தூரிகை சின்னராஜ் ஆ.முத்துக்குமார், வீ.சக்தி அருணகிரி
##~## |
''மூத்தோர் சொல்லும் முதுநெல்லியும் முன்னால் துவர்க்கும் பின்னால் இனிக்கும்' இது நம் ஊர் முதுமொழி. கையெழுத்துப் பயிற்சியும் அப்படித்தான்.
ஆரம்பத்தில் இந்தப் பயிற்சியானது உங்களுக்கு சலிப்பாக இருந்து இருக்கும்.
இப்போது ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதை அறிய முடிகிறது.
உயிர் எழுத்துகளை எழுதும்போது முதலில் எளிமையான சதுர வடிவ எழுத்தான 'ஈ’ என்கிற எழுத்தில் தொடங்கினால், எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். அதை அடுத்து 'எ மற்றும் ஏ’ ஆகிய எழுத்துகளில் தொடர வேண்டும். பிறகு, அதன் வடிவ அமைப்பில் ஒத்துப்போகிற 'ஞ’ என்கிற உயிர்மெய் எழுத்தை எழுதித் தொடரலாம்.
துணை எழுத்துகளில் ஒன்றாகவும், உயிர்மெய் எழுத்தாகவும் இருக்கும் 'ள’ என்கிற எழுத்தை இங்கே பயிற்சி செய்யவேண்டி உள்ளது. காரணம், அடுத்து வரும் 'ஊ’ என்கிற உயிர் எழுத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டு இருக்கும் ஒரு துணை எழுத்தாகவும், 'ஒ’ உடன் ஜோடி சேர்ந்து 'ஒள’ என்கிற உயிர் எழுத்தை உருவாக்குவதிலும், 'கௌ’ வரிசையில் வரும் 18 உயிர்மெய் எழுத்துகளுக்கும் பக்கபலமாய் நிற்கும் முக்கிய எழுத்தாக உள்ளது.

இந்த 'ள’ எழுத்தை உயிர் எழுத்துக்களுடன் வடிவம் சிதையாமல் எழுதிப் பயில வேண்டும். உயிர் எழுத்துகளில் 'உ, ஊ’ஆகியஎழுத்துகளை எழுதும்போது, கணித எண் '2’ போல் எழுதிவிடக் கூடாது. 'உ, 'ஊ’ ஆகிய எழுத்துகளின் முடிவில் வால் பகுதியைச் சற்று நீளமாக அமைத்தால், எண் '2’ போல் தோன்றாமல் தனித்தன்மையுடன் இருக்கும். ஒவ்வொரு எழுத்தையும் உற்று நோக்கி, அது மற்ற எழுத்துகளைவிட எவ்வாறு வேறுபடுகிறது என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். உயிர் எழுத்தில் 'ஐ’ மற்றும் கிரந்த எழுத்தில் 'ஜ’ ஆகிய இரண்டு எழுத்துகளும் ஒன்றுபோல் காட்சி அளித்தாலும் அவற்றின் இறுதிப் பகுதி சற்றே வேறுபடும்.
இவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்துப் பயிற்சி செய்தால், விரைவில் நீங்கள் அழகாய் எழுதுவதோடு வேகமாகவும் எழுத முடியும்.

உருவ ஒற்றுமை மிக்க எழுத்துகள் அடுத்து அடுத்து வரும்போது, எழுத்துப் பயிற்சி எளிமையாக அமையும் என்பதால், இப்படிப் பயிற்சி செய்தல் அவசியம் ஆகிறது. ஒரே உருவ ஒற்றுமை மிக்க எழுத்துகளை அடுத்தடுத்து எழுதுவதன் மூலம் அவற்றின் வித்தியாசத்தை உணர்ந்துகொள்வதுடன், தவறு இன்றியும் எழுத முடிகிறது.
நன்றாக அனைத்து எழுத்துகளையும் எழுதிப் பழகியவுடன், வரிசையாக 'அ, ஆ ,இ, ஈ...’ என எழுதுவது மிகவும் எளிதாக இருக்கும். ஆரம்பப் பயிற்சியில் ஈடுபடும் முதல் வகுப்புக் குழந்தைகள், உயிர் எழுத்துகளில் முதல் எழுத்துகளான அ, ஆ, இ’ ஆகிய எழுத்துகளை எழுத மிகவும் சிரமப்படுகின்றனர்.
நாம் கற்றலில் புதிய முறைகளை அறிமுகப்படுத்தி வரும் இந்த வேளையில், எளிமையில் இருந்து கடினம் என்கிற முறையே சிறந்தது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இத்தகைய பயிற்சிகளை வாழ்க்கையில் ஒரு முறை தெளிவாக மனதில் நிறுத்திப் பயின்றுவிட்டால், நம் மனம் எழுத்துகளைச் சிதைக்காமல் அழகாக எழுதவே ஆசைப்படும்.
(எழுதுவோம்)