பால்...தயிர்...வெண்ணெய் !
##~## |
''எல்லோரும் பால் குடிச்சுட்டுப் படுங்க. காலையில் சீக்கிரம் எழுந்துக்கணும்'' என்றபடி பால் கொண்டுவந்தார் மாயா டீச்சர்.
கதிர், கயல், அருண், ஷாலினி நான்கு பேரும் காலையில் மாயா டீச்சருடன் பிக்னிக் செல்ல இருக்கிறார்கள். அதற்காக இரவே டீச்சர் வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார்கள். எல்லோரும் பாலைக் குடிக்க, ஷாலினி மட்டும் பால் டம்ளரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
''என்ன ஷாலினி, பாலில் எதையாவது போட்டுட்டியா?'' என்று கேட்டான் அருண்.
''இல்ல... ஒரு டவுட். பால் போல வெள்ளை மனசு என்பார்கள். பாலுக்கு இந்த வெள்ளை நிறம் எப்படி வந்தது?'' என்று கேட்டாள் ஷாலினி.
''ஷாலினி, வெளியே பார்க்கிறதுக்கு வெள்ளையா இருக்கிற இந்தப் பாலில் வானவில்லின் ஏழு வண்ணங்களும் அடங்கியிருக்கு'' என்றார் டீச்சர்.
''நிஜமாகவா?'' என்றார்கள் ஆச்சர்யமான குரலில்.
''வாங்க காண்பிக்கிறேன்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்தார். அது அவர்கள் எல்லோரையும் மிக மிகக் குட்டியாக மாற்றிக்கொண்டு, டம்ளரில் இருந்த பாலில் இறங்கியது. அங்கே அவர்களின் ஆச்சர்யம் இரட்டிப்பாக மாறியது. அந்தப் பாலுக்குள் அவர்கள் வண்ணங்களில் மிதந்தார்கள்.
''இது எப்படி டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''சூரிய ஒளியைப் பார்க்க வெள்ளையாக இருக்கும். ஆனால், அதற்குள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வண்ணங்கள் அடங்கியிருக்கு. இந்த ஏழு வண்ணங்களும் பூமியை அடையும். இங்கே இருக்கிற இலை, மண், கற்கள் என ஒவ்வொரு பொருளும் அந்த வண்ணங்களைத் தங்களுக்குள் உள்வாங்கி, ஒரு குறிப்பிட்ட நிறத்தை மட்டும் அதிகமாகப் பிரதிபலிக்கும். அதுதான் அந்தப் பொருளின் நிறமாகவும் நமக்குத் தெரிகிறது.
ஒரு தாவரத்தின் இலை, பச்சையாக இருக்கக் காரணம், அது பச்சை நிறத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக்கொண்டதாக இருக்கிறது. மிகச்சில பொருள்கள் மட்டும் இந்த ஏழு வண்ணங்களையும் ஒன்றாகப் பிரதிபலிக்கும். அப்போது நமக்கு அந்தப் பொருள் வெள்ளையாகத் தெரியும். பாலும் அப்படியான ஒன்றுதான்'' என்றார் டீச்சர்.

''டீச்சர், காய்ச்சாத பால் சீக்கிரமே கெட்டுவிடுகிறதே ஏன்?'' என்று கேட்டாள் கயல்.
''கறந்த பாலில் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும் கயல். பசுவின் மடியில் இருந்து பால் பாத்திரத்துக்கு வந்ததும் பாக்டீரியாக்கள் காற்றுடன் சேர்ந்து வேகமாகப் பெருகிவிடும். அதனால், விரைவில் கெட்டுவிடுகிறது. இதைத் தடுக்க 1880-ல் லூயிஸ் பாஸ்டர், பால் பதப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார். அதற்கு பாஸ்டரைசேஷன் (றிணீstமீuக்ஷீவீக்ஷ்ணீtவீஷீஸீ) என்று பெயர். அதாவது, குறிப்பிட்ட வெப்பநிலைக்குப் பாலைச் சூடாக்கி, உடனே குளிரச்செய்வார்கள். அப்போது பாலில் இருக்கும் பாக்டீரியாக்கள் இறந்துவிடும். இப்போதும் பால் பாக்கெட் தயாரிப்பு முறையைப் பார்த்தால், அதில் பாஸ்டரைசேஷன் என்ற வரிகள் இருக்கும். சரி, போகலாமா?'' என்றார் டீச்சர்.
''டீச்சர், இவ்வளவு தூரம் பாலுக்குள்ளே வந்துட்டோம். அப்படியே இந்தப் பால் எப்படி தயிர், வெண்ணெய், நெய்யாக மாறுதுனு பார்த்துட்டுப் போகலாமே'' என்றாள் ஷாலினி.
''ஆகா, எனக்கு விஷயம் புரிஞ்சுபோச்சு. ஷாலினிக்கு பால் குடிக்கப் பிடிக்கலை. எஸ்கேப் ஆகறதுக்காக, அதை நெய்யாகவே மாத்திட முடிவு பண்ணிட்டா'' என்றான் அருண்.

