கே.யுவராஜன்,ஹரன்
##~## |
''ஹேப்பி பர்த் டே டீச்சர்'' என்றவாறு மாயா டீச்சர் வீட்டில் அதிரடியாக நுழைந்தார்கள் சுட்டிகள்.
தீபா பூங்கொத்து ஒன்றைக் கொடுத்தாள். சுரேகா ஒரு சாக்லேட்டைப் பிரித்து டீச்சரின் வாயில் திணித்தாள். பரத்தும் பிரசாந்தும் ஆளுக்கு ஒரு குட்டி கிடாரை கையில் வைத்து இருந்தார்கள். அதை 'டொய்ங்... டொய்ங்...’ என வாசித்து டெரர் கிளப்பினார்கள்.
''பர்த் டே அதுவுமா ஏண்டா இப்படி?'' என்றவாறு காதுகளைப் பொத்திக்கொண்டார் மாயா டீச்சர்.
சற்று நேரத்தில் அவர்களுக்கு மினி விருந்து தயாரானது. ''டீச்சர், இந்த நாள் மறக்க முடியாததாக இருக்கணும். இதுவரைக்கும் உலகத்தில் யாருமே பார்க்காத இடத்துக்கு எங்களை கூட்டிட்டுப் போங்க'' என்றாள் தீபா.
''அப்படின்னா லெமூரியா கண்டத்துக்குப் போகலாம்'' என்றான் பரத்.
''லெமூரியா கண்டம்னு ஒண்ணு இல்லவே இல்லை. அப்படித்தானே டீச்சர்?'' என்று கேட்டாள் சுரேகா.
''இதில் பல வகையான கருத்துகள் இருக்கு சுரேகா. உலகில் தற்போது ஏழு கண்டங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இவை தவிர, உலக மக்களின் நம்பிக்கை அடிப்படையில், சில கண்டங்கள், தீவுகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் லெமூரியா. பண்டைய கிரேக்கர்களின் அட்லாண்டிஸ் தீவு, மாயர்களின் மூ போன்றவை இந்த வகையே. அந்தந்த நாடுகளின் புராணங்களில் இந்தப் பகுதிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதனால், இவற்றை புராணக் கண்டங்கள் அல்லது புனைவுக் கண்டங்கள் என்பார்கள். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பாக இருந்து, முற்றிலும் கடலில் மூழ்கிவிட்டதாக சில அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் நம்புகிறார்கள். இப்போது இருக்கும் குமரிக்கு அருகே, இந்து மகா கடலில் மூழ்கிவிட்டதாகச் சொல்லப்படுவதுதான் லெமூரியாக் கண்டம். அதனால், இதற்கு குமரிக் கண்டம் என்றும் ஒரு பெயர் இருக்கிறது'' என்றார் டீச்சர்.
''அடடா... அப்போ லெமூரியா டூர் கேன்சலா?'' என்று வருந்தினான் பிரசாந்த்.

''கவலைப்படாதீங்க. கிட்டத்தட்ட லெமூரியா மாதிரியான ஒரு தீவுக்குக் கூட்டிட்டுப் போறேன்'' என்றார் டீச்சர்.
சுரேகா குஷியுடன் ஓடிச்சென்று மந்திரக் கம்பளத்தை எடுத்து வந்தாள். சற்று நேரத்தில் கடலுக்கு மேல் அவர்களின் பயணம் ஆரம்பித்தது. லெமூரியா பற்றியும் டீச்சர் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
''இந்த லெமூரியா நிலப்பரப்பு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு இடையே ஒரு பாலம் போல் இருந்ததாகவும் இந்து மகா கடலில் மூழ்கிவிட்டதாகவும் 19-ம் நூற்றாண்டுகளில் சொல்லப்பட்டது. பிறகு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிலிப் ஸ்க்லேட்டர் என்ற உயிரியல் வல்லுனர் 'இது இந்தியாவுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையே இருந்த நிலப் பகுதி’ என்று சொன்னார். அவர்தான் லெமூரியா என்றும் பெயரிட்டார்'' என்றார் டீச்சர்.
''அது என்ன லெமூரியா?'' என்று கேட்டாள் தீபா.
''லெமூர் என்ற ஒரு விலங்கைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?'' என்று கேட்டார் டீச்சர்.
''ஓ... மடகாஸ்கர் அனிமேஷன் படத்தில் 'கிங் ஜூலியன்’ என்ற கேரக்டரில் அட்டகாசம் செய்யுமே அந்த விலங்குதானே?'' என்றான் பரத்.
''அதேதான். இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய குரங்குக்கு முந்தைய இனம். இப்போ இது மடகாஸ்கர் தீவில் மட்டுமே இருக்கு. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது இந்தியத் தீவுப் பகுதியிலும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைச்சு இருக்கு. குறிப்பாக, கடலில் மூழ்கிப்போன குமரிக் கண்டத்திலும் அதிகம் இருந்து இருக்கும் என்று ஃபிலிப் சொல்கிறார். அதனால், லெமூரியா என்று பெயரிட்டார்'' என்றார் டீச்சர்.

