Published:Updated:

இனிதாகக் கற்போம் தமிழ் !

இனிதாகக் கற்போம் தமிழ் !

##~##

நாம் இதுவரை 14 மெய் எழுத்துகள், 14 உயிர்மெய் எழுத்துகளையும் சேர்த்து மொத்தம் 28 எழுத்துகளைப் பழகி உள்ளோம். இந்த 28 எழுத்துகளே படிப்பதற்கும் எழுதுவதற்கும் மிக முக்கியமானவை. அதில் நீங்கள் கற்றுத்தரும் பயனாளி சிறப்பாகப் பழகி விட்டார் அல்லவா? வாழ்த்துகள்!

தமிழ் எழுத்துகளை, மெய் எழுத்து 18, உயிர் எழுத்து 12, உயிர்மெய் எழுத்து 216, ஆய்த எழுத்து 1 என்று வகைப்படுத்தலாம். மொத்தம் 247 எழுத்துகள்.

ஆங்கிலம் 26 எழுத்துகள்தானே? தமிழில் 247 எழுத்துகளா என்று மலைத்துப்போக வேண்டாம். உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்துகளையும் நன்றாகப் பழகிவிட்டால்போதும், மற்றவை அதனை ஒட்டியே வரும்.

இந்தப் பகுதியில் நான்கு அட்டைகளில் எட்டு எழுத்துகள் தரப்பட்டுள்ளன.

ழ் ழ, ங் ங, ஞ் ஞ, ற் ற

இந்த எழுத்துகள் நாம் எழுதும்போதும் படிக்கும்போதும் அதிகம் பயன்படுவது  இல்லை என்றாலும், இவற்றைத் தெளிவாக கற்றுக்கொள்ளல் முக்கியமானது.

இனிதாகக் கற்போம் தமிழ் !

தமிழ் மொழியின் தனிச் சிறப்பைத் தரும் ழ என்ற எழுத்தை எப்படி ஒலிப்பது என்பதை

இனிதாகக் கற்போம் தமிழ் !

தெரிந்துகொள்ள அடுத்தப் பக்கத்தில் உள்ள படத்தைப் பாருங்கள்.

நாக்கை, படத்தில் காட்டியவாறு மடித்து, மேல் அண்ணத்தில் ஒட்டி வைத்துக் கொண்டு, வாயை அகலமாக்கி, மடிந்த நாக்கின் இருபுறமாகவும் காற்று வெளியே செல்லுமாறு  ழ என்று ஒலிக்கவும்.  கண்ணாடியின் முன் நின்று சொல்லிப்பார்த்தால், எளிதில் பழகிவிடும். 'ழ’ எழுத்து வரும் பழம், வாழை, மழை, அழகு, தொழில், வழக்கம், பழக்கம், பழுத்த போன்ற சொற்களையும்  ஒலித்துப் பழகினால், மனதில் நன்றாக பதியும்.

ஞ, ங இரண்டு எழுத்து களையும் ஒலிக்கும்போது மூக்கால் சொல்வதுபோல இருக்கிறதா? இந்த எழுத்துகள் வரும் சொற்களைப் படித்தால், இந்த எழுத்துகள் சுலபமாக ஒலிக்கப் பழகலாம். பஞ்சம், கஞ்சன், மஞ்சு, மஞ்சள், நெஞ்சு, கொஞ்சம், தங்கம், சங்கம், பங்கு, மங்களம், தாங்கள், உங்கள், எங்கள் போன்ற சொற்களை வாய்விட்டு உரத்து ஒலித்துப் பழகுவது நல்லது.

ற், ற - இந்த எழுத்துகளைத் தனியாக ஒலித்தால் ற் (irr),  ற (rra)என்றும் இரண்டு எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தால் ற்ற (itra) என்று ஒலிக்கும். உதாரணமாக கீழுள்ள சொற்களை ஒலித்துப் பாருங்கள்.

கற்ற, மற்ற, பற்ற, வற்றல், குற்றம், நாற்று, பற்று, புற்று

இனிதாகக் கற்போம் தமிழ் !

இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்ட எழுத்து களையும் சொற்களையும் பத்திரிகைகளில் வட்டமிட்டுப் பார்ப்பது இன்னும் எழுத்துகள் மனதில் ஆழமாக பதிய உதவும்.

இந்தப் பகுதியோடு சேர்த்து 18 மெய் எழுத்துகளையும் 18 உயிர்மெய் எழுத்துகளையும் நீங்கள் கற்றுத்தரும் பயனாளிக்கு கற்றுத் தந்துவிட்டீர்கள். தமிழ் கற்றுக்கொள்வதற்கான முக்கியமான முதல் படியைக் கடக்க வைத்துவிட்டீர்கள். இனி வரும் பகுதிகள் மிக எளிமையானவை... இனிமையானவை!

             - தொடர்ந்து கற்போம்...