கே.யுவராஜன்,ஹரன்
##~## |
''வாவ்... இந்த இடம் சூப்பரா இருக்கு'' என்று உற்சாகத்துடன் கத்தினான் பிரசாந்த்.
அது, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஏரிக்கரைப் பகுதி. அவர்கள் மாயா டீச்சருடன் காரில் பிக்னிக் வந்து இருந்தார்கள். ஏரியை ஒட்டிய புல்வெளி. சுற்றிலும் மரங்கள், தூரத்தில் தெரியும் வயல்வெளி, சிலுசிலு காற்று என ரம்மியமாக இருந்தது அந்த இடம். காரைவிட்டு இறங்கியதுமே நான்கு பேரும் ஏரியை நோக்கி ஓடினார்கள்.
''ஏய் பசங்களா... முதல்ல எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. அப்புறம் விளையாடலாம்'’ என்றார் மாயா டீச்சர்.
காரில் இருந்து தரைவிரிப்பை எடுத்துவந்து புல்வெளியில் விரித்தார்கள். உணவுப் பொருள்கள் அடங்கிய கூடை, கிரிக்கெட் மட்டை, ஷட்டில்காக் போன்ற விளையாட்டுப் பொருள்களையும் வெளியே எடுத்தார்கள்.
''10 நிமிடம் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் விளையாடலாம்'' என்ற டீச்சர், தரைவிரிப்பில் அமர்ந்துகொண்டார். சுட்டிகள் வட்டமாக அமர்ந்துகொள்ள, பிரெட் துண்டுகளை எடுத்து ஜாம் தடவி, ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
''ஹேய்... அங்கே பாருங்க தட்டான்பூச்சிகள்'' என்று உற்சாகத்துடன் குரல்கொடுத்தாள் சுரேகா.

எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். ஏரியை ஒட்டிய புல்வெளிக்கு மேல் தட்டான்பூச்சிகள் கூட்டமாகப் பறந்துகொண்டு இருந்தன. ''இதுவரை போட்டோவில் மட்டுமே பார்த்தது. இப்பத்தான் நேரில் பார்க்கிறேன்'' என்ற பரத், அந்த இடத்தை நோக்கி ஓட, மற்றவர்களும் பின்னாடியே ஓடினார்கள்.
இவர்கள் அங்கே செல்வதற்குள் தட்டான்பூச்சிகள் ஏரியைக் கடந்து, தூரத்தில் தெரிந்த வயல்வெளியை நெருங்கி இருந்தன. ''அடேங்கப்பா... இவ்வளவு லேசான உடம்பையும் சிறகுகளையும் வெச்சுக்கிட்டு எவ்வளவு வேகமாகப் போகுது'' என்றான் பரத்.
''இந்த வேகத்துக்குக் காரணமே பேப்பர் மாதிரியான மெல்லிய இறக்கைகள்தான். தும்பிகளுக்கு நான்கு இறக்கைகள். பறக்கும் திறன் மணிக்கு 70 கிலோ மீட்டர். ஏதாவது ஆபத்துனா, 100 கிலோ மீட்டர் தூரம்கூடப் போகுமாம். அதோடு, பின்னோக்கியும் பறக்கும். அந்தரத்தில் அசையாமல் நிற்கவும் முடியும்.'' என்றார் டீச்சர்.
''தும்பி, தட்டான்பூச்சி... எது டீச்சர் சரியான தமிழ்ச் சொல்?'' என்று கேட்டாள் தீபா.

''ரெண்டுமே தமிழ்ச் சொல்தான் தீபா. தும்பிங்கிறது இலங்கைத் தமிழ்ச் சொல். தட்டானின் அறிவியல் பெயர் அனிசோப்டெரா (Anisoptera). இது கிரேக்கச் சொல். இதற்கு சீரில்லாத இறக்கைகள்கொண்டவை என்று பொருள். தட்டான்களின் முன் இறக்கைகளைவிடப் பின் இறக்கைகள் சற்றே அகலமாக இருக்கும். இவை, பல் இருக்கின்ற பூச்சி வகையான ஓடோனட்டா (Odonata) என்ற பிரிவைச் சேர்ந்தவை'' என்றார் டீச்சர்.
