மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.கணேசன்

மாயா டீச்சர், அந்த மாலை வேளையில் தன் வீட்டு மாடியில் இருக்கும் டெலஸ்கோப் மூலம் நட்சத்திரங்களைப்  பார்த்துக் கொண்டிருந்தார். பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த சுட்டிகள், நடுவில் கிடைத்த கேப்பில்  மாயா டீச்சர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். டீச்சரும் அவர்களை வரவேற்றார்.

''வாங்க சுட்டீஸ், பரீட்சைக்குத் தயாராயிட்டீங்களா?'' என்றார் மாயா டீச்சர்.

''ஆமாம் டீச்சர்... ரொம்ப நேரமா படிச்சதாலே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண இங்க வந்தோம்'' என்றான் கணேஷ்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
##~##

''டீச்சர்... டெலஸ்கோப்ல என்ன பார்க்கிறீங்க?'' என்றான் பிரசன்னா.

''இந்த மாசம் வானம் நல்லாத் தெரியும். பாஸிங் க்ளவுட்ஸ் எல்லாம் இருக்காது. அதனால, விண்வெளியை நாம் இன்னும் நல்லா ஆராய்ச்சி பண்ணலாம்.'' என்றார் மாயா டீச்சர்.

''நாம் இங்கேயிருந்து பார்க்கிற மாதிரி மேலே இருந்து யாராச்சும் நம்மைப் பார்ப்பாங்களா டீச்சர்?'' என்றாள் மது.

''ஆரம்பிச்சுட்டியா உன் ஏலியன் வேலையை?'' என்றான் பிரசன்னா.

''அப்படியும் இருக்கலாம். அது பற்றிதான் விஞ்ஞானிகள் நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள்.'' என்றார் மாயா டீச்சர்.

திடீரென்று, ''டீச்சர் அஸ்ட்ரானமிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?'' என்று கேள்வியைப் போட்டான் கணேஷ்.

''அஸ்ட்ரானமி என்ற வார்த்தை கிரேக்க மொழியில், நட்சத்திரம் என்பதைக் குறிக்கும் 'அஸ்ட்ரோன்,’ என்ற வார்த்தையும் சட்டம் என்பதைக் குறிக்கும் 'நோமோஸ்’ என்ற வார்த்தையும் சேர்ந்ததாகும்.'' என்று விளக்கினார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''டீச்சர்... இங்கேயிருந்து நிலா எவ்வளவு தூரத்தில் இருக்குது? இதை எப்படி அளப்பார்கள்'' என்றாள் சரண்யா.

''முன்பெல்லாம்... பூமியில் இருந்து வானத்தில் இருக்கும் விண்மீன்களுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட முடியாது. பேரலாக்ஸ் என்ற முறையில் 1938-ல் ஃஎப்.டபிள்யூ.பெஸ்ஸெல்தான் முதன் முதலில் நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டார். இப்போது எல்லாம் டெலஸ்கோப்புடன் இணைக்கப் பட்ட அதிநவீன கணக்கீட்டுக் கருவிகள் வந்துவிட்டன.'' என்றார் மாயா டீச்சர்.

''நமக்கும் சூரியனுக்கும் இருக்கும் தூரத்தை இத்தனை ஒளி ஆண்டுகள் அப்படின்னுதானே டீச்சர் சொல்லுவாங்க? என்று கேட்டாள் சரசு.

''ஆமாம்... பூமிக்கும் வானத்தில் இருக்கும் கோள்களுக்கும் இடையே உள்ள தூரத்தை கிலோ மீட்டரில் கணக்கிடமாட்டார்கள். ஒளியானது ஒரு நொடிக்கு 299,792.458 மீட்டர்கள் பயணிக்கும். இதேபோல   வருடத்துக்கு 365 நாட்கள் ஒளி பயணித்தால் அதை ஓரு ஒளி ஆண்டு என கணக்கிடுகிறார்கள்.  இந்த மாதிரி  கணக்கிட்டுப் பார்த்தால், நமக்கு மிக தூரத்தில் இருக்கும் கேலக்ஸியின் பெயர் 'ஆபெல் 1835 மிஸி 1916’ இது சுமார் 13,230 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.'' என்று முடித்தார் மாயா டீச்சர்.

