கஜினியின் வழிகாட்டி !கே.யுவராஜன் பிள்ளை
##~## |
மாயா டீச்சர் வீட்டின் பின்புறம் சிறிய ஓர் அறை இருந்தது. உடைந்த பொருட்களை அங்கேதான் போட்டுவைப்பார்கள். தனது எஃப்.ஏ. செயல்பாட்டுக்காக ஒரு டெலஸ்கோப் செய்ய வேண்டும் என்றாள் கயல்.
''அங்கே இருக்கும் சில பொருட்களை வெச்சு செஞ்சுடலாம்'' என்றார் டீச்சர்.
கயல், கதிர், அருண், ஷாலினி நால்வரும் அந்த அறைக்குச்சென்று பொருட்களைத் தேட ஆரம்பித்தார்கள். திடீரென 'ய்ய்யீயீயீ'' என்று கத்தினாள் ஷாலினி.
''என்ன ஆச்சு?'' என்று ஓடிவந்த மாயா டீச்சர், ஷாலினியின் கழுத்து மீது ஊர்ந்துசென்ற ஒரு சிலந்தியைப் பிடித்துத் தூரமாக வீசினார்.
''அடடா... ஷாலினி ஒரு ஸ்பைடர்வுமனா மாற நல்ல சான்ஸ் கிடைச்சது. தட்டிவிட்டுட்டீங்களே'' என்று சிரித்தான் கதிர்.
அங்கே இருந்த சிலந்திவலையை உற்று நோக்கிய அருண், ''டீச்சர், இந்த வலையின் நடுவில் என்னமோ இருக்கு'' என்றான்.எல்லோரும் அங்கே சென்றார்கள்.
''இது சிலந்தியின் முட்டைகள் அருண். சிலந்தி, வலை பின்றதுக்கு முதல் காரணம், தனது முட்டைகளைப் பாதுகாக்கத்தான். பெண் சிலந்தி முட்டையிட்டதும், அதைச் சுற்றி பந்து போல ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தும். பிறகு, அங்கே இருந்து நாலா திசையிலும் வலை பின்னும். இதையே டூ இன் ஒன்னாக, இரையைப் பிடிக்கவும் யூஸ் பண்ணிக்குது'' என்றார் டீச்சர்.
''எப்படி இவ்வளவு நீளமாப் பின்ன முடியுது?'' என்று கேட்டாள் கயல்.

''பார்க்க நீளமா ஒரே இழை மாதிரி இருந்தாலும் உண்மை அதில்லை. இதைச் சரியா தெரிஞ்சுக்கணும்னா, நமக்கு மந்திரக் கம்பளம் தேவை'' என்றார் டீச்சர்.
அடுத்த சில நொடிகளில், வீட்டுக்குள் இருந்த மந்திரக் கம்பளம் அங்கே பறந்துவந்தது. அவர்கள் அதில் அமர்ந்ததும் அது கர்ச்சீப் அளவுக்கு மாறியது. அவர்கள், பூச்சி போல குட்டியாக மாறினார்கள்.
சிலந்திவலை மீது இறங்கினார்கள். ''ஒவ்வோர் இழையையும் கவனிச்சு, ஏதாவது வித்தியாசம் தெரியுதானு சொல்லுங்க'' என்றார் டீச்சர்.

