மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஜன் ,ஹரன், முத்து

##~##

''டீச்சர், கால் டாக்ஸி வந்துருச்சு'' என்று வாசலில் இருந்து உற்சாகத்துடன் கத்தினாள் சுரேகா.

''சீக்கிரம் வாங்க... சீக்கிரம் வாங்க'' என்றபடி தனது லக்கேஜை தூக்கிக்கொண்டு முன்னால் ஓடினான் பரத். அவனைத் தொடர்ந்து தீபா, பிரசாந்த், மாயா டீச்சர் எல்லோரும் வெளியே வந்தார்கள்.

புதுதில்லியில் சிறுவர்களுக்கான மூன்று நாள் திரைப்படத் திருவிழா நடக்கிறது. அதை நடத்துபவர்களில் ஒருவர், மாயா டீச்சருக்கு நண்பர். அவரது அழைப்பின் பேரில் அவரது செலவிலேயே மாயா டீச்சருடன் செல்கிறார்கள் சுட்டிகள்.

கால் டாக்ஸி விமானநிலையம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. ''என்னதான் மந்திரக் கம்பளத்தில் கண்டம்விட்டு கண்டமும், காலங்கள் தாண்டிப் பறந்தாலும், விமானத்தில் போகப்போறதை நினைச்சா, தனி குஷி வந்துருது'' என்றான் பிரசாந்த்.

''சும்மாவா? பறவை மாதிரி வானத்தில் பறக்கிறதை நினைச்சு மனிதன் எவ்வளவு சந்தோஷப் படுவான்'' என்றாள் தீபா.

''டீச்சர், பறவைகள் தங்களின் சிறகுகளை அசைத்துப் பறக்குது. ஆனால், விமானத்தின் சிறகுகள் அசைவதே இல்லை. அப்படினா விமானத்தின் பறக்கும் தன்மை எப்படி உருவாக்கப்படுது?'' என்று கேட்டாள் சுரேகா.

''விமான நிலையத்துக்குப் போனதும் அதை நேரடியாகக் காட்டுறேன். எப்பவும் நானே தகவல்கள் சொல்வேன். நீங்க இடையில் கேள்விகள் மட்டுமே கேட்பீங்க.இப்போ ஏர்போர்ட் போகிற வரைக்கும் நான் சில கேள்விகள் கேட்கிறேன். விமானம் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிஞ்சு இருக்குனு பார்க் கலாம்'' என்றார் டீச்சர்.

''எங்களுக்கே சவாலா? கேளுங்க சொல்றோம்'' என்றான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''மனிதனின் பறக்கும் ஆசையில் பல படிகளைத் தாண்டி வந்ததுதான் விமானம். ஆரம்பத்தில் விமானத்துக்கு முன்னோடியாக இருந்தது எது?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.

''நான் சொல்றேன்'' என்று கைகளை உயர்த்திய பிரசாந்த் தொடர்ந்தான். ''பலூன் மூலம் வானில் பறந்ததுதான் முதல் அனுபவம். குறிப்பாக 1783-ம் ஆண்டில் அடுத்தடுத்துப் பலர் பலூன் மூலம் வானில் பறக்கும் முயற்சியில் இறங்கினாங்க. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டீஃபன் மற்றும் ஜோசஃப் சகோதர்கள் ஒரு பெரிய காகித பலூனைச் செய்தாங்க. அதன் அடிப் பகுதியில் ஒரு கூடையைப் பொருத்தி எரிபொருளை நிரப்பிக் கொளுத்தி விட்டாங்க. கூடைக்குள் இருந்த காற்று, வெப்பம் அடைந்து வெளிக்காற்றைவிட லேசாக மாறியதால், அந்தப் பலூன் மேலே பறந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அதே ஆண்டு ராபர்ட் பிரதர்ஸ் என்பவர்களும், அலெக்சாண்டர் சார்லஸ் என்பவரும் பறக்கும் முயற்சியில் ஈடுபட்டாங்க. சார்லஸ் பட்டுத் துணியால் பலூனைச் செய்தார். இவர்கள் ஹைட்ரஜன் எனப்படும் நீர்வளி மூலம் வானில் பலூனைப் பறக்கவிட்டு அதில் பயணம் செய்தாங்க. இதை மக்கள் திரண்டு நின்று ஆச்சர்யத்தோடு பார்த்தாங்க. 1783 டிசம்பர் முதல் தேதி இது நடந்தது. இந்த பலூன்தான் மனிதனைச் சுமந்து சென்ற முதல் ஹைட்ரஜன் பலூன் விமானம் என்று பெயர் பெற்றது'' என்றான்.