''பாலில் லாக்டோஸ் (றீணீநீtஷீsமீ) என்ற அமிலம் இருக்கிறது. பாலில் இருக்கும் நுண்ணுயிரிகள் இந்த லாக்டோஸ் உடன் சேர்ந்து நொதித்தல் என்ற வினையை ஏற்படுத்தும். அதன் காரணமாக லாக்டிக் அமிலம் தோன்றும். இது புளிப்புத் தன்மைகொண்டது. இந்த லாக்டிக் அமிலம் பாலில் இருக்கும் புரதத்துடன் சேர்ந்து கெட்டியாக மாறினால், கிடைப்பதுதான் தயிர். இப்போ இந்தப் பாலில் தயிர் உருவாகும் விதத்தைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.
பாலில் இருக்கும் பாக்டீரியாக்கள் நொதித்தலில் ஈடுபட்டு தயிர் திரண்டது. மாயா டீச்சரும் சுட்டிகளும் அதில் ஏறிக்கொண்டார்கள். ஷாலினி ஒரு விரலால் தயிரைத் தொட்டு தயிரை நாவில் தடவி, ''அடடா... சூப்பர் சுவை'' என்றாள்.
''இந்தத் தயிரை உலகம் முழுவதும் பல சுவைகளில் தயாரிக்கிறாங்க ஷாலினி. சுமார் 5,400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் தயிரை உபயோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முதன்முதலில் துருக்கியர்கள்தான் தயிரைப் பயன்படுத்தியிருக்கணும்னு சொல்றாங்க. தயிரை ஆங்கிலத்தில் சிuக்ஷீபீ என்று சொல்வார்கள். இது துருக்கியச் சொல்லிலிருந்து வந்தது. துருக்கிய மொழியில் 'யோகுன்’ என்றால், கெட்டியான என்று பொருள். 'யோகுர்மாக்’ என்றால் பிசைவது என்று பொருள். இந்த இரண்டும் சேர்ந்து யோகர்ட் (சீஷீரீuக்ஷீt) என்ற பெயரில் பயன்படுத்தினார்கள். இதன் தயாரிப்பு முறையை பழங்காலத் துருக்கிய நூல்களிலும் காணலாம்.
ஃபிரான்ஸ் நாட்டின் மன்னன் முதலாம் ஃபிரான்சிஸ் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்போது அவருடைய நண்பரான துருக்கிய மன்னர் சுலைமான், தனது நாட்டிலிருந்து ஒரு மருத்துவரை அனுப்பினார். அந்த மருத்துவர் ஃபிரான்ஸ் மன்னருக்கு மருத்துவத்தில் ஒரு பகுதியாக தயிரைக் கொடுத்திருக்கிறார். அப்படித்தான் ஐரோப்பாவில் தயிரின் பயன்பாடு வந்தது. பிற நாடுகளுக்கும் பரவியது. 1950 காலகட்டத்தில் அமெரிக்காவில் 'தயிர் ஒரு சிறந்த உணவுப் பொருள். அதைப் பயன்படுத்துங்கள்’ என்று அரசாங்கம் பிரசாரம் செய்தது'' என்றார் மாயா டீச்சர்.

அவர்கள் வெளியேவந்துவிட்டார்கள். அந்தத் தயிரை, கதிர் ஒரு கிண்ணத்துக்கு மாற்றினான். ''காய்ச்சாத பால் கெட்டுப்போவதற்கு எப்படி பாக்டீரியா காரணமோ, அதேபோல் தயிரின் டேஸ்ட்டுக்கு பாக்டீரியாதானே காரணம்?'' என்று கேட்டான்.
''ஆமாம். இந்த நொதித்தல் காரணமாக பாலைவிட தயிரில் புரதம், கால்சியம் மற்றும் உயிர்ச் சத்துகள் அதிகமாகிறது. மருத்துவத்திலும் குடல் நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் ஜீரணத்துக்கு நல்ல தீர்வாக இருக்கிறது. முன்னாடியே சொன்ன மாதிரி உலகம் முழுக்க தயிருடன் சர்க்கரை, உப்பு, கொத்தமல்லி, புதினா, ஜீரகம், வெள்ளரிக்காய் என வெவ்வேறு பொருள்களைச் சேர்த்து, பல்வேறு சுவைகளில் தயாரிக்கிறார்கள்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை ஒரு லேப்டாப்பாக மாற்றினார். அதில் பல வகை தயிர் செய்முறைகளின் புகைப்படங்களைக் காட்டினார்.
''வாவ்... பார்க்கும்போதே எச்சில் ஊறுது'' என்றான் அருண்.

''இந்தத் தயிரை மேலும் நொதிக்க வைக்கும்போது கிடைக்கிறதுதான் வெண்ணெய். இதில் கொழுப்புச் சத்து அதிகமாகிறது. புரதமும் இருக்கும். இந்த வெண்ணயை 35 டிகிரி சென்டிகிரேடுக்கு வெப்பமாக்கினால், வெளிர் மஞ்சள் நிறத்தில் கிடைப்பதுதான் நெய். இந்த நெய்யில் உணவைச் செரிக்கவைக்கும் கொழுப்பு அமிலங்கள் இருக்கு. மேலும் உயிர்ச் சத்து கி நெய்யில் இருக்கு. இந்த உயிர்ச்சத்து, நெய்யைத் தவிர மீன் எண்ணெயில் மட்டுமே இருக்கு. சித்த மருத்துவத்தில் நெய்யை துணை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்'' என்றார் டீச்சர்.
அப்படியே பாலாடைக் கட்டி, அதன் மூலம் செய்கிற உணவுப் பொருள்கள் என எல்லாவற்றையும் காட்டி முடித்த மாயா டீச்சர், ''சரி, சரி சீக்கிரம் படுங்க. ஷாலினி, உனக்கு வேற பால் கொண்டுவரேன். குடிச்சுட்டுதான் படுக்கணும்'' என்றபடி சமையலறைக்குச் சென்றார்.
''தப்பிக்கலாம்னு பார்த்தியா? நம்ம டீச்சர்கிட்டே அதெல்லாம் நடக்காது'' என்று மற்ற மூன்று பேரும் சொல்ல...
ஷாலினி ஓடிச்சென்று கட்டிலில் படுத்தாள். போர்வையைப் போர்த்திக்கொண்டு, 'குர்ர்... குர்ர்ர்’ எனப் பொய்யாக குறட்டைவிட்டாள்!