ஆயிஜா இரா.நடராசன்
##~## |
நரேந்திர நாத் தத்தா என்பது அவனுடைய முழுப் பெயர். எல்லாரும் அவனை நரேந்திரா என்று அழைப்பார்கள். அவனுடைய அப்பா, விசுவநாத தத்தா, வழக்கறிஞர். அம்மா பெயர், புவனேஸ்வரி தேவி.
நரேந்திரனின் அம்மா மிகவும் கண்டிப்பானவர். 'ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்’ என்று சொல்வார். தன் மகனை ஒழுக்கத்தில் சிறந்தவனாக வளர்ப்பதில் கவனமாக இருந்தார். நமது புராணம் மற்றும் இதிகாசங்களில் உள்ள தத்துவக் கதைகளை நரேந்திரனுக்குச் சொல்வார். யோகாப் பயிற்சியையும் அவனுக்கு அம்மாதான் சொல்லிக்கொடுத்தார்.
சின்ன வயதிலேயே நரேந்திரன் அதிகாலையில் எழுந்துவிடுவான். ஆசிரியராகத் தன்னைக் கற்பனைசெய்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த அதிகாலை நேரத்தில் தன் முன்னால் ஒரு வகுப்பே இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்வான். அவனுடைய ஆசிரியர்போலவே சத்தமாகப் பேசி நடிப்பான். மாலையில் வீட்டுத் தோட்டத்தில் உடல்பயிற்சி செய்வான். மரங்கள் மேலே ஏறுவதும், கிளையைப் பிடித்துத் தொங்கியவாறு தண்டால் எடுப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றான். அங்கே பூசாரியாக இருந்தவர், ஓர் இயந்திரம்போல எந்த உணர்ச்சியும் இல்லாமல் மந்திரம் சொல்லி, அர்ச்சனைசெய்வதைக் கண்டான். நேராக அவர் அருகே சென்று, அந்த மந்திரங்களை ஏற்ற இறக்கத்தோடு சொல்லிக்காட்டினான். அப்போது நரேந்திரனுக்கு ஆறு வயதுதான்.
நரேந்திரனிடம் எந்த அளவுக்குக் குறும்புத்தனமும் விளையாட்டும் இருந்ததோ, அதே அளவுக்கு படிப்பின் மீது ஆர்வமும் இருந்தது. பாடப் புத்தகத்துக்கு வெளியேயும் அவனது தேடல் இருந்தது. அவனது அப்பாவிடம் இருந்த பல மேற்கத்தியத் தத்துவப் புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படிப்பான். பள்ளியில் இருந்து வந்ததும் சிந்தனையிலேயே இருப்பான்.
ஒரு நாள், நரேந்திரன் தன் அப்பாவிடம் விதண்டாவாதமாக ஏதேதோ கேள்விகளைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அவன் கேட்ட பல கேள்விகளுக்கு அப்பாவுக்குப் பதில் தெரியவில்லை. அதனால் அவருக்குக் கோபம்வந்துவிட்டது. நரேந்திரனைக் கழிவறைக்கு உள்ளே தள்ளி, கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, 'பாவம் பிள்ளை’ என நினைத்தவாறே கதவைத் திறக்க முயன்றார். ஆனால், நரேந்திரன் உள்ளே தாழிட்டு இருந்தான்.
பயந்துபோன அப்பாவும் அம்மாவும் கதவைத் தட்டினார்கள். ''என்னைத் தொந்தரவு செய்யாதீங்க. நான் அந்தக் கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கிறேன்.'' என்று உள்ளே இருந்து குரல் வந்தது. தான் தேடிய கேள்விக்குத் தனக்குள்ளேயே பதிலைத் தேடித் திருப்தி அடைந்த பிறகே நரேந்திரன் வெளியே வந்தான். அவனது செயலைக் கண்டு பெற்றோர் வியந்துபோனார்கள்.
கற்பதில் பிடிவாதம், கடும் பயிற்சி, யாருக்கும் எதற்கும் பயப்படாத மனோதிடம் இவைதான் நரேந்திரனைப் பிற்காலத்தில் உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தராக மாற்றியது.