மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்
##~## |
மூன்று நாட்களாகப் பெய்த மழையால், மாயா டீச்சரின் வீட்டுத் தோட்டத்தில் புற்கள் ஈரப் பசையுடன் இருந்தன. அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ''ஹேய்... அங்கே பாருங்க'' என்று உற்சாகத்துடன் கத்தினான் கதிர்.
புற்கள் மீது ஒரு நத்தை ஊர்ந்துகொண்டிருந்தது. நான்கு பேரும் ஓடிச்சென்று அதைச் சூழ்ந்தார்கள். ''இப்படி நத்தையை நேரில் பார்த்து பல மாசமாச்சு'' என்றாள் கயல்.
''கலர் வித்தியாசமா இருக்கு'' என்றபடி அருண் அதைத் தொட்டதும், அது தன் உடலைக் கூட்டுக்குள் இழுத்துக்கொண்டு சுருண்டது.
''கையை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியே'' என்றாள் ஷாலினி.
''அங்கே என்ன செய்றீங்க?'' என்றவாறு காபி, பிஸ்கட்டுடன் வந்தார் மாயா டீச்சர்.
கயல் நடந்ததைச் சொல்ல, ''டோன்ட் வொர்ரி! காபியைக் குடிச்சு முடிங்க. நத்தை மேலேயே சவாரி போகலாம்'' என்றார் டீச்சர்.

காபியைக் குடித்தவாறே நத்தை பற்றிய பேச்சுத் தொடர்ந்தது. ''விலங்கினங்களில் இது மெல்லுடலி என்ற தொகுதியில் வரும். நீர்வாழ் இனங்களில் மீன்களுக்கு முன்பே, அதாவது 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. இந்தத் தொகுதியில் சிப்பி, சோழி என ஆரம்பித்து ஆக்டோபஸ் வரை ஒரு லட்சம் வகைகள் இருந்தன. காலப்போக்கில் சுமார் 70 ஆயிரம் வகைகள் அழிந்துவிட்டன. இந்தத் தொகுதியில் வயிற்றுக்காலிகள் என்ற பிரிவில் நத்தை வரும். நீங்க இங்கே பார்த்தது, தரை நத்தை. இது தவிர, கடல் நத்தை, நன்னீர் நத்தை, ஓடு இல்லாத நத்தை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன'' என்றார் டீச்சர்.
''என்னது ஓடு இல்லாத நத்தையா?'' என்று வியப்புடன் கேட்டான் அருண்.
''ஆமா அருண். நத்தை என்றால் ஈரம்தானே ஞாபகம் வரும். ஆனால், பாலைவனத்தில் வாழும் நத்தைகளும் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கலாம்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்துவந்தார்.
''நத்தைகளைப் பார்க்க ரவுண்டு போறோமா டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.
''இல்லை. உலக நத்தைகளையே இங்கே வரவைக்கிறேன்'' என்ற டீச்சர், கம்பளத்தைச் சுருட்டி, மேஜிக்மேன் போலமுகத்தின் அருகே எடுத்துச்சென்று, ''ஜிம்பலக்கா ஜிம்பாலே'' என்று சொல்லிக் கீழே விரித்தார்.

அடுத்த நொடி, அந்த மந்திரக் கம்பளம் முழுக்க மஞ்சள், இளம் கறுப்பு, ஓடுகளில் விதவிதமான சுருள்கள் எனப் பல வகைகளில் நத்தைகள் ஊர்ந்தன.
''வாவ்... இத்தனை வகைகளா?'' என்று வாயைப் பிளந்தான் கதிர்.
எல்லோரின் கவனமும் ஒரு நத்தையின் மீது சென்றது. பச்சை நிறத்தில் சங்கு போன்ற ஓட்டைச் சுமந்தவாறு நகர்ந்தது அது. ''இதன் பெயர், மரகதப் பச்சை நத்தை. நியூ கினியாவின் மானுசு என்ற தீவில் மட்டுமே காணப்படும். இது பெரும்பாலும் 100 மீட்டர் உயரமான மரத்தில் இருக்கும். இதன் ஓடு ரொம்ப அழகாக இருப்பதால், ஆபரணங்களில் பயன்படுத்துறாங்க. அதோ, வெள்ளை நிற ஓட்டுடன் இருக்கே அதுதான் பாலைவன நத்தை. இதன் அறிவியல் பெயர், எரிமரியோன்டா இமாகுலேட்டா (ணிக்ஷீமீனீணீக்ஷீவீஷீஸீtணீ வீனீனீணீநீuறீணீtணீ). நத்தைகளில் மிகப் பெரியது, ஆஸ்திரேலியன் டிரம்பட் எனப்படும் கடல் நத்தைகள். 90 சென்டி மீட்டர் நீளமும் 18 கிலோ எடையும் இருக்கும்'' என்றார் டீச்சர்.