''இப்போ நாம எங்கே போறோம்னு தெரிஞ்சுப்போச்சு. மடகாஸ்கர் தீவுக்குத்தானே'' என்று நான்கு பேரும் கோரஸாகக் கத்தினார்கள்.
மந்திரக் கம்பளம் மடகாஸ்கர் தீவில் இறங்கியது. ''உலகின் நான்காவது மிகப் பெரிய தீவு இந்த மடகாஸ்கர். ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுக்கு மத்தியில் இருக்கு. அரேபியர்கள்தான் முதன்முதலில் இந்தத் தீவுக்கு வந்தார்கள். பிறகு, கேப்டன் டியாகோ என்ற போர்ச்சுகீசிய மாலுமி இந்தியாவுக்கு வரும்போது வழி தவறி எதேச்சையாக இந்தத் தீவுக்கு வந்தார். அதன் பிறகு நிறையப் பேர் இங்கே வாணிபம் செய்ய வந்தாங்க. உலகின் தனித்தன்மை வாய்ந்த தீவுகளில் இதுவும் ஒன்று. இங்கே இருக்கிற பல தாவரங்கள், விலங்கு வகைகள் உலகின் வேறு எங்குமே கிடையாது. லெமூரும் அப்படிப்பட்ட ஒரு விலங்குதான். இப்படி அரிதாக ஏதாவது ஓர் இடத்தில் மட்டுமே இருக்கும் உயிரினத்தை எண்டிமிஸம் (ணிஸீபீமீனீவீsனீ) என்பார்கள். உலகம் முழுக்க இப்படியான உயிரினங்கள் உண்டு'' என்றார் டீச்சர்.
''ஹேய்.. அங்கே பாருங்க லெமூர் கூட்டம்'' என்று உற்சாகத்துடன் கத்தினான் பரத்.
சாம்பலும் வெண்மையும் கலந்த நிறத்தில் இருந்த அந்த விலங்குகளின் வால் வெகு அழகு. புசுபுசு என இருந்த வெள்ளை வாலில், சீரான இடைவெளியில் கறுப்பு வளையத்தை மாட்டியதுபோல் இருந்தது. ''வாவ்!'' என்றார்கள் சுட்டிகள்.
''இவை வரிவால் லெமூர்கள். தாவரம், விலங்கு என அனைத்தையும் சாப்பிடும். பெரும்பாலும் கூட்டத்துடனே வசிக்கும். 16 முதல் 19 வருடங்களே உயிர் வாழும். லெமூர் இனங்களிலேயே அழகானது'' என்றார் டீச்சர்.
''அப்படின்னா இதில் பல வகைகள் இருக்கா?'' என்று கேட்டாள் தீபா.
''ஆமா தீபா. கிட்டத்தட்ட 100 வகையான லெமூர்கள் இருக்கு. எல்லாமே இந்தத் தீவுப் பகுதியில் மட்டுமே இருக்கு என்பதுதான் சிறப்பு. வரிவால் லெமூருக்கு அடுத்து அதிகம் தெரிஞ்ச வகை மூங்கில் லெமூர். வாங்க, அதையும் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம் அவர்களை மூங்கில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதிக்கு அழைத்து வந்தது. ''அதோ பழுப்பு நிறத்தில் வட்டமான காதுகளுடன் இருக்கே அதுதான் மூங்கில் லெமூர். இவற்றின் முக்கிய உணவு மூங்கில். அதிகபட்சம் 3 கிலோ இருக்கும். 12 ஆண்டுகள் உயிர் வாழும். 27 சென்டி மீட்டரே இருக்கும் லெமூர் வகையும் உண்டு. அதன் பெயர் எலி லெமூர்'' என்றார் டீச்சர்.

''மடகாஸ்கர் தீவு சினிமாவில் பார்த்ததைவிட நேரில் சூப்பரா இருக்கு'' என்றாள் சுரேகா.
அவர்கள் சற்று நேரம் கடற்கரையில் நடந்தவாறு தீவின் அழகை ரசித்தார்கள். ''கிளம்பலாம் டீச்சர், பரீட்சைக்குப் படிக்கணும்'' என்றாள் தீபா.
மந்திரக் கம்பளத்தில் பறந்தபோது ''பேக் டூ லெமூரியா'' என்ற டீச்சர் மேலும் சில விஷயங்களைச் சொன்னார்.
''பொதுவாக ஆப்பிரிக்காவில்தான் முதல் மனித இனம் தோன்றியது என்பார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நிலப்பரப்பு மிகப் பெரியதாக ஆப்பிரிக்காவுடன் இணையும் வகையில் இருந்தது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியே லெமூரியா. அங்கேதான் மனித இனம் தோன்றியது என்பது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, எர்னஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) என்பவரின் கருத்து. அப்போது வாழ்ந்த மக்கள் ஆன்மிக விஷயத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்து இருக்கலாம் என்கிறார் எர்னஸ்ட். இந்தக் கருத்தை சில அறிவியல் அறிஞர்கள் ஒத்துக்கொண்டாலும் பலரும் மறுத்தார்கள்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் லெமூரியாக் கண்டம் இப்படி இங்கே இருந்து இருக்கலாம் என்று ஒரு வரைபடம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு கண்டங்கள் நகர்வது, புவி ஓடுகள் அசைவது போன்ற விஷயங்களை அறிவியல்பூர்வமாகக் கண்டுபிடித்தார்கள். அதன்படி பார்த்தால், லெமூரியா என்ற கண்டம் இருந்திருக்க முடியாது. அதனால், அந்த வரைபடத்தை அறிவியல் பகுதியில் இருந்து நீக்கிட்டாங்க. ஸோ, அது ஒரு சிலரின் நம்பிக்கைக் கண்டமாக இருக்கு'' என்றார் டீச்சர்.
''இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் ராமர் பாலம் கடலில் இருக்குனு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி சொன்னாங்களே, லெமூரியா கண்டமும் அப்படித்தானா?'' என்று கேட்டான் பரத்.
''ம்... கிட்டத்தட்ட அப்படித்தான்'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம் நீலக் கடலுக்கு மேலே வேகமாகப் பறந்தது.