கே.யுவராஜன், ஓவியங்கள்: ஹரன்,
##~## |
''ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... வெயில் தாங்கலை. இதுக்குத்தான் ஈவினிங் ஷோவுக்கு வந்திருக்கணும்'' என்றாள் தீபா.
''தெரியாமல் பேசாதே, இந்த அனிமேஷன் படம் மார்னிங் ஷோ மட்டும்தான்'' என்றான் பிரசாந்த்.
மாயா டீச்சருடன் சினிமாவுக்கு வந்திருந்த அவர்கள், படம் முடிந்து ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள். அப்போது சாலையோரம் சென்றுகொண்டு இருந்த ஒரு முதியவர், திடீர் எனச் சுருண்டு விழுந்தார்.
''ஐயையோ... டீச்சர் அங்கே பாருங்க'' என்று பதறினாள் சுரேகா.
அந்த முதியவரை ஒரு கூட்டம் சூழ்ந்தது. ''தண்ணீர் கொண்டுவாங்க'', ''தலையைத் தூக்கிப் பிடிங்க'' என்று ஆளாளுக்குப் பேசினார்கள்.
''ஒரு நிமிஷம்... இந்த வெயிலிலேயே அவரை வெச்சுட்டு இருக்கிறது நல்லதில்லே. அந்த ஷோரூமுக்குத் தூக்கிட்டுவாங்க, முதல் உதவி செய்வோம்'' என்றார் டீச்சர்.
இரண்டு பேர் முதியவரைத் தூக்கிக்கொண்டார்கள். அருகே இருந்த குளிர்சாதன வசதிகொண்ட கடைக்குள் அனுமதிபெற்று நுழைந்தார்கள். ''சரியாப் படுக்கவைங்க. தாத்தாவின் கை, கால்களைத் தேய்ச்சுவிடு தீபா'' என்ற டீச்சர், ஒரு ஐஸ் வாட்டர் பாட்டிலை வாங்கினார். அதை முதியவரின் முகத்திலும் உடலிலும் தெளித்தார்.
தீபாவும் பரத்தும் முதியவரின் உள்ளங்கை, கால்களை நன்கு தேய்த்துவிட்டார்கள். சில நிமிடங்களில் கண் விழித்தவருக்கு குளுக்கோஸ் வாங்கித் தந்தார்கள்.

''தாத்தா, இந்த வெயிலில் குடை இல்லாமல் வெளியே வரலாமா? நடந்துபோகாமல், ஆட்டோவில் போங்க'' என்ற டீச்சர், பணமும் கொடுத்தார்.
எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு அவர் சென்றதும் இவர்களும் கிளம்பினார்கள். ''ஒவ்வொரு வருஷமும் கோடைக்காலத்தின்போது மயங்கி விழுந்து இறந்தவர்கள்பற்றிய செய்தியைப் படிக்கிறோம். ஏன் டீச்சர் இப்படி நடக்குது?'' என்று கேட்டான் பிரசாந்த்.
''உடலில் வெப்பம் அதிகம் ஆகும்போது இப்படி நடக்கும் பிரசாந்த். அதே நேரம், ஒரு மனிதனின் உடல் இயங்குவதற்கு வெப்பநிலையும் மிகவும் அவசியம். மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேடு. நமது மூளையில் ஹைபோதாலமஸ் (பிஹ்ஜீஷீtலீணீறீணீனீus) என்ற பகுதி இருக்கு. இந்தப் பகுதி இரண்டு முக்கியமான பணிகளைச் செய்யும். ஒன்று, கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தைக் குறைப்பது. இரண்டாவது, குளிர்காலத்தில் வெப்பத்தை உற்பத்திசெய்து உடலுக்குக் கடத்துவது. கோடையில் உடலுக்குள் தோல் மற்றும் ரத்தம் வழியாக அதிகமான வெப்பம் பரவும்போது, அதை ஹைபோதாலமஸ் பகுதி உணர்ந்து உடனே வியர்வையை

உண்டாக்கும்'' என்றார் டீச்சர்.