''அப்ப, கிட்டத்தில் இருக்கும் கேலக்ஸி எவ்வளவு தூரத்தில் இருக்கும் டீச்சர்?'' என்றான் கணேஷ்.

''நமக்கு மிக அருகில் இருப்பது ஆன்ட்ரோமீடா கேலக்ஸி. தூரம் சுமார் 2.2 மில்லியன் ஒளி ஆண்டுகள்.''என்றார் மாயா டீச்சர்.

''நமக்கெல்லாம் இருபதாம் வாய்ப்பாடே சரியா சொல்ல வராது. ஒளி ஆண்டெல்லாம்... சான்ஸே இல்லைடா சாமி'' என்று அலுத்துக் கொண்டான் பிரசன்னா.

''அதெல்லாம் உனக்குதான் பெரிய விஷயம், எனக்கு அப்படி இல்லைப்பா. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் எட்டு ஒளி நிமிடங்கள்தான். டீச்சர், நான் சொன்னது சரிதானே?'' என்றபடியே பிரசன்னாவைக் கிண்டல் செய்தான் கணேஷ்.

''ஆ... நீ டப்பா போட்டிருப்பே அதான் கரெக்ட்டா சொல்றே.'' என்றபடி கவுன்டர் கொடுத்தான் பிரசன்னா.

''கணேஷ் சொன்னதும் கரெக்ட்தான், பிரசன்னா சொன்னதும் கரெக்ட்தான்.'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர், விண்வெளி ஆராய்ச்சி எல்லாம் இந்த டெலஸ்கோப் மூலமாகவே பண்ணிட முடியுமா?'' என்று ஆரம்பித்தாள் சரசு.

''இந்த மாதிரி டெலஸ்கோப் எல்லாம்... வானியல் ஆர்வலர்கள் பயன்படுத்தறது. விஞ்ஞானிகளுக்கு இதைவிட பலமடங்கு சக்தியுள்ள டெலஸ்கோப்புகள் இருந்தால்தான் மிகமிகத் தொலைவில் இருக்கும் விண்வெளிக் கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை ஆராய முடியும்.'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர்'' என்று ஆரம்பித்த மதுவின் கைகளைப் பிடித்த டீச்சர்... ''புரியுது நேரில் போய்ப் பார்க்கணும் அதானே, கிளம்புங்க.'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளத்தை விரித்து, மாயா டீச்சரும் சுட்டிகளும் ஏறிக்கொள்ள மந்திரக் கம்பளம் பறக்கத் தொடங்கியது.

மந்திரக் கம்பளம் பறந்தபடியே... பெரிய டிஷ் ரேடியோ டெலஸ்கோப் மீது மிதந்து சென்றது.

''ஐயோ எவ்வளவு பெரிய டிஷ் ஆன்ட்டெனா?'' என்று வாயைப்பிளந்தான் கணேஷ்.

மந்திரக் கம்பளத்தில் பறந்தபடியே... டீச்சர் அவர்களுக்கு விளக்கத் தொடங்கினார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''நாம இப்போ போர்ட்டோ ரிகோவின் 'அர்கிபோ’வுக்கு வந்திருக்கிறோம். கீழே இருப்பதுதான் உலகின் மிகப் பெரிய டிஷ் ரேடியோ டெலஸ்கோப். இந்த டெலஸ்கோப்பின் விட்டம் 350 மீட்டர்கள். இது மொத்தம் 18.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.'' என்று இன்னும் அவர்களை வியக்க வைத்தார் மாயா டீச்சர்.

''டீச்சர், ரேடியோ டெலஸ்கோப் என்றால் என்ன? என்றாள் சரசு.

''இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் ரேடியோ அலைக் கதிர் வீச்சுகளை வெளிப்படுத்து கின்றன. ரேடியோ டெலஸ்கோப் என்பது, காற்றில் பரவி இருக்கும் இந்த ரேடியோ அலைகளைப் பெற்று பதிவு செய்கின்றன. இந்த ரேடியோ சிக்னல்களை விண்வெளி ஆய்வாளர்கள், அதற்கான சிறப்பு மென்பொருட்கள் மூலம் பெற்று ஆய்வு நடத்துகின்றனர். இந்த ரேடியோ டெலஸ்கோப்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்ட்டெனாக்கள் இருக்கும். ரேடியோ டெலஸ்கோப்பை முதலில் அமெரிக்காவின் பெல் டெலிபோன் ஆய்வகத்தின் காரல் ஜான்ஸ்கி என்பவர், எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்தார்.'' என்று சற்று நிறுத்தினார் மாயா டீச்சர்.

''டீச்சர், பூமியில் இருந்து ஆய்வு செய்வதற்குப் பதில் இன்னும் மேலே போய் ஆய்வுகளைச் செய்யலாமே...'' என்றாள்.'' மஞ்சு.

''கீழேயே இவ்வளவு செலவு ஆகுது. இன்னும் மேலே போனால் எவ்வளவு செலவு ஆகுமோ? என்று கேட்டாள் மது.

''மஞ்சுவே யோசிக்கிற விஷயத்தை நம் விஞ்ஞானி கள் யோசிக்க மாட்டாங் களா?'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, ''நிறைய நாடுகள் வான் வெளியை ஆராய்வதற்கு, கோள்களின் சுற்றுப் பாதைகளில் வான் வெளி டெலஸ் கோப்புகளை உலவவிட்டு ஆராய்ச்சி களில் ஈடுபட்டு இருக்கின் றன. இதில் 'ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ தான் இருப்பதிலேயே மிகவும் பெரியது.இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 1990-ல் ஏப்ரல்-24 அன்று அனுப்பியது.'' செலவு எவ்வளவு தெரியுமா? 2.1 பில்லியன் டாலர்கள்'' என்று முடித்தார்.

அடுத்து, மாயா டீச்சரும் சுட்டிகளும் நியூ மெக்ஸிகோவில் பரந்த அளவில் அமைந்திருக்கும் ரேடியோ டெலஸ்கோப் ஆராய்ச்சி மையத்துக்கு.

''டீச்சர்... ஒரே இடத்துல இத்தனை ரேடியோ டெலஸ்கோப் வைச்சிருக் காங்களே?'' என்றாள் சரசு.

''ஆமாம், நாம் வான்வெளியைப் பற்றி அறிந்துகொண்டது கொஞ்சம்தான். இந்த டெலஸ்கோப் மையத்தில் மொத்தம் 27 ரேடியோ டெலஸ்கோப் ஆன்ட்டெனாக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் 25 மீட்டர் விட்டமுடையவை. இவற்றால் துல்லியமாக சிக்னல்களைப் பெறமுடியும்.'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர், நான்கூட படிச்சேன் ஆஸ்திரேலியா விலும், தென் ஆப்ரிக்காவிலும் பெரிய அளவில் ரேடியோ டெலஸ்கோப் மையங் களை அமைக்கப் போகிறார்கள் என்று'' என்றான் கணேஷ்.

''ஆமாம் கணேஷ். ஆஸ்திரேலியாவின் வடபகுதியிலும் தென் ஆப்ரிக்காவிலும் வானியல் ஆராய்ச்சிகளுக்கு மிகவும் ஏற்ற இரண்டு இடங்களைத் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களிலும் உலக நாடுகளின் சார்பில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ரேடியோ டெலஸ்கோப் ஆன்ட்டெனாக்கள் அமைக்கப்போகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் முதல் கட்டம் 2019-லும், முழுமையாக 2024-லும் செயல்படத் தொடங்கும். அப்போது, இன்னும் நமக்கு தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்'' என்ற மாயா டீச்சர், மந்திரக்கம்பளத்தில் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பினார்.

''சரி, போய் பரீட்சைக்குத் தயாராகுங்கள். நாம் கோடை விடுமுறையில் சந்திக்கலாம்... 'ஆல் தி பெஸ்ட்!''’ என்று விடைகொடுத்தார் மாயா டீச்சர்.