மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

தார் ஓடும் சாலை !கே.யுவராஜன்,பிள்ளை

##~##

''டீச்சர்... டீச்சர்'' என்று வாசலில் நின்றவாறு குரல்கொடுத்தார்கள் சுட்டிகள். கால்களைத் தரையில் வைப்பதும் எடுப்பதுமாக இருந்தார்கள்.

வெளியே வந்த டீச்சர், ''என்ன ஆச்சு? எல்லோரும் பரதநாட்டியம் ஆடிட்டு இருக்கீங்க?'' என்று கேட்டார்.

''பக்கத்துத் தெருவில் ரோடு போட்டுட்டு இருக்காங்க. இந்த அருண் சொல்லச் சொல்லக் கேட்காம, அங்கே காலை வெச்சிட்டான். அவனை இழுக்கப்போய் எங்க செருப்புகளிலும் தார் ஒட்டிக்கிச்சு'' என்றாள் கயல்.

தாங்கள் அணிந்திருந்த செருப்புகளைத் தண்ணீரால் நன்றாகக் கழுவி, தரையில் தேய்த்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். ''டீச்சர், இந்தத் தார் எப்படிக் கிடைக்குது?'' என்று கேட்டான் கதிர்.

''ஆஸ்பால்ட் (Asphalt) என்ற எண்ணெய்த்தன்மை நிறைந்த பாறையிலிருந்து தார் எடுக்கப்படுது. இதை பிட்டுமென் (Bitumen) என்றும் சொல்வாங்க. பெட்ரோல், நிலக்கரியைப் போலதான் இந்தப் பாறையும் உருவானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்பரப்பாக இருந்த இடங்கள் மண்ணில் மூழ்கியன. அழுத்தம் காரணமாக ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆஸ்பால்ட் பாறைகள் உருவாச்சு'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை வெண்திரையாக மாற்றினார். அதில் காட்சிகள் தெரிந்தன.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''இந்தப் பாறைகளைக் கி.மு.625 காலகட்டத்திலேயே பாபிலோனாவில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள்  இருக்கு. அந்த ஆஸ்பால்ட் கற்களில் அவர்கள் ஓவியங்கள் வரைஞ்சிருக்காங்க'' என்றார் டீச்சர்.

''ரோடு போடுறதுக்கு எப்போ யூஸ் பண்ணாங்க?'' என்று கேட்டான் அருண்.

''ஆரம்பத்தில் இந்தப் பாறையிலிருந்து எடுக்கும் எண்ணெயை, கால்நடைகளின் தோல் வியாதிக்கு மருந்தாக யூஸ் பண்ணினாங்க. கிரேக்க மருத்துவர் ஒருவர் இந்தச் செய்தியை ஒரு நூலில் குறிப்பிட்டுருக்கார். பாறைகளை வெட்டி, வண்டியில் எடுத்துட்டுப் போகும்போது, சில பாறைத் துண்டுகள் கீழே விழும். வெயிலில் அது உருகி, மண் சாலையில் படியும். அதன் மேல் வண்டிச் சக்கரம் ஏறும்போது மென்மையாக இருப்பதைக் கவனிச்சாங்க. இப்படி சுவிட்சர்லாந்தில் டிராவர்ஸ் என்ற இடத்திலிருந்து ஆஸ்பால்ட் பாறைகளை எடுத்துட்டுப் போக, அந்த மலைப் பகுதி அருகிலேயே சின்னதா ஒரு சாலை போட்டாங்களாம்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

