மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் !

ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா

##~##

வீட்டில் அந்தச் சிறுவனை 'ரபி’ என அழைப்பார்கள். அது பெரிய வீடு. அவர்கள் வங்காள ராஜ குடும்பம். தாகூர் வீடு என்றால் தெரியாதவர்களே கிடையாது. ரபியின் அப்பா, தேபேந்திரநாத் தாகூர். அவர் ராஜாராம் மோகன்ராய் அவர்களின் பிரம்ம சமாஜத்தில் தலைவராக இருந்தார். அம்மா, சாரதாதேவி. அந்த வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என ரபியால் எண்ணிச் சொல்ல முடியாத அளவுக்கு வேலைக்காரர்கள், தோட்டக்காரர்... மாட்டுக்காரர்... குதிரை லாய ஆட்கள் என நிறையப் பேர் இருந்தார்கள். ரபி அவர்கள் அனைவருடனும் விளையாடுவான்.

ரபி உடன் கூடப் பிறந்தவர்கள் 13 பேர். ரபிதான் கடைசிப் பையன். வீடு முழுக்க பத்திரிகை, புத்தகம், கவிதை, காவியம், இலக்கியம், நாடகம் என கலையும் இசையும் நடனமும் பாட்டுமாக இருக்கும். கல்விச் செல்வத்தால் வீட்டை அறிவுச்சுடர் வீசச் செய்தார்கள். அண்ணன் துபிஜேந்திரநாத் தத்துவ ஆசிரியர். அக்கா ஸ்வர்ணகுமாரி நாவல் எழுதுவார்.

ரபியின் இன்னொரு அண்ணன், சத்யேந்திர நாத் இந்தியாவின் முதல் இந்திய ஐ.சி.எஸ் (இப்போது இருக்கும் ஐ.ஏ.எஸ்-க்கு அப்போதைய பெயர்) அதிகாரி. இன்னோர் அண்ணா, ஜோதிந்திரநாத், அற்புதமான இசைக் கலைஞர். அவரின் மனைவி காதம்பரிக்கு, ரபி செல்லம். ஏன்னா, ரபியோட அம்மா அவன் குட்டிப் பையனா இருக்கும்போதே இறந்துவிட்டார். காதம்பரி ஒரு தாயைப்போல் ரபியைப் பார்த்துக்கொண்டார்.

சுட்டி நாயகன் !

ரபி குறித்து பாட்டிக்குத்தான் நிறையக் கவலை. காரணம், 'பள்ளிக்குப்போக முடியாது’ எனப் பிடிவாதமா இருப்பான் ரபி.  எப்போதும் வேலைகாரர்களையே சுற்றிச் சுற்றி வருவான். ஓரளவுக்குப் பெரியவன் ஆனப் பிறகும் தன்னைவிட வயதில் சிறியவர்களுடன் சேர்ந்து பொம்மை களைவைத்து  விளையாடுவான். அதற்காக தானே தயாரித்த விதவிதமான பொம்மைகளை எடுத்துச் செல்வான். இவை எல்லாம் பாட்டிக்கு அச்சத்தைக் கொடுத்தது.

ஆனால், விரைவிலேயே ரபியின் தனித்திறமைகள் வெளிப்பட்டன. ராமாயணம், கிருஷ்ண காவியம் போன்ற நாடகங்களை வேலைக்காரர்களைக்கொண்டு  இயக்கி நடிப்பான். அதில் இசையும் பாட்டும் சேர்த்து சாதாரண மக்கள் மொழியில் வழங்குவான் ரபி. சொந்தமாகவும் கதைகள் எழுதுவான். அவனது நாடகங்களில் எப்படியும் ஒரு வெள்ளைக்கார வில்லன் வந்துவிடுவான். பிரிட்டிஷ் ராஜ்யத்தை அந்த அளவுக்கு அவன் மனம் வெறுத்தது.

ரபியின் அண்ணன் ஹேமேந்திர நாத், ரபிக்கு  எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தவர். அதோடு அவனுக்கு கங்கையில் நீந்தவும், உடற்பயிற்சி, ஜுடோ போன்ற வீர விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுத்தார். ரபியின் 16-ஆவது பிறந்த நாளில் எல்லாரும் பரிசு கொடுத்தபோது, ரபீந்தர்நாத் தன் கையாலே எழுதிய 100 பக்கங்கள்கொண்ட ஒரு கவிதைத் தொகுப்பை  அண்ணனுக்குப் பரிசாக வழங்கினான். பாடல் திரட்டு - எழுதியவர் 'பானுசின்ஹானு’ என்று அதில் எழுதி இருந்தது.

பானுசின்ஹானா என்றால் சூரியசிங்கம் என்று அர்த்தம். பிற்காலத்தில் அந்த பானுசின்ஹானா  இந்தியாவின் தேசிய கீதத்தைப் படைத்தார். கீதாஞ்சலி என்ற நூலுக்கு நோபல் பரிசை வென்றார். அவர்தான் இந்தியாவின் தேசியக் கவி ரபீந்தர்நாத் தாகூர்.

 ஆதாரம்: 

‘Tagore - Life and Times" - V.M.Gokak
‘Tagore and His India" - Amartya sen