''டீச்சர், நான் ஒரு விஷயம் படிச்சேன். கோடையில் எந்த அளவுக்கு வியர்க்கிறதோ, அந்த அளவுக்கு நல்லதாம். ஏன்னா, இந்த வியர்வைதான் நமது உடலில் மேற்கொண்டு வெப்பம் செல்லாமல் தடுக்குமாம். இது நிஜமா?'' என்று கேட்டாள் சுரேகா.
''ஓரளவுக்கு நிஜம்தான் சுரேகா. வியர்வை நமது தோலில் இருக்கும் சிறுசிறு துவாரங்களில் படிந்து, வெளியே இருந்து வரும் வெப்பத்தைத் தடுக்கும். அதுக்காக இன்னும் வியர்க்கட்டும்னு வெயிலில் நிற்கக் கூடாது. ஏன்னா, வியர்வை ஓரளவுக்கே வெப்பத்தைத் தடுக்கும். அதோடு, வியர்வையுடன் உடம்பில் இருக்கும் சோடியம் குளோரைடும் அதிகப்படியாக வெளியேறும். அது உடம்புக்கு ஆபத்து'' என்றார் டீச்சர்.
அவர்கள் வந்த ஆட்டோ, மாயா டீச்சர் வீட்டின் முன் நின்றது. பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். ''வெயிலில் சுற்றாமல் வீட்டிலேயே இருந்தாலும் மற்ற சமயங்களைவிட கோடையில் வெப்பம் அதிகமாகத்தானே இருக்கு'' என்றாள் தீபா.
''அதுக்குத்தான் இயற்கையே நமது உடம்பில் சில விஷயங்களைச் செய்யுது. வியர்வையால் ஏற்படும் இழப்பைச் சரிப்படுத்தி உடம்புக்குள் நீர் குறைந்துவிடாமல் இருக்க, ஹைபோதாலமஸ் பகுதி ஏ.டீ.ஹெச். என்ற ஹார்மோனைத் தூண்டும். இது, சிறுநீர் அதிகம் வெளியேறாமல் தடுக்கும் பணியைச் செய்யுது'' என்றார் டீச்சர்.
''டீச்சர், சூரிய ஒளியில்தான் நமது உடம்புக்குத் தேவையான வைட்டமின் டி இருக்கு. அப்படின்னா, அதிகமான வெப்பத்தில் அதிகமான வைட்டமின்தானே கிடைக்கணும்? அது ஏன் இப்படி வில்லனா மாறுது?'' என்று கேட்டான் பரத்.

சிரித்த டீச்சர், ''எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதானே பரத். சூரியனின் ஒளிக் கதிர்களிலும் நல்லவன், வில்லன் என இரண்டு வகை இருக்கு. சூரிய ஒளிக்கதிர்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா இதற்கான பதில் கிடைக்கும்'' என்றார்.
மந்திரக் கம்பளத்துடன் அவர்கள் மொட்டை மாடிக்கு வந்தார்கள். கம்பளம் அவர்களுக்கு ஒரு விசேஷமான முகக் கண்ணாடியைக் கொடுத்து, உயரமான இடத்துக்குத் தூக்கிச்சென்றது.
''சூரியனின் நிறமாலைகளில் அவற்றின் அலைநீளத்தின் அடிப்படையில் கண்களுக்குப் புலப்படுபவை, கண்களுக்குப் புலப்படாதவை என இரண்டு வகைகள் இருக்கு. கண்களால் பார்க்கும் ஒளி அலைகளில் கருஞ்சிவப்பு அதிகபட்சம் 750 நானோ மீட்டர் அலை நீளமும், குறைந்தபட்சமாக கரு ஊதா 380 நானோ மீட்டரும் இருக்கும். இந்தக் கரு ஊதாவுக்கு அடுத்தும் சில மின்காந்த அலைகள் இருக்கு. இந்த மின்காந்த அலைகளைப் புறஊதாக் கதிர்கள் என்பார்கள். குறைந்தபட்சம் 10 நானோ மீட்டர் அலைநீளம் வரை இருக்கும் இவை தான் வில்லன் கோஷ்டி. இந்தப் புறஊதாக் கதிர்கள் மனிதர்களின் கண்களுக்குத் தெரியாது. ஒரு சில பறவைகள் மற்றும் பூச்சிகளின் கண் களுக்குத் தெரியும். மந்திரக் கம்பளத்தின் உதவியால் இப்போ நாம் அந்தப் புறஉதாக் கதிர்களால் சூழ்ந்த சூரியனைப் பார்க்கிறோம். இதுகூட ஒரு பொய்த்தோற்றம்தான்.'' என்றார் டீச்சர்.