''பலே பிரசாந்த். பலூன் வரலாறைக் கரைச்சுக் குடிச்சு இருக்கே. சரி, பலூனுக்கு அடுத்து மனிதன் உருவாக்கியது எது?'' என்று கேட்டார் டீச்சர்.

''கிளைடர்'' என்றபடி காரின் முன் சீட்டில் இருந்து பின் சீட்டுக்குத் தாவி வந்தாள் சுரேகா. ''ஆட்டோ லிலியன்தால் (ளிttஷீ லிவீறீவீமீஸீtலீணீறீ) என்பவரை விமானங்களின் தந்தை என்பார்கள். இவர்தான் பறவையின் இறக்கைகள்போல் செய்து, அதைத் தனது உடலில் கட்டிக்கொண்டு பறந்தார். பலமுறை தோல்விகளைச் சந்தித்தார். 1891 முதல் 1896 வரை கிட்டத்தட்ட 2,000 கிளைடர்களைப் பல்வேறு மாடல்களில் உருவாக்கினார். பல்வேறு சமயங்களில் பறந்து காட்டினார். அப்படி அவர் தன் வாழ்நாளில் மொத்தமாகப் பறந்தது ஐந்து மணி நேரம். பாவம், 1896-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்துவிட்டார்'' என்றாள்.

''இந்தக் கிளைடர் விமானத்தை இன்னும் மேம்படுத்தி உருவாக்கியதுதான் ரைட் சகோதர்களின் ஏர்கிராஃப்ட் எனப்படும் வானூர்தி. ரைட் சகோதர்களின் முயற்சிகள், சவால்கள், சாதனைகள் பற்றிச் சொல்ல ஆரம்பிச்சா, நாம புதுதில்லிக்கு கால் டாக்ஸியில்தான் போக வேண்டியதாக இருக்கும். அவ்வளவு இருக்கு.'' என்றாள் தீபா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''பலே, எல்லோருமே சரியாப் பதில் சொல்லி அசத்துறீங்க. ஏர்போர்ட் போனதும் விமானம் பறக்கும் விதம் பற்றிப் பார்ப்போம்'' என்றார் டீச்சர்.

அதே நேரம், அவர்கள் விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்கள். பரிசோதனைகள் முடிந்து விமானத்துக்குள் சென்றார்கள். உடனடியாக மாயா டீச்சர் தனது கைப் பையில் இருந்த மந்திரக் கம்பளத்தை எடுத்து எல்லோரின் மீதும் போர்த்தினார். அடுத்த நிமிடம் யாரும் பார்க்கும் முன்பு அவர்கள் மாயமாக மறைந்தார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

சில நொடிகளில் அவர்கள் விமானத்தின் மேல் பகுதியில் இருந்தார்கள். உயரத்தில் கயிற்றின் மீது நடக்கும் சாகச வீரர்களைப்போல் வரிசையாக விமானத்தின் மேல் நடந்தார்கள்.

''காற்றழுத்தம் என்ற விஷயம்தான் விமானம் பறப்பதற்கான முக்கியமான காரணம். அதாவது, நாம் வேகமாக ஓடும்போது நமக்கு எதிராக காற்றின் தடையும் அதிகமாக இருக்கும். இப்படி எதிரே இருக்கும் காற்றின் அழுத்தத்தை மாற்றி, அதைப் பின் பகுதிக்கு அனுப்பும்போது அங்கே காற்றழுத்தம் ஏற்பட்டு பொருளை முன்னோக்கித் தள்ளும். இதற்கு ஏற்ற வகையில் விமானங்களின் பாகங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கு'' என்றார் டீச்சர்.

