மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மின்விசிறிகளின் முன்னோடி !கே.யுவராஜன் பிள்ளை

##~##

''டீச்சர், மளிகை சாமான் கொண்டுவந்திருக்கேன்''

சுட்டிகளுடன் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த மாயா டீச்சர், குரல் கேட்டு வாசலுக்கு சென்றார். சில நிமிடங்களில் ஒருவர் உள்ளே நுழைந்து, பெரிய பைகள் இரண்டை வைத்தார். டீச்சர் கொடுத்த பணத்தைப் பெற்றுகொண்டு சென்றார்.

''பசங்களா, நான் லிஸ்ட்டைப் படிக்கிறேன். பையில் இருக்கிறதை எடுத்துவெச்சு யாராவது செக் பண்ணுங்க'' என்றார் டீச்சர்.

உடனே, ''நான் வர்றேன்... நான் வர்றேன்'' என்றபடி கயல், கதிர், அருண், ஷாலினி நான்கு பேருமே பைகளைச் சூழ்ந்துகொண்டார்கள்.

''ஆளாளுக்கு எடுத்து எதையாவது கொட்டிடப் போறீங்க, ஜாக்கிரதை. சரி படிக்கிறேன், கடலைப் பருப்பு இரண்டு கிலோ'' என்று ஆரம்பித்தார் டீச்சர்.

அவர் படிக்கப் படிக்க ஒவ்வொரு பொருளாக எடுத்துவைத்தார்கள். ''கருப்பட்டி கால் கிலோ'' என்றதும், ''கருப்பட்டியா... அதென்ன?'' என்று கேட்டான் அருண்.

மாயா டீச்சர் ஒரு பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினார். ''இதுதான் கருப்பட்டி. சர்க்கரை மாதிரி இனிக்கும். அதேநேரம் ரொம்ப ஆரோக்கியமானது. நான் இதைப் பாலில் கலந்துப்பேன்'' என்றார்.

''இதை எப்படித் தயாரிக்கிறாங்க?'' என்று கேட்டாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''கரும்பிலிருந்து சர்க்கரை கிடைக்கிற மாதிரி, பனை மரத்திலிருந்து கிடைக்கிற உணவுப் பொருள் இது.''

''பனை மரம் எப்படி டீச்சர் இருக்கும்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''என்னது, பனை மரத்தைப் பார்த்தது கிடையாதா! இந்தியாவில் 10 கோடி பனை மரங்கள் இருக்கின்றன. அதில் பாதிக்கு மேல், அதாவது ஐந்து கோடி பனை மரங்கள் நம் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. நமது மாநில மரமே அதுதான்'' என்றார் டீச்சர்.

''அப்படியா?'' என்றான் கதிர்.

''சரியாப் போச்சு. மனிதர்களுக்கு பல வகைகளில் பயன் தருவது பனை. முதல்ல உங்களுக்கு பனை மரத்தை அறிமுகப்படுத்தணும். மளிகைச் சாமான்களை அப்புறம் எடுத்து வைக்கலாம்'' என்றார் டீச்சர்.

இதற்காகவே காத்திருந்ததைப்போல அறைக்குள் இருந்த மந்திரக் கம்பளம் உருண்டு வந்தது. அவர்கள் ஏறிக்கொண்டதும் பறந்துசென்றது.

''பனையை, 'மரம்’னு சொன்னாலும் அது மரம் வகை கிடையாது. கிளைகள் இல்லாமல் 30 மீட்டருக்கு மேல் வளரும் பெரிய புல் வகை. ஒரு பனை மரம் முழுமையாக வளர 15 வருடங்கள் ஆகும். தமிழ் இலக்கியங்களில் இந்த மரத்தைப் 'பூமியின் கற்பகத் தரு’ எனக் குறிப்பிட்டிருக்காங்க. அந்த அளவுக்கு உணவாகவும், வேறு பல வகையிலும் மனிதர்களுக்குப் பயன்தரும் மரமாக இருந்திருக்கு. இப்பவும் இருக்கு'' என்றார் டீச்சர்.

''இப்போ ஞாபகம் வருது டீச்சர். பேப்பருக்கு முன்னோடியாக அந்தக் காலத்தில் பனை ஓலையில்தானே எழுதினாங்க?'' என்றான் அருண்.