''அடடா... இதுங்களுக்கும் பல் இருக்கா? அப்போ, நாம கொண்டுவந்த முறுக்கு, சீடையைக் கொடுக்கலாம்'' என்று கிண்டலாகச் சொன்னான் பிரசாந்த்.
''கொடுத்துப் பாரேன். 'யாருக்கு வேணும் உன்னோட முறுக்கும் சீடையும்’னு கண்டுக்காமப் போயிரும். ஏன்னா, தட்டான்கள் அசைவப் பிரியர்கள். கொசு, ஈ போன்ற சின்னச் சின்னப் பூச்சிகள்தான் இவற்றின் ஃபேவரிட் டிஷ்.'' என்றார் டீச்சர்.

அப்போது தண்ணீரில் குளித்துவிட்டு எழுந்ததைப் போல், ஏரித் தண்ணீரை ஒட்டிய புல்வெளியில் இருந்து இன்னொரு தட்டான் கூட்டம் கிளம்பியது. '’டீச்சர்... டீச்சர்... இந்தக் கூட்டத்தோடு நாமும் போகலாமே'' என்று குதித்தாள் சுரேகா.
தலையாட்டிய டீச்சர், மந்திரக் கம்பளத்தின் உதவியால் அவர்களைத் தட்டான்களாக மாற்றினார். ஏரியின் மேல் சென்றுகொண்டு இருந்த அந்த தட்டான் கூட்டத்தை நெருங்கினார்கள். '’ஆகா... இவை ஊசித்தட்டான்கள்'' என்றார் டீச்சர்.
''அது என்ன ஊசித்தட்டான்கள்?'' என்று கேட்டாள் தீபா.
''தட்டான்களில் 6,000 வகைகள் இருக்கு. அவற்றைப் பொதுவாக தட்டான், ஊசித்தட்டான் என ரெண்டு விதமாகப் பிரிக்கலாம். சாதாரணத் தட்டானைவிட, ஊசித்தட்டான்களின் உடல் இன்னும் மெல்லியதாக, குச்சி மாதிரி இருக்கும். இவற்றைச் சைகோப்டெரா (Zygoptera) என்பார்கள். இதற்கு சீரான இறக்கைகள் என்று பொருள். இவற்றின் நான்கு இறக்கைகளுமே சீராக இருக்கும். தட்டான்பூச்சிகள் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே இருக்கு. இது 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடியே தோன்றிய பூச்சி இனம்.'' என்றார் டீச்சர்.
ஒரு ஊசித்தட்டான் அமர்ந்து இருந்த சிறிய கிளையை நெருங்கிய சுட்டிகள், அங்கே அமர்ந்துகொண்டார்கள். அதை உற்றுநோக்கிய பரத் ''டீச்சர், இதுக்கு இருக்கிறது கூட்டுக்கண்களா?'' என்று கேட்டான்.
''ஆமாம் பரத், தட்டான்பூச்சியின் உடலைத் தலைப் பகுதி, நெஞ்சுப் பகுதி, உடல் பகுதி என மூன்று பாகங்களாகப் பிரிப்பார்கள். தலைப் பகுதியில் இரண்டு பெரிய கூட்டுக்கண்கள், வாய், தலைக்கு மேல் இரண்டு உணர்வு இழைகள் இருக்கும். பறப்பது மாதிரியே பார்வைத் திறனிலும் தட்டானை அடிச்சுக்க முடியாது. ஆறு மீட்டர் தூரத்தில் ஒரு கொசு அசைந்தாலும் தெளிவாகத் தெரிஞ்சுரும். அப்புறம் என்ன? அதுதான் அந்தக் கொசுவின் கடைசி அசைவாக இருக்கும். நெஞ்சுப் பகுதி நான்கு இறக்கைகளும், ஆறு கால்களும் இணையும் இடமாக இருக்கு. இரையை நோக்கிப் பறக்கும்போதே, இந்த ஆறு கால்களையும் ஒன்றாகக் குவிச்சுக் கூடை மாதிரி செய்துக்கும். கிரிக்கெட்டில் பீல்டர் ஓடிவந்து பந்தை கேட்ச் பண்ற மாதிரி, இரையைக் கால்களுக்கு இடையில் கேட்ச் பண்ணிரும். உடல் பகுதியில் வயிறு மற்றும் இனப்பெருக்க உறுப்பு போன்றவை இருக்கு. ஒரு பெண் தட்டான்பூச்சி ஒரே சமயத்தில் 1,000 முட்டைகள் வரை இடும். பெரும்பாலும் நீருக்குள்ளே முட்டைகளை இடும். அல்லது நீர்நிலையை ஒட்டிய ஈரமான மண் பகுதியில் முட்டைகளை இடும். வாங்க, தட்டானின் முட்டைகளைப் பார்க்கலாம்'’ என்றார் டீச்சர்.

