மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

 கே.கணேசன்

 மாயா டீச்சர், அவர் வீட்டில் பால்கனியில் அமர்ந்தபடி முழு நிலவை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுட்டிகளின் பட்டாளம், அவருடன் சேர்ந்து வழக்கத் துக்கு மாறாக மிகவும் பெரிதாகத் தெரிந்து கொண்டிருந்த அழகிய நிலவை ரசிக்க ஆரம்பித்தனர்.

''டீச்சர், எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து இவ்வளவு பெரிய நிலாவை நான் பார்த்ததில்லையே?'' என்று ஆரம்பித்தாள் மது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
##~##

''ஆமாம்... இவ அம்பது வருஷமா நிலாவைப் பார்த்துட்டு வர்ற மாதிரி இல்ல பேசறா?'' என்று இடைமறித்தான் கணேஷ்.

''சரி... சரி... உங்க செல்ல சண்டையை நிறுத்திட்டு... டீச்சர் சொல்றத கவனிங்க'' என்று இருவரையும் அதட்டினாள் சரண்யா.

''இது சாதாரணமாக  வானில் இயல்பாக ஏற்படக்கூடிய நிகழ்வுதான். இப்படி இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலா பூமியை நெருங்கி வரும். அப்படி வரும்போது மிகவும் பெரிதான மாதிரி தெரியும்'' என்றார் டீச்சர்.

''டீச்சர், இந்த நிகழ்வோட விளைவுதான் ஜப்பானை நாசமாக்கிய சுனாமியா டீச்சர்?'' என்றான் கணேஷ்.

''நிலா பூமிக்கு அருகில் வருவதால் கடற்கரை ஓரங்களில் சிறிய அளவு மாற்றங்கள் இருக்குமே தவிர, சுனாமி போல பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இதை நீங்கள் முழு நிலவு நாட்களில் கடல் நீர் பொங்குவதை வைத்து அறிந்து கொள்ளலாம்.'' என்றார் மாயா டீச்சர்.

''அப்படின்னா ஜப்பானிய சுனாமிக்கு என்ன காரணம் டீச்சர்?'' என்று சோகத்துடன் கேட்டாள் சரசு.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

சற்று நேரம் அமைதியாக இருந்த மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தை விரித்து, அதில் எல்லோரையும் ஏற்றிக்கொண்டார். மந்திரக் கம்பளம் ஜப்பானை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.

மந்திரக் கம்பளத்தில் பயணித்தபடியே... சுட்டிகளிடம் சுனாமி பற்றி விளக்க ஆரம்பித்தார் மாயா டீச்சர். ''சுனாமி(Tsunami) என்பது ஜப்பானிய வார்த்தை. இதற்கு துறைமுகப் பேரலை என்று அர்த்தம். துறைமுகப் பகுதிகளில் ஏற்படும் பேரலைகள் என்பதால் இந்தப் பெயர். இந்தப் பேரலைகள், சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரையிலும்... அதுவும் தொடர்ச்சியாக ராட்சத அலைகளை உருவாக்கிய வண்ணம் நீடிக்கக் கூடியவை.'' என்றார் மாயா டீச்சர்.

''சுனாமி எப்படி உருவாகிறது?'' இது மதுவின் கேள்வி.

''பொதுவாக சுனாமி என்பது, நிலநடுக்கம் ஏற்படுவதால் பூமியின் தட்டு பக்க வாட்டிலோ, எதிர்ப் புறமாகவோ விலகும் அல்லது ஒன்றின் மீது ஒன்று ஏறிக்கொள்ளும். இதன் அளவு என்னவோ கொஞ்சமாக இருந்தாலும் அதனுடைய பாதிப்பு நிலப்பரப்பில் பெரிதாக இருக்கும்.'' என்ற மாயா டீச்சர், பூகம்பம் என்பது நிலம், கடல், மலைப்பகுதியில்கூட ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால், நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால், கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால், மலை எரிமலையாக வெடித்து சிதறுகிறது. இதை 'சீஸ்மோகிராப்’ என்ற கருவி மூலம் அளக்கலாம்.'' என்றார் மாயா டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கம்பளம் இந்தியப் பெருங்கடலின் மேலே பறந்துகொண்டு இருந்தது. ''லட்சம் வருடங்களுக்கும் முன்னால் பூமியானது ஒரே தட்டின்(Plates) மீதுதான் இருந்தது. நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியின் நிலப் பகுதி கண்டங்களாகப் பிரிந்துபோக ஆரம்பித்தது. அதற்குப் பிறகு தட்ப வெப்ப, இயற்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீதுதான் இப்போது ஒவ்வொரு கண்டமும் நிலைபெற்று இருக்கின்றது. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள்தான். இதைத்தான் 'டெக்டானிக் பிளேட்கள்’ (Tectonic Plates) என்பர்.'' என நிறுத்தினார் மாயா டீச்சர்.  

