மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

அசத்தும் அருங்காட்சியகம்!கே.யுவராகம் படங்கள் : பிள்ளை

##~##

முதலாம் பருவம் முடிந்து விடுமுறையில் இருக்கும் நம்ம நண்பர்கள், மாயா டீச்சருடன் சென்னை எழும்பூரில் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தார்கள்.

''கயல், இங்கே பார் கரடியை'' என்றாள் ஷாலினி.

பாடம் செய்யப்பட்ட முழுக் கரடியின் உடல் அங்கே இருந்தது. '' 'ஏன்டா என்னை இப்படி நிறுத்திவெச்சிருக்கீங்க’னு முறைக்கிற மாதிரியே இருக்கு'' என்றான் கதிர்.

பாடம் செய்யப்பட்ட பல வகை விலங்குகள், பல நாட்டின் பறவைகள், மீன்கள் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, அருகே இருந்த பூங்காவில் ஓய்வாக அமர்ந்தார்கள்.

''ஏன் டீச்சர், உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே இப்படி கண்காட்சிக்காக இவற்றை சாகடிச்சு இங்கே வெச்சிருக்கிறது நியாயமா?'' என்று கேட்டான் அருண்.

''நீ நினைக்கிறது தப்பு அருண். இவை எல்லாம் வேண்டுமென்றே சாகடிக்கப்படலை. இயற்கையாக இறந்தவைதான். உயிரியல் வல்லுநர்கள் பல குழுக்களாகப் பல இடங்களில் தேடி சேகரிச்சவை. இந்த மாதிரி அருங்காட்சியகத்தின் நோக்கம், சும்மா வேடிக்கை காட்டுவது அல்ல. இதன் மூலம் நமது வரலாறு, பண்பாடு, இயற்கை வளங்கள், நம்மைச் சுற்றி இருக்கும் பிற உயிரினங்கள் பற்றிய விழிப்பு உணர்வை உணர்த்துவதுதான்'' என்றார் டீச்சர்.

''இப்படி அருங்காட்சியகம் அமைக்கிற பழக்கம் எப்போ ஆரம்பிச்சது டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஆரம்பத்தில் பணம் படைத்த தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள்தான் அரிய பொருட்களைச் சேகரித்து அதை கண்காட்சியாக வைத்தார்கள். அப்படி வைக்கிற அறைக்கு, 'கேபினட்ஸ் ஆஃப் க்யூரியாஸிடிஸ்’ (சிணீதீவீஸீமீts ஷீயீ சிuக்ஷீவீஷீsவீtவீமீs) அல்லது 'வொண்டர் ரூம்’ (கீஷீஸீபீமீக்ஷீ ஸிஷீஷீனீ) என்று பெயர்.

1471-ல் ரோம் நகரில் கேப்பிடாலின் மியூஸியம் (சிணீஜீவீtஷீறீவீஸீமீ விusமீuனீs) என்ற பெயரில் பொது அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது. ரோமானியர்களின் நாகரிக வளர்ச்சியை சொல்லும் வகையில் இது இருந்தது. அதன் பிறகு உலகம் முழுக்க தங்கள் நாட்டின் வரலாறு, கலாசாரம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் அருங்காட்சியகங்கள் உருவாகின'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''இந்த ஒரு அருங்காட்சியகத்தைப் பார்ப்பதே மலைப்பா இருக்கு. உலகத்தில் இருக்கும் எல்லா அருங்காட்சியகங்களையும் ஒரே சமயத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்?'' என்று வியப்பாகக் கண்களை விரித்தாள் ஷாலினி.

''அப்படி நீ இப்போ பார்க்க ஆரம்பிச்சா, 'ஷாலினிப் பாட்டி’யாக ஆனாலும் முடியாது. ஏன்னா, இன்றைய தேதிக்கு உலகம் முழுக்க சிறிதும் பெரியதுமாக 55 ஆயிரம் அருங்காட்சியகங்கள் இருக்கு. உன் ஆசைக்காக சில அருங்காட்சியகங்களுக்கு மட்டும் போய்ட்டு வரலாம்'' என்றார் டீச்சர்.

டீச்சரின் கைப்பையில் இருந்த மந்திரக் கம்பளம் 'நான் ரெடி’ என்பதுபோல வெளியே வந்தது. அவர்களை சுமந்துகொண்டு ஒளி வேகத்தில் பறந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

'' 'மியூஸியா’ என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்ததுதான் மியூஸியம். இதற்கு 'உண்மையாக’ என்று பொருள். அருங்காட்சியகங்களில் பல வகைகள் உள்ளன. வரலாறு என்று எடுத்துக் கொண்டால், அதிலேயே இயற்கை வரலாறு, பண்பாட்டு வரலாறு, போர்த்துறை வரலாறு எனப் பல பிரிவுகள் இருக்கு. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி அருங்காட்சிகங்கள் உண்டு. இதேபோல தாவரவியல், விலங்கியல், நுண்கலைகள், தொழில்நுட்பம், மானிடவியல், நாணயவியல் என சொல்லிக்கொண்டே போகலாம்'' என்றார் டீச்சர்.

