ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா
##~## |
ஆக்னஸ் போன்ஷா பொஜாஷியு என்பது அந்தச் சிறுமியின் பெயர். அதற்கு அல்பேனிய மொழியில் 'ரோஜா மொட்டு’ என்று அர்த்தம். அவளது அப்பா பெயர், நிக்கோ லாய் பொஜாஷியு. அம்மா பெயர், டிரானபைல் பெர்மய். இப்போது மாசிடோனியாவின் தலைநகராக இருக்கும் ஸ்கோப்ஜே அவள் பிறந்த ஊர். அப்பா, அந்த ஊரின் அரசியல் தலைவர்களில் ஒருவர். ஆனாலும் ஏழ்மையான குடும்பம். ஆக்னஸையும் அவளது சகோதரியையும் காப்பாற்ற, அம்மா தேவாலயத்தைத் தூய்மை செய்யும் தாதி வேலை செய்தார்.
குட்டி ஆக்னஸுக்கு அப்போது மூன்றரை வயது. அம்மாவோடு அவர் வேலை பார்த்த சர்ச்சுக்கு அவளும் செல்வாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. பிரார்த்தனைக் கூட்டம் நடத்திக்கொண்டு இருந்த தேவாலயப் பாதிரியார், பைபிளில் இருந்து ஒரு குறிப்பிட்ட பக்கத்தை வாசித்துக்கொண்டு இருந்தார். அது மிகவும் பழைய பைபிளாக இருந்ததால், பக்கங்கள் கிழிந்து இருந்தன. எனவே, விரைந்து வாசிக்க முடியாமல் அந்தப் பாதிரியார் திணறினார். அப்போது, ஒரு மழலைக் குரல் மீதி வாக்கியத்தைச் சொன்னது. எல்லோரும் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தார்கள். அங்கே புன்னகையுடன் ஆக்னஸ் நின்று இருந்தாள். கேள்வி ஞானத்தின் மூலமே பைபிளின் பல பக்கங்களை அந்த வயதிலேயே மனதில் பதியவைத்து இருந்தாள்.
அவளுக்கு ஆறு வயதாக இருக்கும்போது ஒரு நாள், ஒரு கூட்டத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவளது தந்தைக்குப் பெரிய அதிர்ச்சி. ஆக்னஸைக் காணவில்லை. தான் ஊர்வலமாகச் சென்ற பாதைக்கே திரும்பிச்சென்று தேடினார். ஓர் இருட்டுச் சந்தில் ஆக்னஸைக் கண்டுபிடித்தார். அங்கே கண்ட காட்சி அவரை உலுக்கியது. கை, கால்களில் காயம்பட்டு ரத்தம் வழிய, வலியில் துடித்த ஒரு மூதாட்டிக்கு தனது ஃப்ராக்கைக் கிழித்து, கட்டுகளைப் போட்டுக்கொண்டு இருந்தாள் ஆக்னஸ். ''இந்தப் பாட்டியம்மா ரொம்பப் பாவம்ப்பா, இவங்களுக்கு யாருமே இல்லை'' என்றாள். தனது மகளை வாரி அணைத்துக்கொண்டார் அப்பா. அந்த மூதாட்டியை ஒரு பொது மருத்துவமனையில் சேர்த்தார்கள்.


ஆக்னஸுக்கு எட்டு வயதாக இருக்கும்போது அவளது அப்பா இறந்துவிட்டார். அது அவளைப் பெரிய அளவில் பாதித்தது. ஆக்னஸின் தாயைச் சந்திக்க இந்தியாவின் வங்காளத்தில் இருந்து வந்த உறவுக்காரர் சிலர் மூலம், ஆக்னஸ் இந்தியாவில் நடக்கும் விதவிதமான விஷயங்களைப் பற்றி அறிந்தாள். அது அவளுக்கு நிறைய ஆர்வத்தை ஊட்டியது.
அடுத்த வருடம் அவர்களோடு லெட்டிஸ் எனும் ஊரில் இருக்கும் கருத்த மெடொன்னா அன்னை தேவாலயத்துக்கு புனிதப் பயணம் சென்றாள். வழி முழுதும் ஏழைகளின் அவல வாழ்வைக் கண்டு அவர்களோடு ஒருவராகப் பல உதவிகள் செய்தபடி ஒவ்வொரு வருடமும் புனித யாத்திரை மேற்கொண்டாள்.நிரந்தர உதவி இல்லம் ஒன்றைத் தன் வீட்டில் ஆக்னஸ் அமைத்தபோது அவளுக்கு வயது ஒன்பது.
பிற்காலத்தில் அன்னை தெரசாவாக இந்திய மண்ணில் நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் சேவைகள் செய்து, தன் வாழ்வையே அர்பணித்தாள் ஆக்னஸ்.
ஆதாரம்: Mother Teresa
(World Leaders Past and Present)
-Joan Graff Clucas