எல்லோரும் பார்த்தார்கள். சூரியன் நீல நிறத்தில் காட்சி அளித்தது. ''ஏன் டீச்சர் புறஉதாக் கதிர்களின் அலைநீளம் குறைவுன்னு சொல்றீங்க. அப்புறம் எப்படி இது பூமியில் இருக்கும் நமக்கு வில்லனாக மாறுது?'' என்று கேட்டான் பிரசாந்த்.
''அதுதான் பிரசாந்த் இயற்கையின் விநோதம். பொதுவாக, ஒளிக்கதிர்களின் அலைநீளம் குறையக் குறைய அதில் இருந்து வெளிப்படும் ஆற்றல் அதிகமாக இருக்கும். இது நேரடியாக நமது உடம்பில் பட்டால் உடல் வெந்துவிடும். அதேநேரம், இந்தப் புறஊதாக் கதிரின் குறிப்பிட்ட அளவு ஆற்றலும் மனிதனுக்குத் தேவை. அதனால், புறஉதாக் கதிர்களைத் தேவையான அளவு வடிகட்டி அனுப்பும் பணியை ஓசோன் மண்டலம் செய்யுது'' என்றார் டீச்சர்.

''புரியுது டீச்சர். இந்த ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பால், புறஉதாக் கதிர்கள் அதிகமாக பூமிக்கு வந்து நமக்கு வில்லனாக மாறுது. சரியா?'' என்று கேட்டாள் சுரேகா.
''கரெக்ட் சுரேகா. நமக்கு முன்னாடி இருந்தவங்க ஓசோனில் ஓட்டையைப் போட்டுட்டாங்க. அதனால், கோடைக்காலத்தில் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் கவனமாக இருக்கணும். முதியவர்கள், குழந்தைகளுக்கு உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருக்கும். இவங்க, வெயில் நேரத்தில் வெளியே போகவே கூடாது. இதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் இருக்கிறவங்களுக்கு கோடைக் காலத்தில் அதன் பாதிப்பு அதிக மாகும். இவங்களும் ரொம்பவே கவனமாக இருக்கணும். மருந்து களைத் தவறாமல் எடுத்துக்கணும். அடிக்கடி தண்ணீர் குடிக்கிறது, எளிதில் ஜீரணமாகும் உணவைச் சாப்பிடறது, மசாலா வகைகளைத் தவிர்க்கிறது, பழச்சாறுகளைச் சாப்பிடறது, வெளியில் போனால் குடை, தொப்பியோடு போறது... இவற்றைக் கடைப்பிடித்தாலே போதும். வியர்க்குரு போன்ற சாதாரண விஷயத்தில் தொடங்கி, மயக்கம் வரை தடுக்கலாம்'' என்றார் டீச்சர்.
நீண்ட நேரம் அங்கே இருக்க வேண்டாம் என நினைத்த மந்திரக் கம்பளம், அவர்களை மீண்டும் மாயா டீச்சர் வீட்டில் இறக்கியது. டீச்சர் அவர்களுக்குப் பழச்சாறு கொடுத்தார். அதே நேரம், அந்த முதியவரிடம் இருந்து தொலைபேசி வந்தது. பேசிவிட்டு வைத்த டீச்சர், ''அந்தத் தாத்தா பத்திரமா வீட்டுக்குப் போய்ட்டாராம். மறுபடியும் நமக்கு எல்லாம் நன்றி சொன்னார்'' என்றார்.