கே.யுவராஜன் படங்கள் : ஹரன்
##~## |
''டீச்சர் ஆர்ட்டிமியா (Artemia) பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றான் பரத்.
அவர்கள் மாயா டீச்சர் வீட்டின் மொட்டை மாடியில், மாலை நேரக் காற்றுடன் சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
''அது என்ன பரத் ஆர்ட்டிமியா? ஏதோ நோயின் பெயர் மாதிரி இருக்கு'' என்றாள் தீபா.
''நோய் இல்லை, அது ஓர் உயிரினம் போல. லைப்ரரியில் வேற ஒரு புத்தகத்தைத் தேடிட்டு இருந்தப்ப ஆர்ட்டிமியா வளர்ப்பு என்கிற புத்தகம் கண்ணில் பட்டுச்சு'' என்றான் பரத்.
''ஆர்ட்டிமியா என்பது கணுக்காலிகள் என்கிற பெரும் தொகுதியின் உட்பிரிவைச் சேர்ந்த மிகச் சிறிய நீர்வாழ்வி. முழு வளர்ச்சி அடைந்த ஒரு ஆர்ட்டிமியா, அதிகபட்சம் 15 மில்லி மீட்டர்தான் இருக்கும். அதாவது, அரை இன்ச். இது 100 மில்லியன் ஆண்டுகளாக உருவில் எந்தவித மாற்றமும் பரிணாமமும் அடையாத ஓர் உயிரினம்.'' என்றார் டீச்சர்.
''ஆகா... உடனே அந்த ஆர்ட்டிமியாவைப் பார்க்கணுமே'' என்று பிரசாந்த் சொல்ல, ''அப்படினாக் கடலுக்குப் போகலாம் வாங்க'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளத்தின் உதவியால் டிராபிக் ஜாம் பிரச்னை இல்லாமல் சில நொடிகளிலேயே கடற்கரைக்கு வந்துவிட்டார்கள். ''ஆர்ட்டிமியாவை நல்லாப் பார்க்க நாமும் அதன் அளவுக்கு மாறலாம்'' என்றார் டீச்சர்.
அவர்கள் மிகச் சிறிய உருவங்களாக மாறி, கடலுக்குள் செல்ல ஆரம்பித்தார்கள். இப்போது அவர்களுக்குச் சிறிய மீன்கூட சுறா மீன் போலத் தெரிந்தது. சின்னச் சின்னப் புழுக்கள், மிதக்கும் மெல்லுடலிகள் எல்லாம் கண்ணில்பட்டன. ''மனிதர்களுக்குத் தாய்ப்பால் முதல் உணவு. அதுபோல், கடலில் வாழும் சிறிய மீன்கள், இறால், நண்டு போன்ற உயிரினங்களின் லார்வா மற்றும் குஞ்சுகளுக்குச் சில நுண்ணிய தாவர மிதவைகளும் உயிரின மிதவைகளும் முதல் உணவாக இருக்கின்றன. அதில் விலங்கின மிதவைகளில் ஒன்றுதான் இந்த ஆர்ட்டிமியா.'' என்றார் டீச்சர்.

இப்போது அவர்கள் கடலின் ஒரு பகுதிக்கு வந்து இருந்தார்கள். அங்கே நூற்றுக்கணக்கான ஆர்ட்டிமியாக்கள் மிதந்துக்கொண்டு இருந்தன. நீளமான வால்போன்ற உடல். அந்த உடலின் இரண்டுப் பக்கங்களிலும் குட்டி குட்டியாக 11 ஜோடிக் கால்கள். ''வாவ்... இதுக்கு மூன்று கண்கள் இருக்கு'' என்று தண்ணீரில் துள்ளினான் பரத்.
''ஆமாம். ஆன்ட்டெனா என்கிற மிக மெல்லிய உணர்வுக்கொம்புகளும் இருக்கு பாருங்க.''
''ஆனா... சிலவற்றுக்கு உணர்வுக்கொம்புகள் நீளமாகவும் சிலவற்றுக்கு குட்டையாகவும் இருக்கிற மாதிரி தெரியுதே'' என்றாள் தீபா.

''வெரிகுட்! ரொம்ப நுணுக்கமாக் கவனிக்கிறே தீபா. கொஞ்சம் குட்டையாக இருக்கின்றன பெண் ஆர்ட்டிமியாக்கள். இந்தப் பெண் ஆர்ட்டிமியாக்கள் இனப்பெருக்கக் காலத்தை அடைந்ததும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுமார் 300 முட்டைகள் இடும். இதன் முட்டை 300 மைக்ரான் விட்டம்தான் இருக்கும். இந்த முட்டைகள் நீரில் மிதக்கும். அடுத்த 20 மணி நேரத்தில் முதல்கட்ட லார்வா, முட்டையில் இருந்து பாதி வெளிவந்த நிலையில் தொங்கிக்கொண்டு இருக்கும். அப்போதே உணர்வுக்கொம்புகள் முளைத்துவிடும்.
சில மணி நேரத்தில் இரண்டாம் கட்ட லார்வா முட்டையில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிடும். எதிரியின் கண்களில் சிக்காத ஒரு ஆர்ட்டிமியாவின் ஆயுள் காலம் 6 முதல் 12 மாதங்கள். ஆனால், முதல்கட்ட லார்வா சமயத்திலேயே மீன்கள், இறால்கள் இதனை வேட்டையாட ஆரம்பிச்சுடும். அதை எல்லாம் தாண்டி முழு வளர்ச்சி அடைந்தாலும், இவை வேட்டையாடப்படும்'' என்றார் டீச்சர்.
''அச்சோ பாவம்'' என்றாள் சுரேகா.
''சரி, இதை எதற்காக வளர்க்கறாங்க?'' என்று கேட்டாள் சுரேகா.