இன்னொரு கதையும் உண்டு. 1601-ல் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு விறகுவெட்டி, காட்டுப் பகுதியில் சமைத்துச் சாப்பிடும்போது, அடுப்புத் தீ அணையாமல் இருக்க, இந்தப் பாறைத் துண்டுகளை அடுப்பைச் சுற்றியும் வைத்தானாம். அது உருகி மண்ணில் ஒட்டியதாம். ரொம்ப நேரத்துக்குப் பிறகு அதில் கால் வைத்தபோது மென்மையாக இருந்ததாம். பிறகு, இதைச் சாலை போடுறதுக்குப் பயன்படுத்தினாங்களாம். தண்ணீரால் பாதிக்காத இதன் பிசின்தன்மையை உணர்ந்து, சாக்கடை மற்றும் நீர்க் குழாய்கள், கப்பல்களின் இணைப்புகள் எனப் பலவற்றிலும் பயன்படுத்தினாங்க'' என்றார் டீச்சர்.

''நகரத்து சாலைக்கு முதன்முதலில் தார் ரோடு போட்டது எங்கே?'' என்று கேட்டாள் ஷாலினி.

''தாமஸ் டெல்ஃபோர்டு என்பவர், ஸ்காட்லாந்தில் 1803 முதல் 1821 வரை சுமார் 900 மைல்களுக்கு இந்த ஆஸ்பால்ட்டைப் பயன்படுத்தி சாலையை உருவாக்கியிருக்கார். பிறகு அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குத் தார் சாலை ஃபார்முலா வந்துச்சு. 1838-ல் பாரிஸ் நகரின் நடைபாதைகளுக்கு ஆஸ்பால்ட்டைப் பயன்படுத்தினாங்க. இப்படி எல்லா நாடுகளுக்கும் தார்ச் சாலை வந்துச்சு'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''டீச்சர், இப்பத்தான் ஞாபகம் வருது. ஒரு நாட்டில் தார் ஏரியே இருக்காமே'' என்றான் கதிர்.

''ஆமா, அந்த ஏரியின் பேர் பிட்ச் லேக். அங்கேயும் ஆஸ்பால்ட் பாறைகள் இருக்கிற சில இடங்களுக்கும் ஒரு ரவுண்ட் போகலாம்'' என்றார் டீச்சர்.

வெண்திரையாக இருந்த மந்திரக் கம்பளம், தார்ச் சாலையைப் போல் கறுப்பாக மாறி, அவர்களைச் சுமந்துகொண்டு பறந்தது. அமெரிக்கக் கண்டத்தின் கரிபியன் தீவுகளுக்கு மேலாகப் பறந்த கம்பளம், ஒரு தீவில் இறங்கியது. ''நாம இப்போ வந்திருக்கிறது டிரிடினாட் டொபாக்கோ என்ற நாட்டின்  லா ப்ரீ (La Brea) என்ற இடத்துக்கு. அதோ, அதுதான் பிட்ச் லேக்.'' என்றார் டீச்சர்.

அங்கே சில அடிகள் எடுத்துவைத்தால், தொட்டுவிடும் தூரத்தில் கரிய நிறத்தில் மிகப் பெரிய ஏரி தெரிந்தது. அந்த ஏரியிலிருந்து தார்க் குழம்பை எடுக்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

''இந்த ஏரி எவ்வளவு ஆழம் இருக்கும் டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஏரியின் ஆழம் 75 மீட்டர்கள். கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவுக்கு விரிஞ்சு இருக்கு. 19-ம் நூற்றாண்டில் பெட்ரோலைத் தேடி இந்தத் தீவுக்கு வந்தபோது இந்த ஏரியைக் கண்டுபிடிச்சாங்க. கடலிலிருந்து பார்த்தப்ப பெரிய கறுப்புப் பாறை இருக்கிறதா நினைச்சாங்க. கிட்டே வந்து பார்த்தப்பதான் இந்தக் கறுப்புப் பொக்கிஷத்தைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. பக்கத்தில் வரும்போதே கந்தக நெடி திணறவெச்சிருக்கு. மேலே தண்ணியாக இருக்கும் தார், சில அடிகளில் கெட்டியான குழம்பாக இருக்கும். இங்கே தினமும் 200 பேர் தார் எடுக்கும் பணியில் ஈடுபடுறாங்க. ஆண்டு முழுவதும் எடுத்தாலும் 30 செ.மீ. ஆழம்தான் குறையுது. இந்த ஏரியைப் பார்க்கிறதுக்காக ஆண்டுக்கு 20,000 சுற்றுலாவாசிகள் வர்றாங்க'' என்றார் டீச்சர்.