''சிற்பம், ஓவியங்களுக்குக்கூட அருங்காட்சியகம் இருக்கா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''நிச்சயமா. உலகின் இரண்டாவது பழைய அருங்காட்சியகமே சிற்ப அருங்காட்சியகம்தான். 'வாடிகன் மியூஸியம்’ எனப்படும் இது, 1506-ம் ஆண்டு இரண்டாம் போப் ஜூலியஸ் என்பவரால் வாடிகன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாகவும் நுட்பமாகவும் இருக்கும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களை வாடிகன் நகரில் இறக்கியது. ஐந்து பேரும் உள்ளே நுழைந்தார்கள். அழகழகான சிலைகளைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

''இந்த நேரத்திலும் எவ்வளவு கூட்டம்?'' என்றாள் கயல்.

''சும்மாவா... உலகின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. இதுவரை ஐந்து மில்லியன் மக்கள் இங்கே வந்திருக்கிறார்கள்'' என்றார் டீச்சர்.

''அடுத்து எங்கே?'' என்று கேட்டான் அருண்.

''அழகான சிற்பங்களைப் பார்த்தோம். அடுத்து, அதிரடியான ஆயுதங்களைப் பார்போம்'' என்றார் டீச்சர்.

இப்போது மந்திரக் கம்பளம் அவர்களை அழைத்துசென்ற நாடு இங்கிலாந்து.

''இந்தியா உட்பட உலகின் பல நாடுகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்த நாடு இங்கிலாந்து. தங்களது வீரத்தைப் பறைசாற்றும் வகையில் இந்த அருங்காட்சியகத்தை நிறுவி இருக்கிறார்கள். உலகின் பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றான இது, 1592-ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இங்கிலாந்தின் மூன்று இடங்களில் இந்த அருங்காட்சியகத்துக்கு கிளைகள் இருக்கிறன்றன'' என்றார் டீச்சர்.

அந்த அருங்காட்சியகத்தில் இருந்த துப்பாக்கிகள், பீரங்கிகள், போர்க் காட்சிப் புகைப்படங்களைப் பார்த்தார்கள்.

''டீச்சர், மியூஸியம் என்றாலே தரையில்தான் இருக்குமா?'' என்று கேட்டான் கதிர்.

''நல்ல கேள்வி. 'கடற்சார் அருங்காட்சியகங்கள்’ என்று சில அருங்காட்சியகங்கள் இருக்கு. இது கடல் பயணம் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் அடங்கியது. இதை சில நாடுகள் பழைய கப்பலையே அருங்காட்சியகமாக மாற்றி, கடற்கரைப் பகுதியில் நிறுவியிருக்கின்றன'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களை அப்படியான ஓர் அருங்காட்சியகத்துக்கு தூக்கிச்சென்று இறக்கியது. கப்பலுக்குள் வலம்வந்து காட்சிகளை கண்டார்கள்.

பிறகு சில விலங்கியல், தாவரவியல் அருங்காட்சியகங்களுக்குச் சென்றார்கள். ''எங்கே வந்தாலும் ஒரு விஷயம் மட்டும் மாறலை'' என்றாள் ஷாலினி.

''என்ன அது?'' என்று கேட்டான் அருண்.

''இதை எல்லாம் பார்க்கும்போது தொட்டுப் பார்க்க ஆசையா இருக்கு. ஆனா, எல்லா மியூஸியங்களிலும் 'டோன்ட் டச்’ போர்டு இருக்கே'' என்றாள் ஷாலினி.

சிரித்த மாயா டீச்சர் ''பொருட்களின் பாதுகாப்புக்குத்தான் இந்தக் கண்டிப்பு ஷாலினி. உன்னை மாதிரி பல பேர் பல ஆண்டுகளுக்குப் பிறகும் பார்க்கணுமே. ஆனாலும் உன்னை மாதிரி ஆட்களுக்குக்காக சில இடங்களில் தொட்டுப் பார்த்து பரவசப்படவும் அருங்காட்சியகங்கள் இருக்கு'' என்றார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

அவர்கள் அடுத்து சென்ற அருங்காட்சியகத்தில் சிறுவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கிருந்த பொருட்களைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார்கள்.

''சிறுவர்களுக்காகவே இதுபோன்ற தனி அருங்காட்சியகங்களும் உள்ளன. 1962-ல் 'அசோசேஸியன் ஆஃப் சில்ட்ரன் மியூஸியம்’ என்று அமைப்பு உருவாக்கப்பட்டது. அருங்காட்சியகங்கள்குறித்த விஷயங்களை இங்கே கல்வியாகவே கற்றுத்தருகிறார்கள்'' என்றார் டீச்சர்.

அடுத்து, மந்திரக் கம்பளம் அவர்களை கொல்கத்தாவில் உள்ள இந்தியன் மியூஸியத்தில் இறக்கியது.

''இந்தியாவில் இருக்கும் முக்கியமான அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. 1814-ல் தொடங்கப்பட்டது. சிற்பங்கள், மொகலாயர்களின் ஓவியங்கள், பாடம் செய்யப்பட்ட பல்வேறு உயிரினங்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு'' என்றார் டீச்சர்.

அங்கே வலம் வந்ததும் ''கிளம்பலாம் டீச்சர். நீங்க சொன்ன மாதிரி எல்லாவற்றையும் பார்க்க, காலம் போதாது. இப்பவே ஷாலினி பாதி பாட்டி ஆகிட்ட மாதிரி எனக்குத் தோணுது'' என்றான் கதிர்.

அவனை ஷாலினி விரட்ட, அவன் ஓடிச்சென்று மந்திரக் கம்பளத்தில் ஏறிக்கொண்டான்.