''மீன்களுக்கு இது புரதச் சத்து நிறைந்த எனர்ஜி ஃபுட். இதைச் சாப்பிடும் மீன்கள் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக மீன்களை உண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கு. கடலில் இயற்கை முறையில் மட்டுமே மீன்களைப் பிடித்து தேவையைப் பூர்த்திசெய்ய முடிவது இல்லை. இதனால், உலகம் முழுக்க மீன் பண்ணைகளில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உணவுக்காக மட்டும் இன்றி, அலங்கார மீன்களும் பண்ணை மூலம் வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கு எல்லாம் இந்த முதல் உணவு கிடைக்கணுமே. அதனால், ஆர்ட்டிமியாவும் பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது. அதையும் பார்க்கலாம் வாங்க'' என்றார் டீச்சர்.
அவர்கள் இயல்பான உருவத்துடன் கரைக்குத் திரும்பினார்கள். சற்று நேரத்தில் மந்திரக் கம்பளம் அவர்களை ஓர் இடத்தில் இறக்கியது. ''இது உப்பளம் ஆச்சே. இங்கே எதுக்கு வந்திருக்கோம்?'' என்று கேட்டான் பிரசாந்த்.
''உப்புத்தன்மை அதிகம் உள்ள பகுதிகளில் ஆர்ட்டிமியா அதிகம் காணப்படும். சொல்லப்போனால், கடலைவிட உப்பளங்களில் உள்ள நீரில் இது வேகமாக வளரும். இந்தியா உட்பட அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், மெக்சிகோ, கலிஃபோர்னியா போன்ற பல நாடுகளில் இருக்கும் உப்பளப் பகுதிகளில் இதை வளர்க்கிறார்கள். இப்போது நாம் வந்திருப்பது தமிழ்நாட்டின் வேதாரண்யத்துக்கு. சில பறவைகள் இந்த மாதிரி உப்பளங்களில் உப்பு உருண்டைகளைச் சாப்பிடுவதைப் பார்த்து இருப்பீர்கள். உண்மையில் அந்தப் பறவைகள் சாப்பிடுவது உப்புடன் ஒட்டி இருக்கும் ஆர்ட்டிமியாவின் முட்டைகளைத்தான்.'' என்றார் டீச்சர்.
மாயா டீச்சருடன் அவர்கள் உப்பளத்தின் உள்ளே சென்றார்கள். ''இது பயன்பாடு முடிந்த ஓர் உப்பளம். பெரும்பாலும் இந்த மாதிரி உப்பளங்களில்தான் ஆர்ட்டிமியா வளர்க்கப்படும். இங்கே வளர்க்கப்படும் ஆர்ட்டிமியாக்கள் இடும் முட்டைகளை பேக்கிங் செய்து மீன் பண்ணை களுக்கு அனுப்புவார்கள். இந்த முட்டைகள் நாட்கணக்கில் காய்ந்து இருந்தாலும் தண்ணீரில் போட்டதும் உயிர்பெற்றுவிடும். குறிப்பிட்ட நாட்களில் லார்வாக்கள் வெளியே வந்து வளர ஆரம்பிக்கும். அப்போது பண்ணைத்

தண்ணீரில் இருக்கும் மீன்கள் இவற்றை முதல் உணவாகச் சாப்பிடும்'' என்றார் டீச்சர்.
''டீச்சர் ஒரு டவுட். மீன்களுக்கு இது முதல் உணவு சரி. இந்த ஆர்ட்டிமியாவின் உணவு எது?'' என்று கேட்டான் பரத்.
''சரியான கேள்வி பரத். ஆர்ட்டிமியாக்கள், கிடைக்கும் எதையும் உணவாக எடுத்துக்கொள்ளும். பண்ணைகளில் குறிப்பாக கோதுமை, கேழ்வரகு தவிடு போன்றவற்றை உணவாகப் போடுவார்கள். இன்னொரு சுவாரசியமான விஷயம், இறந்த மீன்களின் துகள்களையேகூட இவற்றுக்கு உணவாகத் தூவுவார்கள்.'' என்றார்.
''முதலில் மீன் துகளைச் சாப்பிட்டு வளர்ந்து, பின்னாடி மீனுக்கே முதல் உணவாகுதே. இதுதான் வாழ்க்கைச் சக்கரம் போல'' என்றான் பிரசாந்த்.
''அடடா... ஆர்ட்டிமியா கொஞ்ச நேரத்தில் நம்ம பிரசாந்தை தத்துவ ஞானியாக்கிடுச்சே'' என்று தீபா சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.
மந்திரக் கம்பளமும் சிரிப்பதைப்போல் காற்றில் படபடவென அடித்தவாறு அவர்களைச் சுமந்து சென்றது.