கனவு ஆசிரியர்

##~## |
உடற்கல்வி ஆசிரியரிடம் மாணவர்கள் பொதுவாக ஒருவித பயம் கலந்தே பேசுவார்கள். ஆனால், எல்லா மாணவர்களும் நண்பருடன் பழகுவதுபோலவே சேகரனோடு பழகுகிறார்கள். அவர் வரச்சொல்லும் நேரத்துக்கு வருகிறார்கள். மிக ஆர்வத்தோடு பயிற்சி மேற்கொள்கிறார்கள். இவை எல்லாம் எப்படி நடந்தது?
''விளையாட்டின் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் உடற்கல்வி ஆசிரியரானேன். அதனால், எனது பணியை மிகுந்த விருப்பத்துடன் செய்கிறேன்'' என்கிறார் சேகரன்.

ஒரு பால்காரரின் மகனுக்கு ஓட்டத்தில் ஈடுபாடு இருந்தும் பெற்றோர் அந்த மாணவனைப் பயிற்சிக்கு அனுப்பவில்லை. அப்போது, சேகரன் அந்த மாணவனின் வீட்டுக்குச் சென்று, பெற்றோரிடம் அவனுடையத் திறமையை எடுத்துக்கூறி அவர்களைச் சம்மதிக்க வைத்தார். போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நுழைவுக் கட்டணத்தைப் பெரும்பாலும் இவரே கட்டிவிடுகிறார். இவரின் வருகைக்குப் பிறகு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் இந்தப் பள்ளியின் மாணவர்கள் பரிசுகளைக் குவிக்கிறார்கள். வினோத் எனும் மாணவர் மாநில

அளவிலான ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். யோகேஷ் மாவட்ட அளவிலான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
2011-12 கல்வி ஆண்டில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியைப் படப்பை மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது சேகரனின் முயற்சிகளில் முக்கியமானது. ''கிராமப் பள்ளியில் இதுபோன்ற பெரியப் போட்டியை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி நிறுவனர்களை அழைத்திருந்தோம். விழாவில் பங்கேற்றவர்கள், 'படப்பை பள்ளியில் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு எங்கள் கல்லூரியில் இலவச சீட் தருகிறோம்’ என்று சொன்னார்கள். ஓர் ஆசிரியராக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்த நேரம் அதுதான்'' என்கிறார் சேகரன்.
இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தையும் நான்காம் இடத்தையும் பிடித்த யோகேஷ், சிவா ஆகிய இருவரையும் முறையான மற்றும் கடுமையான பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து தயார்படுத்தியவரும் இவர்தான்.
தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்களும் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு செய்துவரும் உதவிகளையும் மறக்காமல் குறிப்பிடுகிறார் சேகரன்.
''ஒரு மாணவர் ஓடும் விதத்தை வைத்தே இவர் திறமையாவனர்தானா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகொடுத்தால், மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள். இதை நான் வாய்வார்த்தையாகச் சொன்னபோது சிலர் நம்பவில்லை. சில விஷயங்களைச் சாதித்துக் காட்டிய பிறகு பெரும் உதவிகளைச் செய்துவருகிறார்கள். இந்த நிலை தொடர்வதோடு அரசின் உதவிகளும் அதிகரித்தால் எங்கள் பணி இன்னும் கொஞ்சம் சுலபமாகிவிடும். அர்ப்பணிப்போடு பயிற்சி எடுத்துவரும் எங்கள் பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக்கில் இடம்பெறும் காலம் வெகுதூரமில்லை'' என்கிற சேகரன் கண்களில் நம்பிக்கை ஒளிர்கிறது.
அந்த நம்பிக்கை ஜெயிக்கும் என்பது அங்கே பயிற்சியில் இருந்த மாணவர்களின் சுறுசுறுப்பில் தெரிந்தது!