உற்றுப்பார்த்த கதிர், ''நான் கண்டுபிடிச்சிட்டேன். ஒவ்வோர் இழையும் சின்னச் சின்னத் துண்டுகளைச் சேர்த்த மாதிரி இருக்கு'' என்றான்.
''கரெக்ட்! ஒவ்வொரு துண்டும் மைக்ரோ மில்லிமீட்டர் குழாய்கள் போல இருக்கும். அதை ஒரு பிசின் மூலம் இணைச்சு, இணைச்சு நீளமான மற்றும் தடித்த நூலிழையை சிலந்தி உருவாக்குது. இப்படி ஒரு நூலிழையில் 1,000 துண்டுகளாவது சேர்ந்திருக்கும்'' என்றார் டீச்சர்.
வலையின் மையப்பகுதிக்குச் சென்ற ஷாலினி, ''டீச்சர், இங்கே இருக்கிறதுதானே சிலந்தியின் முட்டைகள்?'' என்று கேட்டாள்.
''ஆமாம் ஷாலினி, பெரும்பாலான சிலந்திகள் முதலில் முட்டையிட்டு, அதைச் சுற்றி வலை பின்னும். சில சிலந்திகள் முதலில் வலையைப் பின்னிவிட்டு, அதில் முட்டையிட்டுப் பாதுகாக்கும். உலகில் இதுவரை 43,000 வகையான சிலந்திகளைக் கண்டுபிடிச்சிருக்காங்க. உலகின் எல்£ எல்லா இடங்களிலும் சிலந்திகள் இருக்கு. பார்க்க இவ்வளவு மெல்லிய பூச்சியா இருந்தாலும், சிலந்தியால் கடுமையான வெயிலையும் சமாளிக்க முடியும்; கடுமையான குளிரையும் தாங்க முடியும். பெரும்பாலான பூச்சிகளுக்கு மூன்று ஜோடிக் கால்கள்தான். சிலந்திக்கு மட்டும் நான்கு ஜோடிக் கால்கள். அதனால், இதைத் தமிழில் 'எட்டுக்கால் பூச்சி’னு சொல்றோம். கால்கள் மாதிரியே இதுக்குக் கண்களும் எட்டு. இவை, தலையைச் சுற்றி அமைந்திருப்பதால், எல்லாப் பக்கங்களிலும் பார்க்க முடியும்'' என்றார் டீச்சர்.
அப்போது, வலையின் மூலையிலிருந்து சிலந்தி ஒன்று ஊர்ந்துவந்தது. ''வீட்டுச் சொந்தக்காரன் வர்றான், விலகி நில்லுங்கப்பா'' என்றான் கதிர்.

''சொந்தக்காரன் இல்லே கதிர், சொந்தக்காரி. அது பெண் சிலந்தி. எல்லா வகையான சிலந்திகளிலும் பெண் சிலந்திதான் உருவத்தில் பெரியதாக இருக்கும். ஆண் சிலந்தியுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதுமே, பெரும்பாலும் பெண் சிலந்தி அதைக் கொன்றுவிடும். பிறகு, முட்டையிட்டு வலை பின்னும். முட்டைகளைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்கும். அதிலிருந்து வெளிவரும் லார்வாக்களில் 'இது சரியா வளராது’ என்று தோன்றுவதைத் தின்றுவிடும். மிச்சம் இருக்கிற லார்வாக்களை வளர்க்க ஆரம்பிக்கும். பாலூட்டிகள், தனது குட்டிகளுக்கு முதல் ஆகாரமாக தனது பாலைக் கொடுக்கிற மாதிரி, சிலந்தியும் தனது வாயிலிருந்து ஒரு திரவத்தைச் சுரந்து, லார்வாக்களுக்குக் கொடுக்கும். அவை, கொஞ்சம் வளர்ந்ததும் வலையில் சிக்கும் இரையை, உணவாகக் கொடுக்கும்'' என்றார் டீச்சர்.
அப்போது, 'ரிங்ங்ங்...’ எனச் சத்தம் போட்டவாறு வந்த ஒரு வண்டு, சிலந்தியின் வலையில் சிக்கிக்கொண்டது. ''இன்னிக்குச் சாப்பாடு கிடைச்சுடுச்சுபோல'' என்றாள் கயல்.
''அதை உடனே சொல்ல முடியாது கயல். அது சிலந்தியின் திறமையைப் பொறுத்துதான் இருக்கு. வாங்க, நாம வேற இடங்களுக்குப் போய், பல வகையான சிலந்திகளைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.
கம்பளம் பறக்க ஆரம்பித்தது. ''அப்படினா, அந்த வண்டு தப்பிச்சுடும்னு சொல்றீங்களா டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.
''சிலந்தியின் வலையில் அதிகமாக சிக்குவது இதுமாதிரி வண்டுகள்தான். அதனால் இயற்கையே, வண்டுகளுக்கான ஒரு தற்காப்பு விஷயத்தைக் கொடுத்திருக்கு. வண்டுகளின் அடிவயிற்றுப் பகுதியில் ஒருவகையான திரவம் இருக்கு. இது வாயுடன் சேர்ந்து வெடிக்கும் தன்மைகொண்டது. காரமாகவும் இருக்கும். வலையில் சிக்கிய இரையைப் பிடிக்க சிலந்தி அருகில் வரும்போது... இந்த வண்டு, வயிற்றைத் திருப்பி, அந்தத் திரவத்தை வெளிப்படுத்தும். இந்தத் தாக்குதலால், சிலந்தி திணறி ஓடும். அப்போது வண்டு தப்பிச்சிரும். வண்டு இப்படிச் செய்றதால், சிலந்தி உஷாராகிடும். வண்டு வலையில் சிக்கியதும் அதைச் சுற்றி வலையைப் பின்னி, அதன் வயிற்றை இறுக்கும். அதுக்கு அப்புறம் நச்சுத் திரவத்தைச் செலுத்தி சாகடிச்சு, பொறுமையாகச் சாப்பிடும். இரையைக் கூழாக்கியும் சாப்பிடும்.

