பூனை வாங்கலையோ பூனை !கே.யுவராகம் படங்கள் : அன்னை
##~## |
அறை வாசலில் நின்றபடி குரல் கொடுத்தார்கள் சுட்டிகள். அந்தக் குரலில் அப்படி ஒரு பரபரப்பான குஷி. ஷாலினிக்கு நாளை பிறந்தநாள். அவளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு மாயா டீச்சர் கேட்க, ''எனக்குப் பூனை வளர்க்கணும்னு ஆசை. பூனையை வாங்கிக் கொடுங்க. என் அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கிடுறேன்'' என்றாள் ஷாலினி.
அதற்குத்தான்இப்போது செல்கிறார்கள். அறையிலிருந்து வெளியே வந்த டீச்சர், ''வாங்க கிளம்பலாம்'' என்றபடி படிகளில் ஏறினார்.
''என்ன இது? கிளம்பலாம்னு சொல்லிட்டு மாடிக்குப் போறாங்க'' என்று திகைத்தான் கதிர்.
''இதுகூடத் தெரியாதாடா... ரெகுலர் மேன், ஜட்டி போட்டு பேன்ட் போடுவான். சூப்பர்மேன், பேன்ட் போட்டு ஜட்டி போடுவான்னு சொல்ற மாதிரி, மத்தவங்க வெளியே போனா, கதவை வெளியே லாக் பண்ணிட்டுக் கிளம்புவாங்க. மாயா டீச்சர் உள்ளே லாக் பண்ணிட்டுக் கிளம்புவாங்க'' என்றான் அருண்.
நான்கு பேரும் மொட்டைமாடிக்கு வந்தார்கள். அங்கே மாயா டீச்சர் மந்திரக் கம்பளத்தைத் தரையில் போட்டார். அடுத்த நொடி அது மெகா சைஸ் பூனையாக மாறியது. அந்தப் பூனைக்கு இறக்கைகள் இருந்தன. சுட்டிகள் கொஞ்சம் ஜர்க் ஆனார்கள். ''பயப்படாம வாங்க. பூனை வாங்கக் கடைக்குப் போறதுக்கு முன்னாடி வேற சில இடங்களுக்குப் போய்ட்டு வரலாம்'' என்றபடி டீச்சர் அதன் மீது ஏறிக்கொண்டார்.
''நல்லவேளை ஷாலினி, நீ பிறந்தநாள் பரிசா புலியைக் கேட்கலை'' என்றாள் கயல். அவர்கள் ஏறிக்கொண்டதும் பூனை வானில் பறந்தது.

''செல்லப் பிராணி என்றதும் ஞாபகம் வர்றது நாய்தான். அந்த அளவுக்குப் பூனையை வளர்க்க விரும்புவதில்லை. உன் அப்பா எப்படி பெர்மிஷன் கொடுத்தார் ஷாலினி?'' என்று கேட்டார் டீச்சர்.
''அவர் உடனே ஒப்புக்கலை டீச்சர். நான் பிடிவாதமா இருந்தேன். இதுக்காக, எனக்கு ரொம்பப் பிடிச்ச கார்ட்டூன் சேனலை ரெண்டு நாளாப் பார்க்கலை. என் தம்பி ஐஸ்க்ரீமையும் சாக்லேட்டையும் சாப்பிட்டப்ப, கஷ்டப்பட்டு மனசை அடக்கிவெச்சேன்'' என்றாள் ஷாலினி.
''எப்படியோ ஜெயிச்சுட்டே. ஆனா, இதுக்கு அப்புறமும் நீ நிறைய சவால்களைச் சந்திக்கணும் ஷாலினி. ஏன்னா, நாய் மாதிரி மனிதர்களிடம் சுலபமாக பூனை பழகிடாது. ஜிம்மினு கூப்பிட்டா, உடனே ஓடி வந்துடாது. நீ இஷ்டப்பட்ட நேரத்தில் தூக்கிவெச்சுக் கொஞ்ச முடியாது. அதுக்கு உன்கிட்டே விளையாட மூடு வரணும். அப்போதான் பக்கத்தில் வரும். சங்கிலி போட்டு வாக்கிங் கூட்டிட்டுப் போக முடியாது. காட்டில் சுதந்திரமாகத் திரியும் புலி, சிங்கம் போன்றவற்றின் குடும்பத்தைச் சேர்ந்தது பூனை. அதனால், அந்த மரபணுக் குணங்கள் பூனையிடமும் இருக்கு. கோபம் வந்துட்டா, மேலே பாய்ஞ்சு பிறாண்டிரும்'' என்றார் டீச்சர்.
''ஏன் டீச்சர் இப்படி பயமுறுத்துறீங்க? பாவம் ஷாலினி'' என்றான் அருண்.
