ஹரன், கே.யுவராஷன்
##~## |
மாயா டீச்சர் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில், ஒரு குட்டிப் பாப்பாவுக்குப் பிறந்த நாள். தீபா, சுரேகா, பரத், பிரசாந்த் சேர்ந்து ஒரு பரிசுப் பொருளுடன் வந்துவிட்டார்கள். பிறந்த நாள் பார்ட்டியைக் கலக்கிவிட்டு, டீச்சரின் ஃப்ளாட்டுக்கு வந்தபோது 9 மணி. ''கேக் செம டேஸ்ட்டுப்பா.'' என்றாள் சுரேகா.
''உணவு அயிட்டங்களும் சூப்பர். எக்ஸ்ட்ரா வயிறு இருந்தா, இன்னும் சாப்பிட்டு இருக்கலாம்'' என்றான் பரத் ஏக்கத்துடன்.
''வயிறுக்கு மட்டும் சாப்பாட்டைக் கொடுத்துட்டே இரு. மூளைக்குக் கொடுக்காதே'' என்றாள் தீபா.
''யார் சொன்னது? பார்ட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நீங்க எல்லாம் அரட்டை அடிச்சுட்டு இருந்தீங்க. ஆனா, நான் என் மூளைக்குச் சாப்பாடு போட்டுக்கிட்டு இருந்தேன். ஐ மீன், அவங்க வீட்டு ஷெல்ஃபில் இருந்த புக்ஸைப் பார்த்துட்டு இருந்தேன்'' என்றான் பரத்.
''பார்த்துட்டுதானே இருந்தே? படிக்கலியே'' என்று சுரேகா சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.
''பாருங்க டீச்சர் இவங்களை'' என்று சிணுங்கினான் பரத்.
''சுரேகா, மூளைக்குச் சாப்பாடுன்னா, அது அறிவார்ந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறது மட்டும் இல்லே. நம் உடம்பின் சக்திக்கு எப்படி உணவுப் பொருள் முக்கியமோ, அதே அளவு மூளைக்கும் அவசியம்'' என்றார் மாயா டீச்சர்.

''எப்படி டீச்சர்?'' என்று கேட்டான் பிரசாந்த்.
''நம்ம உடம்பு சீராக இயங்கவும் ஆரோக்கியமாக இருக்கவும், உயிர்ச் சத்துகள் எனப்படும் வைட்டமின்கள், கனிமச் சத்துகள் எனப்படும் மினரல்கள் முக்கியம். இதே உயிர்ச் சத்துகளும் கனிமச் சத்துகளும்தான் நம் மூளைக்கும் உணவாக இருக்கு. குறிப்பிட்ட சத்துகள் குறையும்போது, உடம்பு பாதிப்பு அடைவது சுலபமாகத் தெரிஞ்சுருது. ஆனா, மூளையின் பாதிப்பைப் பற்றிய புரிதல் சம்பந்தப்பட்ட நபருக்கோ, அவரைச் சுற்றி இருக்கிறவங்களுக்கோ உடனே தெரிவது இல்லை'' என்றார் டீச்சர்.
''எப்படி டீச்சர் சொல்றீங்க?'' என்று கேட்டாள் தீபா.
''இதை ஒரு காட்சி மூலம் பார்ப்போமே. நம்ம மந்திரக் கம்பளத்துக்கும் வேலை கொடுத்த மாதிரி இருக்கும்'' என்றார் டீச்சர்.
பறந்துவந்த மந்திரக் கம்பளம், அவர்களுக்கு எதிரே சினிமாத் திரைபோல் விரிந்தது. அதில் ஒரு வகுப்பறைக் காட்சி தோன்றியது. நிறைய மாணவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். ''அட... இந்த இடத்தைப் பார்த்த மாதிரி இருக்கே...'' என்று பிரசாந்த் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, திரையில் அவன் தெரிந்தான்.
''ஏய்... இது போன வருஷம் நான் படிச்ச கிளாஸ். அறிவியல் வகுப்பு. நோ... நோ... ஸ்டாப் கம்பளமே ஸ்டாப்'' என்றபடி திரைக்கு முன் சென்று கைகளை ஆட்டினான் பிரசாந்த்.

மற்ற மூவரும் அவனை இழுத்து அமரவைத்தார்கள். ''இருடா, என்னதான் நடந்துச்சுனு பார்ப்போம்'' என்றார்கள்.
வகுப்பில் அறிவியல் ஆசிரியை தீவிரமாகப் பாடம் நடத்திக்கொண்டு இருக்க, பிரசாந்த் டெஸ்க் மீது தலையைச் சாய்த்துத் தூங்க ஆரம்பித்தான். ''சூப்பர் பிரசாந்த்'' என்றார்கள் மூவரும்.
''அது வந்து... அன்னிக்கு...'' என்று பிரசாந்த் திணறினான்.
திரையில் ஆசிரியை அவனைப் பார்த்துவிட்டார். அருகில் வந்து டெஸ்க்கைத் தட்டி, ''பிரசாந்த்... பிரசாந்த்'' என்று அதட்டலாகக் குரல் கொடுத்தார்.
பிரசாந்த் பதறி எழுந்தான். ''ஸா... ஸாரி மிஸ்... காய்ச்சல் மிஸ்'' என்றான்.
அவன் கன்னத்தைத் தொட்டுப் பார்த்த ஆசிரியை, ''பயங்கரமாக் கொதிக்குதே. டாக்டர்கிட்டே போனியா?'' என்று கேட்டார்.
''இல்லே மிஸ். காலையில ஒண்ணும் இல்லே. இப்பத்தான்...''

