மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் ஹரன்

##~##

புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டுப் பை நிறையப் புத்தகங்களுடன் வீட்டுக்குத் திரும்பினார்கள் மாயா டீச்சரும் சுட்டிகளும். ''பசங்களா, யார் யாருக்கு எந்தெந்த புக்ஸ் வேணும்னு எடுத்து வைங்க'' என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றார் டீச்சர்.

அவர் சூடான பானங்களுடன் வந்தபோது, நான்கு பேரும் புத்தகங்களைப் புரட்டியபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். ''செலக்ட் பண்ணிட்டோம் டீச்சர்'' என்றாள் சுரேகா.

''டீச்சர், புத்தகக் கண்காட்சிக்கு காது கேளாதோர் பள்ளியைச் சேர்ந்த சில பசங்க வந்து இருந்தாங்க. அதில் ஒருத்தன், என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருக்கான். ஏழாவது படிக்கிறான். பயங்கர டேலன்ட். அவன் வாங்கின புக்ஸைப் பார்த்து அசந்துட்டேன். அதை எல்லாம் நான் படிச்சா, ஒரு வரிகூட மண்டையில் ஏறாதுப்பா'' என்றான் பரத்.

''இந்த மாதிரி ஆட்கள் வேறு விஷயங்களில் பயங்கர டேலன்ட்டா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க'' என்ற தீபா, ''ஏன் டீச்சர் காது கேளாமை பிரச்னை எதனால் ஏற்படுது?'' என்று கேட்டாள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''பொதுவாக இதை முழுமையாகக் கேளாமை, மந்தத் தன்மை என இரண்டாகப் பிரிக்கலாம். இதையும் பிறவிக் குறை, இடையில் ஏற்படும் குறைனு இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் பிறவிக் குறை என்பது தாய் கர்ப்பமாக இருக்கும்போது அம்மை, டைஃபாய்டு போன்ற கடுமையான நோய் ஏதாவது வந்தால், அது குழந்தையைப் பாதிச்சு, காது கேளாமையை உண்டாக்கும். பிரசவத்தில் குழந்தையை வெளியே எடுக்கும்போது நிகழ்கிற சில கவனக் குறைவு காரணமாகவும் அந்தக் குழந்தை கேட்கும் திறனை இழக்கலாம். குழந்தை பிறந்து எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்துக்குள் தகுந்த சிகிச்சை கொடுத்தாலே பெரும்பாலும் குணப்படுத்திவிட முடியும். ஆனால், அறியாமை காரணமாகப் பல பெற்றோர்கள் காலம் கடத்திடுறாங்க. இதனால், அந்தக் குழந்தைகள் நிரந்தரமாகக் கேட்கும் திறனை இழக்கும் சோகம் நடக்குது. இந்தியாவில் இப்பவும் 1000 குழந்தைகளில் ஒன்று இப்படி பாதிக்கப்படுது'' என்றார் மாயா டீச்சர்.

''சே... பாவம்! இடையில் ஏற்படும் பிரச்னைக்குக் காரணம் என்ன டீச்சர்?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''அதுக்குப் பல காரணங்களைச் சொல்லலாம். அதுக்கு முன்னாடி நம்ம காது அமைப்பைச் சுருக்கமாகத் தெரிஞ்சுக்கிட்டு வந்தா நல்லா இருக்கும். யார் காதிலாவது போய்ப் பார்க்கலாமா?'' என்றார் டீச்சர்.

''ஓ... நம்ம டீம்ல பரத்துக்குதான் பெரிய காது. மந்திரக் கம்பளம் சிரமம் இல்லாமல் உள்ளே நுழையும்'' என்ற சுரேகாவின் காது மடலைப் பிடித்துத் திருகினான் பரத்.

''அவனும் நம்மோடு வரணும்ல? அதனால், அக்கம் பக்கத்தில் யாராவது தூங்கிட்டு இருக்காங்களானு பார்த்து, அவங்க காதுக்குள்ளே போவோம். எபடி ஐடியா?'' என்றாள் தீபா.

