மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் ஹரன்

##~##

''டீச்சர், பரத் போன வாரம் 'சண்டே வாக்கிங்’ வராமல் டிமிக்கி கொடுத்துட்டான். அதனால், அவனுக்கு இன்னிக்கு சூப் வாங்கித் தராதீங்க'' என்றாள் சுரேகா.

அவர்கள் கடற்கரையின் நடைபாதையில் நடந்துகொண்டு இருந்தார்கள். அதிகாலைக் காற்று அவர்களைத் தொட்டுச் சென்றது. ஒவ்வோர் ஞாயிற்றுக் கிழமையும் காலையில் நடைப்பயிற்சி செய்வது அவர்களின் வழக்கம்.

''போன வாரம் சரியான குளிர் டீச்சர். எழுந்துக்கவே முடியலை'' என்றான் பரத்.

''ஆமா, குளிர் உன் வீட்டுக் கதவை மட்டும் தட்டி உள்ளே வந்துடுச்சு. எங்களுக்கு எல்லாம் வெயில் அடிச்சதா என்ன? உன்னை எல்லாம் இந்த நேரத்தில் அன்டார்டிகாவுக்கு நாடு கடத்தணும்'' என்றாள் தீபா.

உடனே மாயா டீச்சர் ''தயங்காமல் கிளம்பு பரத். ஏன்னா, அன்டார்டிகாவில் இப்போதான் கோடைக்காலம். கடலில் பனிக்கட்டிகள் உருகி கப்பலில் செல்வதற்கு சுலபமாகவும் இருக்கும். இப்போ அங்கே போனால் 24 மணி நேரமும் பகல்தான். நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை சூரியன் நான்ஸ்டாப்பாக வேலை செய்யும்'' என்றார்.

அவர்கள் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு சூப் கடைக்கு வந்தார்கள். ''டீச்சர், அன்டார்டிகா கண்டத்தில் எத்தனை நாடுகள் இருக்கு?'' என்று கேட்டான் பிரசாந்த்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''அங்கே நாடுகள் எதுவும் இல்லை பிரசாந்த். பூமியை 7 கண்டங்களாகப் பிரிச்சு இருக்கோம். அதில் தென் முனையில் இருக்கும் கண்டம் இது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா கண்டங்களைவிடப் பெரியது. இது உலகின் மிகவும் குளிர்ந்த பிரதேசம் என்பதால், மக்கள் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. ஆனால், உலகில் உள்ள தண்ணீரில் 70 சதவிகிதம் நன்னீராக இருப்பது இங்கேதான். அன்டார்டிகாவுக்கு எனத்   தனிக் கொடி உண்டு. ஆனால், இந்தக் கண்டம் எந்த நாட்டுக்கும் சொந்தம் கிடையாது. இந்தியா உட்பட உலகின் 45 நாடுகள் ஒன்று சேர்ந்து, 'அன்டார்டிகா ஒப்பந்தம்’ என்று ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கி இருக்கின்றன. அங்கே செல்பவர்களுக்கு அந்தந்த நாடுகளுக்கு என ஓர் எல்லைப் பகுதி இருக்கும். அங்கே தங்கலாம். அந்த எல்லைக்குள்ளேயே சுற்றிவரலாம். தங்கள் ஆராய்ச்சிகளைச் செய்யலாம். அந்த ஆராய்ச்சிகூட உயிரினங்களைப் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும். பூமியைத் தோண்டுவதோ, அணுகுண்டு போன்ற ஆபத்தான சோதனைகளையோ, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஆய்வுக்கூடங்களை நிர்மாணிப்பதோ கூடாது. முக்கியமாக எந்த நாட்டின் ராணுவமும் அங்கே கால்வைக்கக் கூடாது. பல நாடுகளில் இருந்து சென்று ஆராய்ச்சி செய்ய, கிட்டத்தட்ட 5,000 பேர் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அவர்கள்தான் அன்டார்டிகா கண்டத்தின் மொத்த மக்கள்தொகை கணக்கில் வருபவர்கள். இவர்களில்கூட பாதிப் பேர் குளிர் காலத்தில் அதாவது ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள்.'' என்றார் டீச்சர்.

''எல்லோரும் சீக்கிரம் சூப் குடிச்சு முடிங்க. அன்டார்டிகாவுக்கு ஒரு ரவுண்ட் போகப்போறோம். உங்க அடுத்த டயலாக் இதானே டீச்சர்'' என்றாள் சுரேகா குறும்புடன்.

