மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.கணேசன்

 மாயா டீச்சர் வெளியில் கிளம்பிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்தனர் சுட்டிகள்.

''டீச்சர் எங்க கிளம்பிட்டீங்க?'' என்றான் கணேஷ்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''நான் இப்ப பீச் வரைக்கும் போகலாம்னு இருக்கேன்'' என்றார் மாயா டீச்சர்.

''நல்ல வேலை டீச்சர்... என்னோட ஸ்கூல் புராஜெக்ட் விஷயமா கடலைப் பத்திதான் பண்ணனும்'' என்றான் பிரசன்னா.

''ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்'' என்றாள் சரண்யா.

மந்திரக் கம்பளத்தை வரவழைத்த டீச்சர் எல்லோரை அதில் ஏற்றி, பறக்க ஆரம்பித்தார். அவர்கள் வந்து இறங்கியது அமைதிக் கடல் பகுதி.

''நாம் இப்ப வந்திருக்கிறது'' என்று டீச்சர் முடிப்பதற்குள்...

##~##

கடலில் மிதந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருப்பவரைப் பார்த்ததும் ''சாக்கடல்'' என்று கத்தினான் கணேஷ்.

''ஆமாம்! டீச்சர் நான் கூட புக்குல படிச்சிருக்கேன்'' என்று சொன்னாள் சரண்யா.

''இவர் ஏதாவது மேஜிக் பண்ணுகிறாரோ'' என்று ஆச்சர்யப்பட்டாள் மது.

''இந்தக் கடல் தண்ணீரில் உப்பு அதிகம். அதானால், இந்தக் கடலை 'ஸீ ஆஃப் சால்ட்’ என்பார்கள். சாதாரணத் தண்ணீரைவிட இங்கு நீரின் அடர்த்தி அதிகம். அதனால்தான் இவர் மூழ்காமல் இருக்கிறார்.'' என்று மாயா டீச்சர் விளக்கினார்.

''டீச்சர் ஆங்கிலத்தில் Sea Ocean அப்படீன்னு சொல்றாங்களே... ரெண்டுத்துக்கும் வித்யாசம் என்ன டீச்சர்?'' என்றாள் மது.

''நல்ல சந்தேகம்'' என்ற டீச்சர் தொடர்ந்து... ''உலகத்தில் நீரின் பங்குதான் அதிகம். அதில் பரப்பளவைப் பொறுத்து தண்ணீரால் சூழப்பட்டப் பகுதியை கடல் என்றும், கடல்களால் இணைக்கப்பட்ட பகுதியைப் பெருங்கடல் என்றும் சொல்கிறார்கள். நமது பூமி அட்லாண்டிக், பசிஃபிக், ஆர்டிக், அண்டார்டிக், மற்றும் இந்தியப் பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ளது'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

இதில் மிகவும் பெரியது பசிஃபிக் பெருங்கடல்தான். இது 165.25 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு கொண்டது.  

''கடல் எப்படி உருவாச்சு? அதோட அடியில என்ன இருக்கு டீச்சர்?'' என்று கேள்விகளை அடுக்கினாள் சரண்யா.

''பூமி தோன்றியபோது பெரிய பெரிய சிவப்புப் பாறைகள் இருந்தன. அவை மிகவும் குளிர்ச்சியாகி, அவற்றில் இருந்த நீர் ஆவியாகி, மேகங்களாக உருவானதாம். அந்த மேகங்கள் மழையாகப் பொழிந்து நிலத்தில் இருந்த தாழ்வானப் பகுதிகளை நிரப்பியதாம். இப்படி உருவானவைதான் கடலும்(sea), பெருங்கடல்களும்(Ocean).