''நத்தைகளின் உணவு என்ன டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''பார்க்க இவ்வளவு 'சாஃப்ட்’டா இருந்தாலும் நத்தைகள் சாப்பாட்டு விஷயத்தில் சாஃப்ட் கிடையாது. வாழ்வின் பெரும்பகுதியை இரை தேடுவதிலேயே செலவழிக்கின்றன'' என்ற டீச்சர், ஒரு நத்தையைக் கையில் எடுத்தார்.
மந்திரக் கம்பளம் அந்த நத்தையின் வாய்ப் பகுதியை மைக்ரோஸ்கோப் மூலம் காட்டியது. ''ரம்பத்தில் இருக்கும் பற்கள்போல் வரிசை இருக்கு பாருங்க. ஒரு சிறிய நத்தையின் வாயிலேயே 1000 பற்கள் இருக்கும். இதை 'ராடுலா’ என்பார்கள். சிறிய உயிரினங்களை நுகர்வின் மூலம் கண்டுபிடித்து, இந்த ராடுலாக்களால் கொறித்துச் சாப்பிடும். வயல்வெளிகளில் செல்லும்போது பயிர்களையும் கடித்து நாசாமாக்கிவிடும்'' என்றார் டீச்சர்.
''டீச்சர், எனக்கு ஒரு நியூஸ் ஞாபகத்துக்கு வருது. ஜப்பானின் டோக்கியோ நகரில் பியூட்டி பார்லர் நடத்தும் ஒரு பெண், நத்தை மசாஜ் செய்றாங்க. முகத்தில் நத்தையை ஊர்ந்துபோக விடுறாங்க. இதனால், முகம் பொலிவாகுதாம்'' என்றாள் ஷாலினி.
''நானும் பார்த்தேன். நத்தையின் உமிழ்நீர்ச் சுரப்பி, மனிதனின் தோலின் இறந்த செல்களை உயிர்பிக்குது. பியூட்டி க்ரீம்களில் நத்தையின் உமிழ்நீர்ச் சுரப்பி சேர்க்கப்படுது. அதையே நேரடியாக முகத்தில் விடும்போது பலன் அதிகமாம். இது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியலை. ஆனால், நத்தையின் ஓட்டை மருத்துவத்தில் பயன்படுத்துறாங்க'' என்றார் டீச்சர்.

''டீச்சர், இந்த நத்தைகளை அவங்களோட இடங்களுக்குத் திருப்பி அனுப்பிடுங்க'' என்று கதிர் சொல்ல, மாயா டீச்சர் மந்திரக் கம்பளத்தை மீண்டும் சுருட்டி விரித்தார். இப்போது அதில் நத்தைகள் இல்லை.
''அதுசரி, ஆக்டோபஸ்கூட மெல்லுடலி தொகுதினு சொன்னீங்களே... நிஜமா?'' என்று கேட்டாள் அருண்.
''ஆமாம் அருண். பொதுவாக உயிரினங்களில் ஒவ்வோர் இனத்திலும் உச்சகட்ட வளர்ச்சியுடன் ஒரு வகை இருக்கும். எலியும் பாலூட்டிதான்; யானையும் பாலூட்டிதான். இதில் யானை, பாலூட்டிகளில் உச்சகட்ட வளர்ச்சி. பறவைகளில் நெருப்புக் கோழி. மீன்களில் சுறா எனச் சொல்லிக்கிட்டேபோகலாம். அப்படி மெல்லுடலி தொகுதியில் தலைக்காலிகள் என்ற பிரிவில் ஆக்டோபஸ் வரும். இதிலும் ஐந்து சென்டி மீட்டரில் முதல் ஐந்து மீட்டர் வரைப் பல வகைகள் இருக்கு. இதைத் தமிழில் சாக்குக் கணவாய் என்பார்கள். தவிர, பேய்க் கடம்பான், சாக்குச் சுருளி, சிலந்தி மீன் எனப் பல டெரரான பட்டப் பெயர்களும் இருக்கு. வாங்க, அதையும் பார்க்கலாம். நான் சொன்னதும் கம்பளத்தில் குதிக்கணும்'' என்றார் டீச்சர்.
புல்தரையில் இருந்த மந்திரக் கம்பளத்தில் ஐந்து பேரும் ஒரே சமயத்தில் குதிக்க, அது அவர்களை 'குபுக்’ என உள்வாங்கிக்கொண்டது. அடுத்த சில நிமிடங்களில், அவர்கள் கடலின் ஆழமான பகுதியில் இருந்தார்கள். அங்கே பெரிய ஆக்டோபஸ் ஒன்று தனது எட்டு கரங்களையும் விரித்தவாறு நகர்ந்துசென்று ஒரு மீனைப் பிடித்து விழுங்கியது.

''அடடா... ஆக்டோபஸ்ஸின் லஞ்ச் டயத்துல வந்துட்டோம் போல'' என்றாள் கயல்.
