Published:Updated:

டியர் டீச்சர் குட் ஸ்டூடன்ட் !

கே.அபிநயா, க.அருண்குமார்,வீ.சிவக்குமார், செ.சிவபாலன்

டியர் டீச்சர் குட் ஸ்டூடன்ட் !
##~##

''ம்மா மாதிரி அக்கறையாப் பார்த்துப்பாங்க... இது போதாதா எங்க டெய்சி ஜெனட் டீச்சரை எங்களுக்குப் பிடிக்க?'' என்று கேள்வியோடு புகழாரம் சூட்டுகிறார்கள், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்...

இ.யோகேஸ்வரி: ''ஒரு நாள் நான் மயில் படம் வரைந்து, அதில் மயில் இறகுகளை ஒட்டி டீச்சர்கிட்ட காண்பிச்சேன். 'நல்லா இருக்கு’னு பாராட்டினாங்க. மறுநாள் எனக்கு ஒரு பேனா பரிசாக வாங்கிட்டு வந்து எல்லார் முன்னாடியும் கொடுத்தாங்க. அப்ப எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.''

சு.தினகரன்: ''எனக்குத் திருக்குறள் மனப்பாடம் செய்ய ரொம்பவே கஷ்டமா இருக்கும். டெய்சி டீச்சர் இசையோட ஒரு பாடலாக திருக்குறளைத் சொல்லித்தந்தாங்க. இப்போ எந்தத் திருக்குறளைக் கேட்டாலும் நான் உடனே சொல்வேன்.''

ம.தனலட்சுமி: ''டெய்சி டீச்சர் நிறையக் கதைகள் சொல்வாங்க. பாட்டுப் பாடிக்கிட்டே டான்ஸ் ஆடிக்கிட்டே பாடம் நடத்துவாங்க. எங்களையும் பாடவைப்பாங்க. எந்தப் பாடம் நடத்தினாலும், நிறைய எடுத்துகாட்டுகளைச் சொல்வாங்க. அதனால், பாடத்தைக் கவனிக்க ஆர்வமா இருக்கும்.''

ப.சினேகா: ''கம்ப்யூட்டரில் நிறைய விஷயங்கள் சொல்லித்தருவாங்க. எல்.சி.டி. வைத்துப் பாடம் நடத்துவாங்க. எவ்வளவு சந்தேகம் கேட்டாலும் சளைக்காமல், பொறுமையா விளக்குவாங்க. நாங்க பயங்கர சேட்டை பண்ணினாலும் கோபப்படவே மாட்டாங்க. அவங்க அன்பா சொல்றதைக் கேட்டாலே, எந்த மாணவனும் திருந்திடுவான்.''

லே.வினோத்: ''ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்த எனக்கு ஜுரம் வந்துடுச்சு. அப்போ டெய்ஸி டீச்சர் என் அம்மாபோல் என்னைப் பார்த்துக்கிட்டங்க. நமக்குக் கிடைக்கிற பணத்தை சேமிக்கணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. எப்படிச் சேமிக்கணும்னும் சொல்லித் தந்தாங்க. நான் 100 ரூபாய் சேமித்தேன். என் வீட்ல என்னை ரொம்பவே பாராட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இந்த மாதிரி நல்ல பழக்கங்களுக்குக் காரணம், டெய்ஸி டீச்சர்தான்.''

டியர் டீச்சர் குட் ஸ்டூடன்ட் !

தன் திறமைகளாலும், நல்ல பண்புகளாலும் ஆசிரியர்கள் அனைவரையும் அசத்தி வருகிறான் அருண்பாண்டியன். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் அருண் பற்றி அவனது ஆசிரியர்கள் சொல்கிறார்கள்...

ரோகினி பாரதி (ஆங்கில ஆசிரியை): ''பொதுவா, கடைசி பெஞ்ச் மாணவன் எனச் சொன்னாலே வால்பையன் என்று நினைக்கத் தோணும். அந்த வரையறைகளைத் தகர்த்தவர்களில் இவனும் ஒருவன். இந்த வருடம்தான் பள்ளியில் சேர்ந்தான். ஆனால்,  பல வருடம் பழகியவன் போல் மற்ற மாணவர்களுடன் நட்போடு பழகுவான். ஆங்கிலத்தில் நல்லாப் பேசுவான். மத்தவங்களையும் தயக்கம் இல்லாமல் பேசுவதற்கு ஊக்குவிப்பான்.''

ஜெயகீதா (சமூக அறிவியல் ஆசிரியை): ''எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உள்ளவன். ஒரு மாணவனுக்கு சரியாகத் தமிழ் எழுதவராது. திடீர்னு பார்த்தா, அவன் எல்லாம் டெஸ்ட்லேயும் நல்ல மார்க் வாங்கினான். அவனுக்கு அருண்பாண்டியன் படிக்க உதவி இருக்கான்னு அப்புறம்தான் தெரிஞ்சது. ஆசிரியரைப் போலவே சொல்லிக் கொடுக்கும் திறமை அவனுக்கு இருக்கு.''  

பானு (கணித ஆசிரியை): ''கணக்குப் பாடம் நடத்தும்போது, நிறைய சந்தேகம் கேட்பான். அவனைப் பார்த்து மத்தவங்களும் அடிக்கடி தங்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினாங்க. இதனால், வகுப்பில் தயக்கம் இல்லாமல் தங்களோட சந்தேகங் களைக் கேட்கும் நல்ல விஷயம் தொடருது. இதுக்காவே அருண்பாண்டியனை எனக்கு ஸ்பெஷலாப் பிடிக்கும்.''

அனிதா ராணி (அறிவியல் ஆசிரியை): ''பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் அருண்பாண்டியன் செய்துவந்த பாக்டீரியாவின் மாடல் 'ஹைலைட்’. அந்த மாடலுக்கு அவன் கொடுத்த விளக்கம் அவ்வளவு அருமையாக இருந்தது. மற்ற மாணவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கான். யாராவது தவறு செய்தால், அதைச் சுட்டிக்காட்டும் பண்பும் அவனிடம் இருக்கு.''

நடேசன் (தலைமை ஆசிரியர் - பொறுப்பு): ''அருண்பாண்டியன் மேடை ஏறினால் அவ்வளவு கரகோஷம் கிடைக்கும். அவனுடைய பேச்சு மற்ற மாணவர்களுக்கு இனிப்பு. அவ்வளவு அழகாய்த் தமிழை உச்சரிப்பான். படிப்பு, ஒழுக்கம், பழக்க வழக்கம் என எல்லாவற்றிலும் தலைசிறந்த மாணவன் அவன்.''