மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - வள்ளலார்

ஆயிஷா இரா.நடராசன்,பாரதிராஜா

##~##

சிறுவன் இராமலிங்கம் அந்த ஊரிலேயே வித்தியாசமான பிள்ளையாக இருந்தான். அவன் பிறந்தது மருதூர் எனும் சிறிய கிராமம்.  சிறுவயதிலேயே தந்தை ராமையாவும் தாயார் சின்னமையும் இறந்துவிட்டனர். அதனால், தனது மூத்த அண்ணன் சபாபதியிடம் சென்னையில் உள்ள ஏழுகிணறு என்கிற பகுதியில் வளர்ந்தான். யாருடனும் அதிகம் பேச மாட்டான். அப்படிப் பேசினால், நறுக்குத் தெரிந்தார்போல் கணீர் குரலில் தெளிவாகப் பேசுவான்.

ஒரு முறை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அண்ணன், அண்ணியுடன் சென்றான். அப்போது, இராமலிங்கத்துக்கு ஆறு வயது.

சுட்டி நாயகன் -  வள்ளலார்

கோயிலைச் சுற்றிவிட்டு கருவறை அருகே  வந்தார்கள். அப்போது, அங்கே இருந்த தீட்சதரிடம்  ''இந்தக் கோயில் கோபுர விமானம் 21,600 பொன் ஓடுகளால் 72,000 ஆணிகள் அடிக்கப்பட்டுப் பொருத்தப்பட்டு உள்ளதே இது ஏன்?'' என்று கேட்டான் இராமலிங்கம்.

அவன் அதை எப்போது எண்ணிவைத்தான் அல்லது யாராவது சொன்னார்களா? என நினைத்து அனைவரும் திகைத்தனர். ஆறு வயது பாலகனிடம் இருந்து இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இராமலிங்கத்திற்கு யாராலும் கல்வி கற்பிக்க முடியவில்லை. அவன் கேட்கும் சந்தேகங்கள்  அப்படி. ஒரு வழியாக காஞ்சிபுரத்தில் இருந்த  மகாவித்வான் ரத்தின சபாபதியிடம்தான் கல்வி கற்க அண்ணன் அவனை அனுப்பி வைத்தார். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் இராமலிங்கம் கல்விச் சாலைக்கு வரவில்லை. உடன் இருந்த நண்பர்கள், அவன் காலையிலேயே வீட்டில் இருந்து கிளம்பிவிட்டதை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

அவனை அவர்கள் தேடிப் பார்த்தபோது, வழியில் ஒரு மரத்தின் அடியில் காயம்பட்டு விழுந்துகிடந்த குருவிக் குஞ்சு ஒன்றை ஆரத்தழுவிக்கொண்டு இருந்தான் இராமலிங்கம். ''ஏன் கல்விச்சாலைக்கு வரவில்லை?'' என விசாரித்தபோது, ''இன்னலுற்ற ஓர் உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் முக்கியமா அந்தக் கல்வி?'' என்றான்.

சென்னை, கந்த கோட்டம் கோயிலுக்குச் சென்ற ஆசிரியர் வித்வான், அங்கே சன்னிதானத்தில் கணீர் குரலில் ஒரு சிறுவன் பாடக் கேட்டு, அதில் மயங்கி, அது யார் எனப் பார்த்தார். அங்கே தன்னை மறந்து பாடியபடி இருந்தது தன் மாணவன் இராமலிங்கமே அது என அறிந்ததும் ஆச்சரியம்.

அவனுக்கே தெரியாமல் மெள்ள அவனைப் பின்தொடர்ந்தார். பாடல் முடிந்தகையோடு அங்கே பிரசாதத் தட்டை எடுத்த இராமலிங்கம், நேரே கோயிலுக்கு வெளியே சென்றான். பூசாரிகள் அவன் பின்னே ஓடினார்கள். அங்கே அமர்ந்து இருந்த பிச்சைக்காரர்களுக்கு பிரசாதத்தை வழங்க ஆரம்பித்தான்.

''பசித்தவர்களுக்கே உணவு. அப்போதுதான் அது பிரசாதம்'' எனப் பூசாரிகளிடம் விவாதித்ததைக் கண்ட ஆசிரியர் வித்துவான் அவனை நெருங்கினார். ''ஆசிரியன் நானல்ல... நீயே ஆசிரியன். இனி நானே மாணவன்’ என அறிவித்தார்.

அவனது அண்ணன், ஆன்மிகக் கதைத் தொடர் சொற்பொழிவுகள் நடத்தியே சம்பாதித்துவந்தார். ஒரு நாள் அண்ணனின் உடல்நிலை சரியில்லாதுபோனது. கோயிலில் சொற்பொழிவு இல்லை என எல்லாரும் நினைத்தபோது, எங்கிருந்தோ மேடை ஏறிய நமது இராமலிங்கம் தன் தேமதுரத் தேன் தமிழ்க் குரலில் சொற்பொழிவை நிகழ்த்தினான். அப்போது அவனுக்கு 12 வயதுதான்.  

அந்தச் சிறுவன்தான் பின் நாட்களில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன அருட்பிரகாச வள்ளலாராக மாறினார்!

ஆதாரம்: வள்ளலார் வாழ்க்கை வரலாறு:
பொ.சா.இராமச்சந்திரன்