''ஆக்டோபஸ்களின் சிறப்பு, இந்த எட்டு கரங்களும் அதில் உள்ள உறிஞ்சிகளும்தான். ஒவ்வொரு கையிலும் இரட்டை வரிசையில் 240 உறிஞ்சிகள் இருக்கும். இதன் மூலம் இரையைப் பிடிக்கும். இந்த உறிஞ்சிகள்தான் இரையின் வாசனை மற்றும் சுவையை அறியவைக்கின்றன. ஆக்டோபஸ்கள் பெரும்பாலும் கடலின் ஆழப் பகுதியில் வசிக்கும். சில கடலின் மேல் பகுதியிலும், கரையின் சேற்றுப் பகுதியிலும் வசிக்கும். மெல்லுடலிகளில் உச்ச வளர்ச்சியாக இருந்தாலும் ஆக்டோபஸ்களின் ஆயுள் குறைவுதான். பெரும்பாலும் சில மாதங்களில் இறந்துவிடும். வட பசிஃபிக் கடல் பகுதியில் உள்ள பெரிய வகை ஆக்டோபஸ்கள் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் உயிர் வாழும்'' என்றார் டீச்சர்.
''ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயங்கள் இருக்குனு படிச்சிருக்கேன்'' என்றான் அருண்.
''ஆமாம். இரண்டு இதயங்கள் செதில் மற்றும் மூச்சுவிடும் பகுதிக்கு ரத்தத்தை செலுத்தும் வேலையைச் செய்கின்றன. மூன்றாவது இதயம், உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை அனுப்பும். இன்னொரு விஷயம், இவற்றின் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இவற்றின் கண்கள் மனிதர்களின் கண்களுக்கு இணையானது. பார்க்கும் உருவத்தின் பிம்பம், அது இருக்கும் தூரம், நிறம் ஆகியவற்றைச் சரியாகத் தெரிந்துகொள்ளும்'' என்றார் டீச்சர்.
இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு பெரிய மீன், ஆக்டோபஸை நோக்கி வேகமாக வந்தது. உடனே அந்த ஆக்டோபஸ் தன் கைகளை மேலும் அகலமாக விரித்தது. அந்த மீனுடன் மோதுவதற்குத் தயாராவதுபோல் சற்று மேலே உயர்ந்தது. அடுத்த சில நொடிகளில் அதன் வாயிலிருந்து கறுப்பு நிறத்தில் புகைபோல் எதுவோ வெளிப்பட்டது.
''போதும் வந்துருங்க'' என்ற மாயா டீச்சர், எல்லோரின் கைகளையும் பிடித்துக்கொண்டு மேல்நோக்கித் தாவினார். அடுத்த நொடி, வீட்டுத் தோட்டத்தில் இருந்தார்கள்.
''ஆக்டோபஸ் இப்படித்தான் எதிரியைத் தாக்குமோ?'' என்று கேட்டாள் ஷாலினி.
''இது ஒரு பாதுகாப்புத் தாக்குதல்தான். எதிரியைப் பார்த்ததும் வாயிலிருந்து ஒரு வகை திரவத்தைக் கக்கும். இது கண்ணீர்ப் புகை மாதிரி அந்தப் பகுதி முழுவதும் பரவும். எதிரியைத் திணறவெச்சுட்டுத் தப்பிச்சுடும்'' என்றார் டீச்சர்.
''கொஞ்ச நாள் முன்னாடி ஆக்டோபஸ் ஜோதிடம் பிரபலமா இருந்ததே...'' என்றான் கதிர்.
''இப்பவும் உலகின் பல இடங்களில் இருக்கு. ஆக்டோபஸ் புத்திசாலித்தனமான உயிரினம்தான் என்றாலும், ஜோதிடம் மூலம் முன்கூட்டியே நடப்பதைச் சொல்லும் அளவுக்கு மகான் கிடையாது. எப்படியோ அது சிலரின் நம்பிக்கையா மாறிடுச்சு. சில நாடுகளில் ஆக்டோபஸ் கறியை வெளுத்துக் கட்டுறாங்க. சமீபத்தில் தென்கொரியாவின் சியோல் நகரில் 'லைவ் ஆக்டோபஸ்’ என்ற பெயரில் ஓர் உணவு பிரபலமாகி இருக்கு. அதாவது, உயிரோடு இருக்கும் குட்டி ஆக்டோபஸை தட்டில் கொண்டுவந்து வைப்பாங்க. அதை அப்படியே ஃபோர்க்கால் கொத்தியெடுத்து வாய்க்குள் லபக்னு போட்டுப்பாங்க'' என்றார் டீச்சர்.
''அடக் கடவுளே... போகிறபோக்கில் மனுசங்க ஆக்டோபஸா மாறிடுவாங்க போல'' என்று நொந்துகொண்டார்கள் சுட்டிகள்.