மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - சார்லஸ் டார்வின் !

சுட்டி நாயகன் - சார்லஸ் டார்வின் !

சுட்டி நாயகன் - சார்லஸ் டார்வின் !
##~##

அந்தக் குட்டிப்பையன் சார்லஸுக்கு பள்ளிக்கூடத்தைவிட அதைச் சுற்றி அமைந்திருந்த பெரிய தோப்பு மிகவும் பிடித்திருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து ரகசியமாக வெளியேறி தோப்புக்கு வந்துவிடுவான். ஊரில் பிரபலமான டாக்டர் வீட்டுப்பிள்ளை என்பதால், அவனை எங்கே பார்த்தாலும் மற்றவர்கள் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்படியும் எப்படியோ மற்றவர்கள் கண்ணில் படாமல் ஏமாற்றிவிட்டு, தோப்பில் வினோத விளையாட்டுகளைத் தொடர்ந்தான்.

அன்று ஒரு தட்டான்பூச்சியைப் பின் தொடர்ந்ததால், பல மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினான். அவனுக்காகக் காத்திருந்த அவன் அண்ணனிடம் போகும் வழியில், ''தட்டான்பூச்சிகளுக்கு வீடு கிடையாது. அவை, செடியின் இலைகளின் மீது முட்டையிட்டு வாழ்கின்றன'' என்றான்.

இங்கிலாந்தின் ஷெர்வ்ஸ்பரி பகுதியின்  சர்ச்சின் உள்ளே இருக்கும் பள்ளிக்கூடத்தில்  தான் சார்லஸ் படித்துவந்தான். சார்லஸ் பள்ளிக்கூடத்துக்கு சரியாக வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு அவனது அப்பாவை அடைந்தது. அவர் கவலைப்பட்டார். சார்லஸின் அறைக்குச் சென்றார். அங்கே சார்லஸ், தான் சேகரித்த பட்டாம்பூச்சிகளைத் தரை முழுவதும் வரிசையாக வைத்து, அவற்றின் நடுவில் உட்கார்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தான்.

சுட்டி நாயகன் - சார்லஸ் டார்வின் !

தான் வந்ததையும் உணராமல் பூச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் 6 வயது மகனை மெதுவாகத் தோளில் தட்டினார் அப்பா. 'பட்டாம்பூச்சிகளுக்கும் மோத் (விஷீtலீ) பூச்சிகளுக்கும் ஒரே வித்தியாசம்தான். மோத் பூச்சிகள் கூடுகட்டும்’ என்று தன்னையும் அறியாமல் சார்லஸ் முணுமுணுத்தான்.

அவனுக்கு 8 வயதானபோது, அம்மா சுசானா இறந்துவிட்டார். அதற்குமேல் சார்லஸை வீட்டில் சமாளிக்க முடியாது என நினைத்த அப்பா, அவனது அண்ணனுடன் விடுதியில் தங்கிப் படிக்க அனுப்பினார். அப்போதும் சார்லஸ் மாறவில்லை. தோப்பு, தோட்டம், வயல்வெளி, காடு எனத் திரும்பத் திரும்ப எங்கெங்கோ 'கண்டுபிடிக்கப்பட்டு’ கடைசியில் வீட்டுக்கே அனுப்பப்பட்டான்.

அப்பா, அவனைத் தனது மருத்துவர் தொழிலில் உதவியாளராக இருந்து வேலை கற்றுக்கொள்ளச் செய்தார். பிறகு, மருத்துவம் படிக்க அனுப்புவதே அவரது திட்டம். சார்லஸின் திட்டமோ வேறு!

அங்கே, அப்பாவுக்கு உதவியாக இருந்த ஜான் எட்மல்ட்ஸ்டோன் என்பவரோடு சார்லஸ்  நட்பானான். ஜான், கருப்பின அடிமையாக இருந்து மீட்கப்பட்டவர். அவருக்குத் தெரியாத ஆற்றுப்படுகை, காடு, மலைகள் கிடையாது. அவர்கள் அடிக்கடி எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு சுற்றித் திரியத் தொடங்கினார்கள்.

''மருத்துவம் படிக்க அனுப்பப்பட்டாலும், பயப்படாதே சார்லஸ். இங்கே வரும்போதெல்லாம் உன்னோடு சுற்ற நான் இருக்கிறேன்'' என ஜான் சொன்னான்.

சார்லஸின் சேகரிப்பில் இருந்த விதவிதமான மண்புழுக்கள், பொன்வண்டுகள், 6 வகைப் புறாக்கள், 4 வகை அணில்கள் ஆகியன ஜானின் குடியிருப்பில் ரகசியமாகக் காக்கப்பட்டன.

அந்தச் சிறுவன் சார்லஸ், பிற்காலத்தில் பரிணாமவியல் தத்துவத்தை முன்மொழிந்த சர் சார்லஸ் டார்வினாகப் பரிணமித்தார்.