''சமீபத்திய ஜப்பானிய சுனாமிக்குக் காரணம், யுரேஷியன் மற்றும் ஆஸ்திரேலியன் பிளேட்கள், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவுப் பகுதியில் மோதிக்கொண்டன.  அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் விளைவாக ஏற்பட்ட மாற்றம்தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது'' என்றார் மாயா டீச்சர். தொடர்ந்து, ''இப்படி பூமியின் அடியில் நடக்கும் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, ஆழ்கடலின் அடியில் எதிரொலிக்கும்''என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கீழே எட்டிப் பார்த்த கணேஷ் கத்தினான்.

''டீச்சர், நாம சுனாமியால பாதிக்கப்பட்ட சென்டாய் தீவுக்கு வந்துட்டோம் போல இருக்கு!'' என்றான்.

''ஐயோ! எல்லாம் தண்ணிக்குள்ளே மூழ்கி இருக்கே?'' என்று பரிதாபத்துடன் சொன்னான் பிரசன்னா.

''ஆமாம் பிரசன்னா... எதுவுமே மிஞ்சலை. ஜப்பானியர்களின் தன்னம்பிக்கையைத் தவிர'' என்று இரக்கம் மேலிடச் சொன்னார் மாயா டீச்சர்.

''நில நடுக்கத்தைப் பொறுத்தவரை, ரிக்டர் அளவு பெரிதானால்தான் பாதிப்பும் அதிகமாக இருக்கும்... இல்லையா டீச்சர்?'' என்றான் கணேஷ்.

''ஆமாம் கணேஷ்! பூமியில் ஒரே ஆண்டில்  சிறியதும் பெரியதுமாக பல ஆயிரம் முறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அவற்றின் ரிக்டர் அளவு மூன்றுக்கும் அதிகமாக இருந்தால்தான் பிரச்னை. சமீபத்தில் ஜப்பானில் சுனாமி ஏற்படுவதற்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு எட்டுக்கும் மேலே'' என்றார் மாயா டீச்சர்.

''அப்படினா எந்த அளவைத் தாண்டினா சுனாமி உண்டாகும் டீச்சர்?'' என்று கேட்டாள் சரசு.

''பொதுவா... ஆழ்கடலில் ஏற்படும் பூகம்பம், கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஏற்படும் பூகம்பம், சாதாரண மலை, எரிமலையாகி வெடிக்கும்போது ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களினாலும் சுனாமி உண்டாகும்'' என்று டீச்சர் சொல்ல, ''கடலில் எந்த ஒரு மாற்றம் உண்டானாலும் சுனாமிக்குக் காரணமா அமைஞ்சிடும்'' என்றான் கணேஷ்.

''எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க டீச்சர்... சுனாமி எப்படி ஏற்படுகிறது?'' என்று கேட்டாள் சரசு.

''நிலநடுக்கம் ஏற்படுவதால் கடலில் இருக்கும் நீரானது உள்ளுக்குள்ளேயே சுருண்டு சுருண்டு ராட்சசக் குழாய் வடிவில் பெரிதாகும். நாம் தூங்கி எழுந்ததும் பாயைச் சுருட்டி வைக்கிறோம் இல்லையா? எப்படி, பாய் சுருட்டச் சுருட்ட அளவில் பெரிதாகுமோ?  அப்படித்தான் அலைகளும் சுருண்டு சுருண்டுஒரு பெரிய குழாய் உருண்டு வருவது போல கடலின் மேற்பரப்பில் வெகு வேகமாக உருண்டபடியே கரையில் வந்து மோதுகிறது. அதன் உயரம், வேகத்தைப் பொறுத்து, சுனாமி யின் பாதிப்பு இருக்கும்'' என்றார் மாயா டீச்சர்.

''சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது?'' என்று பிரசன்னாவும் மதுவும் கூட்டாகச் சேர்ந்து கேட்டார்கள்.

