்த நம்ம சுட்டி நாயகன் ராமானுஜன், பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) மாவட்ட அளவில் சாதனை மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று, அந்தக் காலத்தில் கே.ரங்கநாதராவ் கணிதப் பரிசையும் தட்டிச் சென்றார்.