''சரி, இது விஷயமா அப்புறம் பேசலாம். இப்போ நாம முக்கியமான இடத்துக்கு வந்திருக்கோம்'' என்றார் டீச்சர்.

பூனை வடிவில் இருந்த மந்திரக் கம்பளம் கீழே இறங்கியது. ''அட, பிரமிடுகள்'' என்றான் கதிர்.
''நாம இப்போ எகிப்துக்கு வந்திருக்கோம். அநேகமா பூனையை நேசிக்க ஆரம்பிச்ச முதல் மனிதர்கள் இவங்களாகத்தான் இருக்கணும். பூனையைக் கடவுளின் அவதாரமாக நினைச்சு சிலை வடித்து வழிபட்டாங்க. பூனையைக் கொன்ற குற்றத்துக்காக மரண தண்டனைகூட விதிக்கப்பட்டது. வீட்டில் வளர்க்கும் பூனை இறந்துபோனால், தங்கள் புருவங்களை மழிச்சுக்கிட்டு துக்கம் கொண் டாடுவாங்க'' என்றார் டீச்சர்.
பூனைக்காக கட்டப்பட்ட ஒரு கோயிலுக்குள் சுற்றிப் பார்த்தார்கள். ''எகிப்தியர்கள் மட்டும்தான் பூனையை நேசிச்சாங்களா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.
''சீனர்கள், செவ்விந்தியர்கள், ரோமானியர்களின் மதங்களிலும் பூனை முக்கிய இடத்தில் இருந்தது கதிர். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பூனை, சூனியக்காரர்களின் விலங்காக எப்படியோ சித்தரிக்கப்பட்டுருச்சு. அதனால் என்ன ஆச்சு தெரியுமா?'' என்றார் டீச்சர்.
இப்போது அவர்கள் சென்ற இடம் பண்டைய ஐரோப்பியப் பகுதி. அங்கே ஒரு கும்பல், தாங்கள் வேட்டையாடிய பூனைகளுடன் தெருக்களில் உற்சாகமாக ஆடிக்கொண்டு வந்தார்கள். ''பூனையைக் கொன்றால், சூனியக்காரர்களையே ஒழிக்கலாம்னு சொல்லிக்கிட்டு இஷ்டத்துக்கு வேட்டையாடினாங்க. அதனுடைய விளைவு... எலிகள் அதிகமாச்சு. ஐரோப்பாவை பிளேக் நோய்த் தாக்கினப்ப லட்சக்கணக்கான மக்கள் இறந்தாங்க'' என்றார் டீச்சர்.
''டீச்சர் எனக்கு ஒரு டவுட்டு, நாம எவ்வளவுதான் பாலும் ரொட்டியும் கொடுத்து வளர்த்தாலும் எலியைத்தான் பூனை விரும்பிச் சாப்பிடுமா?'' என்று கேட்டாள் ஷாலினி.

''தப்பு ஷாலினி. நிறையப் பேர் நினைக்கிற மாதிரி பூனைக்குப் பிடிச்ச உணவு எலி கிடையாது. தான் வேட்டையாடும் எல்லா எலிகளையும் சாப்பிடுறதும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், எலியை வேட்டையாடுவது பூனைக்கு ஒரு பொழுதுபோக்கு மாதிரிதான். வேறு உணவு கிடைக்காதபோதுதான் எலியைச் சாப்பிடும்'' என்றார் டீச்சர்.
''அப்பாடா... இப்பத்தான் நிம்மதியா இருக்கு. அம்மாகூட இதைச் சொல்லித்தான் பூனை வேண்டாம்னு மறுத்தாங்க'' என்றாள் ஷாலினி.
அவர்கள் நிகழ்காலத்துக்குத் திரும்பினார்கள். இப்போது அவர்கள் இருந்தது செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் ஒரு பெரிய கடையில். ''முன்னாடியே சொன்ன மாதிரி பூனையை வளர்க்க அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், பூனையை விற்கும் கடைகளும் குறைவு. சொல்லப்போனால், நாய்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. பூனைகள் மொத்தமே 30 வகைகள்தான் இருக்கு. அதில் சயாமீஸ் நாட்டு பூனைகள் உயர்ந்த வகை. வெளிநாடுகளில் பெரும் பணக்காரர்கள் இந்தப் பூனையை வளர்ப்பதைக் கௌரவமா நினைக்கிறாங்க. இதேபோல பாரசீகத்தின் ஆங்கோரஸ், துருக்கியின் வான் கேட் ஆகிய பூனைகளுக்கும் நல்ல மவுசு'' என்றார் டீச்சர்.
