ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா
##~## |
லண்டனில், அயர்லாந்து மக்கள் குடியிருப்பு என்றே தனியாக ஒரு பகுதி உண்டு. பிரிட்டிஷ் நாடு என்பது இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ் எனும் மூன்று நாட்டு இனங்களால் ஆனது. அயர்லாந்து மக்களை ஐரிஷ் (Irish)என்பார்கள். அங்கே இருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்த ஒரு மதபோதகர் மகள் அவள். அவளது பெயர் அன்னிவுட். மிகவும் ஏழ்மையான குடும்பம்.
ஊதல் காற்று வீசும் பனிக் காலம். அவளிடம் அரைத் துண்டு ரொட்டி இருந்தது. அன்று அவளுக்கு ஐந்தாவது பிறந்தநாள். அன்றைக்குத்தான் அன்னிவுட் தனது தந்தையை இழந்தாள். கல்லறைச் சாலையில் விலை மலிவான சவப்பெட்டியை வாங்கி வர அம்மாவுடன் சென்றாள். அப்பாவின் மறைவுக்காக அழுவதைவிட, வாட்டும் வறுமைக்கு இனி என்ன செய்யப்போகிறோம் எனும் அச்சம் அவர்களை ஆட்டிவைத்தது.
சவப்பெட்டி சாலையில் அன்னி பார்த்த ஒரு காட்சி... அவள் வயதுடைய ஒரு பையன் சவப்பெட்டி செய்பவனின் உதவியாளனாக இருந்தான். அழுது அழுது அவனது கண்கள் உப்பி இருந்தன. அவள் அவனிடம் ஓடினாள். ''உனக்குப் பசிக்கிறதா?'' என்று கேட்டாள். 'ஆமாம்’ எனத் தலையசைத்து அழுதான் அவன்.

''இந்தா, இது என் பிறந்தநாளுக்கு உனக்கு நான் தரும் பரிசு'' எனச் சொல்லி, தன்னிடம் இருந்த அந்த அரைத் துண்டு ரொட்டியை அவனிடம் கொடுத்தாள். பிறரின் மகிழ்ச்சியில் தனது துயரத்தை மறக்கும் வித்தையை அப்போதே அவள் கற்றிருந்தாள்.
அம்மாவும் அன்னிவுட்டும் ஏதேதோ வேலைகள் பார்த்தார்கள். ஹார்ட்வர் எனும் பிரபலமான பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சந்தில் மிகச் சிறிய உணவு விடுதியை அமைத்தார்கள். அன்னி அந்த உணவகத்தில் அம்மாவுக்கு உதவியாக இருந்தார். அங்கே வந்த மாணவர்களுடன் பழகி, எழுதப் படிக்கக் கற்றாள். அந்தக் கடைக்கு அவ்வப்போது எலன் மாரியாட் என்கிற ஆசிரியை வருவார். ஒருநாள், அன்னிவுட் பைபிள் வாசகங்களை உரக்கச் சொல்வதைக் கேட்டு ஈர்க்கப்பட்டார். விளைவு, அன்னிவுட் அதே ஹார்ட்வர் பள்ளியில் மாரியாட் ஆசிரியையின் செலவில் கல்வி கற்க சேர்க்கப்பட்டாள்.
பள்ளியில் கற்றதைவிட அன்னிவுட் தனக்குத்தானே கற்பித்துக்கொண்டது அதிகம். விரைவில் பள்ளியே அவளைப் பற்றிப் பேசத் தொடங்கியது. ஒரு சிறுவர் கூட்டம் தினமும் மாலையில் உணவகத்தில் காத்திருக்கும். எளிய வழியில் கணிதம் மற்றும் ஐரிஷ் மொழிப் பாடத்தை அந்தச் சிறுவர்களுக்குக் குட்டி ஆசிரியை ஆகி வகுப்பெடுத்தபோது அன்னிவுட்டுக்கு வயது எட்டு.
வறுமையில் வாடிய லண்டன் குடிசைப் பகுதிக் குழந்தைகளுக்கு ரொட்டித் துண்டுகளும் கல்வியும் புகட்ட, 'பசித்த சிறுவர் இல்லாச் சமூகம்’ (No more - Hungry Children) எனும் குழுவை அன்னிவுட் அமைத்து வழி நடத்தியபோது அவள் வயது 11.
விரைவில் ஆசிரியை எலன் மாரியாட், தனது ஐரோப்பியப் பயணத்தில் தன்னோடு வரும்படி அன்னிவுட்டை அழைத்தார். அந்த இளம் பிராயத்தில் பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்த அன்னிவுட், பிற்காலத்தில் அன்னி பெசன்ட்டாக, தியோசோபிகல் சொஸைட்டியை ஏற்படுத்தினார்.
இந்திய விடுதலைக்காகவும் உழைத்து, எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார் அன்னி பெசன்ட் அம்மையார் என்ற சுட்டி நாயகி.