அவர்கள் மீண்டும் ஏரிப் பகுதிக்குப் பறந்துவந்தார்கள். தண்ணீர் நிறைந்த ஒரு புதருக்குள் நுழைந்தார்கள். அங்கே சிறிய கற்கள் மற்றும் புற்கள் மேல் கடுகைவிடச் சிறிய அளவில் முட்டைகள் இருந்தன. ''இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இந்த முட்டைகள் 15 நாளிலேயே பொரிந்துவிடும். ஆனால், குளிர்நாடுகளில் மாதக் கணக்கில் ஆகும். முட்டைகள் பொரிந்து வெளியேவரும் புழுக்களுக்கு இறக்கைகள் இருக்காது. ஆனால், கண் பார்வை தெளிவாக இருக்கும். அதன்மூலம் இங்கே இருக்கிற சிறுசிறு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும். அந்தச் சமயத்தில் சுமார் 15 முறை தோலுரிக்கும். பிறகு, இவற்றுக்கு இறக்கைகள் முளைக்கும். இப்படியே ஒரு தட்டானின் வாழ்க்கை பெரும்பாலும் நீரிலேயே கழியும். தட்டான்களின் வகையைப் பொருத்து ஓர் ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை நீரில் இருக்கும். முழுமையாக வளர்ச்சி அடைந்து வெளியே வரும் தட்டான்கள், ஒரு சில மாதங்களே இருக்கும். பிறகு, அவற்றின் ஆயுள் முடிஞ்சுரும்.'' என்றார் டீச்சர்.
''பட்டாம்பூச்சி மாதிரினு சொல்லுங்க'' என்றான் பிரசாந்த்.
''அதேதான். பட்டாம்பூச்சிகளுக்கு வண்ணமயமான இறக்கைகள் அழகு என்றால், தட்டான்களுக்கு உடல் அழகு. ஒவ்வொன்றும் ஒரு வண்ணத்தில் இருக்கும். அது மட்டுமா? ஒரே வகையில் ஆண் தட்டானின் உடல் ஒரு வண்ணத்திலும், பெண் தட்டானின் உடல் முற்றிலும் வேறு வண்ணத்திலும் இருக்கும். கொசு, ஈ மாதிரி பட்டாம்பூச்சிகளும் தட்டானின் முக்கியமான உணவுதான். ஒரு பட்டாம்பூச்சி கிடைச்சா, தட்டானுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி.'' என்றார் டீச்சர்.
''தட்டான்கள் பல வண்ணங்களில் இருக்குமா? அதில் கொஞ்சமாவது பார்க்கணுமே'' என்றார்கள் நான்கு பேரும் கோரஸாக.
''சரிதான்... இன்னிக்குப் பிக்னிக் இப்படியே கழிஞ்சுரும் போலிருக்கே'' என்ற மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தை விரட்டினார்.
அது அவர்களைப் பல்வேறு நாடுகளுக்கும் அழைத்துச் சென்றது. ''ஜிங்குச்சா... ஜிங்குச்சா... சிவப்புக் கலர் ஜிங்குச்சா... மஞ்சள் கலர் ஜிங்குச்சா... பச்சைக் கலர் ஜிங்குச்சா'' எனப் பாடியவாறே பல வண்ணத் தட்டான்களைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள்.