ஒட்டகத்துக்கு திமில் மாதிரி, சிலந்தியின் உடம்புக்குள்ளே உணவு சேமிப்புப் பகுதியும் இருக்கு. அங்கேயும் சேர்த்துவெச்சுக்கும். இரை கிடைக்காத சமயங்களில் அந்தச் சேமிப்புப் பகுதியில் இருக்கும் உணவு, சிலந்தியின் உணவு மண்டலத்துக்குப் போகும்'' என்றார் டீச்சர்.
''வேகம் மட்டும் போதாது விவேகமும் இருந்தால்தான் கிடைச்சது நிலைக்கும்னு தெரியுது'' என்றான் கதிர்.
''அடடா... தத்துவம். சும்மாவா? சிலந்தி, கஜினி முகமதுவுக்கே வழிகாட்டின பூச்சியாச்சே'' என்றாள் ஷாலினி.
''இப்போ, நீங்க பறக்கும் சிலந்தியைப் பார்க்கப்போறீங்க?'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம், அவர்களை ஒரு பாறையில் இறக்கியது. அங்கே இருந்து கீழே எட்டிப்பார்த்தால், கிடுகிடுப் பள்ளம். அந்தப் பாறையின் உச்சியில் ஒரு சிலந்தி வந்தது. நீச்சல் குளத்தில் குதிப்பதைப் போல கால்களை விரித்துக்கொண்டு தயாரானது. சட்டென பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்ந்தது. அப்படிப் பாயும்போது வலையைப் பின்னியபடி, அதையே பிடிமானமாகப் பற்றிக்கொண்டு இறங்க ஆரம்பித்தது.
''ஆகா... இதுதானா பறக்கிறது? ஸ்பைடர்மேன் ஞாபகம் வருது'' என்றாள் கயல்.
''சும்மா இல்லே கயல், இப்படி 10,000 அடிகள் வரை அநாவசியமா இறங்கும். இதே மாதிரி, நீர்ச் சிலந்திகள் என்று ஒரு வகை இருக்கு. இது ஆற்றை ஒட்டிய மரங்களின் உச்சியில் வலையைப் பின்ன ஆரம்பிச்சு, தண்ணீரின் மேல் பகுதி வரை வரும். தண்ணீருக்குள் இறங்கி, அங்கே இருக்கும் புழு, பூச்சிகளைப் பிடிச்சுச் சாப்பிடும். அதே சமயம் வலையைப் பின்னத் தெரியாத சிலந்திகளும் காடுகளில் இருக்கின்றன. இவை, பாறை மற்றும் புதர் மறைவில் வசிக்கும். அங்கே கிடைக்கும் பூச்சிகளைப் பிடிச்சுச் சாப்பிடும். பறவைகள், வெளவால், பாம்புகளையே சாப்பிடும் பயங்கரமான சிலந்திகளும் இருக்கின்றன. இறந்து காய்ந்துபோன புழுக்களை மட்டுமே சாப்பிடும் சிலந்திகளும் இருக்கின்றன'' என்றார்.

பல வகையான சிலந்திகளைப் பார்த்துவிட்டு, அவர்கள் மீண்டும் அறைக்குத் திரும்பினார்கள். அங்கே அந்தச் சிலந்தி, தனது வலையில் சிக்கிய வண்டைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
''டீச்சர், உங்க வீட்டுச் சிலந்தி ரொம்பத் திறமைசாலிதான்'' என்றான் கதிர்.
''சரி, நாம வந்த வேலையைப் பார்ப்போம். கயலுக்கு டெலஸ்கோப் செய்ய தேவையானதை எடுப்போம்'' என்றார் டீச்சர்.