''அது மட்டுமா... மின்விசிறிக்கு முன்னோடியாக பனை ஓலை விசிறி, குளிர்பானங்களுக்கு முன்னோடியாக பதநீர், இனிப்புகளுக்கு முன்னோடியாக பனங்கற்கண்டு, தரை விரிப்புகளுக்கு முன்னோடியாக பாய்கள் எனச் சொல்லிட்டே போகலாம்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மந்திரக் கம்பளம் அவர்களை பனை மரங்கள் நிறைந்த இடத்தில் இறக்கியது. தலையை உயர்த்தி அந்த மரங்களைப் பார்த்தார்கள். ''இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பனை மரங்கள் அதிகம் வளரும். தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் இருக்கு. தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகம் இருக்கு. சென்னை, செங்கல்பட்டிலும் பனை மரங்களைப் பார்க்கலாம். இப்போ நாம வந்திருக்கிறது நெல்லை மாவட்டத்தின் ஒரு கிராமத்துக்கு'' என்றார் டீச்சர்.

அங்கிருந்த பனை மரங்கள் சிலவற்றில் இடுப்பில் கூடையுடன் சில மனிதர்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். ''இவங்க என்ன செய்றாங்க?'' என்று கேட்டாள் கயல்.

''பதநீர் சேகரிக்க ஏறிட்டிருக்காங்க. பதநீர் எடுத்து அதைக் காய்ச்சுவாங்க. அதிலிருந்துதான் பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு எனப் பலவற்றைத் தயாரிக்கிறாங்க. ஒரு பனை மரத்திலிருந்து ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட 150 லிட்டர் பதநீர் கிடைக்கும்'' என்றார் டீச்சர்.

''எவ்வளவு சரசரனு ஏறிட்டிருக்காங்க. நாமும் ஏறலாமா?'' என்று கேட்டான் கதிர்.

''பனை மரம் ஏறுவது சாதாரண விஷயம் கிடையாது கதிர். ரொம்பப் பயிற்சியும் கவனமும் தேவை. மரத்தின் தண்டு முழுக்க லேயர் லேயராக முள் மாதிரி இருக்கும். இவை, கை கால்களில் உராய்ந்து தோலில் கீறலை ஏற்படுத்திடும்'' என்றார் டீச்சர்.

''நமக்குத்தான் கம்பளம் இருக்கே'' என்றாள் ஷாலினி.

மந்திரக் கம்பளம் அவர்களின் ஆசையை நிறைவேற்ற, ஒரு பனை மரத்தில் பாதுகாப்புடன் ஏற்றி இறக்கியது. பிறகு டீச்சர், ''இந்தத் தொழிலில் இருக்கும் அனுபவசாலிகள் ஒரு நாளைக்கு 30 மரங்கள் வரை இப்படி ஏறி, பதநீர் சேகரிப்பாங்க. இவங்க சேகரிச்ச பதநீரைக் காய்ச்சி, பனை வெல்லம் முதலானவற்றைத் தயாரிப்பாங்க. பனை ஓலை மூலம் விசிறி, பாய், கூடைகள் தயாரிக்கிறவங்க, வேறு பல உபயோகங்கள் எனப் பனை மரத்தைச் சார்ந்து, தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்காங்க. இங்கே தயாரிக்கும் பொருட்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி என உலகம் முழுக்க ஏற்றுமதி ஆகுது. இந்தியாவுக்கு ஒரு வருஷத்துக்கு 200 கோடி ரூபாய் வருமானம் பனை மரங்கள் மூலம் கிடைக்குது. 'பாமாயில்’ எனப்படும் சமையல் எண்ணெய் இதிலிருந்துதான் கிடைக்குது. மலேசியாவில் இதை டீசலுடன் கலந்து வாகனங்களுக்கும் பயன்படுத்துறாங்க'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''அம்மாடியோவ்... பனை மரத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?'' என்று வியந்தான் அருண்.

''இன்னும் இருக்கு அருண். அதுக்கு முன்னாடி எல்லோரும் பதநீர் குடிப்போம்'' என்றார் டீச்சர்.

அவர்கள் வயல்வெளி ஓரமாக நடந்து, பனந் தோப்புக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்தவரிடம் அறிமுகம் செய்துகொண்டு பதநீர் கேட்டார்கள். அவர் பசுமையான பனை ஓலைகளையே கிண்ணம்போல மடித்து, அதில் பதிநீரை ஊற்றிக் கொடுத்தார்.

