மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன்

ஆயிஷா இரா.நடராசன்

ஆதாரம்:
வேர்ல்டு ஆஃப் ஐசக் நியூட்டன். எரிக் வெயின் ஸ்டீன்

##~##

இங்கிலாந்தின் லிங்கன்ஷியர்(Lincolnshire) மாகாணத்தில் உள்ள உல்ஸ்த்ரோப் (Woolsthorpe) என்கிற குட்டிக் கிராமத்தில், 1642-ல் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்தான் அந்தப் பையன். அவன் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், அவன் அப்பா இறந்துவிட்டார். அதனால், ஐசக் என்ற அவரது பெயரையே அவனுக்கும் வைத்தார்கள். அவன் ரொம்பக் குட்டியாக, வளர்ச்சியே இல்லாமல் பிறந்ததால், ஒரு வருடம்கூட உயிரோடு இருப்பது கஷ்டம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

பாட்டியிடம் வளர அனுப்பப்பட்டான் ஐசக். அப்பா இல்லை, அம்மாவும் பக்கத்தில் இல்லை. அதனால் அவன் தனிமையை உணர்ந்தான்.  பாட்டி வீட்டுத் தோட்டத்தில் இருந்த மரங்கள், செடிகள், எலி, அணில் ஆகியவற்றோடு விளையாடுவான்.

ஒரு முறை அவனைப் பார்க்க வந்த அவனுடைய அம்மா அவனுடைய செயலைக்கண்டு வெறுத்துப்போனார்கள். ஒரு பெரிய குதிரை வண்டியின் சக்கரத்தை மர அச்சு செய்து பொருத்தி இருந்தான். 'மடக் மடக்’ சத்தத்தோடு அது சுற்றியது. ஐந்து வயதே ஆன ஐசக், அந்த மர ஆரங்கள் ஒவ்வொன்றிலும் கல்வைத்துச் சுற்றும்போது, ஒவ்வொரு கல்லும் வேறு வேறு கோணத்தில் சென்று விழுவதை ஆராய்ந்துகொண்டு இருந்தான். இப்படி எதையாவது செய்துகொண்டு இருப்பான்.

சுட்டி நாயகன்

பள்ளிக்கூடத்தில் ஆரம்ப நிலைகளில், ஐசக் கடைசி ரேங்க்தான் வாங்கினான். ஆனால், மாமாவின் வேதிக் கலவைக் கடையில் அனைத்து வகை வேதிப் பொருட்களையும் சரியாகக் கலந்து அசத்துவான். ஏழே வயதில் சூரனாய் இருந்த ஐசக், பள்ளியில் கடைசி பெஞ்ச் பார்ட்டியாக இருந்தது விநோதம்தான். இந்த நிலைமை மாறிய விதம் ஒரு சுவாரசியமான கதை.

ஐசக் படித்த அதே வகுப்பில் ஆந்தர் ஸ்டோரர் என்ற பையன் இருந்தான். செம குண்டன். க் ஐசக்கை கிண்டல் செய்வான், அடிப்பான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஐசக், ஒரு நாள் பொங்கி எழுந்தான். வீட்டுக்குப் போகும் வழியில் ஆர்தர் ஸ்டோரரை மடக்கி சாத்தி எடுத்துவிட்டான்.

சுட்டி நாயகன்

ஐசக் அதோடு விடவில்லை. ஆர்தர் ஸ்டோரர் வகுப்பில் முதல் ரேங்க் வாங்குவதை ஐசக் உணர்ந்தான். உடல் பலத்தில் மட்டும் அல்லாமல் படிப்பிலும் அவனை வெல்ல முடிவு செய்தான். தீவிரமாய் உழைத்து முதல் இடம் பிடித்தான் ஐசக். படிப்பில் மட்டும் அல்லாமல், பல விஷயங்களில் கைதேர்ந்த சுட்டியாக மாறினான். ஊரில் 'விண்ட் மில்’ எனப்படும் காற்றாடி மின் உற்பத்தி அமைப்பை முதலில் ஏற்படுத்தியபோது, அதுபோலவே சிறிய அளவில் செய்து தனது தோட்டத்தில் நிர்மாணித்தான். காற்று அடிக்காதபோதும் அது சுற்றுவதைக் கண்ட அவனது நண்பர்கள் வியந்தார்கள். அது எப்போதும் தொடர் ஓட்டத்தில் இருக்க, அதில் ஒரு எலியைவிட்டுவைத்தான். ஒரு எலி ஓய்வெடுத்தால், தொடர்ந்து ஓட ஸ்பேர் எலிகளும் இருந்ததாம்.

பள்ளி நாட்களில் ஒரு நாள்  ஆப்பிள் மரத்தின் கீழே உட்கார்ந்து எதையோ எழுதிக்கொண்டு இருந்தான். அப்போது ஒரு ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து தொப்பென்று விழுந்தது. 'அந்த ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்? வானத்தை நோக்கிப் போகாமல் இருப்பது ஏன்?’ என  யோசிக்கத் தொடங்கினான் ஐசக். பிற்காலத்தில் புவி ஈர்ப்பு விசை உட்பட பல்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்து அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் ஆனான்.