மந்திரக் கம்பளம் அவர்களை எறும்பைவிடச் சிறியதாக மாற்றி, தூக்கிச் சென்றது. இவர்களுக்காகவே காத்திருப்பதைப் போல பக்கத்து வீட்டு மாமா, ஹால் ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்து இருந்தார்.      ''மாமா நல்லாத் தூங்கறார். டீச்சர், இந்த மாதிரி காதுக்குள்ளே எறும்போ, பூச்சியோ நுழைஞ்சுட்டா என்ன செய்யணும்?'' என்று கேட்டான் பிரசாந்த்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''முதலில் பதற்றப்படுறதை நிறுத்தணும். ஏன்னா, பதற்றத்தில் ஆளாளுக்கு ஒரு யோசனையைச் சொல்லி பட்ஸ், ஹேர்பின் என நுழைச்சு, இன்னும் உள்ளே தள்ளிருவாங்க. பூச்சியோ, எறும்போ உள்ளே போயிரும்போது குடைச்சலால் ஏற்படும் வலியைப் பொறுத்துகிட்டு, வெளிச்சமாக இருக்கும் பக்கம் நம் காது மடலை அசையாமல் காண்பிச்சாலே போதும். டார்ச் விளக்கின் வெளிச்சத்தைக் காதில் அடிக்கலாம். அந்த வெளிச்சத்தை நோக்கி பூச்சி வரும். அதையும் மீறி வராதபோது, காதுக்குள் மிதமான வேகத்தில் பீய்ச்சி அடிக்கிற மாதிரி தண்ணீரைச் செலுத்தலாம். பூச்சி இறந்துபோய் உள்ளேயே தங்கிட்டாலும் பயப்பட வேண்டாம். நாமாக அதை வெளியே எடுக்கக் கூடாது. நிதானமாக அடுத்த நாள்கூட டாக்டரிடம் போகலாம். அவர் அந்தப் பூச்சி காதுக்குள் எந்தப் பகுதியில் இருக்குனு பார்த்து தகுந்த முறையில் எடுப்பார்'' என்றார் டீச்சர்.

அவர்கள் மாமாவின் காது மடலில் வந்து சேர்ந்தார்கள். ''வளைவான பாதை... எல்லோரும் எச்சரிக்கையுடன் வரவும்'' என்று சத்தமாகச் சொன்னாள் சுரேகா.

''உஷ்... சொல்றதைக் கவனிங்க. காது என நாம் பொதுவாகச் சொல்வது மூன்று முக்கியப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கு. முதலில் புறச் செவி என்கிற காது மடல். இதை மருத்துவத்தில் பின்னா (றிவீஸீஸீணீ) என்பார்கள். காற்றின் அலைகளையே ஒலி அலைகள் என்கிறோம். இந்த ஒலி அலைகளைச் சேகரித்து உள்ளே அனுப்புவது இதன் வேலை. மனிதர்களுக்கு இந்தக் காது மடல் அசையாது. விலங்குகளில் பெரும்பாலானவற்றுக்கு நன்கு அசையும். ஒலி அலைகளை அதிகமாக உள்வாங்கும். இதனால், நம்மைவிட துல்லியமாகச் சத்தங்களைக் கேட்கும் திறன் அவற்றுக்கு உண்டு'' என்றார் டீச்சர்.

''இங்கே ஒரு குழாய் இருக்கு. கவனமாக் குனிஞ்சு உள்ளே வாங்க'' என்ற சுரேகாவின் கமென்ட்ரி தொடர்ந்தது.

''இதுக்குப் பேர் கேட்புக் குழல். 'பின்னா’ சேகரித்த ஒலி அலைகள், இந்தக் குழாய் வழியேதான் செல்லும். இது முடிகிற இடத்தில் இருப்பது செவிப்பறை. இந்தப் பகுதியை மத்தியக் காது என்பார்கள். இங்கே இருந்து தொண்டைப் பகுதிக்கும் ஒரு குழாய் போகும். இந்த நடுக் காதில் ஒன்றை ஒன்று ஒட்டியவாறு மூன்று சிறிய எலும்புகள் இருக்கு பாருங்க. இவற்றை மேலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ் என்பார்கள். செவிப்பறையில் மோதும் ஒலி அலைகள் இந்த எலும்புகளைத் தாக்கும். அப்போது இவை ஏற்படுத்தும் அதிர்வுகள் மூன்றாவது பகுதியான உள்காதுக்குள் செல்லும். இங்கே உள்ள சுருண்ட நத்தை ஓடு மாதிரி இருக்கும் பகுதியின் பெயர், காக்லியா. இவையே அதிர்வுகளை மூளைக்குச் செல்லும் நரம்புக்குக் கடத்துகிறது. மூளை அந்த அலைகளை ஓசையாக இனம் பிரித்து, 'அம்மா, ஆடு, இலை’ என்று அடையாளப்படுத்தி அனுப்புகிறது'' என்றார் டீச்சர்.