''சென்னையிலேயே குடிச்சிருக்கேன். அங்கேவிட இங்கே இன்னும் டேஸ்ட்டா இருக்கு'' என்றாள் கயல்.

''இது உடல் குளிர்ச்சிக்கு அவ்வளவு நல்லது கயல். இதில் புரதம், கொழுப்பு, இரும்புச் சத்து, பல்வேறு உயிர்ச் சத்துகள் இருக்கு. எலும்பு மற்றும் ஈரல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுது'' என்றார் டீச்சர்.

இவர்கள் பதநீரைக் குடித்து முடிக்கும் முன்பே, அங்கே இருந்தவர் நுங்குகளை வெட்டி எடுத்துக் கொடுத்தார். அதையும் சாப்பிட்டார்கள். ''இந்தப் பனங்காயை அப்படியே விட்டால், பனம்பழமாக மாறும். இதை கிராமத்தில் விரும்பிச் சாப்பிடுவாங்க. இதை நெருப்பில் சுட்டு சாப்பிடும்போது, இன்னும் சுவையாக இருக்கும். இதைப் பதப்படுத்தி 'பனங்களி’ என்ற பெயரில் செய்திருக்காங்க. இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இந்தப் பனங்களியுடன் அரிசி மாவு, சர்க்கரை சேர்த்து பணியாரம் மாதிரி செய்வாங்க. இதுக்கு 'பனாட்டு’ என்று பெயர்'' என்றார் டீச்சர்.

அவர்கள் சாப்பிட்ட பதநீருக்கும் நுங்குகளுக்கும் பணத்தைக் கொடுத்தார் மாயா டீச்சர். அங்கே இருந்தவர் அதை வாங்க மறுத்துவிட, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். வயல்வெளிப் பக்கம் வந்ததும் மந்திரக் கம்பளம் பறந்து வந்தது, அதில் ஏறிக்கொண்டார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''பனை மரங்கள் ஒரே மாதிரிதான் இருக்குமா டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''இல்லை ஷாலினி. ஆப்பிரிக்க பனை, ஆசியப் பனை, அசாய் பனை, மடகாஸ்கர் பனை என நாட்டுக்கு நாடு பனை மரங்களில் வகைகள் இருக்கு. இந்தியாவின் மலபார் கடற்கரை மற்றும் இலங்கையில் இருக்கும் பனை வகைக்கு, 'குடைப் பனை’ என்று பெயர். ஆங்கிலத்தில் 'தாலிபோட்’ என்பார்கள். இதன் இலைகள் ஐந்து மீட்டர் விட்டம் இருக்கும். அதில் நூற்றுக்கணக்கான சிற்றிலைகள் இருக்கும். இதை விசிறி மற்றும் குடை செய்யப் பயன்படுத்துவாங்க. இந்த மரம் வளர்ந்து 80 ஆண்டுகளுக்கு அப்புறம்தான் பூக்கள் பூக்கும். அதன் பிறகு ஓராண்டில் காய்கள் உருவாகும். அதோடு, பூக்களும் பூக்காது; மரமும் இறந்துவிடும். தென் அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற இடங்களில் அசாய் பனை என்று ஒரு வகை இருக்கு. இதில் உருவாகும் பழங்கள் சின்னச் சின்னதாக, கொத்துக் கொத்தாக பார்க்க திராட்சை மாதிரியே இருக்கும். மரத்தின் தண்டுப் பகுதி மூங்கில் மாதிரி மிகவும் ஒல்லியாக இருக்கும்'' என்றார் மாயா டீச்சர்.

அந்தப் பனை வகைகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தார்கள். சோஃபாவில் சாய்ந்துகொண்ட கதிர், ''ஸ்ஸ்ஸ்ஸ்... ரொம்ப சோர்வா இருக்கு. டீச்சர், சூடா கருப்பட்டி காபி கொண்டு வாங்க'' என்று உத்தரவுபோட்டான்.

''இவனை அந்தப் பனை மரத்திலேயே விட்டுட்டு வந்திருக்கணும்'' என்று சிரித்தார் மாயா டீச்சர்.