''இந்த ஏரி எப்படி உருவாச்சு?'' என்று கேட்டாள் ஷாலினி.

''இதற்கான சரியான பதிலை இதுவரைக்கும் கண்டுபிடிக்கலை. ஆஸ்பால்ட் பாறைகள் இருந்த இடத்தில் எரிமலைக் குழம்பு ஏற்பட்டு இப்படி உருவாகி இருக்கலாம்னு சொல்றாங்க'' என்றார் டீச்சர்.

அங்கே இருந்து கிளம்பிய மந்திரக் கம்பளம், சில புகழ்பெற்ற ஆஸ்பால்ட் பாறைப் பகுதிகளுக்குச் சென்றது. சுட்டிகள் அந்தப் பாறைகளில் சறுக்கு மரம்போல் வழுக்கி விளையாடினார்கள்.

மீண்டும் அவர்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, பக்கத்துத் தெருவில் சாலைப் பணிகள் முடிந்து, ஆட்கள் கிளம்பத் தயாராக இருந்தார்கள். ''சென்னை சுற்றுப் பகுதியில் மட்டும் சுமார் 300 கிலோ மீட்டர் நீளத்துக்கு 330-க்கும் மேற்பட்ட பேருந்துச் சாலைகள் இருக்கு. இந்தப் பேருந்துச் சாலையை அமைக்க சதுர கிலோ மீட்டருக்கு 265  ரூபாய் செலவாகும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கணும். இப்போ சில இடங்களில் சிமென்ட் சாலைகள் போடுறாங்க. இதற்கான செலவு அதிகமாக இருந்தாலும், அடுத்த 20 வருடங்களுக்குப் புதுப்பிக்க வேண்டியதில்லை'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

அவர்கள் வீட்டை அடைந்தார்கள். ''இவ்வளவு சீக்கிரமா சாலையைப் போட்டுட்டாங்களே, எப்படி?'' என்று கேட்டாள் கயல்.

''நவீன இயந்திரங்கள் வந்துட்டதால் இப்போ தார்ச் சாலைகள் போடுறது சுலபமாயிருச்சு. ஆனாலும், ஒவ்வொரு முறையும் சாலையைப் போடுறதுக்கு முன்னாடி, 40 மில்லி மீட்டர் ஆழத்துக்குத் தோண்டி, பழைய சாலையை எடுத்துட்டுப் போடணும் என்பது விதிமுறை. அதுதான் நல்லதும்கூட. ஏன்னா, சாலையின் மட்டம் உயர்ந்துட்டே போனால் இரண்டு பக்கங்களிலும் உள்ள கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மழைக் காலத்தில் தண்ணீர் கட்டடங்களுக்கு உள்ளே வந்துரும். மேலே மேலே போடுறதால் சாலையும் சீக்கிரமே பழுதாகிடும். ஆனால், பல இடங்களில் விதிமுறைப்படி சாலையைப் போடுறதில்லை. அமைச்சர்கள் வருகை அல்லது முக்கியமான நிகழ்ச்சிகளின்போது பழைய சாலை மீதே அவசர அவசரமாக புதிய சாலையைப் போட்டுடுறாங்க'' என்றார் டீச்சர் வருத்தமான குரலில்.

''நீங்கள் சொல்றது சரிதான் டீச்சர், அங்கே பாருங்க'' என்று எதிரே இருந்த சுவரைக் காட்டினான்.

அங்கே  அமைச்சர் ஒருவரின் வருகையை அறிவிக்கும்  போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.