அவர்கள் அங்கே இருந்த பூனைகளைப் பார்த்தவாறு நடந்தார்கள். ''அங்கே பாருங்க முயல் மாதிரி புசுபுசுனு. இதுவும் பூனையா?'' என்று வியப்புடன் கேட்டாள் கயல்.
''ஆமா... அந்தப் பூனையின் பெயர் மாங்ஸ் பூனை (விணீஸீஜ் நீணீt). மாங்ஸ் என்கிற தீவில் காணப்படும் அபூர்வமான வால் இல்லாத பூனை'' என்றார் டீச்சர்.
அப்போது அங்கே வந்த கடைக்காரரிடம் பேசி, ஒரு பூனையைத் தேர்வு செய்தார்கள். ''இப்போ இந்தப் பூனைக்கு மூன்று வயது. 12-ல் இருந்து 14 வயது வரை உயிர் வாழும். முதல்ல கொஞ்ச நாளைக்கு யாரிடமும் ஒட்டாமல் தனியாத் தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாதான் உங்களோடு பழகும். பூனையைத் தூக்கும்போது ரெண்டு கையையும் உடம்போட நடுப் பகுதிக்குக் கொண்டுபோய் மார்போடு சேர்த்துத் தூக்கணும். கழுத்தை மட்டும் பிடிச்சுத் தூக்கக் கூடாது. இதுக்குனு தனியா சாப்பாடு தட்டு வெச்சுக்கங்க. அந்தச் சாப்பாட்டுத் தட்டை தினமும் சுத்தப்படுத்தணும். அப்படி செய்றப்ப, வேற வேற பார் சோப்பை யூஸ் பண்ணாதீங்க. ஏன்னா, தட்டிலிருந்து கொஞ்சம் வாசனை மாறினாலும் பூனை அதில் இருக்கிற சாப்பாட்டைச் சாப்பிடாது. பூனைகள் உடம்பை அடிக்கடி நக்கி தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கும். அதனால், நாயைக் குளிப்பாட்டுகிற மாதிரி பூனையைக் குளிப்பாட்ட வேண்டியதில்லை'' என்று ஏகப்பட்ட டிப்ஸ்களைக் கொடுத்தார் கடைக்காரர்.
ஒரு கூடையில் பூனையை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். மாயா டீச்சரின் வீட்டுக்குவந்து ஒரு தட்டில் பாலை ஊற்றி வைத்தார்கள். அது அவர்களைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டு, பாலை நக்கிக் குடிக்க ஆரம்பித்தது.
''கடைக்காரர் சொல்லாத சில விஷயங்களை நான் சொல்றேன் கேட்டுக்க ஷாலினி. எப்படி நாய் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாலை ஆட்டி நன்றி தெரிவிக்குமோ, அப்படி பூனையின் வால் அசைவை வைத்தும் சில விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம். பூனை வாலை நேராக ஆட்டினால், மகிழ்ச்சியாக இருப்பதாக அர்த்தம். அதே வாலை பக்கவாட்டில் ஆட்டினால், மூடு சரியில்லை தொந்தரவு பண்ணாதேனு அர்த்தம். மேல் நோக்கித் தூக்கி நிறுத்திக் காட்டினால், பசியாக இருப்பதாக அர்த்தம். உடம்பை வளைச்சுத் தரையோடு தரையாக வாலை வெச்சுக்கிட்டா, யார் மேலேயோ பாய்வதற்குத் தயாராக இருக்கிறதா அர்த்தம். உன் கால்களில் தன்னுடைய உடம்பைத் தேய்த்தால், தூக்குவதற்கு பெர்மிஷன் கொடுக்கிறதா அர்த்தம். தூக்கிக் கையில் வெச்சுக்கும்போது தனது கால்களால் உன் மார்பில் தட்டினால், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறதா அர்த்தம். அப்போ நீ பூனையோடு தாராளமாக் கொஞ்சி விளையாடலாம்'' என்றார் டீச்சர்.
''அடேங்கப்பா... இவ்வளவு விஷயம் இருக்கா? ரொம்பத் தேங்க்ஸ் டீச்சர்'' என்றாள் ஷாலினி.
''எல்லாம் சரி, இந்தப் பூனைக்குப் பேர் வைக்கணுமே. நான் ஒரு யோசனை சொல்றேன். நம்ம டீச்சர் ஞாபகமா இதுக்கு மாயான்னே வெச்சுடுவோம்'' என்றான் கதிர்.
''என்னது..? என்னுடைய பேரா?'' என்று முறைத்த மாயா டீச்சர் அவனை விரட்டினார்.
''டாம் அண்ட் ஜெர்ரியைப் பார்க்கிற மாதிரியே இருக்கு'' என்று எல்லோரும் கைதட்டினார்கள்.