''ஜூலை 21-ம் தேதி கி.மு., 365-ஆம் ஆண்டு தான் முதல் முதலா சுனாமி ஏற்பட்டதாம். இது கிழக்கு மத்திய தரைக் கடலில் ஆரம்பித்து, அலெக்சாண்டிரியாவில் போய் முடிந்ததாம். இதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்து தாம்'' என்ற மாயா டீச்சர்,  ''நவம்பர் 1755-ல் லிஸ்பனில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதேபோல, அலாஸ்கா வளைகுடாவில் 1999-ல் சுனாமி தாக்கியது'' என்றார்.

''டீச்சர், இதை எல்லாம் கவனிச்சு எச்சரிக்கை பண்ணமாட்டங்களா?'' என்று கேட்டாள் மஞ்சு.

''கட்டாயமாப் பண்ணுவாங்க. அதுவும் விஞ்ஞானம் ரொம்பவே வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், இதெல்லாம் ரொம்பவே அவசியமும்கூட. முதன் முதலாக, 'பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு’ அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் நிறுவப்பட்டது. ஹவாய் தீவுதான் சென்ற நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம். அதனால்தான் அங்கு ஆரம்பித்தார்கள்'' என்றார் டீச்சர்.

அந்தச் சமயம், கீழே கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு மிதவையைப் பார்த்த மது, ''டீச்சர் அதோ ஒரு குட்டி போட்'' என்றாள்.

'டக்’கென சிரித்துவிட்ட மாயா டீச்சர் சுட்டிகளுடன் அந்த மிதவை மீது இறங்கி, அதன் மீது நின்று கொண்டே பேசினார்.  

''அமெரிக்க விஞ்ஞானிகள் 1940-50-களில் பசிபிக் பிராந்தியத்தில் ஒரு சுனாமி எச்சரிக்கை மையத்தை நிறுவினார்கள். ஆனால், அந்த மையம் அளித்த எச்சரிக்கைகள் பெரும்பாலும் தப்பாவே இருந்துச்சு. அதனால, கடலில் பெரிய அளவு அலை ஏற்பட்டால், அதை உணர்ந்து எச்சரிக்கை கொடுக்க ஒரு கருவியை மிகவும் முயன்று கண்டுபிடித்தார்கள் விஞ்ஞானிகள். அதுதான், 'சுனாமி மிதவைக் கருவி’. நாம இப்போ அது மேலேதான் நின்னுக்கிட்டு இருக்கோம்'' என்று ஆச்சர்யப்படுத்தினார் மாயா டீச்சர்.

''டீச்சர், பார்க்க ரொம்ப சாதாரணமா இருக்கே... இது எப்படி செயல்படும்?'' என்று கேள்விகளை அடுக்கினாள் சரண்யா.

''நிலநடுக்கத்தால் கடல் பகுதி பாதிக்கப்படும்போது, கடலில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்களைக்கூட இவை துல்லியமாகப் பதிவு செய்யும். கடலின் மேற் பரப்பில் ஏற்படும் மாற்றங்களை, இவற்றில் பொருத்தப் பட்டுள்ள நுண்ணிய கருவிகள் எச்சரிக்கை சிக்னல்களாக வானில் மிதக்கும் செயற்கைக் கோளுக்கு அனுப்பும். அங்கிருந்து பாதிக்கப்படக்கூடிய இடங்களுக்கு தகவல்கள் அனுப்பப்படும். இதன் மூலம் சுனாமி ஏற்பட்ட மூன்றே நிமிடத்தில் உலகம் முழுவதுக்கும் எச்சரிக்கை செய்துவிட முடியும். இது அளிக்கும் தகவல்கள் துல்லியமானவை.

ஜப்பான் அமைந்திருக்கும் பகுதி, இயற்கை இடர் பாடுகள் அதிகமாக ஏற்படக்கூடியது. சுனாமி எச்சரிக்கை கிடைத்தவுடன் அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து விடுவார்கள். அதனால்தான் தற்போதைய சுனாமியின் தாக்கத்தில் இருந்து ஜப்பான் பெரிதும் காப்பாற்றப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், அவர்கள் பதட்டப்படவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், பள்ளிகளிலேயே இது பற்றி வகுப்புகள் எடுப்பதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுனாமி பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் இந்த சுனாமியை எளிதாக எதிர் கொண்டார்கள்'' என்று முடித்த மாயா டீச்சர், சுட்டிகளுடன் வீடு திரும்பினார்.