இந்தக் கடல்களில் ஆற்றின் மூலம் அடித்து வரப்படும் தாவரங்கள், விலங்குகள் ஆகியவை மக்கிய பிறகு, அவற்றின் உடலில் இருக்கும் தாதுக்கள் சேர்ந்து உருவாக்கும் உப்பு, கடலில் சேர்ந்துகொண்டே வருகிறது.  அதனால், கடல் நீரில் உப்பு கரிக்கிறது. கடலுக்கு அடியில் என்ன இருக்குன்னு பார்க்கப் போகலாமா?'' என்றார் மாயா டீச்சர்.

டீச்சரின் மந்திரக் கம்பளத்தின் மகிமையால் சுட்டிகளும் மாயா டீச்சரும் நேரடியாகக் கடலின் அடி ஆழத்துக்குப் போய்ச்சேர்ந்தார்கள்.

''டீச்சர் இங்க பாருங்க... ஆக்டோபஸ்!'' என்றாள் மது.

''ஆமாம்! கடல் எவ்ளோ பெரிசோ, அந்த அளவுக்கு அதில்  விந்தையான உயிரினங்கள் உள்ளன. ஆக்டோபஸ் என்பது மீன் இனத்தின் ஒரு வகை. இதன் கைகள் போல இருக்கும் எட்டு உறுப்புக்களும் அதற்கு தேவையான உணவு வகைக¬ளைப் பிடிக்க பயன்படுத்தும்.''

''டீச்சர்... இங்கே எத்தனை உயிரினங்கள் உள்ளன?'' என்றான் பிரசன்னா.  

''கடலின் அடியில் எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன. நட்சத்திர மீன், கடல் குதிரை, ஹெர்மிட் நண்டு என்று பலவகையில் உயிரினங்கள் உள்ளன. மொத்தத்தில் பத்து லட்சம் பூச்சி இனங்களும், மூன்று லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் தாவர வகைகளும், இருபத்தேழாயிரம் மீன் வகைகளும் நாலாயிரத்து ஐந்நூறு பாலூட்டி வகைகளும் உள்ளன'' என்று மூச்சு விட்டார் மாயா டீச்சர்.

''அம்மாடியோவ்!'' என ஆச்சர்யப்பட்டாள் மது.

''டீச்சர்... எப்படி கடலின் விநோதங்களைத் தெரிஞ்சிப்பாங்க?'' என்றாள் சரசு.

''கடலினை ஆய்வு செய்வதற்கு என்றே படிப்புகள் உள்ளன. கடலின் ஆழத்தில் செல்ல நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவார்கள்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''கடலினால் நமக்கு என்ன லாபம் டீச்சர்?'' என்றான் கணேஷ்.

''கொலம்பஸ், அமெரிக்கோ வெஸ்புகி, மார்கோ போலோ போன்றவர்கள் கடல் பயணங்களின் மூலம்தான் உலகின் புதுப் புது இடங்கள், நாடுகள் ஆகியவற்றை கண்டு பிடித்தார்கள்.'' என்ற டீச்சர் தொடர்ந்து... ''இன்றுவரை போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு குறைவாக செலவு பிடிக்கும் ஒரே வழி கடல் போக்கு வரத்துதான்.

அதேபோல கடல் பயணம் ஆபத்து நிறைந்ததும் கூட. இயற்கை நிகழ்வுகள் தவிர, கடற்கொள்ளையர்களால் கப்பலில் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்படும் அபாயம் உண்டு. இது இந்தக் கால சோமாலியக் கப்பல் கொள்ளையர் வரை தொடர்கிறது. அதுவும் தவிர, கடலில் இருந்து நமக்கு முத்து, பவளம், உணவுக்கும் மருத்துவத்துக்கும் மீன்கள் எனப் பலவும் கிடைக்கிறது. மேலும், கடலில் தங்கம், எண்ணெய் வளம் ஆகியவை கொட்டிக் கிடக்கிறது'' என்றார் டீச்சர்.    

''என்ன... தங்கமா? அப்படின்னா நிறைய எடுத்துகிட்டு வந்துடலாமே?'' என்றாள் சரண்யா.

