கோ.ரமேஷ் ச.ரா.ஸ்ரீதர் முத்து
##~## |
நினைவாற்றல் குறைவதற்கும் மறதி என்கிற குறைபாடு ஏற்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு விஷயம், தெரியாமலேயே இருப்பது ஒரு விதம். தெரிந்த விஷயமே சமயத்தில் நினைவுக்கு வராமல்போய்விடுவது இன்னொரு விதம். இதில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது இரண்டாவது விதத்தில்தான். பரீட்சை ஹாலில் கேள்வித்தாளைப் பார்த்ததும், 'தொண்டையில் இருக்கிறது, வாயில் வரலை’ என்கிற நிலைதான்.
பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதாலும், புரிந்துகொண்டு ஓரிரு முறை எழுதிப் பார்ப்பதாலும் அது நம் மனதில் ஆழமாகப் பதியும். அதைத் தவிர, அன்றாடத் தேவைகளிலேயே நம் நினைவாற்றலைப் பெருக்கிக்கொள்ள சில உபாயங்களைப் பார்ப்போம்.
இது மின்னணுக் காலகட்டம். நமக்குத் தேவையான முக்கியமான விஷயங்களை கணினியிலோ, செல்பேசியிலோ பதிவு செய்துவிடுகிறோம். ஏதேனும் காரணத்தால் மேலே சொன்ன கருவிகள் பழுது அடைந்துவிட்டால், திண்டாடிப் போகிறோம்.
கருவிகளை முழுமையாகச் சார்ந்து இருப்பதன் கோளாறு இதுதான். இயல்பாக நம் மூளைக்கு இருக்கும் திறனைப் பயன்படுத்தத் தவறிவிடுகிறோம். அறிவியல் கருவிகளைப் பயன்படுத்துவதோடு, அறிவையும் பயன்படுத்தி, நம் நினைவாற்றலைப் பெருக்கிக்கொள்ள முடியும். இது, பல இலக்கங்கள் உள்ள நீண்ட எண்களையும் கஷ்டமான ஸ்பெல்லிங் உள்ள வார்த்தைகளையும் நினைவில் இருத்தப் பொருத்தமான முறை.
உதாரணமாக, 583738717 என்கிற எண்ணை எளிதாக 583, 738, 717 என்றோ 58, 37, 38, 717என்றோ பிரித்துக் கொள்ளலாம்.
Mathematics என்கிற வார்த்தையை mat + he + mat + ics என்றும் important என்கிற வார்த்தையை im + port + ant என்று சின்னச் சின்ன வார்த்தைகளாகப் பிரித்துப் பாருங்கள். மறக்காது. எழுதும்போது குழப்பமும் வராது.

ஓசை நயமும் உதவும்!
உங்கள் வீட்டின் குட்டிப் பையன், சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் மறந்துவிடுவான். ஆனால், 'என் உச்சி மண்டையிலே சுர்ருங்குது’ என்கிற பாடலை முழு நீளமாகப் பாடுவான். இது எப்படி? அதுதான் ஓசை நயத்தின் சிறப்பு. பாடல்களையும் தாளத்தையும் நினைவில்வைக்க செவிப்புலனால் சாத்தியப் படும். இதைத்தான் 'கற்றலிற் கேட்டல் நன்று’ என்றும், 'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்றும் சொல்வார்கள். எந்த மாதத்துக்கு எத்தனை நாட்கள் என்று நினைவில்கொள்வதற்கு ஆங்கிலத்தில் ஒரு குட்டிப் பாட்டு உண்டு...
Thirty days haveth September
April, June and November
All the rest have thirty-one
February has twenty-eight alone
Except in leap year, then the time
When Febs days are twenty-nine.
நீங்களும் உங்கள் பாடங்களுக்கு இதுபோன்ற பாட்டுக்களை உருவாக்குங்கள். உங்கள் படைப்பாற்றல் ஊக்கம் பெறவும் இது உதவும்.
தூக்க நேர மனனம்!
நீங்கள் ஞாபகம்வைக்க வேண்டியவற்றைத் தூங்கப்போவதற்கு சற்று நேரத்துக்கு முன்னால், மனதில் சொல்லிச் சொல்லிப் பாருங்கள். அதைத் தொடர்ந்து, நீங்கள் தூங்கும்போது உங்கள் மூளையானது நீங்கள் கொடுத்த தகவல்களைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்தி நினைவில்வைக்கும். உளவியல் நிபுணர்கள் இன்னொன்றையும் அடித்துச் சொல்கிறார்கள். உங்கள் பிரச்னை ஒன்றை நினைத்தபடி நீங்கள் தூங்கப்போனால், மறுநாள் விழித்தெழும்போது, அதற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடும் என்பதே அது.
நினைவாற்றலை வளர்க்கும் படி நிலைகள்:

கொந்தளிப்பு இல்லாத மனநிலையோடு அமைதியாக இருங்கள்.
நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவற்றை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வையுங்கள்.
அதை ஒருமுறையோ, இருமுறையோ உரக்கப் படியுங்கள். இரண்டு மூன்று முறை பார்க்காமல் சொல்லிப் பாருங்கள்.
பிறகு எதைப் பற்றியும் கவலைப்படாமல், நினைத்துப் பார்க்காமல் தூங்குங்கள். நிச்சயம் அந்த விஷயம் உங்களுக்கு நெடுங்காலம் நினைவில் நிற்கும். வேண்டும்போது பளிச் என்று மனதில் உதிக்கும்.
ஒரு விந்தையான விஷயம் தெரியுமா? சில சமயங்களில் எதையாவது ஞாபகப் படுத்திக்கொள்ள முயற்சி செய்யும்போது, அது நினைவுக்கு வராது. இத்தனைக்கும் அது உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த விஷயம்தான். மண்டையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டாலும் பலன் இருக்காது. இது மாதிரியான நிலைமையைச் சமாளிக்க, அதை நினைவுக்குக்கொண்டுவர வேண்டும் என்று முயற்சிப்பதை நிறுத்திவிட்டு, வேறு வேலை எதிலாவது ஈடுபடுங்கள். கொஞ்ச நேரம் கழித்துத் திடீரென்று அந்த விஷயம் உங்கள் மூளையில் உதிக்கும்.
இது ஏன் என்றால், நீங்கள் முயற்சிப்பதை நிறுத்தினாலும் உங்கள் மூளை அதைத் தேடிக்கொண்டே இருக்கிறது. தேடிய விஷயம் கிடைத்தவுடன் அது உங்களுக்குத் தெரிவிக்கிறது. இப்படி மூளை அடைபட்டுப்போய்ப் பிறகு தானே திறந்துகொள்வதற்கு நம்முடைய உணர்ச்சியின் அளவு, மன அழுத்தம் போன்றவையே காரணம். எனவே, மன அழுத்தம், டென்ஷன் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே பல விஷயங்கள் நம் நினைவைவிட்டு நீங்காது.
(கற்போம்)