சிரித்த டீச்சர், அவர்களுடன் கடற்கரைப் பகுதிக்கு வந்தார். ஒரு படகின் மறைவில் மந்திரக் கம்பளத்தை எடுத்து விரித்தார். எல்லோரும் ஏறிக்கொண்டதும் நீலக் கடலின் மீது பறந்தது கம்பளம். ''ஏன் டீச்சர் அன்டார்டிகாவுக்குப்போக பாஸ்போர்ட் இருக்கணுமா?'' என்று கேட்டான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரனாக இருந்தாலும் இங்கே டூர் போய்ட்டு வந்தேனு சொல்லிக்க முடியாது. ஏன்னா, சாதாரண மனிதர்களுக்கு அன்டார்டிகாவில் அனுமதி கிடையாது. ஒண்ணு நீங்கள் உயிரியல், புவியியல் போன்ற ஆராய்ச்சியாளராகவும் விஞ்ஞானிகளாகவும் இருக்கணும். அல்லது அது சம்பந்தமாகப் படிக்கும் மாணவர்களாக இருக்கணும். அப்படி இருந்தால், ழிணீtவீஷீஸீணீறீ     சிமீஸீtக்ஷீமீ யீஷீக்ஷீ கிஸீtணீக்ஷீநீtவீநீ ணீஸீபீ ளிநீமீணீஸீ ஸிமீsமீணீக்ஷீநீலீ  என்ற அமைப்புக்கு விண்ணப்பித்து அனுமதி வாங்கணும். மந்திரக் கம்பளத்தில் போகிற நாம் இதைப்பற்றி கவலைப்படத் தேவை இல்லை'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அன்டார்டிகாவை நெருங்கிவிட்டது. ஸ்வெட்டர் மற்றும் குல்லாக்களை அணிந்தபடி எல்லோரும் இறங்கத் தயாரானார்கள். நான்கு பேரும் ''ஹூர்ர்ர்ரே'' என்று தாவிக் குதித்தார்கள்.

''இப்போ நாம் இந்தியாவுக்கான பகுதியில் இருக்கிறோம். எதிரே தெரியுதே கட்டடம் அதுதான் அன்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையமான மைத்ரி. முதன் முதலில் 1982-ல் இந்திய ஆராய்ச்சிக் குழு அன்டார்டிகாவுக்கு வந்தது. இப்படி ஆண்டுதோறும் ஒரு குழு இங்கே வரும். முதலில் தட்சிண் கங்கோத்ரி என்ற பெயரில் தற்காலிக ஆராய்ச்சி மையம் ஆரம்பித்தார்கள். பிறகு 1988-ல் இந்த மைத்ரி உருவானது. இந்தியாவில் இருந்து வருகிற ஆராய்ச்சியாளர்கள் இங்கேதான் தங்குவார்கள்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இங்கே புல், பூண்டுகூடக் கிடையாதே, சாப்பாட்டுக்கு என்ன செய்வாங்க டீச்சர்?'' என்று கேட்டாள் தீபா.

''விண்வெளிக்குப் போகிற மாதிரிதான். ஆறு மாசம், ஒரு வருஷம்னு தேவையான பதப்படுத்தின உணவுகளோடு வந்துடுவாங்க. அவற்றை மைனஸ் 20 டிகிரி அறைகளில் சேமித்துவைத்துச் சாப்பிடுவார்கள்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களை ஆராய்ச்சி நிலையத்தின் உள்ளே அழைத்துச் சென்றது. ''இங்கே பெருசா ஒண்ணும் இல்லையே'' என்று முணுமுணுத்தான் பிரசாந்த்.

''அதான் சொன்னேனே புவியின் அமைப்பு மற்றும் உயிரியல் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மட்டுமே இங்கே நடக்கும். அதனால், நாம் வெளியே போய் ரவுண்ட் அடிக்கலாம்'' என்றார் டீச்சர்.

அவர்கள் வெளியே வந்ததும் சுரேகா திடீரெனக் கேட்டாள் ''டீச்சர், இங்கே மழை பெய்யுமா?''

''நல்ல கேள்வி சுரேகா. நமக்கு மழை என்பது நீர்த்துளிகள் தரைக்கு வருவது. அப்படிப் பார்த்தால், இங்கே எப்பவுமே மழை கிடையாது. ஏன்னா, இது மிகுந்த குளிர்ப் பிரதேசம் என்பதால், வானில் இருந்து வரும் நீர்த்துளிகள் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு வந்ததும் பனியாக மாறிவிடும். அதனால் இங்கே எப்பவும் பனி மழைதான். நமக்கு நிலப்பரப்பு என்பது மண். இங்கே பனி. ஆறு என்பது பனி ஆறு. இப்படி எல்லாமே இங்கே பனிதான். சுருக்கமாகச் சொல்லணும்னா அன்டார்டிகா ஒரு பனிப் பாலைவனம். பாலைவனத்தில் எப்படிப் பயங்கரமான புயல் வீசுமோ, அப்படி இங்கேயும் அடிக்கடி பனிப் புயல் வீசும். அந்தச் சமயத்தில் ரொம்பவும் பாதுகாப்பாக இருக்கணும்'' என்றார் டீச்சர்.