''ஹா... ஆசை..! கடல் நீரில் கலந்து இருக்கும் தங்கத்தை எடுத்தால் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நாலு கிலோ தங்கம் கொடுக்கலாமாம். ஆனால், ரெண்டு மில்லி கிராம் தங்கத்தை எடுக்க ஒரு டன் கடல் நீரைச் சுத்தம் செய்ய வேண்டும். அதனால், தங்கத்தை எடுக்க நிறைய செலவு ஆகும். அதே போலத் தான் எண்ணெயும் எடுப்பதற்கு மிகவும் செலவாகும். அதனால் தான், நாம் அவற்றை விட்டு வைத்து இருக் கிறோம்'' என்றார் மாயா டீச்சர்.

மேலும் தொடர்ந்து ''கடலினால் சமீப காலத்தில் உருவாகும் சுனாமி ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுவது சோகமான விஷயம். ஆனால், இதற்கு சுயநலம் பிடித்த சில மனிதர்களின் இயற்கைக்கு எதிரான செயல்களே காரணம்'' என்று முடித்தார் மாயா டீச்சர்.  

''டீச்சர், அதோ பாருங்க பனிமலை மிதக்குது'' கத்தினாள் மது.

''இதுதான் ஐஸ்பெர்க்! ஜெர்மனி மொழியில் 'பெர்க்’ அப்படின்னா மலைன்னு அர்த்தம்'' என்றார் டீச்சர்.

''தெரியுமே! இதுபோல ஒரு பனி மலையுடன் மோதியதால்தான் டைட்டானிக் கப்பல் மூழ்கிச்சு.'' என்று தன் புத்திசாலி தனத்தை வெளிப்படுத்தினான் பிரசன்னா.  

''டீச்சர்... சுறாவைப் பார்க்கணுமே''  என்றான் பிரசன்னா.

''நான் ஏற்கனவே தியேட்டர்ல பார்த்துட்டேம்பா'' என்று கலாய்த்தான் கணேஷ்.

''டேய்... அவனை ரொம்பக் காலாய்க் காதே'' என்ற மது... ''டீச்சர் சுறாவோடப் பல்லைப் பார்த்தாலே எனக்கு பயம்'' என்றாள்.

மாயா டீச்சர், அவர்களை கடல் மட்டத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு தன் வாயைத் திறந்து கூர்மையான பற்களைக் காட்டியபடி இரையைத் தேடிக் கொண்டிருந்த சுறாவின் மீது எல்லோரையும் ஏற்றினார். அதன் முதுகில் அனைவரும் நின்று கொண்டனர்.

''சுறாக்கள் முன்னும் பின்னும் தாடையை அசைக்கும் தன்மை உடையவை. மேலும் ரத்தத்தின் வாசனையை எளிதில் உணர்ந்து தன் இரையைப் பிடிக்கும்.'' என்றார் டீச்சர்.  

''டீச்சர்... நாம் இன்னும் திமிங்கிலம், சீல் அதை எல்லாம் பார்க்கலையே'' என்றாள் சரண்யா.

''பார்க்கலாம்'' என்ற டீச்சர், ''சீல்கள் எல்லாம் வட பசிஃபிக் பிராந்தியத்தில் இருக்கும் இவை மிகுந்த குளிரையும் தாங்கும் திறன் உடையவை. நீரில் வாழும் பாலூட்டிகளில் மிகவும் பெரியது நீலத் திமிங்கிலங்கள். அதேபோல கடலில் வழும் சிறிய மீன் இனம் 'ஸ்டவுட் இன்ஃபான்ட் ஃபிஷ்’ இதன் எடை ரெண்டு மைக்ரோ கிராம்தான் இருக்குமாம். நீளம் ஏழு மில்லி மீட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.'' என்று முடித்தார் டீச்சர்.

எல்லோரையும் வீட்டில் இறக்கிவிட்ட டீச்சர் ''ஆண்டுத் தேர்வுகளுக்குத் தயாராகுங்கள்'' என்றபடி விடை பெற்றார்.