ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா
##~## |
அவனுக்கு வெங்கட்ராம் என்று பெயர் வைத்தார்கள். ஆனால், எல்லோரும் ராமன் என்றே அழைத்தார்கள். ராமன் பிறந்தது திருச்சியில் இருக்கும் திருவானைக்காவல். அப்பாவின் பெயர், சந்திரசேகர். அவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அம்மா, சப்தரிஷி பார்வதி. ராமனையும் சேர்த்து வீட்டில் ஐந்து குழந்தைகள். அதில் ராமன் இரண்டாவது பிள்ளை.
ராமனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அம்மாவோடு அவர்கள் விசாகப்பட்டினத்துக்கு மாறினார்கள். மற்ற பிள்ளைகள்போல் இருக்காமல், ராமன் எப்போதும் அம்மாவோடு ஒட்டிக்கொண்டு, ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு நச்சரிப்பான்.
ஒளி மற்றும் ஒலி ஆகியன பற்றியே திரும்பத் திரும்ப அவனது கவனம் சுழன்றது. விசாகப்பட்டினத்தில் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது என்ன செய்தான் தெரியுமா? நல்லெண்ணெய், கடலை எண்ணெய், மண்ணெண்ணெய் என விதவிதமான எண்ணெய்களை வாங்கிவந்து அவற்றில் ஏற்றும் விளக்கின் சுடரில் வித்தியாசம் இருக்குமா என்று ஆராய்ச்சி செய்தான்.
அம்மா ஆடிப்போனார். ''டேய் நெருப்புடா'' என்று பதறினார். அதற்கு அவன் கவலைப்பட்டால்தானே!
அடிக்கடி முகம் பார்க்கும் கண்ணாடி காணாமல் போய்விடும். எங்கே எனத் தேடினால், தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் சூரிய ஒளியைக் கண்ணாடியில் எதிரொளிக்கவைத்துப் பல வகை அறிவியல் விளையாட்டுகளை ராமன் விளையாடிக்கொண்டு இருப்பான். எப்போதும் அவனைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.

ஒரு நாள் சாதாரணக் கண்ணாடி மற்றும் ரசம் பூசப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடி ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து வைத்து ஒளி எதிரொளிப்பு, ஒளி ஊடுருவல், இரண்டையும் ஒப்பிட்டு விளையாடினான். அப்போது முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்துவிட்டான். அம்மா கடுமையாகத் திட்டினார்.
'இனி எந்தப் பொருளையும் தொடக் கூடாது’ என்று வீட்டில் உத்தரவுபோட்டார்கள். ஆனால், சும்மா விடுவானா ராமன்? அன்று மாலையே மொட்டை மாடியில் அதேபோல் அவனைச் சுற்றிலும் கூட்டம். மாலை நேரச் சூரிய ஒளியில் கை, கால்களை அசைத்து விதவிதமான நிழல்களைத் தோற்றுவித்தான். அடுத்து, ஒளி பற்றிய ஆராய்ச்சி அங்கே நடந்துகொண்டு இருந்தது. 'மதியம் நிழல்’ என்பான் ராமன். உடனே எல்லோரும் 'குட்டை’ என்பார்கள். யாராவது மாற்றிச் சொன்னால் அவுட். 'காலை நிழல்’ என்றால், 'மேற்கு’. 'மாலை நிழல்’ என்றால், 'கிழக்கு’ என நிழல் விழும் திசையைச் சொல்ல வேண்டும். இப்படி விளையாட்டும் அறிவியலுமாக மிளிர்ந்தான் ராமன்.
அவனது அறிவுப் பசிக்கு தீனிபோடுவது யானைக்குத் தீனி போடுவதைவிடவும் கஷ்டமாக இருந்தது. அப்பா, சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் பேராசிரியர் ஆனார். மிக வேகமாக பள்ளிப் படிப்பைப் பத்தே வயதில் முடித்தான் ராமன். இதற்கே அசந்துவிட்டால் எப்படி?
11 வயதில் கல்லூரி சென்ற ராமன், 13 வயதில் இயற்பியலில், பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேறித் தங்கப்பதக்கம் பெற்றான். அவனோடு படித்த (21 வயது தாண்டிய) 'அண்ணன்கள்’ எல்லாம் உறைந்துபோனார்கள்.
எதிர்காலத்தில் சர்.சிவி.ராமனாக இந்தியாவுக்கான முதல் அறிவியல் நோபல் பரிசைத் தட்டிவருவதற்கான அனைத்து அம்சங்களோடும் விளங்கினான் ராமன்.
ஆதாரம்:
Journey in to the light (Life and Science of C.V.Raman) -
G.Venkataraman