பேசிக்கொண்டே அவர்கள் விமானத்தின் இறக்கைப் பகுதிக்கு வந்தார்கள். ''எடை எனப்படும் பாரா விசை, ஏற்றம் எனப்படும் தூக்கு விசை, முன்னேறு விசை மற்றும் பின்தள்ளு விசை ஆகியவற்றின் மூலம் ஒரு விமானம் பறக்கிறது. இப்போ இந்த விமானம் தரையில் அசையாமல் நின்னுட்டு இருக்கு. இந்த விமானத்தைச் சுற்றிலும் காற்றழுத்தம் சமமாக இருக்கு. விமானம் மேலே உயர்வதற்கு விமானத்தின் எடையைவிட மேலே இருக்கும் காற்றின் எடை அதிகமாக மாற வேண்டும். அதற்கு இறக்கையின் பங்கு முக்கியம். இப்போது, நாம் இந்த இறக்கையின் உள்ளே நுழைந்து அதன் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பார்க்கப்போகிறோம். நல்லாக் கவனிங்க. என்ன தெரியுது?'' என்று கேட்டார் டீச்சர்.

நான்கு பேரும் உற்றுக் கவனித்தார்கள். ''இறக்கையின் மேல் பகுதி அதிக வளைவாகவும் கீழ்ப் பகுதி தட்டையாகவும் இருக்கு'' என்றாள் தீபா.

''கரெக்ட்! இந்த வேறுபாட்டின் காரணமாக விமானம் ரன்வேயில் ஓடும்போது இறக்கைகளுக்கு இடையே பிரிந்து செல்கிற காற்று, மேல்புறம் விரைவாகவும் கீழ்ப்புறம் மெதுவாகவும் செல்லும். அதனால், விமானத்தின் மேல் பகுதியில் காற்றழுத்தம் அதிகமாகி தூக்கு விசை ஏற்பட்டு, விமானம் மேலே தூக்கப்படும். மேலே எழுந்த விமானம் முன்னோக்கிச் செல்ல, முன் பகுதியில் இருக்கும் காற்றின் அழுத்தத்தைக் குறைக்கணும். இதற்கு புரொபல்லர் வகை விமானங்களில் முன் பகுதியில் இருக்கும் காற்றாடி உதவும். இந்தக் காற்றாடி சுழன்று முன் பகுதியில் இருக்கும் காற்றைப் பின்னால் தள்ளும். இதனால் பின்பகுதியில் காற்றழுத்தம் அதிகமாகி விமானத்தை முன்னோக்கித் தள்ளுகிறது'' என்றார் மாயா டீச்சர்.

''ஆனா டீச்சர், இந்த விமானத்தின் முன் பகுதியில் இறக்கை எதுவும் இல்லையே'' என்றான் பரத்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''சரிதான் பரத். இது ஜெட் வகை விமானம். இதில் காற்றாடிக்குப் பதில் 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு’ என்ற நியூட்டனின் மூன்றாம் விதி பயன்படுத்தப்படுகிறது. அதாவது, விமானத்தின் உள்பகுதியில் எரிபொருள் எரிக்கப்பட்டு வாயு உருவாகும். இந்த வாயு, விமானத்தின் பின் பகுதியில் அழுத்தமாக வெளியேறும். இதனால், விமானம் முன்னோக்கித் தள்ளப்படுகிறது. அதே நேரம், முன் பகுதியில் உள்ள காற்று ஒரு குழல் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேறும்'' என்றார் டீச்சர்.

பிறகு அங்கே இருந்து விமானத்தின் முன் பகுதி, என்ஜின் பகுதி என அரூபமாக உலா வந்தார்கள். அப்போது ''டீச்சர் நம்ம விமானம் பற்றி அறிவிப்பு கேட்குது'' என்றான் பிரசாந்த்.

அடுத்த நொடி, மந்திரக் கம்பளம் அவர்களை விமானத்தின் உள்ளே கொண்டுவந்து அவர்களது இருக்கைகளில் இறக்கியது.

விமானம் ரன்வேயில் ஓடி, மேலே எழும்பியதும் நான்கு பேரும் புதுதில்லியில் பார்க்கப்போகும் திரைப்படங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தார்கள்.