''உடனே வீட்டுக்குக் கிளம்பு. அம்மாகிட்டே சொல்லி டாக்டரைப் பாரு. சுபாஷ், நீ பிரசாந்த்தை வீட்டில் விட்டுட்டு வா'' என்றார்.
காட்சி முடிந்தது. டீச்சர் தொடர்ந்தார். ''உடம்பு சரியில்லாத பிரசாந்த்தை அக்கறையோடு அவனோட சயின்ஸ் டீச்சர் அனுப்பிவெச்சாங்க. இதுவே உடம்புக்கு ஒண்ணும் இல்லாமல் மனதளவில் சோர்வோடு படுத்து இருந்தால்..?''
'' 'பாடத்தைக் கவனிக்காமல் என்னடா படுத்து இருக்கே’னு திட்டி இருப்பாங்க'' என்றான் பிரசாந்த்.
''அதேதான். மூளைக்கு ஏற்படும் குறையைச் சரியாகப் புரிஞ்சுக்காம, சோம்பேறினு திட்டறோம். இது ரொம்ப தப்பு. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உயிர்ச் சத்துகளும், கனிமச் சத்துகளும் ஆற்றலாக மாறி உடம்புக்கு வலுவைக் கொடுக்கிற மாதிரி, மூளைக்கும் வலிமையைச் சேர்க்குது. இதைப் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிச்சு இருக்காங்க. 1988-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் பென்டோன் என்பவர் 30 சிறுவர், சிறுமிகளைவைத்து இந்த ஆராய்ச்சியைச் செய்தார். அதில் பாதிப் பேருக்கு சிறப்பான ஊட்டச் சத்து உணவுகளைக் கொடுத்தார். மீதிப் பேருக்கு சாதாரண உணவுகளைக் கொடுத்தார். எட்டு மாதங்களின் முடிவில் ஊட்டச்சத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் நுண்ணறிவு வளர்ந்து இருக்கிறது தெரிஞ்சது.'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளத்தின் திரையில் இப்போது, டாக்டரின் ஆராய்ச்சி முடிவுகள் மூளையின் ஸ்கேன் படங்களாக ஒளிபரப்பு ஆயின. ''இந்த முடிவு பரபரப்போடு பேசப்பட்டாலும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. ஊட்டச் சத்து பானங்களை விற்கிறதுக்காக கம்பெனிகள் செய்த தந்திரம்னு சொல்லிக்கிட்டாங்க. 1991-ல் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீவென் என்பவர், சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் 16 வயதுக்கு உட்பட்டவர்களை இதே மாதிரியான ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினார். சத்தான உணவு கொடுத்த இளம் குற்றவாளிகளின் செயல்களில் மாறுபாடு ஏற்பட்டது. அவங்ககிட்டே முரட்டுத்தனம், வன்முறைச் செயல்கள் குறைஞ்சு, படிக்கும் திறன் அதிகமாச்சு. இதுக்குப் பிறகுதான் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடம்புக்கு மட்டும் இல்லாமல், மூளைக்கும் மிக முக்கியம்னு புரிய ஆரம்பிச்சது'' என்றார் டீச்சர்.
''அப்போ, ஸ்கூலுக்கு நேரம் ஆகுதுனு அரைகுறையா எதையோ சாப்பிட்டுட்டுப் போனா, பாடத்தைக் கவனிக்க முடியாதுனு சொல்லுங்க'' என்றாள் தீபா.

''சரியாச் சொன்னே தீபா. முன்பைவிட இப்போ உலகம் நிறைய முன்னேறிருச்சு. கணிப்பொறி, இன்டர்நெட்னு நீங்க மூளைக்கு வேலை கொடுக்கும் நேரம் அதிகமாகுது. ஆனால், சத்தான உணவைச் சாப்பிடுவது குறையுது. இதனால் மூளைக்குக் கிடைக்கிறதோ குறைஞ்ச சாப்பாடு. செய்ய வேண்டிய வேலை அதிகம் என்கிற நிலை ஏற்படும்போது, அது கொள்ளை அடிக்குது'' என்றார் டீச்சர்.
''கொள்ளையா?''
''ஆமா. நாம் சாப்பிடும் உணவு ஆற்றலாக நம் உடம்பு முழுவதும் இருக்கும். ஒவ்வொரு பாகத்துக்கும் இவ்வளவு ஆற்றல்னு ஒரு கணக்கு இருக்கு. மூளை தனக்கான ஆற்றல் தீர்ந்துடும்போது, வேற வழி இல்லாமல் உடம்பில் இருக்கும் ஆற்றலை எடுத்துக்குது. இதனால், உடம்புக்குத் தேவையான ஆற்றல் குறையுது. அதனாலும் உடல்நலம் கெடும். பிறகு மூளையின் ஆற்றலும் குறைஞ்சுரும். அதனால், நீங்க பலசாலியாக இருக்கிறதுக்கு மட்டும் இல்லாமல், அறிவாளியா இருக்கவும் சத்தான உணவு முக்கியம்.'' என்றார் டீச்சர்.
''எனக்கு இது நல்லாவே தெரியும் டீச்சர். அதனால்தான், கேக் வெட்டப் போறாங்கனு சொன்னதுமே கையில் இருந்த புத்தகத்தை அப்படியே போட்டுட்டு ஓடினேன். ஏன்னா, மூளைக்கு வேலை கொடுக்கிறதுக்கு முன்னாடி அதுக்கான சாப்பாடு போடணுமே'' என்றான் பரத்.
தீபா, சுரேகா மற்றும் பிரசாந்த் அவனை முறைத்தவாறு துரத்த ஆரம்பிக்க, அவர்களுடன் மந்திரக் கம்பளமும் சேர்ந்து விரட்டியது.