''அப்படினா, நாம் பேசுவது என்னவென்று நேரடியாகக் காதுக்குத் தெரியாதா?'' என்று கேட்டான் பிரசாந்த்.

''ஆமா! காது மானிட்டர் என்றால், மூளைதான் சி.பி.யு. அங்கேதான் முக்கியமான சங்கதி இருக்கு. ஆனால், போலீஸுக்கு 'தண்ணி’ காட்டும் பலே திருடர்களைப் போல, காதுப் பகுதி வேறு விஷயங்களில் மூளையையே குழப்பும். உடலில் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், உடனே சரியாக அடையாளம் காணும் திறமை மூளைக்கு இருக்கு. ஆனால், காதுப் பகுதியில் வலி ஏற்பட்டால், காரணத்தைக் கண்டுபிடிக்க ரொம்பவே தடுமாறும். கண், மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளுக்கு இந்தக் காதுப் பகுதி ஜங்ஷன் மாதிரி. எல்லா நரம்புகளும் இந்த இடத்தை ஒட்டியே மூளைக்குச் செல்லும். அதனால்தான் பல் வலி, தொண்டை வலி, மூக்கில் சளி அடைப்பு என எது ஏற்பட்டாலும் காதும் வலிக்குது. ஒரு சொத்தைப் பல்லை நீக்கினால், காது வலியும் நின்னுரும்'' என்றார் மாயா டீச்சர்.

''ம்... புரியுது! புரியுது!'' என்றாள் தீபா.

மந்திரக் கம்பளம் அவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தது. ''பிறவிக் குறைபாடு தவிர, இடையில் ஏற்படும் குறைபாட்டுக்கான காரணம் என்ன டீச்சர்?'' என்று மறக்காமல் கேட்டான் பரத்.

''அதிகமான இரைச்சலில் தொடர்ந்து இருப்பது, தலையில் அடிபடுதல், எதிர்பாராத வெடி விபத்து, கடுமையான நோய்த் தாக்குதல், அடிக்கடி காதுகளைச் சுத்தப்படுத்துகிறேன் எனச் சொல்லி சுயமாக எண்ணெய், சொட்டு மருந்துவிடுவது போன்ற காரணங்களால் கேட்கும் திறனில் மந்தமும் பாதிப்பும் ஏற்படும்.'' என்றார் டீச்சர்.

''ஏன் டீச்சர் காதைச் சுத்தப்படுத்த பட்ஸ் உபயோகிக்கிறதுதானே நல்லது?'' என்று கேட்டாள் சுரேகா.

''நிறையப் பேர் அப்படித்தான் நினைக்கிறாங்க. ஹேர்பின், பென்சிலால் குடைவதைவிட பட்ஸ் பார்க்க நாகரிகமா இருக்கே தவிர, அதுவும் தப்புதான். பட்ஸ் மூலம் குடையும்போது கொஞ்சம் வெளியே வந்தாலும் கொஞ்சம் அழுக்கு உள்ளேதான் போகும். அதனால் குளிச்சு முடிச்சதும் துணி முனையால் சுத்தம் செய்தாலே போதும். காதுகளைச் சுத்தப்படுத்துறதுக்கு எல்லாம் டாக்டர்கிட்டே போகணுமா என நினைக்கிறார்கள். பல் சுத்தம் செய்வது மாதிரி டாக்டரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட இடைவெளியில் காதுகளையும் சுத்தம் செஞ்சுக்க க்ளினிக் போகலாம். நான் சொன்னதெல்லாம் உங்க காதுல வாங்கினீங்களா? என்று கேட்டபடியே... காது சம்பந்தமா இன்னும் நிறையச் சொல்லிட்டே போகலாம். இப்போதைக்கு இது போதும்'' என்றார் டீச்சர்.

''சரிதான், வாங்கிட்டு வந்த புக்ஸைப் படிக்க எங்களுக்கும் படிக்க நேரம் வேண்டும்'' என்ற நான்கு பேரும் புத்தகங்களுடன் விடைபெற்றார்கள்.