
இப்படி வறுமை காரணமாக தன்னிடம் வந்த தத்துவ இயல் பாடத்தை விரும்பி ஏற்றதுடன் அதில், உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக மாறிய அந்த ராதா, பல்கலைக்கழகங்களில் 'சக்கரவர்த்தி’ எனும் புகழோடு வலம்வந்தார்.
அந்தப் பள்ளிக்கு 'பிரைமரி போர்டு ஸ்கூல்’ என்று பெயர். 1890 காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பெரும்பாலான பள்ளிகள் வாடகை வீடுகளில்தான் இயங்கின. உட்காருவதற்கு மண் தரைதான். மழை வந்தால் ஒழுகும் கூரைகள். திருத்தணியில் அப்படி ஒரு பள்ளியில்தான் அந்தப் பையன் படித்தான். அவன் பெயர், ராதா. அவனது அப்பா பெயர், வீராசாமி. அவர்களது சொந்த ஊர், சர்வபள்ளி எனும் கிராமம்.
அப்பா வீராசாமி, திருத்தணி ஜமீன்தார் ஒருவரிடம் கணக்கராக வேலை செய்தார். குறைந்த சம்பளத்தில் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் திணறினார். 'தன் மகன் கோயில் அர்ச்சகர் பணியில் சேர்ந்தால், குடும்பச் சுமை ஓரளவு குறையும்’ என முடிவு செய்தார்.
சிறுவன் ராதாவோ மிக அற்புதமாக படித்தான். வாய்ப்பாடு, வேத வாக்கியம், குறட்பா, ஆங்கிலக் கவிதைகள் என அனைத்தையும் மடமடவென ஒப்புவிப்பான். அவன் திறமையைக் கண்டு வியந்த ஆசிரியர்கள், அவனது அப்பாவிடம் பேசினார்கள். பள்ளிப் படிப்பை கைவிட்டு, அவன் அர்ச்சகராவதைத் தடுத்தார்கள்.
திருப்பதியில் வெள்ளைக்காரர்களால் நடத்தப்பட்ட, 'ஹெர்மன்ஸ்பரி இவான்ஞ்சலிகர் லூதரன் ஸ்கூல்’ எனும் பிரபல பள்ளியில் படிக்க, ராதாவுக்கு கல்வித் உதவித்தொகை கிடைத்தது. புதுப் பள்ளியிலும் தன் தனித்திறன்களை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தான்.

ராதாவின் அம்மா சீத்தம்மா, ராதாவுக்காக திருப்பதியில் தங்கியதால், குடும்பம் பிரிந்தது. அந்த நாட்களை சமாளிக்க, தன்னோடு ஆறாம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தான். அவர்களுக்குப் புரியாத தர்க்கம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை வீட்டுத் திண்ணையில் மாலைநேர வகுப்பு எடுத்தான். மேல் வகுப்பு மாணவர்கள்கூட அவனது திண்ணை வகுப்புக்கு வந்தார்கள். ஓர் அணா, இரண்டு அணா என்று அவர்கள் கொடுப்பதை, அப்படியே அம்மாவிடம் கொடுத்துவிடுவான். அந்த மாணவப் பருவத்திலேயே பொறுப்பான ஆசிரியர் போல செயல்பட்டான்.
பள்ளியின் கடைசி வருடம்... அப்போதெல்லாம் விருப்பப் பாடம் என்று ஒன்று உண்டு. எதை நாம் பள்ளி இறுதி ஆண்டில் விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கிறோமோ, அதைதான் கல்லூரியில் படிக்க முடியும். அறிவியலையோ, மொழியியலையோ தன் விருப்பப் பாடமாகப் படிக்க விரும்பினான் ராதா. ஆனால், புத்தகங்கள் வாங்கப் பணம் இல்லை. கல்வியைத் தொடர முடியுமா என்பதே கேள்விக் குறியாக இருந்தது.
ஒருநாள், ராதாவின் அப்பா வந்தார். சில புத்தகங்களைக் கொடுத்தார். அவை, தத்துவ இயல் (றிலீவீறீஷீsஷீஜீலீஹ்) புத்தகங்கள். 'சரி, இதையே விருப்பப் பாடமாக எடுப்போம்’ என முடிவு செய்தான்.
இப்படி வறுமை காரணமாக தன்னிடம் வந்த தத்துவஇயல் பாடத்தை விரும்பி ஏற்றதுடன் அதில், உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக மாறிய அந்த ராதா, பல்கலைக்கழகங்களில் 'சக்கரவர்த்தி’ எனும் புகழோடு வலம்வந்தார்.
அவர்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன். வறுமை வாட்டிய இளமையைக் கடந்து, இந்திய நாட்டின் ஜனாதிபதியாகவும் உயர்ந்தார். அப்போதும் தனது ஆசிரியர் தொழிலை மறக்காமல், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்து, ஆசிரியர்களின் நாயகனாக மாறினார்.