''ஆனா, இங்கே 70 சதவிகிதம் நன்னீர் இருக்கிறதாச் சொன்னீங்களே'' என்றான் பிரசாந்த்.

''இருக்கே. இப்போ எல்லோரும் அமைதியாக உங்கள் முழுக் கவனத்தையும் பாதங்களுக்குக் கொண்டுபோங்க'' என்றார் டீச்சர்.

சில நிமிடங்கள் அமைதியாகக் கழிந்தன. ''டீச்சர், நாம இருக்கிற இந்த இடம் நகருது'' என்றான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''கரெக்ட், இப்போ நாம் இருக்கிறது ஒரு கிளேசியர் மீது. மழை பனியாகப் பொழியுது என்று சொன்னேன் இல்லியா? தொடர்ச்சியாகப் பெய்யும் பனி, தரையில் பல அடுக்குகளாக படியும். இந்த அடுக்கு கிட்டத்தட்ட 20 மீட்டர் அளவுக்கு ஆனதும் நகர ஆரம்பிக்கும். இதை கிளேசியர் என்பார்கள். இதுவே மிகவும் தூய்மையான நன்னீர்கொண்ட பனி ஆறு. இந்தப் பனி ஆறு மெள்ள மெள்ள நகர்ந்து கடலை நோக்கிப்போகும்'' என்றார் டீச்சர்.

அவர்களைச் சுமந்துவந்த கிளேசியர் கடலை நெருங்கியதும் அவர்கள் கரையில் இறங்கிவிட்டார்கள். அந்த கிளேசியர் நகர்ந்து கடலுக்குள் சென்றது. அங்கே ஏற்கெனவே சில கிளேசியர்கள் மிதந்துகொண்டு இருந்தன. ''ஆகா... பாறை மாதிரி இருக்குதே'' என்று வாயைப் பிளந்தாள் சுரேகா.

''சில பிரமாண்டமான கிளேசியர்கள் மாதக் கணக்கில் கரையாமல் இப்படியே இருக்கும். கப்பலில் வருபவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.'' என்று டீச்சர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ஒரு பெரிய திமிங்கலம் கடலுக்கு மேல் டைவ் அடித்து மீண்டும் உள்ளே மறைந்தது.

''இங்கேயும் திமிங்கிலம் இருக்கா டீச்சர்? இவ்வளவு குளிரான தண்ணீரில் எப்படித் தாக்குப் பிடிக்குது?'' என்று கேட்டாள் தீபா.

''திமிங்கிலம் உட்பட 200 வகையான மீன்கள் இருக்கு தீபா. இந்தச் சூழலுக்கு ஏற்றபடி அவற்றின் உடல் அமைப்பும் இருக்கு. இங்கே வாழ்கிற உயிரினங்கள் மிகவும் குறைவு. அதற்கு ஏற்றப்படி அவற்றின் உணவுச் சங்கிலி இருக்கு. கடலை ஒட்டி வளரும் சில வகைப் பாசிகள், ப்ளாங்க்டன் எனப்படும் செடிகளை கிரில்கள் எனப்படும் இறால் போன்ற ஓர் உயிரி சாப்பிடும். இந்த கிரில்களைச் சிறிய மீன்களும், பெங்குவின்களும் சாப்பிடும். திமிங்கிலமோ, சிறிய மீன்களையும் சில சமயம் கரைக்கு வந்து பெங்குவின்களையும் பிடிச்சுச் சாப்பிடும். இதைத் தவிர சீல்கள், சில பறவை இனங்களும் இங்கே உண்டு. அவையும் கிரில், சிறிய மீன்களைச் சாப்பிடும்'' என்றார் டீச்சர்.

பெங்குவின் என்ற வார்த்தையைக் கேட்டதும் சுட்டிகள் முகத்தில் மலர்ச்சி. ''டீச்சர்... டீச்சர்... பெங்குவின்களைப் பார்க்கணுமே'' என்று குதித்தார்கள்.

மந்திரக் கம்பளம் அவர்களைப் பெங்குவின்கள் இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றது. ''உலகில் உள்ள 17 வகை பெங்குவின்களில் ஏழு அன்டார்டிகாவின் சுற்றுப் பகுதிகளில் இருக்கு. எம்பரர், ராக் ஷப்பர், அடிலை என ஒவ்வொன்றும் தனி அழகு'' என்றார் டீச்சர்.

அவர்கள் பெங்குவின் கூட்டத்துக்கு மத்தியில் ஜாலியாகச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ''சரி, போதும் கிளம்பலாம்'' என்பது போல மந்திரக் கம்பளம் அவர்களை வாரிச் சுருட்டிக்கொண்டு வானில் பறந்தது.

அவர்களுக்கு 'டாட்டா’ காட்டுவது போல் எல்லாப் பெங்குவின்களும் ஒரே சமயத்தில் தரையில் இருந்து ஒரு தாவு தாவி சப்தம் எழுப்பின.